இதயங்களில் வாழும் இதயகீதன்
”பெற்றோர் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள்” என்பதற்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்தவர் எங்கள் இதயகீதன்.. அவர் தேனி அருகே நவம்பர் 7 வியாழன்று மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.. பேசுவதில், எழுதுவதில், நிதி திரட்டுவதில், நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில், புதியவர்களைக் கண்டறிந்து அணுகுவதில், அவர்களை அமைப்பாகக் கட்டுவதில், விமர்சனங்களை சம்பந்தப்பட்டவர் மனம் எவ்விதத்திலும் காயப்படுத்திவிடாத வகையில் கவனமாக எடுத்துச் சொல்லும் வித்தையில், முற்போக்கு முயற்சிகள், நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் முதல் ஆளாய் முன்வந்து பாராட்டுவதில், பங்குபெறுவதில், எவ்வளவு பெரிய செயல்திட்டத்தை முன்வைத்தாலும் அதை எளிதாக முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை அனைவரின் மனதிலும் அரும்பும் வகையில் அழகாகத் திட்டமிட்டுக் கொடுப்பதில் என எல்லாவிதங்களிலும் எங்களுக்குள் ஆழமாய்த் தாக்கத்தை ஏற்படுத்திய முற்போக்கு ஆளுமைதான் இதயகீதன்.. பழைய சோறும் பாதாம் கீரும், என்றென்றும் வாழும் ஜீவா, வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத் தாக்கம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர். அக்னிக்குஞ்சு இதழாச...