நாவல் இலக்கிய உலகில் ஓர் உலா
ஒரு படைப்பை எழுத்தாளர் தொடங்கி வைக்கிறார். வாசகர் தான் அதை முடித்து வைக்கிறார் என்றொரு சொற்றொடர் உண்டு.ஆனால் இலக்கியம் வாசகரிடம் இருந்தும் தொடங்க முடியும் என்று பறைசாற்றி வருகிறார் பேரா.விஜயகுமார் அவர்கள். நமது மண்வாசம் இதழில் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழ்ச் சிறுகதை சிற்பிகள், சிறுகதை இலக்கியத்தின் சிகரங்கள் ஆகிய இருநூல்கள் மூலம் தமிழ் மற்றும் உலகளாவிய அளவிலான சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை நமக்கு அறிமுகம் செய்த பேராசிரியர், இம்முறை நாவல் இலக்கிய உலகில் ஓர் உலா வந்திருக்கிறார். அவர் மட்டும் செல்லாமல் உடன் நம்மையும் அழைத்துச் செல்கிறார்.
ராய் மாக்சம் எழுதிய உப்புவேலி, ஹெப்சிபாவின் புத்தம் வீடு, சுசீலாவின் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், முத்துநாகு எழுதிய சுளுந்தீ, தேபேஷ் ராயின் அகதிகள், பூமணியின் வெக்கை, சர்மிளா செய்யத் எழுதிய உம்மத், ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள், தொ.மு.சி.ரகுநாதனின் பஞ்சும் பசியும் , நக்கீரனின் காடோடி, இமையம் எழுதிய செல்லாத பணம், வைக்கம் முகம்மது பசீரின் மதில்கள், பாலமுருகனின் சோளகர் தொட்டி, டி.செல்வராஜின் மலரும் சருகும், சல்மாவின் அடைக்கும் தாழ் உள்ளிட்ட 16 நாவல்கள் குறித்து எழுதி இருக்கிறார். கிட்டதட்ட 75 ஆண்டு கால நிகழ்வுகளை காட்சிப் படுத்துவதாக இவரது வாசிப்பு அனுபவங்கள், விவரிப்புகள் மிக அழகாக பதிவாகி உள்ளன..
சோளகர் தொட்டி, செல்லாத பணம், கரிப்பு மணிகள், பஞ்சும் பசியும் போன்றவற்றை வாசிக்கும் போது மிகவும் உணர்வுப் பூர்வமாக இருந்தது. மதிலுகள் நாவல் குறித்த கட்டுரையை மிக மிக ரசித்துப் படித்தேன். சிரித்து மகிழ்ந்தேன். 16 நாவல்கள் குறித்த கட்டுரைத் தொகுப்பு என்றாலும் அவர் போகிற போக்கில் குறிப்பிட்டுச் செல்லும் நாவல்களின் பட்டியல் மிக நீளமானது. ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்கும் போது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த நாவலை வாங்கி விட வேண்டும். வாசித்து விட வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டும் தொகுப்பு இது.. வாசகர் தரப்பு இலக்கியத்தை வளர்க்கிற புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார் பேரா.விஜயகுமார் அவர்களை வாழ்த்துவோம்..
-
தேனி சுந்தர்
நன்றி : புதிய ஆசிரியன்
சிறப்பான தமிழ் இலக்கியப் பணி.
ReplyDelete