இதயங்களில் வாழும் இதயகீதன்

”பெற்றோர் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள்” என்பதற்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்தவர் எங்கள் இதயகீதன்.. அவர் தேனி அருகே நவம்பர் 7 வியாழன்று மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்..



பேசுவதில், எழுதுவதில், நிதி திரட்டுவதில், நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில், புதியவர்களைக் கண்டறிந்து அணுகுவதில், அவர்களை அமைப்பாகக் கட்டுவதில், விமர்சனங்களை சம்பந்தப்பட்டவர் மனம் எவ்விதத்திலும் காயப்படுத்திவிடாத வகையில் கவனமாக எடுத்துச் சொல்லும் வித்தையில், முற்போக்கு முயற்சிகள், நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் முதல் ஆளாய் முன்வந்து பாராட்டுவதில், பங்குபெறுவதில், எவ்வளவு பெரிய செயல்திட்டத்தை முன்வைத்தாலும் அதை எளிதாக முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை அனைவரின் மனதிலும் அரும்பும் வகையில் அழகாகத் திட்டமிட்டுக் கொடுப்பதில் என எல்லாவிதங்களிலும் எங்களுக்குள் ஆழமாய்த் தாக்கத்தை ஏற்படுத்திய முற்போக்கு ஆளுமைதான் இதயகீதன்..

பழைய சோறும் பாதாம் கீரும், என்றென்றும் வாழும் ஜீவா, வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத் தாக்கம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர். அக்னிக்குஞ்சு இதழாசிரியர், தமுஎகச மாநிலச் செயற்குழு உறுப்பினர், பட்டதாரி ஆசிரியர் சங்கத்தில், மாவட்டக் கல்வி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நலச்சங்கத்தில் மாவட்டச்செயலாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொறுப்பாளர், கள்ளர் சீரமைப்புத் துறையில் முனைவர் பட்டம்பெற்ற முதல் ஆசிரியர்... என அவரது பன்முகச் செயல்பாட்டைச் சொல்லிக் கொண்டே போகலாம்..


திமுக, அதிமுக, சிபிஎம், சிபிஐ, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளிலிருந்தும், பல்வேறு இலக்கிய அமைப்புகள், ஆசிரியர், மாணவர், பெண்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்களிலிருந்தும் தலைவர்கள் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு கண்ணீர்விட்டுக் கலங்கினர்..

வேலை செய்யலாம் ஆயிரம் பேர்... மாற்று அமைப்பினர் மனதிலும் நிற்பவர் எத்தனை பேர்? எங்கள் இதயகீதன் நிற்கிறார்...

தேனி சுந்தர்
(புதிய ஆசிரியன், டிசம்பர், 2013)

Comments

Popular posts from this blog

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23