மக்கள்தான் கதாநாயகர்கள்- தேனி சுந்தர்
என் அப்பா (தேவராஜ் என்று பெயர்). அந்தக் காலகட்டங்களில், எனக்கும் பாதிக்கப்பட்ட அப்பாவி ஜனங்கள் பலருக்கும் கதாநாயகன்... சிலருக்கு வில்லனும்கூட..... பொதுவுடமை இயக்கமொன்றின் செயலாளராக இருந்து பல இயக்கங்களை நடத்தியவர்... கள்ளச்சாராயத்துக்கு எதிரான போராட்டம்.... வாரவட்டிக்கு எதிரான போராட்டம்... பெண்களுக்கான திறந்தவெளிக் கழிப்பிடப் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டம்... முல்லைப் பெரியாறு குறுக்குப்பாலம் கட்டச் சொல்லி சாலை மறியல் (போராட்ட வடிவங்கள், எதிர்விளைவுகள் பற்றி நமக்கென்ன தெரியும் அந்தச் சிறு வயதில்.... நான் அப்பாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு மறியல் நடக்குமிடத்தை அடைந்தேன்.. அங்கு பண்டபாத்திரங்களை வண்டியில் ஏற்றுவதுபோல தோழர்களை அள்ளி வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர் போலீசார்..!) மான்சாண்டோ கம்பெனி எதிர்ப்புப் போராட்டம்- இவையெல்லாம் சிறுவயதில் என்காதில் விழுந்தவை... அல்லது என் நினைவுக்கு எட்டியவை.. தன் தந்தைக்குச் சோறு கொண்டுபோகும் வழியில் ஒன்றிரண்டு பழங்களைப் பிடுங்கித் தின்றுவிட்டான் என்பதற்காக ஒரு சிறுவன் திராட்சைத் தோட்ட முதலாளி ஒருவரால் சித்ரவதை செய்தே கொ...