கட்டாயத் தேர்ச்சியும் இடைநிற்றல் ஒழிப்பும்..
இடைநிற்றலை ஒழித்துக் கட்டிய கட்டாயத் தேர்ச்சி முறை..
தமிழக அரசு கொள்கைக் குறிப்பில் பெருமிதம்…!!
6-14 வயது வரையிலான அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல், அவர்களில் இடைநிற்றலின்றி அனைவரையும் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சியடையச் செய்தல் ஆகியவற்றை தொடக்கக் கல்வியில் கொள்கை இலக்குகளாகக் கொண்டிருக்கிற தமிழக அரசு தான் மத்திய அரசின் அடியொற்றி இயங்கும் போக்கின் தொடர்ச்சியாக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வரும் முடிவை அமைச்சரவை கூடாமல், அரசாணை பிறப்பிக்காமல் அவசர அவசரமாக நடைமுறைக்குக் கொண்டு வரப் பார்த்தது. பரவலாக எழுந்த எதிர்ப்பு கண்டு முதலில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு இல்லை என்றும் அதனை அடுத்து இனிவரும் எந்த ஆண்டும் பொதுத் தேர்வு இல்லை என்றும் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
“2002 ஆம் ஆண்டில் 5.74 இலட்சமாக இருந்த இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் 41,034 ஆக குறைக்கப்பட்டுள்ளது.”
– (பக்கம் ,18)
“தொடக்க நிலை வகுப்புகளில் 2001ஆம் ஆண்டில் 12 விழுக்காடாக இருந்த இடைநிற்றல் விகிதம் 2016 ஆம் ஆண்டில் 0.90 விழுக்காடாகவும் உயர்தொடக்க நிலை வகுப்புகளில் இக்காலகட்டத்தில் 13 விழுக்காடாக இருந்த இடைநிற்றல் விகிதம் இப்போது 1.50 விழுக்காடாக குறைந்துள்ளது…”
“தொடக்க நிலை வகுப்புகளில் 2001ஆம் ஆண்டில் 64 விழுக்காடாக இருந்த நிறைவு விகிதம் 2016 ஆம் ஆண்டில் 98.30 விழுக்காடாகவும் உயர்தொடக்க நிலை வகுப்புகளில் இக்காலகட்டத்தில் 68 விழுக்காடாக இருந்த இடைநிற்றல் விகிதம் இப்போது 96.70 விழுக்காடாக உயர்ந்துள்ளது…” – (பக்கம் 23)
மேற்கண்ட வரிகளைப் பெருமிதமாகத் தனது 2017-18ஆம் ஆண்டிற்கான கொள்கைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது தமிழக அரசு. இந்த ஆண்டும் கூட இடைநிற்றல் விகிதம் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளதை தவறாமல் குறிப்பிட்டுள்ள அரசு அதற்குக் காரணம் தேசம் முழுவதும் நடைமுறையில் உள்ள குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்தல், கல்வி ஆண்டு முழுவதும் மாணவர் பள்ளியில் சேரும் வாய்ப்பு, ஒரே வகுப்பில் மாணவர்களைத் தேக்கி வைக்கக் கூடாது என்கின்ற அச்சட்டத்தின் அம்சங்களும் தான் என்பதை உணர மறுப்பது சரி தானா?
இடைநிற்றல் என்பது குழந்தைகளைப் பொறுத்த வரை ஏதோ பள்ளியில் இருக்கிறார்கள்.. பள்ளிக்கு வராமல் இருக்கிறார்கள் என்பதாகச் சுருக்கிப் பார்க்க முடியாது. பள்ளியில் உரிய கற்றல் அடைவுகளைப் பெற்று அடுத்த வகுப்புக்கு முன்னேறிச் செல்வதை விட முக்கியமானது குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பது. அவர்கள் கட்டாயத் தேர்ச்சி ரத்து காரணமாக மீண்டும் சைக்கிள் கடைகளிலும் தேனீர், உணவு விடுதிகளிலும், நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஆள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் கூவிக் கூவி ஆள் ஏற்றும் இடங்களிலும் நிற்பதை நாம் தவிர்க்க முடியாது.
மாணவர்கள் நல்ல கற்றல் அடைவு பெற முடியாமல் இருந்தால் பின்னாளில் கூட அவர்கள் அதை எட்டி விட முடியும்.. ஆனால் இடைநிற்றல் காரணமாக பள்ளியை விட்டே வெளியேறி விட்டால் அவர்கள் சமூகத்தில் இளம் குற்றவாளிகளாக அல்லவா மாறக் கூடும்..?
தேனி சுந்தர்
9047140584
மிகவும் சரி 👌🏽👌🏽
ReplyDeleteமிக்க நன்றி
Delete