பள்ளிகள் வெடிகுண்டுகளை வீசி விடாமல் இருக்க வேண்டும்..! - தேனி சுந்தர்

மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் மக்கோடா அப்பாவிடம் கேட்கிறான் . இன்று ரேசனில் சீனி போடுகிறார்களாமே என்று. இல்லை, நமது பகுதியில் நாளை தான் போடுவார்கள் என்கிறார் அப்பா.

பின்னாடியே வந்த கயானா கேட்கிறாள். அப்பா, இன்று ரேசனில் சீனி போடுவார்களாமே.. எங்கள் ஆசிரியர் சொன்னார் என்று கடைசி பாட வேளையில் அவளது ஆசிரியர் சொன்னதை அப்படியே சொல்கிறாள். "நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரேசனில் சீனி போடுகிறார்கள்.. நீங்கள் வீட்டுக்குச் செல்லும் போது, வீட்டில் உங்கள் அம்மா சீனியை வைத்து சுவையான பீன்ஸ் சூப் அல்லது வேறு ஏதாவது இனிப்பான பதார்த்தம் உங்களுக்காக செய்து வைத்திருப்பார்.. அதை நினைத்துக் கொண்டே வீட்டிற்கு செல்லுங்கள்.."

அப்பா தன் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.. யதார்த்தம் புரியாத இந்த ஆசிரியர்கள் தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு வெடிகுண்டை வீசி இருக்கிறார்களே என்று..

இது ஒரு அப்பாவின் குறிப்பு. இது நடந்தது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில்..!

அமெரிக்கா, ஜப்பானில் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் வீசிய அணுகுண்டு தாக்குதலால் அந்த நகரங்களில் இருந்த குழந்தைகள் எந்த அளவிற்கு பாதிக்கப் பட்டார்கள் என்பதை ஒரு அப்பாவின் குறிப்புகளில் இருந்து அறிய முடியும். ஆம் அந்த அப்பாவின் பெயர் தகாசி நொகாய்.

மருத்துவ ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர். கதிரியக்கம் தொடர்பான ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அதன் காரணமாகவே எலும்பு புற்று நோய்க்கு ஆளானவர். விரைவில் தான் இறந்து விடுவோம் என்று அறிந்த அவர் தான் இல்லாத காலத்தில் தன் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று தன் கனவுகளை அன்புக்குரிய மனைவியிடம் கனத்த இதயத்தோடு விவாதித்து கொண்டே இருக்கிறார்.. ஆனால் காலம் வேறொரு கணக்கைப் போட்டு வைத்திருந்தது..

நாகசாகி நகரத்தில் அணுகுண்டு வீசப்பட்ட பொழுது காளான் போல உருவான மிகப்பெரிய புகை மண்டலத்தை தன் ஆய்வுக் கூடத்தில் இருந்து காணும் வாய்ப்பை பெற்ற துரதிர்ஷ்டசாலி அவர்..

விசயம் அறிந்த பிறகு அந்த பகுதிக்கு சென்ற போது, வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு தரைமட்டம் ஆகிக் கிடந்தன. அவர் குடியிருந்த வீடும் அதில் அடக்கம்.. ஏராளமான மக்கள் எரிந்து சாம்பலாகி இருந்தனர். அதில் அவரது மனைவியும் ஒருவர். மிச்ச மீதி எலும்புகளைத் தான் ஒரு வாளியில் அவரால் சேகரிக்க முடிந்தது..

நல்ல வேளையாக, அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் மலைமேல் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றிருந்த காரணத்தினால் அவர்கள் தப்பினார்கள்.

தகாசி நோகாய், நோய்க்கு ஆளானவர். இறப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருப்பவர். தன் இயல்பான பணிகளை செய்து கொள்வதிலேயே அவருக்கு சிரமங்கள் இருக்கின்றன. அணுகுண்டு தாக்குதலில் தப்பி அவர் உயிரோடு இருக்கிறார். குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டிய மனைவி எரிந்து சாம்பலாகி விட்டார். எதை நினைத்து வருந்த முடியும்? எதை நினைத்து ஆறுதல் அடைய முடியும்? இக்கட்டான நிலைமை.!

ஒரு பெரிய கல்வி நிறுவனத்தின் ஒரு ஆராய்ச்சியாளராக நல்ல வசதி வாய்ப்போடு வாழ்ந்து வந்தவர், ஆராய்ச்சி காரணமாக நோய்வாய்ப்பட்டதோடு மட்டுமில்லாமல் இந்த அணுகுண்டு வீச்சு காரணமாக தன்னுடைய வீடு வாசல் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து மற்றவர்களைப் போல அவரும் தெருவில் நிற்கிறார். நண்பர்களால் ஒரு சிறு குடிசை அமைக்கப்பட்டு, அந்த குடிசையில் தான் அவரும் அவருடைய குழந்தைகள் மக்கொடா, கயானா ஆகிய மூவரும் வாழ வேண்டிய சூழல்.

அமெரிக்காவின் மனித தன்மையற்ற இந்த கொடுஞ்செயல் காரணமாக உருவான பேரிடரால் நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கின்றன..

பள்ளியில் சேர்ப்பதற்கும் பள்ளிக்கு செல்லும் குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் கூட இவரால் இயலாத நிலை. மற்ற நண்பர்கள் உதவி செய்கின்றனர். ஒருவர் தொப்பி வாங்கி தருகிறார். ஒருவர் சட்டை வாங்கி தருகிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவில் இருக்கிறது.

அம்மா உயிரோடு இருந்து இவரும் நல்ல நிலையில் இருந்தால் தங்கள் குழந்தைக்கு பொருத்தமான அழகான ஆடைகளை வாங்கி தந்து, அலங்கரித்து அவர்களை மகிழ்ச்சியாக பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்க முடியும். ஆனால் கிடைக்கக்கூடிய உதவிகளை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நகர்த்த வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள். அதை குறை சொல்லி நிராகரிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. வாங்கித் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவற்றை அணிந்து கொண்டு அந்த குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர்கள் செல்கிறார்கள்..

அப்பாவால் உடன் செல்ல முடியவில்லை. அம்மா உயிருடன் இல்லை. அண்ணன் மக்கோடா தான், தன் தங்கையை அழைத்துச் செல்கிறான். ஆசையாய் உடன் சென்ற கயானா தெருவில் சில குழந்தைகள் தன் அம்மாவோடு செல்வதைப் பார்த்து தயங்கி, தடுமாறி நிற்கிறாள்.. பின் அந்த யதார்த்த நிலை அறிந்து பள்ளிக்கு செல்கிறாள். முதன் முறையாக செல்கிறாள்.

இந்த அணுகுண்டு வீச்சு காரணமாக குறைந்த பட்சமாக 20 சதவீதம் குழந்தைகள், அதாவது ஐந்தில் ஒரு குழந்தை தன் பெற்றோரை இழந்திருக்கும் என்கிறார் தகாசி நோகாய்.. அது அப்பாவாக இருக்கலாம், அம்மாவாக இருக்கலாம் அல்லது இருவரையும் இழந்து இருக்கலாம். பெற்றோரை இழந்த குழந்தைகளை கையாள்வது அரசுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்த காலகட்டம்.. இதற்கிடையில் தான் மீண்டும் பள்ளிகள் திறக்கின்றன.. குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்கின்றனர்..!

எத்தனை குழந்தைகள் யார் யாரை இழந்து விட்டு இங்கு வந்திருக்கின்றனர். யாருடைய பாதுகாப்பில், பராமரிப்பில் எங்கு வாழ்கின்றனர், என்ன மனநிலையில் இருக்கின்றனர் என்று உணராமல் அந்த ஆசிரியர் பேசி இருக்கிறாரே.. அம்மா வீட்டில் பதார்த்தம் செய்து வைத்திருப்பார். அதை நினைத்துக் கொண்டே செல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறாரே.. மக்கொடாவுக்கும் கயானாவுக்கும் நான் எந்த அம்மாவைக் காட்டுவேன் என்ற ஆதங்கத்தில் இருந்து சொல்கிறார், ஏன் இந்த வாத்தியார் வெடிகுண்டை வீசி இருக்கிறார்..? இது குழந்தைகள் மனதில் வீசப்பட்ட வெடிகுண்டு தான் இல்லையா??

மண் சரிவு, பெரும் புயல், அடை மழை, ஊரெங்கும் வெள்ளம், தீ விபத்து, பெரிய தலைவர்கள் மரணம், நீண்ட விடுமுறை, ஏன் சுனாமி பாதிப்பு என எத்தனையோ இயற்கை, செயற்கை பேரிடர்கள் வருகின்றன. குழந்தைகள் தங்கள் வீட்டில் யாரோ ஒருவரை, ஆசையாய் வளர்த்த நாய்க்குட்டியை, பூனையை, கோழியை என எதையாவது இழந்திருப்பர். ஒரு டப்பாவில் வைத்து நாள்தோறும் தண்ணீர் ஊற்றி வளர்த்த ஒரு குட்டிச் செடி கூட காற்றுக்கு ஒடிந்து போயிருக்கலாம். வாழ்ந்த வீட்டையே கூட முழுவதும் இழந்து விடுகிறார்கள்..

சுனாமி வந்த போது கீச்சாங்குப்பம் பள்ளிக் குழந்தைகள் ஏராளமானோர் அதில் பலியாகி உள்ளனர்.. அவர்கள் நினைவாக அங்கு மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இன்று அவை நல்ல மரமாகி இருக்கக் கூடும்..

ஒரு தீபாவளி நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் ஒரு குழந்தை , பெயர் சுர்ஜித் என்று நினைக்கிறேன். ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து தேசம் முழுவதும் அந்த பேச்சு தான். ஆனால் பள்ளி மட்டும் பேசவில்லை. சமூகத்தின் எந்த பிரச்சினையும் அதன் கண்களில் படுவதில்லை. எவ்வளவு பெரிய வெடிச் சிரிப்பு, மரண ஓலம் அல்லது போர்க்குரல் எதுவும் அதன் காதுகளில் விழுவதில்லை. அதன் இதயம் எது கண்டும் சஞ்சலப் படுவதில்லை. அச்சடித்த புத்தகங்களும் பாடங்களும் பின்னாடி பத்து கேள்விகளும் கோடிட்ட இடங்களும் தான் அதற்கு முக்கியம்.. அந்த புத்தகத்தில் இருபதாம் பக்கம் அச்சாகாமல் விடுபட்டிருந்தால் தேசம் முழுவதும் விவாதம் நடக்கும். மற்றபடி எதைப் பற்றியும் கவலை இல்லை..

திறந்தவுடன், வகுப்பில் நுழைந்தவுடன் புத்தகத்தில் எட்டாம் பக்கம் எடுங்க என்று அது தனக்கான அலைவரிசையில் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் பேசுகிறது.. உலகம் முழுவதும் பள்ளிகளின் குணாம்சம் இப்படித்தான் இருக்கும் போலும்..

அந்த வரிசையில் இப்போது பெருந்தொற்று.. நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்து விட்டனர்..

நம் கவலை எல்லாம், சிலபஸ், பள்ளி, மாநிலம், தேசிய அளவிலான தேர்வுகள், மதிப்பெண்கள், தேர்ச்சி விழுக்காடு, முதலிடம், இரண்டாமிடம் என்ற பெயர்களில் பள்ளிகள் குழந்தைகளின் மனதில் வார்த்தை வெடிகுண்டுகளை வீசி விடாமல் இருக்க வேண்டும் என்பது தான்..!

எந்த விதமான பேரிடர்களாக இருந்தாலும் போர்களாக இருந்தாலும் பல தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் அதில் குறிப்பிடத்தக்கவர்கள். 

போர் காரணமாக, அணுகுண்டு வீச்சு காரணமாக குழந்தைகள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டனர் என்பதற்கு தகாசி நொகாய் அவர்களின் நூல் முதன்மையான சான்று. அதனை தமிழில் ஃபாதர் சூ.ம.செயசீலன் அவர்கள் என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டு விட்டு என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அதனை அடிப்படையாக கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது..
-
தேனி சுந்தர்
நன்றி : வண்ணக்கதிர் - தீக்கதிர்
நாள் : 12.09.21

Comments