ஆசிரியர் இளங்கோ கண்ணன் எழுதிய "தவசு" நூல் குறித்து...

நான், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்துகிற புது விழுது: இருமாத கல்வி இதழின் ஆசிரியராக இருந்த போது ஒவ்வொரு இதழ் தயாராகும் முன்பும் தொடர்பில் இருக்கும் அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் இதழுக்கு படைப்புகள் கேட்டு தகவல்கள் அனுப்புவதுண்டு..

வாட்ஸ்அப், குறுந்தகவல், மின்னஞ்சல், முகநூல், மெசஞ்சர், கடிதம் என அனைத்து வழிகளிலும் முயற்சிப்பது வழக்கம். "அய்யய்யய்யய்ய்யே..இவனோட பெரிய தொல்லையாக இருக்கே..!" என்று எத்தனை பேர் திட்டினார்களோ தெரியாது..! ஆனாலும் நான் தொடர்ந்து கொண்டே இருப்பேன்.

தமிழகம் அறிந்த கல்வியாளர் பெருமக்கள் மரியாதைக்குரிய எஸ்.எஸ்.ராஜகோபாலன், பேரா.ச.மாடசாமி, ஆயிஷா நடராசன், பிரின்ஸ் கஜேந்திர பாபு, விஞ்ஞானி தவி வெங்கடேஸ்வரன், கவிஞர் முத்து நிலவன் என ஏராளமான பெரிய தலைக் கட்டுகளிடம் எல்லாம் கட்டுரைகளை வாங்கிவிடுவேன்..

இருந்த போதிலும் நம்ம ஆசிரியர் பெருமக்களிடம் இருந்து பெரிய அளவுக்கு படைப்புகள் வந்து சேராது. ஆசிரியர் குழுவில் இருக்கும் நண்பர்களிடமே கூட போராடித்தான் வாங்க வேண்டி இருக்கும்.. நம்மை மகிழ்விக்கும் வகையில் படைப்புகள் அனுப்பிய ஒரு சில ஆசிரியர்களுள் நெல்லை இளங்கோ கண்ணனும் ஒருவர்.. சங்கரன் கோவில்காரர். ஆங்கில பட்டதாரி ஆசிரியர். அறிவியல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபாடு மிக்க நண்பர்..

அவருடைய கட்டுரைகள் மிக சிறிய சம்பவம் குறித்து மிக எளிய நடையில் எழுதப் பட்டவையாக இருக்கும்.. ரசிக்கும் படியாகவும் சிந்திக்கும் படியாகவும் எழுதுவார்..

அவருடைய ஆசிரிய அனுபவங்களின் பதிவுகள் "தவசு" என்கிற பெயரில் ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலாக சமீபத்தில் வெளிவந்துள்ளது.. குட்டி குட்டி அனுபவங்கள்.. சிறு சிறு கட்டுரைகள்.. நம்மோடு உரையாடும் நடை. அதே நேரத்தில் அங்கங்கே நம்மை உலுக்கிப் போடுகிற கேள்விகள்..! 

"இப்பெல்லாம் எங்க சார் சாதி பாக்குறாங்க..?!" என்று நம்மில் சிலர் நினைப்பதுண்டு, கேட்பதுண்டு. "அட, என்ன இப்படி கேட்டுட்டிங்க, சாதி எங்கெல்லாம், எப்படியெல்லாம் இருக்குது பாருங்க..!" என்று நமக்கு வகுப்பு எடுத்துச் சொல்லும் விதமாக இருக்கிறது இந்த நூலின் கட்டுரைகள்..

"உங்க அம்மா எத்தனை பேர் கிட்ட போயி உன்னைப் பெத்தாளோ..?" என்று எட்டாம் வகுப்பு சிறுமியைக் கேட்கிற ஆறாம் வகுப்பு சிறுவனை நாம் இந்த நூலில் சந்திக்கலாம்..

"ஆசிரியரின் பெயரை காகிதத்தில் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கப் போகிறேன்" என கொந்தளிக்கும் சிறுமியை நாம் இந்த நூலில் சந்திக்கலாம்..

ஆண்களின் பெயரைத் தான் இன்சியலாக போட வேண்டுமா எனக் கேட்கிறாள் ஒரு குழந்தை. அதற்கு பெரிய பெரிய காரணங்களை ஆசிரியர் சொல்கிறார். "சரிங்க சார், அந்த மாற்றங்கள் வரும் போது வரட்டும்.. நம்ம வகுப்பில் உள்ள வருகைப் பதிவேட்டில் உள்ள ஆண் குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் தான் பெண் குழந்தைகளின் பெயர்கள் என்கிற அந்த வரிசை முறையை உங்களால் மாற்ற முடியாதா..?" என்று கேட்டு திகைக்க வைக்கும் குழந்தையை நாம் இந்த நூலில் சந்திக்கலாம்..

மைக்ரோ பயாலஜி படித்து விட்டு பள்ளியில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் கஸ்தூரி எழுப்புகிற கேள்வி நம்மையும் தான் தொந்தரவு செய்கிறது..

"ஓ.. 36 ஆம் நம்பர் பள்ளிக்கூடம்'னா, அப்ப நீங்க மூப்பனார் சாதி தானே..?!" என்று கேட்பதை இயல்பாக கொண்டிருக்கும் கடைக்காரரை நம் நிச்சயம் சந்தித்ததாக வேண்டும்..!

குழந்தையை சாதாரணமாக "ஒரு குழந்தை" என்றில்லாமல் "இன்ன சாதிக் குழந்தை" என்றும் ஆசிரியர்களை பாடவாரியான ஆசிரியர்கள் என்றில்லாமல் "இவரு இன்ன சாதி ஆசிரியர்" என்று பார்க்கிற குழந்தைகள், சக ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர், பொதுமக்கள் இந்த கட்டுரைகளில் வருகிறார்கள்..

"ஆதிக்க சாதி குழந்தை" என்கிற வார்த்தைகளை வாசிக்கும் போதே நமக்குப் பதறுகிறது.. இல்லம் தேடிக் கல்வி மையங்களை நடத்துவதில் கூட தடையாக வருகிற சாதிய உணர்வு நமக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது..

பாலினம், சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பழகுகிற கல்லூரி மாணவர்கள் குறித்த தவசு கட்டுரை, அது தான் தலைப்புக் கட்டுரை.. பின்னாலேயே விரட்டி வந்து, அதுவும் ரிக்சா வண்டி பிடித்து வந்து மன்னிப்பு கேட்கிற அஸ்ஸாம்காரர் உடனான அனுபவத்தை சிரிக்க சிரிக்க சொல்லும் "அவர்களும் மனிதர்களே" என்பன உள்ளிட்ட கட்டுரைகள் நம்பிக்கை ஊட்டுகின்றன..

இந்நூலை அச்சுக்கு செல்லும் முன்பே வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது என்றபோதும் அச்சாகி வந்த பிறகு வாசிக்கும் போது இன்னும் நெருக்கமாக இருக்கிறது.. தன்னுடைய சொந்த முயற்சியில் அவரே வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர். கல்வி வளாகங்களுக்குள்ளும் பிஞ்சுக் குழந்தை மனங்களுக்குள்ளும் இந்த சாதி விசம் எப்படி படிந்திருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சான்றாக விளங்குகிறது இந்நூலை கல்வி ஆர்வலர்கள் அவசியம் வாங்கி, வாசிக்க வேண்டும்.. ஆதரவளிக்க வேண்டும்.

வாழ்த்துகள் இளங்கோ கண்ணன் சார்..
தொடர்புக்கு : 9487655744
_
வாழ்த்துக்களுடன்
தேனி சுந்தர்

Comments