வேல நெறயாக் கெடக்கு........

வணக்கம் நண்பர்களே.. மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல்வாரத்தில் ஒருநாளாக இருக்கலாம்.. நான் நமது அறிவியல் இயக்க நண்பர் ஒருவரைப் பார்த்து அவரது நட்பை, தொடர்பை புதுப்பிக்கும் பொருட்டு அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.. அவர் அந்தப் பகுதி குழந்தைகளுக்கு இலவச மாலை நேர வகுப்புகளை எடுத்து வருவது அன்றுதான் எனக்குத் தெரியும்.. தேர்வு நேரம் என்பதால் குழந்தைகள் இன்று சீக்கிரமே வந்துவிட்டார்கள்.. கொஞ்சம் பேசிக்கிட்டு இருங்க என்று சொல்லிவிட்டு பால்வாங்கி வர என்னுடைய வண்டியெடுத்துக் கொண்டு கிளம்பினார்...

எனக்கு உரை நிகழ்த்தும் உற்சாகமெல்லாம் அன்று இல்லை.. (தெரியாதுங்கறது வேற விசயம்...!) வழக்கம் போல அமைப்புக் கூட்டங்களின் பாணியில் சுய அறிமுகம்... நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் இருந்தனர்.. என்னடா இது வந்த இடத்தில் வம்பாகப் போச்சுன்னு நினைக்கும் போது ஒரு யோசனை தோன்றியது.. உரையாடல்... ஆயிரமாயிரம் உரையாடலை இங்கிருந்து துவங்குவோம்.. பையில் இருந்த விஞ்ஞானச்சிறகை எடுத்தேன்.. அதில் பேரா.பி.ஆர். அவர்களின் ஆயிரமாயிரம் உரையாடல் குறித்த கட்டுரை ஒன்று இடம்பெற்றிருந்தது.. “சரிப்பா... கவனிங்க... உங்களுடைய கவனிக்கும் ஆற்றலுக்கு ஒரு டெஸ்ட் வைக்கப்போறேன்னு சொன்னேன்.. இப்ப நான் இந்த இதழில் இரண்டு பக்கங்களை வாசிப்பேன்... அதில் உங்களுக்கு புதிதாகத் தோன்றும் அல்லது புரியாத வார்த்தைகள் இருந்தால் அதை மட்டும் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்... அவ்வளவுதான்!”


வாசித்து முடித்துவிட்டுக் கேட்ட போது விளக்கம் கேட்டு வந்த வார்த்தைகள் இவைதான்.... சர்வதேசம், அந்நிய, ஊழல், தனியார்மயம், வால் ஸ்ட்ரீட், அமுல்படுத்து, பருவநிலை, அசுரத்தனமான, பஞ்சங்கள், ரியல் எஸ்டேட், மதவெறி, அறியாமை, உரையாடல்..... அடிக்கடி கேட்டதால் மட்டுமே அதரப் பழசான வார்த்தைகளாக நமக்கெல்லாம் இருக்கின்ற உள்ளெண்ணம் எந்த அளவிற்கு தவறான ஒன்று... நாம் இன்னும் கொள்கைச் சிறுபான்மையினர்தான்... பெரும்பான்மையினருக்கு இந்த வார்த்தைகள் எல்லாம் இன்னும் புதுசுதான்.. 

அப்புறம் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர்களது பாணியிலேயே ஒரு மார்க், இரண்டு மார்க், ஐந்து மார்க் அளவில் ஓரிரு வரிகளில் இருந்து ஐந்தாறு வரிகளுக்குள் விடையளித்தேன்... எதிர்பாராமல் நடந்த உரையாடல் சமூகக் கல்வி கொடுக்கும் நிகழ்வாகவே மாறிப்போனது.. இந்த வார்த்தைகளை அவர்கள் பின்பு எங்காவது கேட்க நேரும்போது நிச்சயம் அவர்களுக்கு இந்நிகழ்வு நினைவுக்கு வரும் என்பதில் ஐயமில்லை... ஆக நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கான விஞ்ஞானச்சிறகு இப்போது மட்டுமல்ல... எப்போதுமே நமக்கொரு ஆயுதம்... அறிவாயுதம்... சமூக மாற்றத்திற்கான கற்றல் கற்பித்தல் துணைக்கருவி என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது... 

புதிதாக மத்தியில் மிருகபலத்துடன் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க அரசு நமக்கு பல பணிகளை வழங்க இருக்கிறது என்பதை இந்த அறுபது நாட்களுக்குள்ளாகவே நம்மால் உணரமுடிகிறது... சமஸ்கிருத வாரம், சமூக வலைத்தளங்களில் இந்தி, தொடரும் விலை உயர்வுகள், பாதுகாப்புத்துறையில் 49% அந்நிய முதலீடு என ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அறிவுஜீவிகளும் முற்போக்குவாதிகளும் எச்சரித்தவண்ணமும் எதிர்பார்த்தவண்ணமும் இந்துமயம், இந்திமயம், தனியார்மயம், தாராளமயம் என நடைபோடும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு நமது பணிகளை நாம் திட்டமிட வேண்டிய திசைவழியைக் காட்டியிருக்கின்றது.. ஆக, காலத்தின் கட்டாயம் கருதி மாவட்ட அமைப்புகள் இனிவரும் நாட்களில் விஞ்ஞானச்சிறகிற்கான வாசகர் கூட்டங்களை தொடர்ந்து நடத்திட முயற்சிக்க வேண்டும்... நடத்திய நற்செய்தி எம் செவிகளை எட்ட வேண்டும்... வேலை நிறைய இருக்கிறது... விமர்சனக் கூட்டமெல்லாம் இப்ப எதுக்கு? அவ்வளவு அவசியம் என்ன இருக்கு? என எண்ணவேண்டாம்... அந்தக் கூட்டங்களின் மூலம் தான் உறுப்பினர்களின் புரிதலை மேம்படுத்த முடியும்.. முரண்பாடுகளை முன்வைத்து விவாதிப்பதன் மூலம் மேலும் நெருங்கி, இன்னும் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்... நமது கருத்தியல் பலம் பெருகும்.. பெருகிய பலம் பௌதீக சக்தியாக மாறும்.... நல்ல பலன் தரும்... 

தேனி சுந்தர்.... 
நன்றி: விஞ்ஞானச்சிறகு, ஆகஸ்ட், 2014

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!