ஆண்டிபட்டி மாதாவின் ”கடைசி இலை” - சிறுகதைத் தொகுப்பு குறித்து.
மாதா என்கிற பெயரை நான் பணிக்கு வந்த புதிதில் இருந்து கேள்விப்பட்டு வருகிறேன். 2005 ல் தமுஎகச மாவட்ட மாநாடு ஆண்டிபட்டியில் தான் நடந்தது என்று நினைக்கிறேன். தோழர் மக்கள் ராசப்பன், மாதா, மாலன் போன்றவர்களை அந்த மாநாட்டில் முதல் முறையாக பார்க்கிறேன். சுருளிப்பட்டி கிளையின் சார்பில் கலந்து கொண்டு மாநாட்டில் சில கடுமையான விமர்சனங்கள் வைத்த ஞாபகம், ஆனாலும் தோழர் மாலன் அவர்கள் புதியவர் என்ற கரிசனத்தோடு அதற்கு இதமான பதில் அளித்தார். ஆனால் மற்றவர்களுக்கு சுளீர் சுளீர் என்று தான் பதிலுரைத்தார்..
அப்போது முதல் பெயர் தெரியும், ஆள் தெரியும் என்றாலும் அவர் என்ன விதமான படைப்புலகில் இயங்கி வருகிறார் என்று தெரியாது.. அப்புறம் அவரது பெயர் அடிக்கடி காதுகளில் விழுவதும் கூட குறைந்து போனது. இப்போது எழுத்து, புத்தகம் என்று வந்த பிறகு படைப்பாளிகளுடன் மீண்டும் நெருங்குகிற வாய்ப்புகள் கிடைத்தன.. அவர்களது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன.. அந்த அடிப்படையில் தோழர் மாதா அவர்களின் "யாருடைய பிரேதம்?" என்கிற மொழிபெயர்ப்பு கதையை புக்டே இணைய தளத்தில் வாசித்த பிறகு தோழர் பெயர் மீண்டும் அழுத்தமாக என்னுள் பதிந்தது.. அப்படியொரு கதை. மனதை உலுக்கும் கதை. கொங்கணி மொழிக் கதை. தாமோதர் மௌசோ என்கிற படைப்பாளி எழுதியது. அது ஒரு மொழிபெயர்ப்பு கதை என்றே சொல்ல முடியாத அளவிற்கு மொழியாக்கம் செய்திருந்தார் தோழர் மாதா அவர்கள்.. மொழிபெயர்ப்பு தளத்தில் அவர் தொடர்ந்து இயங்கி வருகிறார் என்பதை அப்போது தான் அறிய முடிந்தது. ஆர்.கே.நாராயணன் எழுதிய கதைகளின் தொகுப்பு ஒன்றின் முன்னுரை வாசிக்கும் போது தான் மொழிபெயர்ப்பு பணியின் முழு பரிமாணமும் சிரமங்களும் தெரிந்து கொள்ள முடிந்தது. அத்தகைய பணியை தோழர் மாதா பல்லாண்டு காலமாக தொடர்ந்து செய்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு சந்திப்பில் மாதாவின் மொழிபெயர்ப்பு கதைகளின் தொகுப்பு வெளியாகி உள்ளது என்று தோழர் விசாகன் சொன்னதும் நான் "யாருடைய பிரேதம்?" கதை குறித்து சொன்னேன். அதுவும் இடம்பெற்றுள்ளது என்றார். அடுத்த ஓரிரு நாட்களில் நூல் வந்து சேர்ந்தது. வந்த கையோடு வாசித்தும் விட்டேன்.
பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி கற்ற பலரும் கூட தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு, அல்லது ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்கிற பணியை எளிதாக செய்ய முடிவதில்லை. நாம் அப்படியான பணியை சொன்னால் மிகவும் தயங்குவார்கள். ஆங்கிலத்தில் உள்ள படிவத்தை நிரப்புவதற்கு பயந்து மாடு மேய்க்க போவது போல ஒரு நகைச்சுவை காட்சி ஒரு படத்தில் இடம் பெற்றது. அது தான் பத்து பதினைந்து ஆண்டுகள் மொழி கற்றும் இருக்கக்கூடிய யதார்த்தம். ஆனால் தோழர் மாதா இத்தகைய பின்புலம் எதுவும் இல்லாமலேயே சொந்த முயற்சியில், சுயமான ஆர்வத்தில் ஆங்கிலம் கற்றுக் கொண்டு, அதன் இலக்கியங்களை வாசித்து, அத்தோடு நிறுத்தி விடாமல் அதை தமிழுக்கும் கொண்டு வந்து சேர்க்கிற அரிய பணியை செய்து வருகிறார் என்று அறியும் போது வியப்படையாமல் இருக்க முடியவில்லை..
தொகுப்பில் உள்ள கடைசி இலை என்கிற கதை அறிவொளி காலத்தில் இருந்தே தமிழ் மக்கள் மத்தியில் அறியப் பட்ட ஒன்று என்பதால் அது மட்டும் முன்னமே தெரியும். மற்ற கதைகள் யாவும் புதிதாக இருந்தன. எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி மட்டும் கேள்விப்பட்ட பெயர். மற்றவர்கள் புதியவர்கள். கன்னடம், இந்தி, குஜராத்தி, வங்கம், கொங்கணி, மணிப்புரி, உருது ஆகிய மொழிகளில் இருந்து தமிழுக்கு வந்திருக்கின்றன. தாமோதர் மௌசோ கதைகள் இரண்டு இடம் பெற்றுள்ளன. அவற்றை வாசிக்கும் போது அவருடைய படைப்புகள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுகிறது.
ஏழாவது மாதம், பர்கர், யாருடைய பிரேதம் போன்ற கதைகள் வாசிப்போரை தன்னுள் நிலைகொள்ளச் செய்பவை. கதாபாத்திரங்களின் பெயர்கள், கதை நிகழும் இடம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே இவை பிறமொழிக் கதைகள் என்று நாம் அறிய முடியும். அந்த அளவுக்கு, நேரடியாக தமிழில் எழுதப் பட்ட கதைகள் வாசிக்கின்ற உணர்வை ஏற்படுத்தும் தொகுப்பு..
கை நெசவுத் தொழிலாளர் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளராகவும் இருக்கும் தோழர் மாதா அவர்களை வாழ்த்த : 9442452505
பன்முக மேடை வெளியீடு. விலை ரூ.250
தேனி சுந்தர்
Comments
Post a Comment