வாசிப்பு அனுபவம் : மாணவர் மனசு : தோகை பழனிவேல்

போர்பந்தரில் பிறந்தாலும் 'மகாத்மா காந்தி' போரை விரும்பாதவர். அதைப் போலத்தான் தேனிக்கு அருகில் பிறந்தாலும் தேனீயைப் போலில்லாமல் தேன் போல இனிக்கிறது தேனி சுந்தரின் எழுத்து..

அவர் பல நாள் ஆராய்ந்து, அவதானித்து, ஆராய்ச்சி செய்து எழுதுவதாக சொல்லவில்லை. கண்களால் கண்டதை, தனக்குள் உணர்ந்த அன்றாடங்களை கட்டுரையாகவேர, கதையாகவோ உருமாற்றும் வித்தையை தெரிந்து வைத்திருக்கிறார்.




பார்த்தவற்றை நாம் சாதாரணமாக கடந்து விடுகிறோம். அவர் படைப்பாக்குகிறார் அவ்வளவே.. "மற்றவர்களெல்லாம் பூமியில் வசிக்கிறார்கள்.. படைப்பாளன் மட்டுமே வாழ்கிறான் " என்று நான் எப்பொழுதோ படித்த ஞாபகம். தேனி சுந்தரின் படைப்புகளை படிக்கிறபோது அந்த சொற்றொடர் மீண்டும் நினைவுக்கு வந்தது.

சில நாட்களுக்கு முன்பு எங்களூர் கடை வீதியில் இரண்டு பள்ளி மாணவர்கள் பேசிக் கொண்டு சென்றார்கள். அதில் ஒருவன் "டேய்..! விக்னேசு...நீ ஏன்டா இன்னிக்கி பள்ளிக்கூடம் வல்ல.. ரொம்ப ஜாலியா இருந்துச்சு. இன்னிக்கி எந்த சாரும் பாடம் நடத்துல .. தெரியுமா"? என்றான். "அப்படியாடா முருகா டெய்லியும் சாருங்க பாடம் நடத்தாமயிருந்தா எவ்வளவு ஜாலியா இருக்கும்" என்றான் இன்னொருவன். நான் அதை கேட்டுக் கொண்டே கடந்து விட்டேன். தேனி சுந்தர் இதை கேட்டிருந்தால் மாணவர்கள் மனநிலையிலிருந்து ஒரு கதையோ, கட்டுரையோ எழுதியிருப்பார். இப்படித்தான் அவரின் படைப்புகள் உருவாகிறது..




புதிய கழிவறையின் ஜன்னல்களை உடைத்து அதன் நுழைவாயிலில் அசிங்கப் படுத்தியவர்களை கண்டுபிடிக்க முயற்சித்த விதம் கடைசியில் சிரிப்பு போலீஸான கதை ஒரு விசித்திர அனுபவம்..

'சாரு பயந்துட்டாரு' என்கிற கட்டுரை மாணவர்களின் மகிழ்வை பொய்விக்காத நல்ல ஆசிரியர்க்கான மனநிலை.. . குடிப்பதற்கான காரணத்தை சொல்லும் குழந்தையின் தந்தை சொல்லும் கதை அழ வைக்கிறது...



சுருங்கச் சொன்னால் ஒருவரை வாழ்த்தும்போது "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்பார்கள். அப்படித்தான் தோழர் தேனி சுந்தர் மாணவர்களிடமிருந்து பதினாறு அனுபவங்களைப் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார். கூடுதல் சிறப்பு அவர் வாழ்ந்த பெருவாழ்வை கட்டுரையாக்கி நாமும் பெறும் வாழ்வாக்கியிருக்கிறார்.

தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.. படையுங்கள்..படிக்கிறோம்.. தோழரை அறிமுகப்படுத்திய நண்பர் ஜீவிதனுக்கு நன்றி.
-
தோகை பழனிவேல்
திருச்சி

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்