நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்
தனக்குத் தானே முன்மாதிரியாக அமைந்த உலகின் ஒரே அணை என்று முல்லைப் பெரியாறு அணை குறிப்பிடப்படுகிறது. நீரின் ஓட்டத்தின் போக்கில் அதை மறித்துக் கட்டப்படுவது தான் பெரும்பாலான உலக வழக்கம். ஆனால் நீரின் போக்கையே மாற்றி, அதற்கு எதிர்ப்புறமாக அணையைக் கட்டி, அதிலும் பல்வேறு நுட்பங்களைக் கையாண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் புளூபிரிண்ட்-ஐ அப்படியே தனது நாவல் மூலம் படம் வரைந்து விளக்கியுள்ளார் ஐயா பொ.கந்தசாமி ஐயா அவர்கள்.
விருதுநகரில் பிறந்தவர் என்றாலும் அவருக்கு தாய்வழிப் பூர்வீகம் தேனி தான். வைகை அணைக்குப் பக்கத்தில் முதலக்கம்பட்டி. சில பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளும் செய்திகளும் அவரை மேலும் மேலும் பென்னிக்குக்கை குறித்த தகவல்களைத் தேடி ஓட வைத்துள்ளது. இதய அறுவைச் சிகிச்சை செய்திருந்த போதிலும் தனது வாழ்நாள் , பிறவிப் பயனாக இந்நூலை அவர் எழுதி முடித்து இருக்கிறார்.
நான் முதன் முதலாக ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த குள்ளப்ப கவுண்டன் பட்டி தான் கதையின் முக்கியமான உள்ளூர் நாயகனாக வருகிற பேயத்தேவரின் தந்தை மொக்கையத் தேவர் வந்து குடியேறிய ஊர். கூடலூருக்குப் பக்கத்து ஊர் தான். பேயத்தேவர் கூடலூரில் வாழ்ந்திருக்கிறார். பென்னிகுக் பெரியாறு அணை கட்டுமானப் பணிகளில் தோளோடு தோள் நின்றவராக அறியப்படுகிறார். கூடலூரில் முந்தைய தலைமுறை மனிதர்களில் மிக முக்கியமான நபராக இன்றும் பேசப்பட்டு வருகிறார். பெரியாறு அணைக் கட்டுமானத்தில் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் ஒரே ஒரு தமிழராக / இந்தியராக பேயத்தேவர் மட்டும் காட்சியளிக்கிறார். அந்தப் படம் பென்னிகுக் மணிமண்டபத்திலும் இருக்கிறது.
தற்போது நான் பணிபுரியும் சுருளிப்பட்டி கிராமத்தில் தான் முதன்முதலில் பென்னிகுக் பொங்கல் கொண்டாடப்பட்டு, அதன் பிறகு தான் பல கிராமங்களுக்கும் பரவியது என்று நினைத்தேன். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக பென்னிகுக் பிறந்த ஜன.15ஆம் தேதியை கொண்டாடி வருகின்றனர் பாலார் பட்டி மக்கள். பாலார்பட்டி ஆண்டி அவர்களுடன் பேசும் போது அவர் பென்னிகுக் குறித்த நடமாடும் புத்தகமாக இருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. அணை தொடர்பான செய்திகள் பலவற்றை தேதி உட்பட அழுத்தம் திருத்தமாக சொல்லி வியப்பில் ஆழ்த்தி விட்டார். அண்ணன் சுருளிப்பட்டி சிவாஜி அவர்கள் உருவாக்கிய “நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்!” என்கிற வாசகம் பென்னிகுக் படத்துடன் இன்று அனேக இடங்களில் பார்க்க முடிகிறது. பென்னிகுக் நன்றி மறவா மக்களால் தொடர்ந்து போற்றப்படுகிறார்.
நாவலில் சொல்வது போல பென்னிகுக் பெயரை சூட்டிக் கொண்ட ஏராளமான நபர்கள் இந்தப் பகுதிகளில் உள்ளனர். என்னுடைய மாணவர் ஒருவரின் பெயரும் பென்னிகுக். அதேபோல எங்கள் பகுதிகளில் சம்பந்தமே இல்லாமல் லோகந்துரை என்கிற பெயர் சாதி வேறுபாடு இல்லாமல் நிறைய பேருக்கு இருக்கும். அதென்ன லோகந்துரை என்றால் முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்தில் பென்னிகுக் உடன் அர்ப்பணிப்போடு பணியாற்றிய, அவருக்கே பல நல்ல ஆலோசனைகள் கூறிய பொறியாளர் லோகன். ஆங்கிலேயர்களை துரை என்று அழைக்கும் பழக்கத்தின் தொடர்ச்சியாக நம் பகுதிகளில் லோகன் துரை என்பது தான் லோகந்துரை என பென்னிக்குக்கை விடவும் அதிகமாகவே சூட்டப்பட்டிருக்கிறது. நாவலில் குறிப்பிடப்படும் ஒரு பாடலில் கூட லோகன் துரையே அதிகம் சுட்டப்படுகிறார்.
மேற்கண்ட படம், இன்று தற்செயலாக அணைப்பட்டியில் கண்ணில் பட்டது. இறந்தவருக்கு வயது எப்படியும் ஐம்பது, அறுபது இருக்கும். அப்போது அணை கட்டி ஐம்பது ஆண்டுகள் கழித்து பிறந்தவர். இந்த பகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் இரண்டு மூன்று லோகந்துரைகள் இருக்கின்றனர். நன்றி மறவாது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அவர் பெயரைச் சூட்டி மகிழ்கின்றனர்.
பழனிசெட்டி பட்டி அணை தொடர்பான தகவல்கள், கம்பம் ஆங்கூர் ராவுத்தர் பற்றிய தகவல்கள், பெரியாறு அணையின் நீர்பிடிப்பு, ஆற்றின் தொடக்கம், மேகமலை, சுருளியாறு, வைரவன் ஆறு, கொட்டக்குடி ஆறு, வைகை ஆறு, கால்வாய்கள், மேலணை, கீழணை, அதேபோல வடக்கே கல்லணை, வீராணம் ஏரி, பக்கிங்காம் கால்வாய் குறித்த தகவல்கள் என ஏராளமான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.. பாலார்பட்டி குறித்த செய்திகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.
கம்பத்தில் ஆங்கூர் ராவுத்தர் நினைவு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. கீழக்கூடலூரில் பேயத்தேவர் நினைவு அரசு கள்ளர் துவக்கப்பள்ளி இருக்கிறது. இதெல்லாம் அந்தந்த பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கோ, பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்க்கோ கூட நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத தகவல்கள் தான். ஐந்து மாவட்ட நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர் ஐயா அப்பாஸ் அவர்களது பங்களிப்பு குறித்து இடம்பெறுவது சிறப்பு.
ஆங்கூர் ராவுத்தரும் கட்டுமானத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். கட்டுமானத்திற்கு ஆள் மற்றும் பொருட்கள் திரட்டிக் கொடுப்பவராக இருந்திருக்கிறார். திருவாங்கூர் மகாராசாவுக்கு அவர் போட்ட ஸ்கெட்ச் சரியாக வேலை செய்திருக்கிறது.
திட்டம் பல கட்டமாக முயற்சிகள் செய்யப்பட்டு, கைவிடப்பட்டு, பின்னர் மறுபடியும் தொடங்கப்பட்டு, தொடங்கிய பிறகு பலமுறை இயற்கைச் சீற்றங்களையும் சேதாரங்களையும் சந்தித்து மீண்டும் மீண்டும் கஜினி முகமது போல தொய்வின்றி தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் வாயிலாகவே இன்று உலக சாதனை போல, ஒரு முன்னுதாரணம் போல நூற்றாண்டு கடந்தும் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது பெரியாறு அணை.
அணைச்சாமியாகவும் டேவிட் ஆகவும் இரட்டை வேடமேற்று வந்திருக்கிறார் கந்தசாமி ஐயா. இயல்பான எழுத்து நடை இருக்கிறது. அங்கங்கே நக்கல் நையாண்டி இருக்கிறது. அணையில் நடைபெற்ற வேலைகளை இஞ்ச் பை இஞ்ச்சாக விவரித்துள்ளார். வரலாறு, பொறியியல், அறிவியல் எனப் பலதுறை சார்ந்த ஒரு நூலாக இருக்கிறது. இதை எழுதுவதற்காகவே கந்தசாமி ஐயா எழுத்தாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இன்னொரு புதுமை என்னவென்றால், இந்த ஒரு நாவலே இரண்டு நூல்களாக வந்திருக்கிறது. ஒன்றில் கதையும் இன்னொன்றில் கதைக்கு ஆதாரமான செய்திகள், படங்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் பார்க்கும் போது நமக்கும் நாவலில் அவர் குறிப்பிட்டுள்ள பல இடங்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆவல் மேலிடுகிறது என்பதையும் சொல்லித் தான் ஆகவேண்டும்.
நீரின் மூலம் ஐந்து மாவட்ட மக்களின் வீடுகளில் விளக்கேற்றியவர், விளக்காய்த் திகழ்பவர் பென்னிகுக். நம் வீட்டில் நாம் குடிக்கும் நீரும், உண்ணும் சோறும் எப்படி நமக்குக் கிடைக்கிறது, பச்சைப் பசேல் என்று தமிழ்நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலமாக தேனி விளங்குவதற்கு காரணமான பின்னணி என்பதை அறிந்துகொள்ள விரும்பும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.
முதல் கால்வாய் பேயத்தேவர் பெயரில் அவரது காடு, வயல்களுக்கு அமைக்கப்பட்டிருப்பதும் அவை இன்றும் பயன்பாட்டில் இருப்பதையும் நாவலில் சொல்லி இருக்கிறார். நாவலின் முன்னுரையில் சொல்லப்பட்டிருக்கிற பில்டப்பிற்கு ஏற்ற பேயத்தேவர், ஆங்கத்தேவர், கருத்தக்கண்ணுத் தேவர் ஆகியோர் இடம்பெறுகிற காட்சிகள் அவ்வளவாக நாவலில் இடம்பெறவில்லை. கயிற்றைக் கட்டிக் கொண்டு ஏரியில் குதித்துக் காப்பாற்றுகிற ஒரு நிகழ்வைத் தவிர..
தமிழர்கள், உழைத்தவர்கள், இறந்தவர்கள் ஆகியோரை விடவும் அவருக்கு பென்னிகுக் மீதான மோகம், பக்தி உணர்வு மிக அதிகமாக இருப்பதை பல இடங்களில் உணர முடிகிறது. ஆங்கிலேயர்களை விட்டுக்கொடுக்காமல் பல இடங்களில் பேசுவதை பார்க்க முடிகிறது. சொக்கத் தங்கங்கள் அவர்கள் என்பது போல எழுதி இருக்கிறார். உதாரணமாக, சில்லியன் வாலா போர் குறித்த செய்திகளில், அடுக்கம் பெண் குறித்த சித்தரிப்பில்..
ஆங்கிலேயர்கள் மிக உன்னத குணம் கொண்டவர்கள் போலவும் நம் மக்கள் அக்கறையற்றவர்களாகவும் அறிவற்றவர்களாகவும் குற்றம் இழைப்பவர்களாகவும் பல இடங்களில் காட்டப்படுகிறது. அதை தவிர்த்து இருக்கலாம். இதற்கு முன்னதாக நான் வாசித்த நாவல் எரியும் பனிக்காடு. வறுமைக்காக தேயிலைக்காடுகளில் வேலைக்குச் சென்ற அப்பாவி உழைக்கும் மக்களை ஆங்கிலேயர்கள் எப்படியெல்லாம் உறிஞ்சி ரத்தத்தைக் குடித்தார்கள் என்பதைச் சொல்லுகிறது அந்நாவல். உரிய தங்குமிடம் இன்றியும் மருத்துவ வசதிகள் இன்றியும் உடல் நோயுற்றபோதும் விடுப்பு, ஓய்வு எடுக்கமுடியாமலும் அம்மக்களின் உடம்பில் ஒரு துளி உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் வரையில் அவர்களின் உழைப்பைச் சுரண்டிய வரலாற்றை சொல்லும் அந்நாவலை எழுதியவர் அங்கு வேலைக்குச் சென்ற ஒரு மருத்துவர். இருந்தாலும் இரண்டாயிரம் மூன்றாயிரம் பேர் வேலை பார்த்த அணைக் கட்டுமானப் பகுதிகளில் பணிபுரியும் மக்கள் விரும்பியே அவர்கள் வாழும் பகுதியை அசுத்தமாக வைத்துக் கொண்டனர் என்பது போல இருக்கிறது.. மலைக் காய்ச்சல் வந்து பணிபுரிவோர் எண்ணிக்கை இருநூறு முந்நூறாக குறைந்திருக்கிறது என்றால் அது சாதாரணமான நிகழ்வா? ஆனால் நாவல் அதை அப்படித்தான் கடந்து போகிறது. ஆங்கிலேயர் மீதும் குறிப்பாக பென்னிக்குக் மீதும் அங்கு யாருக்கும் எந்த வித குற்றச்சாட்டும் எழுந்து விடக்கூடாது என்று வேகவேகமாக கடந்து செல்வது போல இருக்கிறது.
அதே போல, நாவலை மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு செய்திருந்தால் அல்லது மூத்த சில படைப்பாளிகளிடம் கொடுத்து திருத்தங்கள் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். கூறியது கூறல் கொஞ்சம் குறைந்திருக்கும்.. கடைசி இரு அத்தியாயங்கள் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி விட்டு நடத்திய பாடங்களை வகுப்பின் இறுதியில் மீண்டும் ஒருமுறை சுருக்கமாக குழந்தைகளுக்கு நினைவூட்டுவது போல இருந்தது. இருந்தபோதிலும் இலக்கிய நயம் தேடுவதை விட நாம் வாழும் பகுதியின் வரலாற்றை மக்கள் அறிந்து கொள்வதற்காகவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்ற வகையில் அந்தக் குறைகளை நாம் பொறுத்துக் கொள்ளலாம்.
ஒன்பது ஆண்டு கால உழைப்பில் கட்டி முடிக்கப்பட்ட அணையின் வரலாற்றைச் சொல்ல பத்து ஆண்டு காலம் பாடுபட்டிருக்கிறார் கந்தசாமி ஐயா. அணைச் சாமியாருக்கு டேவிட் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு நமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நன்றி : படங்கள் : திரு.ஆண்டி, பாலார்பட்டி
-
தேனி சுந்தர்
மிகவும் சிறப்பு. லோகன்களும், பென்னி குயிக்கிகளும் அடுத்த தலைமுறையினருக்கு சொல்லி தர வேண்டும்.
ReplyDeleteபேயத்தேவனின் உழைப்பும், அவருக்கு மரியாதை செய்யும் விதமாக, முதல் மடை பாசனம் பேயத்தேவன் கால்வாயிலேயே இன்றும் திறந்து விடப்படுகின்றது.
இரா. கலையரசி கூடலூர்
மிக்க நன்றிங்க்கா
Deleteசிறப்பான அனுபவ பகிர்வு
ReplyDeleteநானும் புத்தகத்தை வாங்கி வாசித்து எழுதுவேன்.
மிக்க நன்றி தோழர்
Deleteஅருமையான நூல் அறிமுகமும் விமர்சனமும். நூலைப் படிக்க ஆவல் மேற்படுகிறது..
ReplyDeleteஇராஜமாணிக்கம்
மிக்க மகிழ்ச்சி தோழர்
Deleteநாவல் அறிமுகமே ஒரு வரலாற்றையும், பண்பாட்டுத் தளத்தையும் இந்த அளவுக்கு விவரிக்கிறது என்றால் நாவலில் எவ்வளவு விரிவான பதிவுகள் இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. நாவலின் குறைகள் எனக் கருதும் இடங்களையும் சுட்டிக்காட்டியிருப்பது விமர்சன நேர்மை. அந்த வட்டாரமே பெரிய வரலாறுகளைத் தேக்கிவைத்திருக்கிற அணைதான் என்று புரிகிறது.
ReplyDelete-அ. குமரேசன்
மிக்க மகிழ்ச்சி தோழர்
Delete