பூமிக்கு யார் சொந்தம் : செ.கா.வின் நூல் குறித்து
யதார்த்தத்தின் வியப்பு..
ஈரோடு சென்னிமலை நண்பர் செ.கா.வுடன் ஒரு பத்தாண்டு கால பழக்கம் இருக்கும். வாசிப்பு மற்றும் பயணத்தில் மிக ஈடுபாடு கொண்டவர். வாசிப்பிற்கான பயணம், பயணத்திற்கான வாசிப்பு - இரண்டும் தான் செ.கா. செய்யும் பணிகளை வெறும் அடையாளத்திற்காக மட்டும் அல்லாமல் அர்த்தப் பூர்வமாக, ஆழமாக எடுத்துச் செய்யக் கூடியவர்.
அவருடைய அறிவியல், சூழலியல் மற்றும் பரிணாமம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு "பூமிக்கு யார் சொந்தம்?" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
வழக்கமாக, பூமி யாருக்கு சொந்தம்? பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதா? மற்ற உயிர்களுக்கும் அதே உரிமை இருக்கிறது தானே? இயற்கை என்பது மனிதனையும் உள்ளடக்கியது தானே? என்றெல்லாம் பேசி இருப்போம். கேட்டு இருப்போம். பூமிக்கு யார் சொந்தம்? என்கிற தலைப்பே சிந்திக்க வைப்பதாக இருந்தது.
பல்வேறு விதமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே வாசித்துள்ளேன். ஆனாலும் மீண்டும் ஒருமுறை அவற்றை ஒருசேர வாசிக்கும் போது புதிய அனுபவமாக அமைந்தது.
சிறுத்தை, பெருஞ்சிறுத்தை மற்றும் சிவிங்கிப் புலிகள் தொடர்பான கட்டுரை ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சியை பல கோணங்களில் அலசுகிறது.
பிளாஸ்டிக் அச்சுறுத்தல் , பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட கட்டுரைகள் வளர்ச்சி மற்றும் சூழலியல் பாதுகாப்பு குறித்த விரிவான பார்வையை முன்வைக்கின்றன.
நூலின் பெரும்பகுதியை பரிணாமம் மற்றும் டார்வின் தொடர்பான கட்டுரைகள் அலங்கரிக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைகளிடம் பரிணாமம் தொடர்பான உரையாடல்களை நடத்துவதற்காக ஈரோட்டில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டவர் செ.கா. அந்த கோட்பாட்டை அவர் எவ்வளவு ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை இந்நூலை வாசிப்பதன் மூலம் உணர முடிந்தது.
மானுட சமூக பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த மார்க்சுக்கு இயற்கையின் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வினின் ஆய்வு எவ்வளவு பக்க பலமாக இருந்தது என்பதையும் சமூக டார்வினியம் எவ்வளவு ஆபத்தானது என்பதை வாசிக்க வாசிக்க ஆர்வம் அதிகரிக்கிறது.
ஹம்போல்ட் அத்தியாயம் ஆச்சரியமானது. அவர் பத்து டார்வின்களுக்கு சமமான பணிகளை செய்திருக்கிறார். அவரது தோளில் நின்று தான் டார்வின் மானுட விடியலுக்கான மகத்தான சூரியனாக மிளிர்கிறார் என்பதையும் செ.கா. சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
ரிச்சர்ட் டாக்கின்ஸ், டேவிட் அட்டன்பரோ உரையாடல் அற்புதமானது. பல புரிதல்களை ஏற்படுத்துவது. அவர்களது உரையாடலில் ஒரு இடத்தில் அட்டன்பரோ பயன்படுத்திய வார்த்தைகள் தான் செ.கா.வின் நூல் குறித்து சொல்வதற்கான சரியான தேர்வாக மனதில் வந்து அமர்ந்தன.
செ.கா.வின் தொடர்ந்த வாசிப்பு மற்றும் பயணங்கள் எழுத்தாக, நல்லதொரு தொகுப்பாக வெளியாகி இருப்பது யதார்த்தத்தின் வியப்பாகவே எனக்குத் தோன்றுகிறது.
புத்தகக்கடை.காம் வெளியிட்டுள்ளது. தொடர்புக்கு : +91 97901 33141
தேனி சுந்தர்
Comments
Post a Comment