"ஓங்கூட்டு டூணா" - நானும் "ஐ லைக் இட்..! - மனத்துணைநாதன்

"குழந்தைங்க இப்பவெல்லாம் ரொம்ப மோசங்க.. சொல் பேச்சே கேட்கிறதில்ல.. அடிச்சா தான் உருப்பிடுவாங்க.. எங்க கையில் இருந்த கம்ப தான் பிடுங்கிட்டாங்களே!"- இப்படி தான் குழந்தைகள் மீதான அக்கறையும் பரிவும் பரவலாய் பொங்கி வழிகிறது. ஆம், குழந்தைகளை குற்றவாளிகளை போல அணுகுகிற பார்வை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

குழந்தைகள் அவர்களது இயல்பை, அது தவறோ, சரியோ... வெளிப்படுத்தி விடுவார்கள்.. பெரியவர்களைப் போல உள்ளும் புறமும் வேறு வேறாக அவர்கள் இருப்பதில்லை.

எப்பொழுதும் நான் சொல்வதை மட்டும் செய் என்றால் அது சரியாகுமா? "ஏய்.. சாருக்கு நான் தான் எட்டுப் போட சொல்லிக் கொடுத்தேன்..!" என்று குழந்தைகள் சொன்னால் "ஆமாம்" என்று அதை ஏற்று சிரிக்கிற மனங்கள் தேவை அல்லவா...?

இயல்பாக ஒரு மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையேயான உரையாடல்கள் பற்றி பெரிதாக எங்குமே பதிவு செய்யப்படவில்லை. அதுவும் அதே குழந்தைகளுக்கான உரையாடல் மொழியில்... பாடங்களுக்கு அப்பால் வகுப்பறையில் நடக்கின்ற உயிரோட்டமான ஒரு அசல் சூழலை பேசவோ அதை முக்கியத்துவம் கருதி எழுதி ஒரு புத்தகமாகவோ வெளியிட யாரும் முயலவில்லை. தேனி சுந்தர் அவர்கள் அப்படியான ஒரு முயற்சியை செய்திருப்பது பாராட்டுக்குரியது மட்டுமல்ல நன்றிக்குரியதாகவும் இருக்கிறது.

அவரது ஓங்கூட்டு டூணா புத்தகத்தை வாசிக்க வாசிக்க நமது வகுப்பறைகளில் வந்து போன பல முகங்களை பார்க்கவும், ரசிக்க மறந்து கடந்துபோன நிமிடங்கள் பலவற்றை இன்று ரசிக்கவும் நம்மால் முடிகிறது..

குழந்தைகளோடு விளையாடுகிற, அவர்களது பேச்சை அலட்சியப்படுத்தாமல் கவனித்து பதில் தரும் ஆசிரியர்களை குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்து விடுகிறது.. ஆசிரியர் என்கிற பயமின்றி குழந்தைகள் பழகும்போது மட்டுமே ஒரு வகுப்பறையில் எல்லா முகங்களுமே மலர்ந்திருக்கின்றன. "எங்கு சுதந்திரமாக உரையாட முடிகிறதோ அங்கெல்லாம் குழந்தைகள் வாழ்ந்து காட்டி விடுகிறார்கள்" என்பதற்கு இப்புத்தகமே சாட்சி.

இதில் குழந்தைகளுடனான எல்லா பதிவுகளையுமே நான் ரசித்தேன். முதல் பக்கத்திலிருந்து நமக்கு தொற்றிக்கொள்ளும் உற்சாகம் படித்து முடித்த பின்பும் கூட நினைவு வரும்போதெல்லாம் நாம் நம்மை அறியாமலே சிரிக்கவும் குழந்தைகளது வார்த்தைகளை நினைத்து நினைத்து ரசிக்கவும் முடிகிறது.. இத்தனை ஆண்டுகால அனுபவங்களில் இப்படி பேசிய விளையாடிய எல்லா குழந்தைகளும் நமக்கு ஒரு கணம் வந்து போகிறார்கள். நம்மை திரும்பி பார்க்க வைக்கிற, அதோடு நாம் எங்கெல்லாம் விலகி நின்றுவிட்டோம் என்பதை உணர்த்தி சுயவிமர்சனமாய் கேள்வி கேட்கிற புத்தகம் இந்த "ஓங்கூட்டு டூணா" - வகுப்பறைக் குறிப்புகள்.

அபியின் கதை அனுபவத்தோடு துவங்கும் முதல் பக்கத்திலே நான் ரொம்ப நேரம் நின்றிருந்தேன்.

"ஒரு ஊர்ல
பெரிய மலை இருந்துச்சாம்
அங்க பெரிய சிங்கம் இருந்துச்சாம்
நாலு மாடு இருந்துச்சாம்

மாடு சிறுசா? பெருசா?

பெருசுதான் சார்.
அதோட கொம்பு
வானத்துக்கு வரைக்கும் இருக்கும்..

அப்ப ஒருநா..
அந்த மாடு...
சிங்கத்த ஒரே முட்டு முட்டுச்சாம்
சிங்கம் அப்படியே
வானத்துல போயி விழுந்துச்சாம்..

அப்புறம்???

மாடு செத்து போயிருச்சு...."

ஒரு அடியில் சிங்கம் தூரம் போய் விழுந்தும் கூட மாடு செத்து போயிடுச்சு என்று முடிகிற இந்த கதையை குழந்தைகளால் மட்டுமே யோசித்து சொல்ல முடியும்.


"ஏண்டா இப்படி
எல்லா சிலேட்டும்
களவாண்டு வச்சிருக்க?

களவாணல சார்
சும்மா எடுத்து வச்சிருக்கேன்

அதான் ஏன் எடுத்து வச்ச?

இதெல்லாம்
என்னோட கண்ணுக்குள்ள
வந்துக்கிட்டே இருந்துச்சு சார்..."

"சார்
நான் பெரிய ஆளாயிட்டேன்...

எப்டிடா ஒரே நாள்ல பெரிய ஆளான?

நேத்து நாங்க முடிவெட்ட போனோம்
அப்ப நான் அழவே இல்ல
அப்டியே பெரிய ஆள் ஆயிட்டேன்...!"

"எதுக்கு நந்து
ரெண்டு நாளு பள்ளிக்கூடம் வரல?

லீவு விட்டுட்டோம் சார்..

லீவு விட்டுட்டுட்டீங்களா...
யாரு விட்டது?

நானும் பூவினியும்..

ஒங்க இஷ்டத்துக்கு
நீங்களே லீவு விட்டுக்கிட்டா...
அப்போ நாங்க எதுக்கு இருக்கோம்?

தெரியல சார்...!"

"மாசாணி அம்மா மேல சத்தியமா
இனிமே நான் லீவு போட மாட்டேன்..!"

இப்படி பல பதிவுகள்... ஒவ்வொன்றுமே வகுப்பறை இப்படியெல்லாம் உற்சாகத்தால் ஆனதா..? நாம்தான் வேறு பாதையில் ஓடுகிறோமா? என்கிற கேள்வியை, புரிதலை நமக்குள் மெல்ல அரும்ப செய்கின்றன. மேலும் ஒரு பள்ளிக்கூடம் எப்படி இருக்க வேண்டும்? வகுப்பறையில் எத்தைகய சூழலை நாம் குழந்தைகளுக்காக உருவாக்கித் தர வேண்டும் என்பதை நம்மிடையே நன்கு உணர்த்தவும் செய்கின்றன.

டோட்டோசான் புத்தகமும் அதில் வரும் கோபயாக்சி என்ற தலைமையாசிரியரும் கல்வி, குழந்தைகள் குறித்து பேசும் அனைவரிடையேயும் பிரபலம். காரணம் குழந்தைகளுக்கேற்ற சூழலும் வாய்ப்பும் அதனால் குழந்தைகள் கற்றுக்கொண்ட பல விசயங்களும் குறித்து பேசிய புத்தகம் அது. அந்த தலைமையாசிரியர் ஒரு சிறுமியின் பேச்சை 1/2 நாள் முழுதும் ம்ம்ம்... கொட்டி ம்ம்ம்... கொட்டி கேட்டு ரசித்த அதே தன்மை இந்த "ஓங்கூட்டு டூணா" நூல் முழுவதுமே நூலிழையாய் நம்மை பிடித்து இழுத்து செல்வதை நாம் உணர முடியும்..

குழந்தைகளது தவறான உச்சரிப்புகளை, ஒலிப்பு விதங்களை கொச்சையாக எண்ணி விரைந்து அதை சரிப்படுத்திட நினைப்போர் இடையே தேனி சுந்தர் அவர்களது பொறுமையும், குழந்தைகளுடனான அன்பும் அவர்களுக்கு வழங்கியுள்ள சுதந்திரமும் வகுப்பறை என்பது எவ்வளவு அற்புதமானது முக்கியமானது என்பதை ஆழமாய் நமக்கு உணர்த்தி செல்கிறது இந்நூல்..

"எப்போ சோறு போடுவீங்க சார்..?" என்று சிரித்துக் கொண்டே கேட்கிற குழந்தையின் பசியும் குடும்ப சூழலின் வலியும் தாண்டி, "இப்படி வரும் எங்களை எல்லோரும் எப்போ சார் புரிந்துகொண்டு நடப்பீங்க..?" என நம்மை கேள்வி கேட்பதாகவே படுகிறது.

ஒரு ஆசிரியராக கல்வித் தளத்தில் இயங்குபவர்களுக்கு தேனி சுந்தர் அவர்களது கல்வி சார்ந்த கட்டுரைகள், குழந்தைகள் மீது அக்கறை கொண்டு அவர் எழுதியுள்ள அனைத்து பதிவுகளுமே முக்கியமானதாக நான் பார்க்கிறேன். கடந்த சில வருடங்களாக குழந்தைகள், ஆசிரியர்கள் அவல நிலையை எடுத்துரைத்து அதிகாரத்துக்கு எதிராக அதிகம் பேசியவர், எழுதியவராக நமக்கு அவரை தெரியும்.. இன்று தனித்துவமான எழுத்தாளராக "டுஜக் டுஜக், சீமையில் இல்லாத புத்தகம், ஓங்கூட்டு டூணா" ஆகிய புத்தகங்கள் வாயிலாக அறியப்படுவதில் நமக்கு மகிழ்ச்சி. இந்த புத்தகங்கள் குழந்தைகளை முன்பைவிட இன்னும் நெருக்கமாய் பார்க்க நம்மை தூண்டுகின்றன.

ஆசிரியரை கண்டு மரியாதை நிமித்தமாக பயந்து ஒடுங்கி நடந்தால் வகுப்பறையும் கல்வியும் மேம்பட்டதாகி விடும் என்கிற வேதகால கருத்துள்ளவர்கள் "ஓங்கூட்டு டூணா" நூலை ஒருமுறை படித்து விடுவது நல்லது.

கடைசி பக்கத்தில் இருக்கும் ஒரு பதிவு, இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் வார்த்தைகளில் இப்படி முடிகிறது...

"வாத்தியாரு கிட்ட
குழந்தைங்க இப்படித்தாங்க இருக்கணும்...
கொஞ்சங்கூட
பயமில்லாம பேசுறாங்க பாருங்க
ஐ லைக் இட்...!"

நானும் சொல்கிறேன்..
ஐ லைக் இட்..!
_
மனத்துணைநாதன்
நாகை

Comments