வளர்ந்து வரும் ஓர் இலக்கிய வகை இது - ச.தமிழ்ச்செல்வன்

தேனி சுந்தர் எழுதிய ”ஓங்கூட்டு டூணா..!”

டுஜக் டுஜக் என்கிற நூலின் மூலமாக புகழ்பெற்ற எழுத்தாளர் தேனி சுந்தரின் இரண்டாவது முயற்சி இது. டுஜக் டுஜக் நூலில் அவர், அவருடைய குழந்தைகளின் உரையாடல்களையும் அவர்களுடனான உரையாடல்களையும் தொகுத்திருந்தார். ஆசிரியரான அவர் இந்த நூலில் வகுப்பறைக் குழந்தைகளின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் படம் பிடித்திருக்கிறார்..

தமிழில் இப்போது வளர்ந்து வரும் ஓர் இலக்கிய வகை இது. குழந்தைகளின் உலகத்துக்குள் நுழைய பெரியவர்களுக்கு எளிதில் பாஸ்போர்ட் கிடைப்பதில்லை. அந்த பாஸ்போர்ட்டுக்காக பலரும் மனுப் போட்டுக் கொண்டுள்ளார்கள் பலகாலமாக.. குழந்தைகளுடன் நடத்தும் உரையாடல்கள் அவர்களின் மனப்போக்கு எத்திசையில் செல்கிறது என்பதைக் கணிக்க உதவும் கருவியாக பயன்படுவதை இத்தகைய நூல்கள் காட்டுகின்றன..

வீட்டுக்கு நிறைய விருந்தாளிங்க வந்திருக்கும் போது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், அன்று வகுப்பில் அவள் அழுதுகொண்டே இருந்தாலும் பள்ளிக்கூடம் போனால் நாலு எழுத்துப் படிச்சுக்குவாளே என்று சொல்கிறார்கள். வீடு நிறைய விருந்தாளிகள் வந்திருக்கும் போது வீட்டில் இருந்தால் குழந்தைகள் எவ்வளவோ கத்துக்குமே என்று தேனி சுந்தர் எழுதுகிறார்.. உண்மை. கல்வி என்பது குழந்தைகள் புழங்கும் ஒவ்வொரு வெளியிலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை. சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கும் வகுப்பறையில் மட்டும் தான் கல்வி என்கிற புரிதல் எவ்வளவு முட்டாள் தனமானது?

சாலைகளில் வேகத்தடை எதுக்குப் போடறாங்க? என்று ஆசிரியர் கேட்கும் போது ஒண்ணாப்பு படிக்கும் சாண்டில்யன் சொல்லும் பதில் : ”போலீசு வசூல் பண்றதுக்கு சார்..” - தங்கள் அனுபவத்தில் இதுபோல குழந்தைகள் பெரிய விசயங்களையெல்லாம் எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள்..

”ஒனக்கு ஒண்ணுந் தெரியல..
நீ முட்டாள்னு சொல்றதுக்கு
எதுக்கு வாத்தியாரு?
எதுக்குப் பள்ளிக்கூடம்?
எதுக்கு ஒரு சிஸ்டம்?” - என்று முடிகிறது ஒரு குறிப்பு. இது நம் கல்வி முறையைக் கேள்வி கேட்பதோடு நிற்கவில்லை. குழந்தைகள் தங்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். ஆசிரியர் மீதும் நம்பிக்கை வைக்கிறார்கள். பெரியவர்களான நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாமா? என்கிற ஆழமான கேள்வியைக் கிளப்புகிறது..

இதுபோலப் பல திறப்புகளோடு நகரும் இந்த நூலைப் போல பல நூல்களை ஆசிரியர்கள் பலரும் எழுத வேண்டும். அத்தகைய நூல்களின் வழியே நாம் குழந்தைகளைப் புரிந்துகொள்ளும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க முடியலாம்.


வெளியீடு : பாரதி புத்தகாலயம்
**************************************
- ச.தமிழ்ச்செல்வன்
நன்றி : செம்மலர், மே, 2023

Comments