கவிஞர் இதயநிலவன் எழுதிய ”ஓரெண்டே ரெண்டே ..” நாவல் குறித்து
தேனி, படைப்பாளிகளின் மண். படைப்பாளிகளுக்குப் பஞ்சமில்லாத மண். எழுத்தின் அத்தனை வித வகைமைகளுக்கும் “இதோ எங்களிடம் ஆள் இருக்கிறார்..” என நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் மாவட்டம். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கும் மேலாக கவிஞர், குறும்பட இயக்குநர், திரைக்கதை, சிறுகதை எழுத்தாளர், நடிகர் எனப் பன்முக ஆளுமைகளில் வெளிப்பட்ட எங்கள் ஆசிரியர், தோழர் இதயநிலவன் அவர்கள் இந்த நூலின் மூலம் நாவலாசிரியர் என்கிற புதியதொரு அவதாரம் எடுத்திருக்கிறார்.. கதையில் இரண்டு பிரச்சினைகள் தீவிரமாகப் பேசப்படுகின்றன. இரண்டு பிரச்சனைகளுக்கும் இடையில் நின்று போராடுபவளாக கவிதா டீச்சர். முதலாவது பிரச்சனை குடும்பத்தில், இரண்டாவது பிரச்சனை ஆசிரியர் பணியில், பள்ளியில், கல்வியில்.. குழந்தையின்மை காரணமாக குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை, சங்கடங்களை கவிதா மிகச் சிறப்பாகவே எதிர்கொண்டு கடந்து வந்தாலும் கூட காலம் அவளுக்கு அடுத்தடுத்த தடைகளை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. காலப்போக்கில் பிரச்சனைகள் அவளது வாழ்வில் இயல்பான அங்கமாக மாறிவிடுகின்றன. தைரியமாக அவற்றைச் சந்திக்கும் மனநிலைக்கு கவிதா தன்னை தயார்படுத்திக் கொள்கிறாள்.. ...