அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23
#உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23:
ஏப்ரல் முதல் தேதிக்கு என்ன சிறப்பென்று உங்களுக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும். முட்டாள்கள் தினம்! மேலே வெள்ளைக் காக்கா பறக்குது..... சட்டையில் பூச்சி ஏறுது.... என்று சொல்லி சிலரை ஏமாற்றி (!) விட்டதாய் நினைத்து சின்னப்புள்ளத் தனமாய் நீங்களும் சிரித்திருக்கக் கூடும்.
ஆனால் இதே ஏப்ரல் மாதத்தில் தான் உலகப் புத்தக தினமும் வருகிறது. ஆனால் நாம் யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை. உலகப் புகழ்பெற்ற மாபெரும் கவிஞர் ஷேக்ஸ்பியரின் பிறந்த தினம் ஏப்ரல் 23. இதைத்தான் உலகப் புத்தக தினமாக அறிவித்து புத்தகங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வாசிப்பை அதிகப்படுத்தவும் மக்களை அறிவாயுதம் ஏந்தச் செய்யவும் பல்வேறு தரப்பினர் பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருந்தாலும் தமிழக அளவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமே மாவட்டந்தோறும் நகரங்கள், கிராமங்கள் தோறும் புத்தகங்களைக் கொண்டு செல்லும் பணிகளை அலட்டிக்கொள்ளாமல் அதே நேரத்தில் பெருமிதத்தோடு ஆண்டு முழுக்கவும் செய்து வருகிறது..
புத்தகங்கள் மகத்தானவை.. அற்புதமானவை.. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீயே.. இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்” என்கிறார்.. கவிப்பேரரசு வைரமுத்துவோ ”நமக்கு வரம் வேண்டி யாரோ செய்த தவம்-புத்தகம்” என்கிறார்..
வெறும் எழுத்துகளைக் கொண்டது அல்ல.. வெற்றுத் தாள்களின் தொகுப்புமல்ல.. ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளனின் எண்ணம், கனவு, லட்சியங்களைக் கொண்டிருக்கிறது . இதை மனதில் கொண்டு தான் கவிஞர் வால்ட் விட்மன் சொல்கிறார்.. “புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது ஒரு மனிதனின் இதயத்தைக் கையில் எடுக்கிறீர்கள்” என்று..
விதைக்குள் விருட்சம் போல் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கான கருத்துகளைச் சில புத்தகங்கள் தன்னுள் கொண்டிருக்கின்றன.. அதனால் தான் “ஆட்சி அதிகாரத்தையே உலுக்கி விடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு” என்கிறார் கார்லைல் என்னும் அறிஞர்.. “துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள்.. புத்தகங்கள்” என்று கூறியிருக்கிறார் மார்டின் லூதர்கிங்..
நுகர்வுக் கலாச்சாரத்தின் நுகத்தடியால் ஆட்டுவிக்கப்படும் நாமெல்லாம் புதிய உற்பத்திப் பொருட்கள் சந்தைக்கு வந்தவுடன் வாங்கிவிடத் துடிக்கின்றோம்.. அதனினும் சிறப்பு, அதை விட இது சிறப்பு என நம்மைப் புதுப்பித்துக் கொள்ள அலைகின்றோம்.. ஆனால் மனிதனைப் புதுப்பிக்கும் சக்தி நல்ல புத்தகங்களுக்குத் தான் உண்டு என்பதை மறந்து விடுகின்றோம்.. மிகச் சிறந்த் இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்கிறார்.. “மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிகச் சிறந்தது புத்தகம் தான்”. ஆகவே நாம் தினந்தோறும் வாசிக்கப் பழக வேண்டும். மாதந்தோறும் காசு கொடுத்து புதிய புத்தகங்களை வாங்குவதற்கு நாம் நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
“எனது முன்னேற்றங்கள் அனைத்திற்கும் ஒரே ஆசான்.. புத்தகங்கள் தான்” என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.. “மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே அற்புதமானதும் அதிக பயனுள்ளதும் புத்தகம் ஒன்றுதான்” என்கிறார் சாமுவேல் ஜான்சன் எனும் அறிஞர்.
இன்று எந்த விசயமாக இருந்தாலும் அதன் அழகியல் கூறுகளில் அதிக கவனம் செலுத்துகின்றோம். தெளிவு, துல்லியம், பொருத்தம் என்று சொல்லிக் கொண்டு நுணுக்கமாக நுழைந்து நுழைந்து தேடுகிறோம். எது உண்மையான அழகு என்பதறியாமல்! ஒரு வீட்டை அழகுபடுத்த என்னென்ன முயற்சிகள், எத்தனை ஆலோசனைகள், எத்தனை செலவுகள், எவ்வளவு கடன்? நமக்காகவே சொல்கிறார் ஹென்றி வார்ட் பீச்சர் எனும் அறிஞர் “வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.”
பூஜை அறை, படுக்கை அறை, வரவேற்பறை, கழிப்பறை, சமையலறை எனப் பல அறைகளைக் கட்டி காலி அறைகளில் கண்டதைப் போட்டு பூட்டி வைப்பவர்கள் வாசிப்பறை ஒன்று அமைப்பதற்கு யோசிப்பதில்லை.. இவர்களைத் தான் “வீட்டுக்கொரு புத்தக சாலை, நாட்டுக்கொரு நல்ல நிலை” என்பதறியாத வீணர்கள் என்கிறார் பேரறிஞர் அண்ணா..
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டால் வெகுவிரைவில் பன்மடங்காய்ப் பெருக்குவதற்கு என்ன வழியென்று கேட்போம். ஆனால் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளிடம் கேட்டபோது “நூலகம் கட்டுவேன்” என்றாராம். மனித சமூகத்தின் மனவளத்தைப் பெருக்க, சமூகத்தை மேம்படுத்த எது சரியான முதலீடு என்பதை உணர்ந்து சொன்ன வார்த்தைகள் அவை.
பெண்கள் முன்னேற என்னதான் வழியென்று கேட்டபோது “முதலில் அவர்கள் கைகளிலுள்ள கரண்டிகளைப் பிடுங்கிவிட்டு புத்தகங்களைக் கொடுங்கள்” என்றாராம் தந்தை பெரியார். நாம் இன்றும் அதைச் சரியாகச் செய்யவில்லை என்பது ஒரு பக்கம் உறுத்துகின்ற உண்மை.
ஒரு நாள் மரத்தடியில் உட்கார்ந்திருந்தபோது, மேலிருந்து பழம் ஒன்று விழுவதைக் கண்டார், யோசித்தார். புவியீர்ப்பு விசை என்பதைக் கண்டறிந்தார் என்ற ஒற்றைவரியில் நமக்கு அறிமுகமாயுள்ள ஐசக் நியூட்டன் சொல்கிறார் “ஒரு புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம்” என்று!
“ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குத் தருபவனே மனித குலத்தின் உண்மையான விடிவெள்ளி” என்கிறார் ஜான் மில்டன். இந்திய விடுதலைப் போரின் விடிவெள்ளி, இளைஞர்களின் எழுச்சி நாயகனாய் இன்றும் திகழும் மாவீரன் பகத்சிங் தனது 23ஆம் வயதில் தூக்கிலிடப்பட்டார். அவரது கடைசித் தருணம் வரையிலும் புத்தகங்களை வாசித்துக் கொண்டு தான் இருந்தாராம். அந்த வயதிலேயே நான்கைந்து புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
சட்ட மேதை அம்பேத்கர் ஒரு முறை வெளிநாடு சென்றிருந்த போது எங்கு தங்க விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது எந்த இடம் நூலகத்திற்கு அருகில் இருக்கிறது எனக் கேட்டாராம். அதனால் தான் அவர் மேதை!
ஆசிய ஜோதி, நவ இந்தியாவின் சிற்பி ஜவஹர் லால் நேருவிடம் உங்களை ஒரு தனித் தீவிற்கு நாடு கடத்தினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு “புத்தகங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பேன்” என்று பதிலளித்திருக்கிறார். சில ஆசிரியர் பெருமக்களால் புத்தகங்களைக் கண்டாலே மிரண்டோடிய மாணவர்கள் ஏராளம்... இல்லையா?
உலகத்தவரால் மாமேதை என்றழைக்கப்பட்ட லெனினுக்கு பிறந்த நாள். என்ன பரிசு வேண்டுமென மக்கள் கேட்க, புத்தகம் என்று பதிலளித்தாராம். தெறித்து ஓடினர் மக்கள். ஆனால் திரும்பி வந்தனர் லட்சக்கணக்கான புத்தகங்களோடு (பல மொழிகளில்). இன்றும் அதுதான் உலகின் மிகப்பெரிய நூலகம். ஆம், மாஸ்கோ நூலகம். லெனின் இறந்த போது “லெனின் வாசிப்பதை, சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்” என்று கூறினராம். நாம் இரண்டையும் நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சிலருக்கு தொடங்கினால் தானே நிறுத்துவதற்கு என்ற கேள்வி.. அதுவும் நியாயம் தான்.
நமது குழந்தைகளுக்கு பிறந்த நாளின் போது, விழாக்களின் போது எண்ணற்ற பரிசுகளை வாங்கித் தருகிறோம்.. அதனால் பிரயோஜனம் உண்டா? எதை வாங்கித் தரவேண்டுமென்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறுகிறார் கேளுங்கள்.. “குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு, புத்தகங்களே.”
அச்சு இயந்திரம், நவீன தொழில்நுட்பங்கள் இப்பொழுது தானே? ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தத்துவ மேதை பிளேட்டோ அப்பொழுதே எண்ணற்ற நூல்களைச் சேகரித்து நூலகம் வைத்திருந்தாராம். அவர் எழுதியிருக்கிறார்.. “ஒருவன் புத்தகங்களைப் படித்து புதிய விசயங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதை விட பிறவாமல் இருப்பதே நல்லது.”
முகலாய மன்னன் பாபரின் மகன் ஹிமாயூன் உல்லாச இல்லமாக இருந்த ஷேர் மண்டல் மாளிகையை அரிய நூல்களைக் கொண்ட நூலகமாக மாற்றினாராம். (23ம் புலிகேசி திரைப்படம் நினைவுக்கு வருகிறதா?) மேலும் போர்க்களத்துக்குக் கூட புத்தகங்களோடு செல்வாராம்..
இன்னொரு முகலாய மன்னன் ஜஹாங்கீரின் மகன் குஸ்ரூ என்பவர் தமக்கென தனி நூலகத்தையே அமைத்திருந்தாராம். அரசாணையால் அவருடைய இரு கண்களும் பாதிக்கப்பட்டபோது தனது மனைவியை வாசிக்கச் செய்து தனது அறிவு தாகத்தைத் தணித்துக் கொண்டாராம்.
உன் நண்பனைச் சொல் உன்னைச் சொல்கிறேன் என்று சாக்ரடீஸ் சொன்னது நமக்கெல்லாம் தெரியும். ஜேம்ஸ் ஆலன் என்னும் அறிஞர் சொல்கிறார் “நீ எந்தப் புத்தகத்தைப் படிக்கிறாய், படித்திருக்கிறாய் என்பதைச் சொல்.. நீ யாரென்பதைச் சொல்கிறேன்” என்று.
“ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும் போதெல்லாம் ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது” என்கிறது பைபிள். ஆகவே இத்தகைய சிறப்பு வாய்ந்த புத்தகங்களோடு நாம் கொண்டுள்ள நட்பும் நேசமும் எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதை நாம் சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டிய காலமிது நண்பர்களே..!
நமது அன்றாட வாழ்வில் பல்வேறு அலுவலகங்களுக்கு, மருத்துவமனைக்கு, வழிபாட்டுத் தலங்களுக்கு, பொழுதுபோக்கு இடங்களுக்கு, விளையாட்டுத் திடலுக்கு எனப் பல்வேறு இடங்களுக்குச் செல்கிறோம். ஆனால் நம்மில் பலருக்கு உள்ளூரில் நூலகம் இருப்பதே தெரியாது. சொல்லப்போனால் நூலகம் இருக்கும் திசை கூடத் தெரியாது!
பொது அறிவு நூல்கள், விஞ்ஞான நூல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், கட்டுரை நூல்கள் எனப் பலவிதமான இலக்கிய நூல்கள், இசை நூல்கள், திறனாய்வுப் புத்தகங்கள், கணித, அறிவியல், இலக்கியப் புதிர்கள் கொண்ட புத்தகங்கள், மருத்துவம், சமையல், உடல்நலம் குறித்த புத்தகங்கள் என ஆயிரக்கணக்கான புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தும் அனாதைச் சிறுமி போல் தெருவோரம் கவனிப்பாரற்று நூலகங்கள் நிற்பது கொடுமையல்லவா?
கண்டும் காணாமல் போவது நாம் செய்யும் பாவமல்லவா? வாசகர்கள் வருகையின்மையால் நூலகர்கள் இருகைகளிலும் மாற்றி மாற்றி கையெழுத்துப் போடும் நிலை மாற வேண்டாமா?
பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாழக்கூடிய பகுதிகளில் கூட நிலைமை இதுதான். மற்ற துறையினரை விட கற்பித்தல் பணிபுரியக்கூடியவர்கள் தொடர்ந்து கற்பவர்களாகவும் இருக்கவேண்டும். தனவந்தரால் தானம் கொடுக்கமுடியும்.. பூத்த மலரில் தான் நறுமணம் வீசும். ஓடுகின்ற நீரோடைதான் சுத்தமாக இருக்கும்.. எரிகின்ற விளக்கு தான் இன்னொரு விளக்கை ஏற்றமுடியும்.. அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு! என்பது பாரதிதாசனின் வெறும் கவிதை வரிகளல்ல! ஆசிரியர்களுக்கான வேத வாக்கு!
புத்தக தினத்தை திருவிழாவாக மாற்றுவோம். வாசிப்பை நேசிப்போம். சுமையாகக் கருதாமல் சுவாசத்தைப் போல் இயல்பானதாய் ஆக்குவோம். அறிவை ஆயுதமாக மாற்றுவோம்.. தெருவெங்கும் நூலகம்.! வீடுதோறும் புத்தகம்.! இதுவே நம் இலட்சியம்.....! (கருத்து உதவி: புத்தகம் பேசுது & கமலாலயனின் நூலகங்களுக்குள் ஒரு பயணம்)
-தேனி தே.சுந்தர்
-விஞ்ஞானச்சிறகு மாத இதழ்
ஏப்ரல்,2010
எதிர்வினை:
தே.சுந்தர் அவர்களின் கட்டுரை வாசித்தேன். நன்றி. புத்தகம் பற்றி இவ்வளவு பொன்மொழிகளா என வியக்கும்படி திரட்டி வழங்கி இருந்தார். சிறப்பான நன்றியைத் தெரிவிக்க வேண்டும். வாசிப்பு என்றவுடன் சரியானதை தெரிவு செய்து வாசித்து நாமும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில் பாக்கெட் நாவல் என்ற கலாச்சாரம் இங்கே தானே உள்ளது. அதனால் என்ன பயன்... விஞ்ஞானச்சிறகு சில பக்கங்களை மட்டுமே கொண்டது.. ஆனால் அதிலுள்ள விசயங்கள்? இப்படியும் எண்ண வைத்தது..
இரமேசு, விசுவநாதபுரம், மதுரை
விஞ்ஞானச்சிறகு, மே.2010
பிரியமுள்ள தோழருக்கு...
வணக்கம். எளிமைதான் அழகானது. எளிமைதான் வீரியமிக்கது. வரலாறு இதை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. உங்கள் அறிவை விரிவு செய் (2010, ஏப்ரல் மாத விஞ்ஞானச்சிறகு இதழில் வெளிவந்தது) எனும் தலைப்பிலான கட்டுரை படைப்பு வழி மறுபடியும் சொல்லியிருக்கிறது.. உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
நல்ல விஷயங்களை மக்கள் முன் வைத்துவிட்டால் அவர்கள் அதை கையில் எடுத்துக்கொள்வார்களாம். அதுவும் இப்போது மறு உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள்.. தொடர்ந்து படியுங்கள்...
வாழ்த்துகளுடன் முகில்....
கடித நாள்: 24/07/2010
வணக்கம் தோழர். இது மறு வாசிப்பு/ மீள் பதிவு என்றாலும் அற்புதம் தலைவா.. தொடரட்டும் எழுத்துப் பணிகள். என்றும் அன்பு உண்டு.
ReplyDeleteஇக்கட்டுரை 2010ல் நமது விஞ்ஞானச்சிறகு இதழில் வெளிவந்தது..
Deleteவாசித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் மிகவும் நன்றி தோழர்..
வார்த்தைகளை தேடி வந்து வாழ்க்கை ஞானம் அடைந்தேன் , மிகவும் சிறப்பான தத்துவங்கள் 👍
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே
Delete