மணக்கும் ஏலம்.. வலிக்கும் வாழ்க்கை : ஏலோ..லம் நாவல்..!

காலையில் ஆறு-ஏழு மணிக்குள்ளும் மாலையில் நான்கு-ஐந்து மணிக்குள்ளும் தீயணைக்கப் போகிற வண்டிகள் போல அவ்வளவு ஜீப்கள் விர்விர்ரென்று போவதைப் பார்க்க முடியும். வண்டிக்குள் பார்த்தால் அரிசி மூட்டைகளைப் போல அவ்வளவு பெண்கள் ஒருவர் மேல் ஒருவராய் அடைந்து கிடப்பார்கள். மலைப் பாதையில் எப்படி அவர்களால் இவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்து போய் வர முடிகிறது என்பதை நினைத்தாலே நமக்கு கால், கைகளில் “சூக பிடிச்சுக்கிரும்..!” கம்பம் மெட்டு சாலை மற்றும் கம்பம் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளிலும் நாள்தோறும் காண்கிற காட்சி இது.

நான் வசிக்கும், பணிபுரியும் கிராமங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் வண்டிகளில் செல்கிறார்கள். கேட்டால் “மலை வேலைக்கு” என்பர். குழந்தைகள் தூக்கத்தில் இருக்கும்போதே வண்டி வந்து, பெண்கள் வேலைக்கு கிளம்பி விடுவார்கள். மீண்டும் அவர்கள் வீடு வந்து சேர்வதற்குள் அன்றைய பொழுது போய்விடும்.! குழந்தைகள் தாங்களே எழுந்து, குளித்து, கிளம்பி பள்ளிக்கு வருவர்.

இப்படியொரு வேலைவாய்ப்பு உருவானதன் பின்னணி என்ன? என்பதை வலிமிகு சித்திரமாக வரைந்து காட்டி இருக்கிறது ஏலோ-லம் நாவல்.!

தேனி மாவட்ட மக்கள் தொடர்பான இந்த நாவலை எழுதியவர் தோழர் ஜனநேசன் (வீரராகவன்) அவர்கள் காரைக்குடியில் அரசு கல்லூரி நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமுஎகச பொறுப்பாளரும் கூட. நிறைய கதைகள் எழுதி இருக்கிறார். ஆனால் இதுவே இவரது முதல் நாவல். கதையில் வருகிற "ரவி போலவே இவரும்" மிக வைராக்கியம் கொண்டு நாவலை உருவாக்கி இருக்கிறார். இந்நூல் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற தமுஎகச மாநிலக் குழு கூட்டத்தில் தான் வெளியிடப்பட்டது என்பது மற்றுமொரு சிறப்புத் தகவல்.

“ஏலத்தோட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வியல் பாடுகள் குறித்து தமிழில் எழுதப்படும் முதல் நாவல். கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏலத்தோட்ட மண்ணையும் மனிதர்களையும் கள அனுபவங்கள் வழி உயிர்ப்போடு கலையாக்கியுள்ளார். மணக்கும் ஏலத்தின் பின்புல வாழ்வியலை இந்நாவலில் தரிசிக்கலாம்..” என்கிற பின்னட்டைக் குறிப்பிற்கேற்ப, நாவலின் பெரும்பகுதியில் கேரள ஏலமலைக் காடுகளில் உலவிய அனுபவம் நமக்கும் கிடைக்கிறது.

1969ல் தொடங்குகிற கதை நிகழ்காலத்தில் முடிகிறது. ஆண்டிபட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏல மலை வேலைக்கு கங்காணிகளால் அழைத்துச் செல்லப்படுகிற அப்பாவி மக்கள் பட்ட பாடுகளைச் சொல்கிறது நாவல். ஒண்ணே கால் ரூபாய்க்கும் ரெண்டே கால் ரூபாய்க்கும் அட்டைக் கடி, பாம்புக்கடி, யானை, குரங்கு தாக்குதல்கள் - இத்தனையையும் கடந்து கங்காணி, மேனேஜர், கணக்குப் பிள்ளை - இத்தனை கண்காணிப்புகளுக்கு இடையிலும் வயித்துப் பாட்டிற்காக அவர்கள் சந்திக்க நேர்ந்த துயரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சாதிக்காரர்களாய் ஆளுக்காளு முறுக்கிக் கொண்டு திரிந்தவர்கள் காலப்போக்கில் “சங்கத்துக்காரர்கள்” ஆகிறார்கள். ஒரு கட்டத்தில் சாதி மறைந்து சகாவு ஆகிறார்கள். பெரிய சாதி, எளிய சாதி, நாலாம் சாதி எல்லாம் கரைந்து “ஏழை சாதி” ஆகிற கதை இது.

“இனி குடியானவங்க பெரிசா, சக்கிலி, பள்ளு, பறையனுக பெரிசான்னு மோதிக்குவான்க.. எஸ்டேட் அமர்க்களமா இருக்கும்! அவனை விட இவன் கூட, இவனை விட அவன் கூடன்னு வேலை வாங்கலாம்” என்று பேசி, கணக்குப் போட்ட கணக்குப் பிள்ளை துரைச்சாமி இன்னொரு கட்டத்தில் புலம்புகிறார் இப்படி : என் பொறுப்பில் இருந்த வரைக்கும் சின்ன சாதி பெரியசாதி, எளிய சாதி, வலிய சாதின்னு தொழிலாளிகளுக்குள்ள போட்டியும் பொறாமையுமா வேலை பார்த்தாங்க. கூலி கூட வேணும்; அந்தச் சலுகை வேணும் இந்தச் சலுகை வேணும்னு கேட்கலை; விதியேன்னு வேலை பார்த்தாங்க! இப்ப சங்கத்தை வேற உள்ளெ இழுத்து விட்டுட்டாங்க! அது உள்ளே நுழைந்து குடையுது..!”

அப்படி வட்டப்பாறை எஸ்டேட்டில் என்னென்ன பிரச்சனைகள் நடந்தன, கூனிக் குறுகி கிடந்த மக்கள் எழுந்து நின்று கேள்வி கேட்க வைத்த தோட்டத் தொழிலாளர் சங்கம் எப்படி உருவாகிறது? அதை நசுக்க முதலாளிகள் செய்த சதி என்ன? சதிகளை கூட்டுச் சிந்தனை, கூட்டு முடிவுகள் மூலம் எப்படி முறியடித்தனர்? நடத்திய போராட்டங்கள் என்ன? சந்தித்த இழப்புகள் என்ன? அடைந்த உரிமைகள் என்ன என்பதையெல்லாம் அழகாகச் சொல்லிச் செல்கிறது நாவல்.

போராட்ட, பேச்சுவார்த்தை காட்சிகளில் எல்லாம் நாமும் களத்தில் உடன் நிற்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. சி.ஐ.டி.யு. கிருஷ்ணன் குட்டி, மாதவன் நாயர் ஆகியோர் பேசுகிற இடங்களில், எடுத்து வைக்கிற வாதங்களில், போராட்டங்களைத் திட்டமிடுகிற விதங்களில் சபாஷ் போட வைக்கின்றனர்.. வாசிப்பவர்களுக்கு ஒரு தொழிற்சங்கப் பாடம் போல இருக்கிறது. சிவனம்மா, வெள்ளைச்சாமி, பொன்னுத்தாயி, ரவி, சங்கிலி தாத்தா, சித்திரன் தாத்தா, பரமன், குரங்காட்டி, குப்பையன் உள்ளிட்ட பல்வேறு பாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவை.

சிவனம்மா கதாபாத்திரம் மிகச் சிறப்பு. முதியவருக்கு திருமணம் முடிப்பது, ஏற்படுகிற உளவியல் சிக்கல், முதியவரின் எதிர்பாராத அந்த இறப்பு, வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள்.. சிந்திக்க வேண்டிய இடங்கள். "சொல்ற விதத்தில் சொன்னா தான் கேட்பாய்ங்க" என்பது போல சிவனம்மா மலையில் வேலைக்கு வந்த பிறகு லட்சுமி அம்மன் இறங்கி சாமியாடுவது போல பேசுகிற இடம் சிறப்பு. மக்களை அடக்கி வைக்க உருவாக்கிய சாமியை முதலாளியிடம் அருள்வாக்கு சொல்லி மண்டையில் குட்டு வைக்கிற கருவியாகவும் பயன்படுத்துகிற உத்தி நன்றாக இருந்தது..

வெள்ளைச்சாமி எப்படி திடீர்னு இவ்வளவு தெளிவான ஆளாக மாறினார் என்று நமக்குத் தோன்றும் போதே அதற்குப் பொருத்தமான ஒரு விளக்கத்தையும் சொல்வது சிறப்பு.. ரவியின் கேள்விகள் மூலம் வாசகர்களுக்கு பல நல்ல விளக்கங்களை அங்கங்கே சொல்லிச் செல்வது அருமை..

"கொதிச்சு பொங்கி மண்ணில வழிஞ்சிறக் கூடாது மாப்பிள்ளை..! உள்ளேயே கொதிச்சு கூட உள்ளவங்களையும் பக்குவப்படுத்துறது தான் கெட்டிக்கார கோப நெருப்போட வேலை..!”

ரவி சொன்னான்.. “எல்லாரும் கேளுங்க! சிதறி பரவலாக இருக்கிற சூரிய வெளிச்சத்தை கண்னாடி வில்லை வழியா ஒண்ணு சேர்த்தால் தீப்பத்த வைக்க முடியுமுன்னா சிதறிக் கிடக்கிற நாம ஒன்னு சேர்ந்தா ஜெயிச்சிடலாமில்லே..!” என்பன போல இன்னும் பல வசனங்கள் மிக மிக அர்த்தப்பூர்வமானவை. சிறப்பானவை..

கீழ்வெண்மணிப் படுகொலை, கலைஞர் தனியார் பேருந்துகளை நாட்டுடமை ஆக்கியது, இந்திரா காந்தி வங்கிகளைத் தேசிய உடைமை ஆக்கியது போன்ற அன்றைய சில சம்பவங்கள் கூறப்படுவதும் திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றின் மூலம் கதையோட்டம் காலப்பொருத்தம் உடையதாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.

அதே நேரத்தில் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அந்த காலகட்டத்தில் ஆட்சியில் அமர்ந்த திமுக அரசு மற்றும் அப்போதைய கேரள அரசின் நடவடிக்கைகள், சமூகத் தாக்கம் போதிய அளவிற்கு கதையில் வரவில்லை. பிற்பகுதியில் மோடி அரசு வருவதை ஒப்பிடும் போது வரவே இல்லை என்றே சொல்லலாம். வந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்திருக்கும் என்பது தான். மற்றபடி கதை ஓட்டத்திற்கு அது ஒன்றும் தடையாக இல்லை.

நாவலின் இரண்டாவது பாகத்தை வாசிக்கும் போது வேறொரு நாவலை வாசிப்பதான உணர்வுமேலிடுகிறது. கதையின் உயிர்ப்பான கதாபாத்திரங்களையும் மைய ஓட்டத்தையும் மாற்றி விடுகிற தன்மையில் இருக்கிறது. தேனி தீக்கதிர் நிருபர் தோழர் முத்து அவர்கள் இரண்டாவது பாகத்தில் முக்கியமான பாத்திரமாக வருகிறார். பண மதிப்பிழப்பு குறித்து சிறு ஆய்வாக, நூலாசிரியர் சமகால அரசியல் சூழ்நிலைகள் குறித்து நம்மோடு உரையாடுவது போல அமைந்துள்ளது.

நாவலை வாசித்து விட்டு, பக்கத்து வீட்டில் இருந்து தினமும் மலை வேலைக்குச் செல்கிற அக்கா ஒருவரிடம் விசாரித்தேன். “பதிஞ்சவங்களுக்கு சம்பளம் ஐநூறு; எங்கள மாதிரி தெனமும் போய்ட்டு வர்றவங்களுக்கு நானூறு; வண்டிக்கு நூறு போக கையில் முந்நூறு கிடைக்கும்...” என்றார். “அதென்ன பதிஞ்சவங்க?” அது தான் வட்டப்பாறை தொழிலாளர்கள் சங்கம் முதன்முதலில் போராடி பெற்ற உரிமை..!

இன்று நூற்றுக்கணக்கான வாகனங்களும் ஆயிரக்கணக்கான ஊர்ப்புற பெண் தொழிலாளர்களும் ஏலமலை வேலைக்குச் செல்வதன் பின்னணியில் உள்ள முதலாளிமாரின் கணக்கு என்ன என்பதை முழுவதுமாகப் புரிந்து கொள்ள “ஏலோ-லம்” நாவலை நாம் வாசிக்க வேண்டியது அவசியம்..!

வெளியீடு : பாரதி புத்தகாலயம்
-
தேனி சுந்தர்

Comments