ஆசிரியர் நாட்குறிப்பு : வெங்களத்தூர் பள்ளி

ஆசிரியை உதயலட்சுமி எழுதிய ஆசிரியர் நாட்குறிப்பு : வெங்களத்தூர் பள்ளி

சமீபத்தில் வகுப்பறை அனுபவங்கள் தொடர்பான பல அனுபவங்கள் சார்ந்த நிறைய கட்டுரைகள், நூல்கள், சமூக வலைத் தள பதிவுகள் வரத் துவங்கி உள்ளன.

நானும் எழுதி இருக்கிறேன். "ஓங்கூட்டு டூணா..!" என்கிற தலைப்பில் வந்திருக்கும் அந்நூல் பால்வாடி மற்றும் முதல், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் உடனான அனுபவங்கள்.. அவர்களது உரையாடல்கள்.. விளையாட்டுகள் அடங்கியது. ஆசிரியை உதயலட்சுமி எழுதி இருக்கும் இந்நூல் 6 முதல் 10ஆம் வகுப்பு குழந்தைகள் தொடர்பானவை..

ஒவ்வொரு வகுப்பு குழந்தைகளின் புரிதலும் அனுபவமும் எதிர்பார்ப்புகளும் அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளும் வெவ்வேறானவை. அந்த அடிப்படையில் மிக முக்கியமான ஒன்று. பேரா.மாடசாமி அவர்களின் நீண்ட நாள் ஆசை, இதுபோன்ற வகுப்பறை டயரிகள் நிறைய ஆசிரியர்களால் எழுதப் பட வேண்டும் என்பது. அவரே அணிந்துரை எழுதியுள்ளார். மேலும் நண்பர்கள் விழியன், சிவா உள்ளிட்டோரும் எழுதி இருக்கிறார்கள்..



நாங்க குட்டிப் பள்ளிக் கூடத்து வாத்தியார்கள். பெரிய பள்ளிக் கூடத்து வாத்தியார்கள் பெரும்பாலானவர்களை சந்திக்கும் போது மிகவும் வெறுப்பாக, சோர்வாக பேசுவதை தான் பெரும்பாலும் பார்க்க முடிகிறது. மாணவர்களை எப்போதும் தங்களுக்கு எதிர் நிலையில் வைத்து தான் அவர்களது உரையாடலின் துவக்கமே இருக்கும்.

வேலை நாள், பாட வேளை, பாடத் திட்டம், சிறு தேர்வுகள், அதிகாரிகள் பார்வையிடல், தப்பிக்கும் வழிமுறைகள், பொதுத் தேர்வுக்கான தயாரிப்பு, தேர்ச்சி சதவீதம் - என பள்ளி, ஆசிரியர் பணியைப் பொறுத்தவரை அவர்களின் வரையறைகள், எல்லைகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றன. விதிவிலக்கான ஆசிரியர்களும் நிறைய இருக்கிறார்கள்..

ஆனால் ஆசிரியை உதயலட்சுமியின் வரையறைகள் வேறு வகையானவை. இவரைப் பொறுத்தவரை ஆசிரியர் பணி என்பது 9-4 மணி வரையிலான ஒரு பணி கிடையாது.. குழந்தைகளின் மனசு, மகிழ்ச்சி, தேவை, பிரச்சினை என அவருடைய திட்டமிடல்கள், தேடல்கள் எல்லாம் குழந்தைகள் நோக்கில் மட்டுமே உள்ளன. மற்றபடி "மாணவர் மனசு" பெட்டி வைப்பதெல்லாம் சிலந்திப் பூச்சிகள் கூடு கட்டி அடைவதற்கு மட்டும் தான் பயன்படும் என்கிறார்..

விடுமுறை நாளிலும் குழந்தைகளை சந்திக்கிறார். வீடு தேடிச் செல்கிறார்.

பாடவும் ஆடவும் குழந்தைகளோடு வகுப்பறையிலேயே விளையாடவும் இவருக்கு நேரம் இருக்கிறது. உரிய பாடத் திட்டத்தை முடித்து விட்டு நிறைய நேரம் கிடக்கிறது என்கிறார்..

குழந்தைகளுக்கு எழுது, படி என்பதைத் தாண்டி புதுவிதமான பயிற்சிகளை வீட்டுப் பாடமாக கொடுக்க வேண்டும் என்கிறார். கொடுக்கிறார்.

விளைவாக அந்த குழந்தைகள் சொந்தமாக கடிதம் எழுதுகின்றனர். பாடல் எழுதுகின்றனர். நாடகம் நடிக்கின்றனர். திரைக்கதை எழுதுகின்றனர்.

தன் வகுப்பறையில் இருக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைக்கு தன் சொந்த முயற்சியில் சக்கர நாற்காலி பெற்றுத் தருகிறார். பள்ளி அளவில் பெண் குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உதவிகளைப் பெற்று கழிப்பறை கட்டித் தருகிறார். இதுவரை கூட சரி தான். இருளர் குழந்தைகளின் வீடுகளில் மின் விளக்கு வசதிகள் இல்லை என்பதை அறிந்து தன் நண்பர்கள் மூலம் குழந்தைகளின் "வீட்டிற்கும் விளக்கொளி" தருகிறார்..

பள்ளி நூலகத்திற்கு மட்டும் எழுதக் கூடிய அந்த எழுத்தாளர்கள் யார் என்று கேள்வி கேட்கிறார்..?? ஏன் ஒரே தலைப்பிலான நூல்கள் பள்ளி நூலகத்திற்கு மீண்டும் மீண்டும் கொள்முதல் செய்யப் படுகின்றன என்கிறார்..

கல்வித் துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. பாராட்டுகள்.. மாற்றங்கள் யார் யாரையோ அழைத்துப் பேசுகிறீர்கள்.. குழந்தைகளுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் ஆசிரியர்களிடம் நீங்க கேட்க வேண்டாமா?? பேச வேண்டாமா?? என்கிறார்..

பாடப் புத்தகத்தை நடத்தி முடித்து விட்டு வாசிப்பை பழக்கப் படுத்த புதிய புதிய நூல்களை குழந்தைகள் கையில் தருகிறார்.. உள்ளூர் நூலகங்களில் உறுப்பினராக வழிகாட்டுகிறார்.. அதே நேரத்தில் உள்ளூர் நூலகங்கள் தொடர்ந்து இயங்க வேண்டாமா? என்கிறார்..

தரே ஜமின்பர் தொடங்கி பல்வேறு படங்களை குழந்தைகளுக்கு போட்டுக் காட்டுகிறார்.. அதையொட்டி விவாதங்களை நடத்துகிறார்.. இத்தனைக்கும் வகுப்பறையில் நேரம் இருக்கத் தான் செய்கிறது..

அம்பேத்கர் பற்றி பேசவும் காந்தி, பெரியார் பற்றி பேசவும் பாலின பாகுபாடுகள் பற்றி பேசவும் அவருக்கு நேரம் வாய்க்கிறது.. பேசுவதோடு நிற்கவில்லை. தன் வகுப்பு மாணவர்கள் வீட்டுச் சமையலறை பணிகளில் ஈடுபட்டு, வீட்டுப் பெண்களுக்கு உதவி செய்வதை கேட்டு மகிழ்கிறார்.

இன்னும் கூட குழந்தைகள் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பள்ளிக்கு வர வேண்டிய சூழல் இருப்பதை அறியத் தருகிறார். அத்தோடு அந்தக் குழந்தைகள் வந்து போவதற்கு சைக்கிள் வாங்கியும் தருகிறார்..

மிக முக்கியமாக புத்தகங்கள் வாசிக்கும் ஆசிரியராக இருக்கிறார். வாசித்த கருத்துகள் வகுப்பறைக்கு வந்து விட்டனவா என்பதை தனக்குத் தானே கேள்வி எழுப்பிக் கொள்கிறார்..

சுவாரசியமான ஒரு பதிவை மட்டுமாவது குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அவருடைய பையன் தன் வகுப்பறை சம்பவம் ஒன்றை வீட்டில் வந்து கூறுகிறான். வகுப்பறையில் இரண்டு மாணவர்கள் "உன் பேரு பாரி, எனக்குப் பிடிக்கும் பூரி..!" என்று கிண்டலடித்து விளையாடுகிறார்கள். அதைக் கவனித்த அவர்களின் ஆசிரியர் அந்த இரு மாணவர்களையும் முட்டி போட வைத்திருக்கிறார். அதைக் கேட்ட உதயலட்சுமி சொல்கிறார், ஐயோ, அந்த ஆசிரியர் எதுகை, மோனை குறித்து இலக்கணம் கற்பிக்க கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பை இழந்து விட்டாரே.. எல்லா குழந்தைகளின் பெயர்களுக்கும் இதுபோல சந்தம் வருமாறு வார்த்தைகளை உருவாக்கும் செயல்பாட்டை கொடுத்திருக்கலாம். அவர்களுக்கு எதுகை, மோனை எப்போதும் மறக்காது.. ஆசிரியர் அந்த வாய்ப்பை இழந்து விட்டார். பயன் தராத தண்டனைகள் கொடுத்து என்ன செய்ய..?" என்று கேட்கிறார்.. விளையாட்டுக்கு விளையாட்டாச்சு.. பாடத்துக்கு பாடம் ஆச்சு.. இது தான் இவருடைய வகுப்பறை..!

குழந்தைகள் சொந்தமாக எழுதும் கதைகளை வாசித்து வாசித்து எனக்கும் எழுத்து வசப்பட்டு எழுத்தாளர் ஆகி விடுவேன் போல இருக்கிறது என்று 2022ஆம் ஆண்டில், ஒரு குறிப்பில் எழுதி இருக்கிறார். அவர் அச்சப்பட்டது நடந்தே விட்டது..

ஆசிரியை உதயலட்சுமி, இப்போது எழுத்தாளர் ஆகி விட்டார் என்பதை இந்நூல் நமக்கு பறைசாற்றுகிறது..

வாழ்த்துகள் உதய லட்சுமி, தொடர்ந்து எழுதுங்கள்..
_
தேனி சுந்தர்
10/05/2023

Comments