கணக்கும் இனிக்கும்
தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை... கணக்கு! பிடிக்காத பாடம்... கணக்கு! பிடிக்காத வாத்தியார் கணக்கு வாத்தியார்! கணித ஆண்டு என்று சொன்னதுமே எனக்குச் சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பகிர்வு. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு டீச்சர் கணக்கில் வடிவியல் பாடம் நடத்துனாங்க. கையிலே வடிவியல் நோட்டு, காம்பஸ் எல்லாம் எடுத்தாச்சு.. வரையுறேன்.. வரையுறேன்.. தப்புத்தப்பா வருது. கடைசி வரைக்கும் வட்டம் மட்டும் வரவேயில்லை. நாங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறோம்... டீச்சர் போட்டாங்க பாருங்க முதுகுல.. அன்னைக்குத் தொடங்கியது தான் பகை! ஒரு கட்டத்துல கணக்குப் பாடத்துக்குப் பயந்தே எட்டாம் வகுப்பிற்குப் பிறகு நான் படிக்கவில்லை, திராட்சைத் தோட்டத்திற்கு காக்கா விரட்டப் போறேன்னு தெருத்தெருவாக நான் ஓட... எங்கப்பா சைக்கிளை எடுத்துக்கிட்டுத் தேட.. அது ஒரு சில வாரங்கள்...
ஒரு வழியாகப் பக்கத்து ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்தேன். அங்கு ஒரு கணக்கு வாத்தியார்... இன்னிக்கும் கூட சுருளிமுத்து வாத்தியார்னா சில பேருக்கு டவுசர் நனைஞ்சுடும்.. அந்த அளவுக்கு அதிரடி மன்னன் அவரு.. ஏண்டி கெழவி புருசா, இந்தக் கணக்குத் தெரியலையான்னு விட்டு விலாசுவாரு.. பொதுத் தேர்விலும் கூட மிகக் குறைந்த மார்க் எடுத்தே நான் தப்பி வந்தேன். மேல்நிலை வகுப்பில் எந்தப் பிரிவு எடுப்பது என யோசிக்கையில் எந்தப் பிரிவில் படம் வரையும் தொல்லையில்லையோ, இந்தக் கணக்குச் சனியன் இல்லையோ அது எப்படிப் பட்டதாக இருந்தாலும் படிக்கத் தயார் என வணிகவியல் பிரிவில் சேர்ந்தேன்..
அப்புறம், பனிரெண்டாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்து, கவுன்சிலிங்கில் சீட்டும் கிடைத்து ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன்.. அங்கும் ஒரு கணக்கு வாத்தியார். மனுசன் சிரிக்கவே மாட்டார். பாஸ் பண்ணும் அளவுக்கு தியரி இருந்ததால் அங்கும் தப்பித்தேன். இப்ப நான் ஒரு அரசுப்பள்ளியில் வாத்தியார். என்னால் முடிந்த அளவு சின்சியராகப் பணிபுரிகிறேன்.. ஆனாலும் என் வகுப்பு மாணவர்கள் கணக்கில் அவுட்தான். என்னையும் அறியாமல் எனக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார்கள் போலவே நானும் கணக்கு வகுப்பில் செயல்பட்டிருக்கிறேன்.. அந்த வகுப்பில் மட்டும் எங்கிருந்துதான் வருமோ,,, அவ்வளவு கோபம்! சிடுசிடுப்பு! பின் நானாக உணர்ந்தேன்.. கணக்கு, அறிவியல் படிக்காமல் விட்டதால் நான் இழந்த வாய்ப்புகளை நினைத்தேன்.. நாம் புரிந்து கொண்ட நிலையில் இருந்து கற்பிக்காமல் மாணவர்கள் ஒரு கணக்கை, கருத்தை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என அறிந்து அதற்கேற்றவாறு கற்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஒரு கல்விக் கருத்தரங்கில் கிடைத்த பாடம், என்னை அடியோடு மாற்றிவிட்டது என்றே சொல்லலாம்.. கடினமான பாடங்களை குறிப்பாக கணக்கு,ஆங்கிலம் போன்றவற்றை துவக்கநிலை வகுப்புகளில் கற்பிக்கும்போது குறைந்தபட்ச அன்புடனாவது கற்பிக்க வேண்டுகிறேன். வகுப்பில் சிறுசிறு பயிற்சிகளின் மூலம் அவனுக்கு எளிய கணக்குகளில் வெற்றிகிடைக்கச் செய்கிறேன்.. நம்பிக்கையூட்டுகிறேன்.. ஏனென்றால் இங்கு வெற்றிபெற வேண்டியது ஆசிரியரோ, கணக்குப் பாடமோ அல்ல.. மாணவன்! அதிக அளவு கணக்குப் பாடங்களை நடத்தி அவனை ஒருபோதும் நான் மிரட்டுவதில்லை.. விரட்டுவதில்லை.. குறைந்த அளவு பாடம்.. அதிக பயிற்சி.. விருப்பத்தை ஏற்படுத்திய பிறகு நீங்கள் போதும் என்றாலும் அவன் விடமாட்டான்...
சின்ன வகுப்புல இருந்தே மத்த பாடத்தில் எல்லாம் சிறப்பான மதிப்பெண்கள் எடுக்கும் என்னால் கணக்குல மட்டும் அவ்வளவு எளிதாக தேர்ச்சிகூட பெற முடியவில்லை.. காரணம்.. பிடிக்கலை! கணித மேதை இராமானுஜம் அவர்களின் 125வது பிறந்த ஆண்டை முன்னிட்டு மத்திய அரசு 2012ம் ஆண்டை தேசிய கணித ஆண்டாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு வேண்டுகோள், கணக்கும் இனிக்கும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்துங்கள்.. கணக்குப் பாடம் கடினம் என்பதை உடைத்தெறியுங்கள்.. கணக்குப் பாடம் நடத்தச் செல்லும்போது கோபத்தை வாசலில் நிற்கவைத்துவிட்டு நீங்கள் மட்டும் வகுப்பறைக்கு உள்ளே செல்லுங்கள்... நிறைய சிரியுங்கள்.. உடம்புக்கு நல்லது.. உங்க மனசுக்கு நல்லது..!
பல நேரங்களில் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் திருக்குறள் ஒன்று உள்ளது...
இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது
உணர விரித்துரை யாதார்.. (குறள்-650)
(புதிய ஆசிரியன், மே, 2012)
எதிர்வினை:
அனுபவங்கள் தரும் படிப்பினைகள் ஒரு நல்லாசிரியனை உருவாக்கும் என்பதனை தேனி சுந்தரின் படைப்பு விளக்குகிறது-
கல்வியாளர். ச.சீ.இராஜகோபாலன், சென்னை-93 , ஜூன் இதழ்,2012
Super Sir .கணக்கும் இனிக்கும் என்றொரு புத்தகம் இருக்கிறது தெரியுமா? டாக்டர் ராமானுஜம் சார் எழுதியது
ReplyDeletePlease contact 8248019795
மிக்க நன்றி
DeleteNeed of the hour. Committed and Dedicated teachers are the treasures of any civilized society. Hope teachers live up to the need of the hour.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteகணக்கு பாடம் கற்கண்டு என்பார்கள் அதற்கு நேர் எதிராக தாங்கள் வகுப்பறை சூழல் அமைந்தது என்பது வருத்தத்துக்குரியது அதையும் மாற்ற நினைக்கும் இந்த கருத்துக்களை வரவேற்கத்தக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி
Deleteசூப்பர் அண்ணே. நானும் ஒரு கணித ஆசிரியர் தான் அண்ணன். நான் படிக்கும் பொழுது இதே மாதிரி போல் தான் கணித ஆசிரியர்கள் இருந்தார்கள் ஆனால் நான் அதனை சரி செய்யும் விதமாக கணித வகுப்பில் அனைத்து மாணவர்களையும் என்னது வகுப்பிற்க்கு அனைத்து மாணவர்களும் சந்தோஷமாக வருவார்கள் அண்ணே
ReplyDeleteமகிழ்ச்சி வாழ்த்துகள் தம்பி
ReplyDelete