தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு : பிளாட்பார்ம் தமிழ்

பிரபல எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய “மாணவர் மனசு” (Manavar Manasu Book) என்ற நூலினை வாசித்தேன். இப்புத்தகத்தில் மாணவர்களின் மனசை மிக எளிதாக ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். தொடக்கக் கல்வி ஆசிரியராகப் ஒருவர் பணியாற்றுவதற்கு நிதானமும் பொறுமையும் தேவை என்பதை இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். மழலைப் பள்ளிகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் இடைப்பட்ட பருவத்தினர் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களை கையாள ஒரு ஆசிரியருக்கு தனித்த அணுகுமுறை தேவை என்பதை “மாணவர் மனசு” புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் அவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு உணர்வுகளை கையாளத் தெரிந்து கொண்டால் அப்புறம் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் கைவசம்தான். அப்படிப்பட்ட முயற்சிக்காக தேனி சுந்தர் அவர்கள் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார் என்பதை இந்நூலிலுள்ள கட்டுரை வழியாக அறிய முடிகிறது.



மாணவர்களை பொய் சொல்ல அனுமதிக்கும் ஆசிரியர் :


ஆசிரியர்கள் சொல்லும் பொய்யுக்கும், மாணவர்கள் சொல்லும் பொய்யுக்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் பொய் பேசியதற்காக யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்பதில்லை. ஆனால் சிலநேரங்களில் மாணவர்கள் சொல்லும் பொய்கள் இரசிக்கத்தக்க வகையில் இருக்கும். மாணவர் மனசு புத்தகத்தில் (Manavar Manasu Book) மாணவர்களை பொய் சொல்ல அனுமதிக்கும் ஆசிரியர் தன்னுடைய குற்றவுணர்ச்சியை சமரசம் செய்து கொள்கிறார். ஆனால் மாணவர்களை பொய் பேச அனுமதித்து அதை ஏற்றுக் கொள்ள மனசு வேண்டுமல்லவா அத்தகைய மனசு இந்நூலில் ஆசிரியருக்கு உள்ளது.

கடவுளை நம்புறேன் சாரே :


ஒரு ஆசிரியரை கடவுளுக்கு சமமாக கருதும் நபர்கள் இன்றும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள “கடவுளை நம்புறேன் சாரே” என்ற கட்டுரை தெளிவாக உணர்த்துகிறது. துப்புரவுத் தொழிலாளி கல்வியின் அவசியம் குறித்து உணர்ந்து கொள்வதும் தனக்கு தான் செய்யும் தொழிலால் ஏற்பட்டிக்கும் சமூக இழிவை தன் குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் வந்துவிடக் கூடாது அதற்காக எப்பாடு பட்டாவது தனது குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதும் படிப்பின் அருமையை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார் என்பதை இந்நூலிலுள்ள கட்டுரை வழியாக அறிய முடிகிறது.

பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகளின் வருகையும் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வுக்கு உட்படுத்துவதும் மிக அழகாக கட்டுரையில் சுட்டிக் காட்டியிருக்கிறார் ஆசிரியர் தேனி சுந்தர். பொதுவாக மாணவர்களை பொறுத்தவரை அன்பான அணுகுமுறை உள்ள அசிரியர்களிடம் நன்றாக ஒட்டிக் கொள்வார்கள். மோசமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகிறார்கள் என்ற செய்தியும் கட்டுரையில் சுட்டிக் காட்டப்படுகிறது.

‘மாணவர் மனசு’ என்ற இப்புத்தகத்தை வாசிக்கும் அனைவருக்கும் அரசுப் பள்ளிகளின் மீதும், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மீதும் ஒரு புதுவிதமான பார்வையை உண்டாக்கும் வகையில் இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன. மேலும் இப்புத்தகத்தில் (Manavar Manasu Book) ஆசிரியர் மாணவர்களின் இயல்பை இழக்காமல் இருக்க வேண்டுமென சொல்வது அவருடைய அணுகுமுறையை வெளிப்படையாக காட்டுகிறது. இவரைப் போன்ற ஆசிரியர்கள் கிடைக்காத மாணவர்கள் பலரும் வீட்டிலும், பள்ளியிலும் வெவ்வேறு விதமாக நடந்து கொள்ளப் பழகிக் கொள்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை என்பதை இந்நூலில் தெளிவாக தேனி சுந்தர் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

நன்றி : platformtamil.com

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்