கலிலியோ மண்டியிடவில்லை – தேனி சுந்தர்
“அறிவியலின் வரலாற்றைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்கிறேன். மதம் எந்த அளவு அறிவியலை ஒடுக்கி இருக்கிறது என்பதை அறியும் போது மனம் தாளாத வேதனை அடைகிறது. அறிவியல் அறிஞர்களின் மறைக்கப்பட்ட வேதனைகளும் விம்மல்களும் அதிகார அடக்குமுறைகளும் அடங்கிய பெரும் மானுட ஆவணமாகவே அறிவியலின் வரலாறு இருக்கிறது.
அறிவியல் பயன்பாடுகளை தினசரி வாழ்வில் உபயோகித்து பழகிய நாம் அதன் பின்னுள்ள மனித அறிவின் வியப்பான சாதனைகளை, போராட்டத்தை அறிந்து கொள்ளவே இல்லை. எனது கட்டுரைகள் அறிவியலின் நம்பிக்கைகளை ஆராய்கிறது. இலக்கியத்திற்கும் அறிவியலுக்கான நெருக்கத்தைப் பகிர்ந்து கொள்ளுதலை முதன்மைப் படுத்துகிறது” என எஸ்.ரா. அவர்கள் எழுதியுள்ள முன்னுரை வரிகள் தான் நூலின் பிரதானம்..
கலிலியோவின் சிறுவயதில், ஆண்கள் மேம்பட்டவர்கள் என்பதால் தான் பெண்களுக்கு ஆண்களை விட குறைவான பற்களை இறைவன் படைத்துள்ளார் என ஒரு மதபோதகர் கூறுகிறார். பெரியவர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் அதை அப்படியே நம்புகிறார்கள். பிறருக்கும் போதிக்கிறார்கள். ஆனால் சிறுவயது கலிலியோ அதை அப்படியே நம்பவில்லை. தாமறிந்த பெண்கள் அனைவரையும் வாயைத் திறக்க சொல்லி பற்களின் எண்ணிக்கையை சரிபார்க்கிறார். அந்த மதபோதகரிடமே போய்ச் சொல்கிறார் , “ஐயா, நீங்கள் சொன்னது போல இல்லை. எல்லோருக்கும் ஒரே அளவிலான பற்கள் தான் இருக்கின்றன..!” அந்தப் பதிலை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மதபோதனை நூல்களை கொடுத்து இதையெல்லாம் வாசித்து வர வேண்டும் என்கிற தண்டனையையும் அளிக்கிறார் என்கிற செய்தியை வாசிக்கும் நமக்கு “குட்டி கலிலியோ” மீது வியப்பும் அந்த கிறித்தவ போதகர் மீது வெறுப்பும் எழுகிறது..
அதே நேரத்தில் கலிலியோ மற்றும் அவரது குடும்பம், குறிப்பாக அவரது மகள்கள் குறித்து வாசிக்கும் போது வருத்தம் அளிக்கிறது. தன் மகள் வசிக்கும் அந்த மடத்தின் மணி ஓசை கேட்டு வாழ்வதற்காகவே அதன் அருகில் வாழும் தந்தையாக பார்க்கையில் உள்ளம் உருகுகிறது.. மகளுக்கும் அவருக்குமான கடித உரையாடல்கள் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
டார்வினின் “வேட்டை நாய்” என்கிற அளவுக்குப் பெயர் பெற்ற ஹக்ஸ்லி சொல்வது போல, தனது விஞ்ஞான கோட்பாடுகளின் மூலம் கடவுள்களின் இடத்தையே காலி செய்தவர் டார்வின். அவரைப் பற்றிய இந்நூலின் பதிவுகள். அவரது ஆய்வுக்கும் மகளின் மரணத்திற்கும் இடையில் படுகிற பாடு.. தயக்கம் ஆகியவற்றை அறியும் போது மனதுக்கு வேதனையாக இருக்கிறது.
விஞ்ஞானிகள், எழுத்தாளர் குறித்த ஒரு கட்டுரை. ஐன்ஸ்டைன், தாஸ்தவோஸ்கி குறித்த அரிய தகவல்களைத் தருகிறது. “கரம்சோவ் சகோதரர்கள்” நாவலின் பதிவுகள் சார்பியல் கோட்பாடு சார்ந்த முன்னோட்டமாக விளங்குவது குறித்த தகவல்கள் வியப்பிலும் வியப்பு…
அறிவியல் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் எழுதப்பட்ட அபுனைவுக் கட்டுரைகள் தான் என்றாலும் ஓசில் பூனை, புலனி பறவை, ஏகா தவளை, ஐசி வண்டு ஆகியவற்றையும் கட்டுரைகளில் இணைத்துக் கொண்டு, அவற்றோடு உரையாடி உரையாடி அடுத்தடுத்த அத்தியாயங்களை கொண்டு செல்வது சிறப்பாக இருக்கிறது..
அங்கங்கே பல கவிதைகள், வரலாற்றுத் தகவல்கள், விஞ்ஞானிகளின் அறியப்படாத செய்திகள், திரைப்படங்கள், நூல்கள் என போகிற போக்கில் ஏராளமான தகவல்களை சொல்லிச் செல்கிறார். ஒரு புனைவு படைப்பை வாசிப்பது போல அவ்வளவு ஆர்வமாக வாசிக்க முடிகிறது. எஸ்.ரா. அவர்களின் வாசிப்பின் விரிவு குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை..
நிறைவாக, கடந்த காலங்களில் மதங்களின் பிடியில் இருந்த அறிவியல் மற்றும் ஆய்வுகள் எல்லாம் இன்று தனிப்பட்ட பெரு முதலாளிகள், வணிக நிறுவனங்களின் கைகளில் சிக்கி உள்ளது. அவர்களின் பிரதான நோக்கம் என்னவாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே.. எனவே அறிவியலை மக்களுக்கானதாக, மனித குல மேம்பாட்டிற்கான கருவியாக மாற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது என்பதையும் இந்நூல் வலியுறுத்துகிறது..
நூலின் பெயர்: கலிலியோ மண்டியிடவில்ல
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: தேசாந்திரி பதிப்பகம்
விலை : ரூ 119
தேனி சுந்தர்
Comments
Post a Comment