கடமலைக்குண்டு கவிஞர்.அழகர்சாமி எழுதிய அசைவுகளின் அர்த்தங்கள் நூல் குறித்து..

கவிஞர் அழகர்சாமி, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் வசிக்கிறார் என்பதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது. வாட்ஸ்அப் மூலம் எப்படியோ அறிமுகம் ஆகிக் கொண்டோம். எனது பதிவுகளுக்கு, படைப்புகளுக்கு அவ்வப்போது வாழ்த்துகள் பகிர்வார். பின்னூட்டங்கள் அனுப்பி வைப்பார். அவ்வளவு தான். 

கடந்த அக். மாத தொடக்கத்திலேயே என்னிடம் சொல்லி வைத்திருந்தார். தன்னுடைய நூல் வெளியீட்டு விழாவிற்கு அவசியம் வர வேண்டும் என்று... தொடர்ந்து நினைவூட்டி கொண்டும் இருந்தார். அன்று விடுமுறை நாள் என்பதால் நானும் விழாவிற்கு சென்று வந்தேன்...



ஒரு மிகப் பெரிய குடும்ப விழா போல நடந்தது. நான் நினைத்து சென்றது போல அல்லாமல் குறித்த நேரத்தில் நிகழ்வு தொடங்கி விட்டது என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்..

இன்றைய நவீன உலகில் ஒரு புத்தகம் உருவாகி வெளிவருவதற்கு ஒன்றிரண்டு நாட்களே போதுமானது. நல்ல தொடர்புகள் இருந்தால் ஒரு நாளே கூட போதுமானது. ஆனால் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளிவருவதற்காக தோழர் அழகர்சாமி அவர்கள் கால் நூற்றாண்டு காலம் காத்திருந்தார் என்பதை அறியும் போது எனக்கு மனதில் கொஞ்சம் பாரம் ஏறியது போல இருந்தது. நீண்ட நெடிய காத்திருப்பும் அது நிறைவேறிய தருணமுமாக அந்த படைப்பாளியை அன்று நான் பார்த்தேன். அவருடைய முதல் கவிதை உருவான இடத்திலேயே அவரது கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டதை உணர்வுப் பூர்வமாக அவர் மேடையில் பகிர்ந்து கொண்டார்.

கவிஞர் மு.முருகேஷ் அவர்களது சிறப்பான உரை மதிய உணவு பசியிலும் யாரையும் அசையவிடாமல், அவரவர் இருக்கையில் பசை போட்டு ஒட்டியது போல உட்கார வைத்து விட்டது..

இந்நூலை கவிஞர் அழகர்சாமி, தன் கவிதைகளின் தோழனாக விளங்கிய, மறைந்த நண்பர் சரவணன் அவர்களுக்கு நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்..

நூல் இன்று தான் கிடைத்தது. பள்ளியில் இருந்து வந்த கையோடு, நூலை வைத்து விடாமல் வாசிப்பது தான் அவருக்கு செய்கிற மரியாதை என்று நினைத்து வாசித்தேன்..


மிக எளிய கவிதைகள்.. காதல், அரசியல், வறுமை, வேலையின்மை, விவசாயம், பயிர்க்கடன், மணிப்பூர் சம்பவம், உள்ளூர்த் திருவிழா, அலுவலக நெருக்கடி, பணி சார்ந்து தொலை தூரப் பயணம் என தன்னுடைய பார்வைகளை பரந்து விரிந்து பதிவு செய்திருக்கிறார்..


நான் ரசித்த பல கவிதைகளில் ஒரு சில மட்டும்...


"கண் ஆகாயத்திற்கு
கருப்பு வானவில்லாய்
புருவங்கள்..!"


"பேருந்துகளை
தாலாட்டும் தொட்டில்கள்
சாலைக் குழிகள்..!"


"இயல்பாக
உள்ளே வந்து
நலம் விசாரித்து செல்கிறது
மழை..
நாங்கள் அரசுப் பேருந்து
பயணிகள் என்பதால்..!"


"ஐ.நா. இருக்கிறது..
அமைதிப் படையும் இருக்கிறது..
இஸ்ரேல் இருக்கிறது..
ஹமாஸ்சும் இருக்கிறது..
போரும் இருக்கிறது..
நாமும் இருக்கிறோம்..!"


"அடிக்கடி மின்வெட்டு..
இரவெல்லாம் தூங்கவில்லை..
நானும் கொசுக்களும்!"


"மலர்க் கண்காட்சிக்கு
வந்தவர்கள் எல்லாம்
மலர்களைப் பார்த்து
ரசித்துக் கொண்டிருக்கையில்
அவை எல்லாம்
உன்னையே
பார்த்துக் கொண்டிருப்பதை பார்..!"


"ரொம்ப அழகாய் இருப்பதெல்லாம்
பெரிதல்ல..
ஆணவம் இல்லாமல் இருக்கிறாயே..
அது தான் பேரழகு..!"


"இறை பக்தி
இவர்களுக்கு
வெறும் சம்பிரதாயமே..
விளையாட்டுக்கு கூட
விளையாட்டை நினைக்காதவர்கள்
இன்று விளையாட்டு போட்டி
நடத்துகிறார்கள்..
இவர்கள் செய்யும் அட்டூழியங்களை
அமைதியாக பார்த்த படி
ஊர்வலமாக புறப்படுகிறார் விநாயகர்..!"


இவை தவிர இன்னும் சில கவிதைகளையும் ரசித்து படித்தேன்.. தொடர்ந்து கவிதைகள் படைக்க மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் தோழர்..
_
தேனி சுந்தர்

Comments

Post a Comment

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்