கவிஞர் இதயநிலவன் எழுதிய ”ஓரெண்டே ரெண்டே ..” நாவல் குறித்து
தேனி, படைப்பாளிகளின் மண். படைப்பாளிகளுக்குப் பஞ்சமில்லாத மண். எழுத்தின் அத்தனை வித வகைமைகளுக்கும் “இதோ எங்களிடம் ஆள் இருக்கிறார்..” என நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் மாவட்டம். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கும் மேலாக கவிஞர், குறும்பட இயக்குநர், திரைக்கதை, சிறுகதை எழுத்தாளர், நடிகர் எனப் பன்முக ஆளுமைகளில் வெளிப்பட்ட எங்கள் ஆசிரியர், தோழர் இதயநிலவன் அவர்கள் இந்த நூலின் மூலம் நாவலாசிரியர் என்கிற புதியதொரு அவதாரம் எடுத்திருக்கிறார்..
கதையில் இரண்டு பிரச்சினைகள் தீவிரமாகப் பேசப்படுகின்றன. இரண்டு பிரச்சனைகளுக்கும் இடையில் நின்று போராடுபவளாக கவிதா டீச்சர். முதலாவது பிரச்சனை குடும்பத்தில், இரண்டாவது பிரச்சனை ஆசிரியர் பணியில், பள்ளியில், கல்வியில்..
குழந்தையின்மை காரணமாக குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை, சங்கடங்களை கவிதா மிகச் சிறப்பாகவே எதிர்கொண்டு கடந்து வந்தாலும் கூட காலம் அவளுக்கு அடுத்தடுத்த தடைகளை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. காலப்போக்கில் பிரச்சனைகள் அவளது வாழ்வில் இயல்பான அங்கமாக மாறிவிடுகின்றன. தைரியமாக அவற்றைச் சந்திக்கும் மனநிலைக்கு கவிதா தன்னை தயார்படுத்திக் கொள்கிறாள்..
குழந்தைகளின் கற்றல் அடைவுகளில், நடத்தையில், பள்ளி நிர்வாகத்தில், ஆசிரியர் பணியில், கல்வித் துறையில் என ஆயிரக்கணக்கான பிரச்சனைகளுக்கு இடையில் தான் இன்று கற்றலும் கற்பித்தலும் நடந்து கொண்டிருக்கின்றன. வெளி மாவட்டத்தில் பணி புரியும் கவிதா அரசியல் சிபாரிசு, மேலும் தேவையானவற்றையும் கொடுத்து சொந்த மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்று வருவதில் வேகமெடுக்கும் கதை, அந்தப் பள்ளியின் பிரச்சனைகளை பேசுகிற சாக்கில் பொதுவாக இன்று ஆசிரியர்கள் சந்திக்கும், கிட்டத்தட்ட அத்துணை பிரச்சனைகளையும் மன அழுத்தங்களையும் ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக பொதுவெளிக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.
அனைவருக்கும் தரமான, சமமான கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும். அதை அரசே வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு வயது நூறாண்டுகளைக் கடந்து விட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து பவள விழா கொண்டாடியும் முடித்து விட்டோம். ஆனாலும் 1960களில் அமைக்கப்பட்ட கோத்தாரி கல்விக் குழு வலியுறுத்திய படி இன்று வரை பொதுப்பள்ளி முறையைச் சாத்தியப்படுத்த இயலவில்லை. அந்தக் குழுவின் அன்றைய பரிந்துரையான கல்விக்கான 6% நிதி ஒதுக்கீடு இன்று வரை எட்ட முடியவில்லை. 1990களில் வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் மக்கள் மன்றத்தில் உருவான எழுச்சியும் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படுத்தின. அதுவும் கூட உடனடியாக நடந்து விடவில்லை. 2009ல் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு, அது ஏப்ரல், 1 2010 முதல் நடைமுறைக்கு வந்தது. கல்வியாண்டு முழுவதும் மாணவர் சேர்க்கை, சேர்க்கைக்கு சான்றிதழ் தடையில்லை, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி, வயதுக்கேற்ற வகுப்பு, குழந்தைகளுக்கு எதிரான தண்டனைகள் தவிர்ப்பு போன்றவற்றில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் நிச்சயம் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு குழந்தைகளின் இடைநிற்றல் விகிதங்களை கடந்த காலங்களோடு ஒப்பிட்டால், இன்று பள்ளியில் இருந்து இடைநிற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இதற்கு மிக முக்கியக் காரணம், கல்வி உரிமைச் சட்டம்..
ஆனால், இந்தச் சட்டம், வசதிக்கேற்ப கல்வி பெறுகிற பாகுபாடுகளைக் குறைத்திருக்கிறதா..? அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே தரமான கல்வி பெறுகிற வாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறதா..? குறைந்தபட்சம் வகுப்புக்கொரு ஆசிரியரை உறுதிப்படுத்துகிறதா..? பள்ளிக்கொரு துப்புரவுப் பணியாளரை நியமிக்க முடிந்திருக்கிறதா..? அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தாரி கல்விக் குழு சொன்ன அளவிலான நிதியையாவது ஒதுக்க அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்ததா..? – இப்படி கேட்பதற்கு ஒரு நூறு கேள்விகள் இருந்தாலும் அத்தனைக்கும் பதில் ஒன்று தான்.. அந்தப் பதில் “இல்லை” என்பது தான்..
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருக்கிறார். பல்லாயிரக்கணக்கான பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிற அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த கொரானா பெருந்தொற்று காலத்தில் மிகவும் பெரிய அளவில் பேசப்பட்ட ஒன்று குழந்தைகளின் கற்றல் இழப்பு.. இந்த நாவலில் சொல்வது போல அடிக்கடி நடக்கிற கூட்டங்களில் கலந்து கொள்வது, எமிஸ் உடன் சண்டை போடுவது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை நாளுக்கு ஒன்று வீதம் தருவார்கள், அதைப் போய் அடிக்கடி வாங்கி வருவது, மாற்றுப் பணிகளுக்குச் செல்வது என பல விதங்களில் ஆசிரியரின் கற்பித்தல் நேரம் பறிக்கப்படுகிறது. இதனால் இந்தப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு காலம் காலமாய் ஏற்படுகின்ற கற்றல் இழப்பு எப்போதாவது இந்த அளவிற்கு முக்கியத்துவம் அளித்து பேசப்பட்டிருக்கிறதா..?
கல்வி உரிமைச் சட்டத்தின் 12 (1சி) பிரிவு அனைத்து தனியார் பள்ளிகளிலும் சேர்க்கை வகுப்புகளில் 25% இடங்களை நலிவுற்றோர், வாய்ப்பு மறுக்கப்பட்டோரை சேர்க்க வழிவகுக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் கடந்த பத்தாண்டுகளில் 8 இலட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களின் கல்விக் கட்டணமாக அரசு இதுவரை சுமார் ஆயிரம் கோடி ரூபாயை வழங்கி இருக்கிறது. இந்த 8 இலட்சம் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து பயின்று வந்திருந்தால் இதே சட்டத்தின் 1:30 விகிதாச்சாரத்தின் படி எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க முடியும் என்பதை நண்பர்கள் கணக்கிட்டு பார்க்க வேண்டும்.
நியமிக்க வேண்டிய ஆசிரியர்கள் பல ஆயிரம் பேர் இருப்பது ஒருபுறம் என்றால், இந்த சட்டப் பிரிவின் காரணமாக குழந்தைகளைப் பறிகொடுத்ததால் அடைக்கும் நிலைக்கு ஆளான அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை எத்தனை ஆயிரம்..?
கிராமங்களில் “வாழ்ந்து கெட்ட குடும்பங்கள்” என்று சொல்வார்கள்.. அதுபோல இன்று ஒவ்வொரு ஊரிலும் இருக்கிற அரசுப் பள்ளிகளைப் பார்த்து மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.. ஒரு காலத்தில் இந்தப் பள்ளியில் ஐநூறு, ஆயிரம் குழந்தைகள் படித்தார்கள்.. ஒரு காலத்தில் இந்தப் பள்ளியில் ஐம்பது ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள்.. இன்று இப்படி இருக்கிறது என்று..! அரசுப் பொதுக் கல்வியின் இந்த வீழ்ச்சிக்கு யார் காரணம்? ஆசிரியர்களா? அதிகாரிகளா? மக்களா? அரசா? அரசின் கொள்கைகளா? இல்லை, இவை அனைத்துமா?
கொஞ்சம் கொஞ்சமா அரசுப் பள்ளிகளே இல்லை என்று ஆன பிறகு நம் குழந்தைகளுக்கான கல்வி என்னவாகும்..? ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் படிப்பு படித்து விட்டு, அரசுப் பள்ளிகளில் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அந்த ஆசிரியர் பணியிடங்கள் என்னவாகும்..? நிரந்தர பணி, ஊதியம், கோரிக்கைகள், போராட்டங்கள் எல்லாம் என்னவாகும்..?
வெறும் உரையாகப் பேசுவதை விட, கட்டுரைகளாக எழுதுவதை விட ஒரு நல்ல படைப்பு மிக ஆழமாக நம்மைச் சிந்திக்க வைக்கும்.. உணர்வுகளைக் கிளப்பும்.. செயல்படத் தூண்டும்.. அப்படியான ஒரு படைப்பாக தோழர் இதய நிலவனின் இந்த நாவல் நிச்சயம் இருக்கும்.. விவாதங்களை நடத்தும்.. நடத்த வேண்டும் என்கிற நம்பிக்கை நிறைய இருக்கிறது எனக்கு..! வாழ்த்துகள் தோழர்..
தேனி சுந்தர்
Comments
Post a Comment