மருத்துவர் பூர்ணிமா கணநாதன் எழுதிய மகப்பேறு : தெரிந்ததும் தெரியாததும் நூல் குறித்து..
தேனி மாவட்டம், மருத்துவர் பூர்ணிமா கணநாதன் எழுதிய மகப்பேறு : தெரிந்ததும் தெரியாததும் நூல் குறித்து..
என் மனைவி எங்கள் முதல் குழந்தை டார்வினை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த போது அவருக்கு துணையாக, உதவியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. விழிப்போடு இருக்க வேண்டும் என்பதுவும். வீட்டிலேயே சில நூல்கள் இருந்தன. வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. குறிப்பாக அந்நூலை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்தது. ஆனாலும் வாசிக்க முடியவில்லை. சில அத்தியாயங்கள் படித்ததோடு நின்று போனது.. காரணம் நூலின் விரிவான உள்ளடக்கம்..!
ஆனால் தடம் அறக்கட்டளையின் செயலாளரும் இயன்முறை மருத்துவருமான பூர்ணிமா அவர்கள் எழுதிய "மகப்பேறு - தெரிந்ததும் தெரியாததும் " என்கிற இந்நூல் குழந்தைகளுக்கான ஆத்திசூடி போல அவ்வளவு எளிமையாக, சுருக்கமாக இருக்கிறது. எவ்வளவு நல்ல கருத்தாக இருந்தாலும் மக்களுக்கு அதை நாம் சுருக்கமாக சொல்ல வேண்டி இருக்கின்றது. இல்லையெனில் அதை அவர்கள் கவனிப்பதில்லை. உள்வாங்குவது இல்லை. எனவே எளிதில் விழுங்கும் மாத்திரைகள் போல, அதிலும் விரும்புவோர் இன்னும் நிதானமாக சுவைத்துச் சுவைத்து சாப்பிடும் இனிப்பு மாத்திரைகள் போல இருக்கின்றன நூலின் கருத்துகள்..!
நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை வழங்கிய கம்பம் செல்வேந்திரன் அவர்கள் பேசும்போது மகப்பேறு மருத்துவர்கள் தங்களிடம் வருகிற கர்ப்பிணி பெண்களுக்கு பிரிஸ்கிரிப்சனாகவே இந்நூலை எழுதிக் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாக சொன்னார். அவர் எதையும் மிகைப் படுத்திக் கூறவில்லை என்பதை நூலை வாசித்து அறிந்து கொண்டேன்.
மனித குலம் உருவான காலத்திலிருந்து மகப்பேறு நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் பிறக்கிறது. ஆனாலும் அந்த கர்ப்ப கால பராமரிப்பு, கவனம் என்பது சம்பந்தப்பட்ட பெண்ணிற்கும் குடும்பத்திற்கும் ஒரு பதற்றமான சூழ்நிலையாகவே உணர முடிகிறது. காரணம் அதுகுறித்த தெளிவின்மை தான்..
நாட்காட்டி சிஷேரியன் என்பதை உச்சகட்ட மூடநம்பிக்கை எனவும் சாடி உள்ள மருத்துவர் பூர்ணிமா அவர்கள் குழந்தை வளர்ச்சி எப்படி இருக்கும்? என்னென்ன படிநிலைகள்? என்னென்ன சத்துகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? என்ன பயிற்சிகள் செய்ய வேண்டும்? எப்படி தூங்க வேண்டும்? எந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்? எந்த வயதில் சிரமமாக இருக்கும்? அரசின் நலத் திட்டங்கள், உதவிகள் என்னென்ன? என ஒவ்வொரு கர்ப்பிணி தாய்மாரும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை செய்திகளை நூல் முழுவதும் அள்ளித் தந்துள்ளார்.
நான் 2013ஆம் ஆண்டில் சில அறிக்கைகளை வாசித்தேன். தாய்ப்பால் வாரம் குறித்து ஒரு கட்டுரை விஞ்ஞான சிறகு இதழில் எழுதி இருந்தேன். முகப்புக் கட்டுரையாக வெளியான எனது முதல் கட்டுரை அது.
ஒரு பெண் கருத்தரித்தது தொடங்கி, குழந்தை பிறந்து அடுத்த ஆறு மாதம், ஒரு வருடம் வரையிலும் கூட சில நாடுகளில் தாய் சேய் உடல்நலம் குறித்து அரசு சார்பில் மிகவும் கவனம் செலுத்தப் படுகிறது. ஏனெனில் ஆரோக்கியமான பெண்கள் தான் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். இன்றைய ஆரோக்கியமான குழந்தைகள் தான் நாளை பெரியவர்களாக ஆன பிறகு திடகாத்திரமாக இருப்பார்கள். அவர்கள் தான் தேச உற்பத்தியில் காத்திரமான பங்களிப்பு செய்ய முடியும் என்பது வரை அரசுகள் யோசிக்கின்றன.. அத்தகைய அக்கறை கொண்ட நாடுகளில் கருச்சிதைவு, மகப்பேறு கால தாய் சேய் மரணங்கள் எல்லாம் மிக குறைந்த சதவீதம் தான் உள்ளன. மற்ற நாடுகளில் பிரசவத்திற்காக மருத்துவமனை அணுகல் வசதி கூட இன்னும் உறுதி செய்யப்படாமல் மகப்பேறு கால மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. போர் உள்ளிட்ட எவ்வளவு பெரிய பேரிடர் காலங்களிலும் கூட குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.. ஒப்பிட்டு அளவில் தமிழகம் பரவாயில்லை என்றாலும் இன்னும் முன்னேற வேண்டிய அவசியமும் உள்ளது.. இத்தகைய நூல்களின் வருகை அதுபோன்ற சிந்தனைகளை கிளறுவதாகவும் உள்ளது..
"பெண்களின் உடல்நலத்திற்கும் பிறக்கும் குழந்தையின் எடைக்கும் தொடர்பு இருக்கிறது. பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு ஊட்டச் சத்து குறைபாடு இருந்தால் அது கருவின் குறைவான வளர்ச்சிக்கும், பிறக்கும் குழந்தையின் எடை குறைவிற்கும் இட்டுச் செல்கிறது. அதனால் குழந்தை பிறந்ததில் இருந்து மட்டுமல்ல, கருவாக உள்ளபோதே குழந்தையின் ஊட்டச்சத்து பாதிக்கப் படுகிறது" என்கிறார் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் அவர்கள். மேலும் அவர் குறிப்பிடுகையில் சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணர்வும் விவாதங்களும் இந்தியாவில் மிக மிக குறைவு. அதிலும் வெகுஜன ஊடகங்கள் கவனம் செலுத்துவது மிக மிக குறைவாகவே உள்ளது என்கிறார். இதுபோன்ற மருத்துவம் தொடர்பான நூல்கள் திரளான மக்கள் மத்தியில் செல்வது விழிப்புணர்வை ஏற்படுத்த, அதிகரிக்க உதவும் என்று நம்புகிறேன்.
உண்மையில் விழா அழைப்பிதழில் இந்நூலின் அட்டைப் படம் பார்த்ததும் இந்நூல் நமது வாசிப்பிற்கானது அல்ல என்று நினைத்தேன். ஆனால் எதேச்சையாக சந்திக்க வேண்டி வந்தது. சந்திப்பில் மருத்துவர் பூர்ணிமா அவர்கள் இந்நூலை வழங்கினார். நூலை பார்த்த நொடியிலேயே உணர்ந்து கொண்டேன், நாம் நினைத்த மாதிரி இல்லை. இந்நூல் அனைவரும் வாசிக்கக் கூடிய வகையில் இருக்கிறது என்று..
முன்னுரையில் மருத்துவர் செல்வம் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல, மருத்துவமனைகளில் வழங்கும் ஊட்டச்சத்துப் பெட்டகத்துடன் வழங்க தகுதியான, பொருத்தமான நூல்.
இளம் தம்பதியருக்கு பரிசளிக்க நிச்சயம் இந்நூலை நாம் பரிந்துரை செய்யலாம்.
ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு படத்துடன் இந்நூலை மின்கவி பொறுப்பாளர் தம்பி விக்னேஷ் வடிவமைத்துள்ளார். தடம் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது..
நூல் தேவைக்கும் நூலாசிரியரை தொடர்பு கொள்ளவும் வாழ்த்தவும் 9994034234 என்ற எண்ணில் அழைக்கலாம்.
_
தேனி சுந்தர்
அருமை தோழர்
ReplyDeleteநூல் ஆசிரியர் பூர்ணிமா தோழருக்கும்
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Delete