உள்ளுட்டேன் சார்..! - பேரா ச.மாடசாமி

தனித்து நிற்கும் ஆசிரியரை அல்ல.. கண்கள் எப்போதும் தேடுவது… கலந்து நிற்கும் ஆசிரியரை- குழந்தைகளோடு கலந்து நிற்கும் ஆசிரியரை! அப்படி நாங்கள் தேடிக் கண்டுபிடித்த ஆசிரியர்களில் முக்கியமானவர் - தேனி சுந்தர். இவர் மொழி, சிந்தனை, செயல் ஒவ்வொன்றிலும் கல்விக்கான வேரைக் காண்கிறோம்.

குழந்தைகளின் மொழி - இலக்கியம் ஆனது இவரால்... குழந்தைகள் சொல்லும் டுஜக் டுஜக்கை இசைத் துணுக்குகள் என்றவர் இவர். ‘காக்காச்சி அங்கக்கு’க்கு டிக்சனரியில் அர்த்தம் இல்லை. சுந்தரின் எழுத்துலகில் அர்த்தம் இருக்கிறது. ‘இந்த மாடு பேரு என்னப்பா?’ என்று குழந்தை முன்வைத்த கேள்விக்குப் பெரியவர்கள் உலகில் விடை இல்லை. நெகிழ்வான உலகம் முன்வைக்கும் கேள்விக்கு இறுகிய உலகத்தில் விடை கிடைக்குமா?

குழந்தை உலகில் பயணிக்க நம் அதிகாரம், அகங்காரம் இரண்டையும் மூட்டை கட்டி வைக்க வேண்டும். அது ஒரு வாய்ப்பு. மீண்டும் அந்த வாய்ப்பு ‘ஓங்கூட்டு டூணா’வில் கிடைத்தது.

வெளியே வேறொருவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ‘சுந்தர் சார்! சுந்தர் சார்!’ என்று குழந்தைகள் கூப்பிடுகின்றனர். வகுப்பறையில் நிலவும் இந்த சுதந்திரம் அழகானது; அபூர்வமானது. நான் மிக ரசித்த காட்சி!

சுதந்திரம் இருக்கும் இடத்தின் அடையாளம்- கேள்வி கேட்பது! “ சார்! இன்னும் சோறாக்கலயா?” என்று யோகா கேட்கும் கேள்வி ஓர் உதாரணம். மனதைத் துளைக்கும் கேள்வி. ஆசிரியரிடமிருந்தும் கேள்வி பிறக்கிறது: “கலை என்பது வெறும் கொண்டாட்டத்திற்கா? இல்ல சமூக மாற்றத்திற்கா?” . அறிவொளி காலத்தில் நாங்கள் தொடங்கிய விவாதம் இது. பட்டிமன்றம் தொடர்கிறது…

சுதந்திரமான வகுப்பறை எப்போதும் திறந்து கிடக்கும். சுந்தர் முன்னுரையில் சொல்வது போல- “எனக்கு எல்லாம் தெரியும் என்பது அடைத்த கதவு. ஆகவே ஆகாது”.

சுதந்திரமான வகுப்பறைதான். இருப்பினும் குழந்தைகளின் அதிமுக்கியமான கோரிக்கை: “வீட்டுக்குப் போகணும்”. ஏன்? வீடோ வகுப்பறையோ உறவோ - தொடர்ந்து கொண்டே இருந்தால் சலிப்புதான். தொடர்ச்சியின் மருந்து இடைவெளி. இடைவெளி இல்லாவிட்டால், அடிக்கடி ‘ஓங்கூட்டு டூணா’தான்!

அதுபோக, ‘லீவ்!’ எப்படிப்பட்ட சந்தோசம்? ஆசிரியர்களுக்கும் தான்! ஆசிரியர் வகுப்புக்கு வராவிட்டாலும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தான். மற்ற வகுப்பறையில் இது மனதுக்குள் ஏக்கம். சுதந்திர வகுப்பறையில் ஒண்ணாப்பு வித்யா ஆசிரியரிடமே சொல்வாள்: “ சார்! போங்க சார்!”

திறந்து கிடக்கும் சுதந்திர வகுப்பறைக்குள் வீடும் அடிக்கடி வந்து போகிறது: “சார்! எங்கப்பா அம்மாவ எத்திப்புட்டாரு!” என்று ஒரு குழந்தை சொல்லும்போது பதறாமலும் கண்கலங்காமலும் இருப்பது சாத்தியமில்லை.

சுரண்டினாலும் போகாதபடி, நெஞ்சில் நிறைந்தவையும் புத்தகத்தில் உண்டு. ‘சந்தோசத்தைத் தொலைக்காத குழந்தைகளும், குழந்தைகளைத் தொலைக்காத வகுப்பறைகளும் வேண்டும்” என்ற கனவையும், ‘குட்டீஸ்களுக்கு சாதனை ; நமக்குச் சாதாரணம்!’ என்று ஆசிரிய மனோபாவத்தை உடைத்து நொறுக்குவதையும், முறைத்தலில் ஜீவனேசுவிடம் தோற்றுவிட்டு ‘நான்தான் அவுட்டு’ என்று அவார்டு வாங்கியது போல் பூரிப்பதையும் லேசில் மறக்க முடியாது.

புத்தகத்துக்குள் விழுந்து கிடந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்வது? குழந்தைகளிடம்தான் வார்த்தைகளைக் கடன் வாங்க வேண்டும். ஆசிரியரே 8 போட குழந்தைகளிடம் தானே கற்றுக் கொள்கிறார்?

அஜிஸ் நமக்கு உதவுகிறான்:
“ உள்ளுட்டேன் சுந்தர்!”
ச.மாடசாமி

Comments