என் பெயர் ராஜா – வாசிப்பு அனுபவம் – சு.டார்வின்


நாங்க சென்னைக்கு, புத்தகக் கண்காட்சிக்கு போயிருந்தப்ப வாங்குன புத்தகம் என் பெயர் ராஜா.. அந்தக் கதை தான் இது.

நான் ஒரு கோம்பை நாய். எங்க அம்மா பெயர் ராணி. என் அம்மா ஒரே சமயத்தில் ஐந்து குட்டிகள் ஈன்றாள். அதில் முதல் குட்டி நான் தான். என் பெயர் ராஜா. நான் மூன்று மாத குட்டி. ஆனால் ஒன்று, என்ன ஆனாலும் என் தங்கச்சி மீது தான் அம்மா ரொம்ப பாசமாக இருப்பாள். ஒரு நாள் என் அம்மா ராணி உடைய எஜமான் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, என் தம்பிகள் மூன்று பேரையும் தூக்கிப் போயி விட்டார். என் அம்மாவிடம் கேட்ட போது, அவர்களை விற்பனை செய்ய போவதாக சொன்னாள். எனக்கு விற்பனை என்றால் என்ன என்று தெரியாது. தாயாரிடம் கேட்டேன். அதாவது மகனே, விற்பனை என்றால் இப்போது நம்மிடம் இருக்கும் பொருளை இன்னொருவருக்கு கொடுத்து விட்டு பணம் வாங்கிக் கொள்வது என்று கூறினாள். விற்பனைக்கு என்று சந்தை இருக்கும். அங்கே காய்கறி, மீன், கறி என்று நிறைய இருக்கும். அங்கே தான் என்னையும் என் எஜமான் வாங்கி வந்தார். அங்கே தான் உன் மூன்று தம்பிகளையும் விற்பனை செய்யப் போகிறார்கள் என்று அம்மா சொன்னாள்.


அடுத்து எங்க அம்மா சொன்ன மாதிரியே என்னையும் ஒருவர் வாங்கிட்டுப் போயிட்டார். அவங்க வீட்டில் அவருடைய பொண்ணும் அவருடைய வீட்டுக்கார அம்மாவும் இருந்தாங்க. கொஞ்ச நாளில் அதே வீட்டுக்கு என் தம்பியும் வந்து விட்டான். கொஞ்ச நாளில் நாங்கள் பெரிதாகி விட்டோம். எங்க எஜமான் வேட்டைக்குப் போவார். அவர் போகும் போது நாங்களும் கூட போயி வேட்டையாடிவிட்டு வருவோம். ஒரு நாள் எங்க எஜமான் ஒரு மரத்தில் குரங்குகள் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஜீப்பை நிப்பாட்டினோம். அங்கே கழுதைப் புலிகள் விளையாடிக் கொண்டிருந்தன. மெதுவாக நடந்து வேட்டையாடச் சென்றோம். ஆனால் அந்த கழுதைப் புலி இரண்டும் என் மீது பாய்ந்து நகத்தை வைத்து பரண்டி வைத்து விட்டன. ஆனாலும் என் பின்னங்காலை இழுத்து இழுத்துச் சென்று அதைக் கடித்து குடலைப் பிடுங்கி விட்டேன்.

என் தம்பி டாமி, என் எஜமானைப் பார்த்து ஒரு மிருகம் தாக்க வந்த போது என் தம்பி டாமி தான் போய் தாக்கி அந்த மிருகம் செத்து, என் தம்பியும் செத்து விட்டான். ஆனால் என் எஜமான் அங்கிருந்து போய்ட்டார். பயம் இருந்தால் அவர் ஏன் வேட்டைக்கு வர வேண்டும். என் பின்னங்காலை நொண்டி நொண்டி வீட்டிற்கு வந்துட்டேன். முகப்பு கேட் பூட்டி இருந்தது. அதனால் நான் வெளியவே தூங்கிட்டேன். காலையில் முகப்பு கேட்டைத் துறந்தாள் என் எஜமானின் மனைவி. நான் கேட்டுக்கு நேரா படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போ ராஜா என்று கூவினார். என் எஜமான் ராஜா சாகப் போறான் என்று சொன்னார். ஆனால் நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது என் கனவில் என் தம்பி வந்து, நிய்யும் செத்துடு அண்ணா என்று சொன்னான்..

புரியாத வார்த்தைகள் : இந்தக் கதையில் இருந்த துஷ்ட ஜந்து, புதல்வி, காரை போட்ட வாசல், சொல்கையிலேயே, பிணைந்து, பறித்து வாகாய், அதட்டல் போடுவார், மாறுகையில், நிகழ்த்துவேன், கவிந்து விட்ட, பிதற்றி, முழுகீட்டாத்தான், போசியில், முன்னறிவிப்புமின்றி, ஊத்தை, ஓலம், கிலுவை, விசையை, கிஞ்சிக் காட்டியது, அமளி பண்ணி, வெங்கச்சாங் கற்கள், உதாசீனப்படுத்தி, சமிக்ஞை, எள்ளும் கொள்ளும், திராணியற்று, ஊடுவாடி..

கருத்து : உயிரினங்களை கொடுமைப் படுத்தக் கூடாது. உங்களை யாராவது கொடுமைப் படுத்தினால் போலீசுக்கு சொல்லிடலாம். ஆனால் வாயில்லா ஜீவன் யாரிடம் சொல்லும். அதனால் வாயில்லா ஜீவனை கொடுமைப் படுத்தாதீர்கள். வேட்டையாடாதீர்கள்..

சு.டார்வின்
நன்றி : புக்டே.இன்

Comments