கட்டாயத் தேர்ச்சி : 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடுகளின் அடிப்படையில் ஒரு பார்வை..

இந்தியா முழுவதும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.. இச்சட்டம் குழந்தைகள் நலன் சார்ந்து பல அம்சங்களை வலியுறுத்தியது. 

அதில் குறிப்பிடத் தக்கவை கட்டாயத் தேர்ச்சி, வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்தல், கல்வி ஆண்டு முழுவது மாணவர் சேர்க்கை, உடல், மன ரீதியான தண்டனைகளுக்கு தடை, சிறப்பு / தனி வகுப்புகளுக்கு தடை, சேர்க்கைக்கு சான்றிதழ்களின்மை ஒரு தடையில்லை போன்றவை.. 

சட்டம் நடைமுறைக்கு வந்த இந்தப் பத்தாண்டுகளில் தனியார் பள்ளிகளில் 25% பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு என்பதைத் தவிர தனியார் பள்ளிகளில் உறுதிப்படுத்த வேண்டிய பல அம்சங்களை நடைமுறைப்படுத்த அரசு போதிய முயற்சிகள் எடுத்ததாகவோ கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் போதிய வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகளை மூடியதாகவோ அல்லது குறைந்த பட்ச நடவடிக்கைகள் எடுத்ததாகவோ தெரியவில்லை.. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டாலும் அது ஏட்டளவிலான தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அளவிலேயே உள்ளன. 




இந்தச் சூழ்நிலையில் தான் எந்த விதமான ஆய்வும் மேற்கொள்ளாமலேயே எட்டாம் வகுப்பு வரையிலான இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறையினால் கல்வியின் தரம் மிகவும் தாழ்ந்து விட்டதாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் முதற்கொண்டு மத்திய, மாநில அரசுகள் வரையிலும் பதறுவதைப் பார்க்க வேதனையாக உள்ளது. 

கல்வியில் தனியார் மயம் அதிகரித்த பிறகு தான் அரசு நடத்தும் பத்து, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கூடுதல் கவனம் பெறத் தொடங்கின. மாநில அளவில், மாவட்ட அளவிலான இடங்களுக்கு குழந்தைகளைத் தயார் படுத்துவதும் அத்தகைய இடங்களைப் பெற்ற பிறகு அதையே முதலீடாக்கி விளம்பரங்கள் செய்து கட்டணங்களை உயர்த்தி கல்லாக் கட்டுவதும் வாடிக்கையாகி விட்டது. ஆக, இப்போதைய சூழலில் இவர்களது பார்வையில் இந்த பத்து, பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் தான் கல்வியின் தரமாக அளவிடப்படுகிறது. 



கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த போது 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயின்று கொண்டிருந்த மாணவர்கள் கடந்த 2014-15 முதல் 2017-18 வரையிலான நான்கு 10 ஆம் பொதுத் தேர்வுகளை எதிர்கொண்டிருக்கின்றனர். 2013ல் 89ஆக இருந்த தேர்ச்சி விகிதம் இந்நான்கு ஆண்டுகளில் முறையே 92.90%, 93.60%, 94.40%, 94.50%.. இதைப் போலவே சட்டம் நடைமுறைக்கு வந்த போது 5, 6ஆம் வகுப்புகளில் பயின்றவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எதிர்கொண்டிருக்கின்றனர். தேர்ச்சி விகிதம் ஒன்றும் சரிந்து விடவில்லை.. சராசரியாக 91% க்கு மேல் தான் இருக்கின்றது. ஆக, எந்த ஒரு தரவின் அடிப்படையிலும் கட்டாயத் தேர்ச்சி காரணமாக கல்வியின் தரம் குறைந்திருக்கிறது என்பதை அரசால் அல்லது தேர்வு கொண்டு வர வேண்டும் என வாதிடுபவர்களால் நிறுவ முடியாது.. 

தேனி சுந்தர்
9047140584 

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்