மக்கள்தான் கதாநாயகர்கள்- தேனி சுந்தர்
என் அப்பா (தேவராஜ் என்று பெயர்). அந்தக் காலகட்டங்களில், எனக்கும் பாதிக்கப்பட்ட அப்பாவி ஜனங்கள் பலருக்கும் கதாநாயகன்... சிலருக்கு வில்லனும்கூட..... பொதுவுடமை இயக்கமொன்றின் செயலாளராக இருந்து பல இயக்கங்களை நடத்தியவர்... கள்ளச்சாராயத்துக்கு எதிரான போராட்டம்.... வாரவட்டிக்கு எதிரான போராட்டம்... பெண்களுக்கான திறந்தவெளிக் கழிப்பிடப் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டம்... முல்லைப் பெரியாறு குறுக்குப்பாலம் கட்டச் சொல்லி சாலை மறியல் (போராட்ட வடிவங்கள், எதிர்விளைவுகள் பற்றி நமக்கென்ன தெரியும் அந்தச் சிறு வயதில்.... நான் அப்பாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு மறியல் நடக்குமிடத்தை அடைந்தேன்.. அங்கு பண்டபாத்திரங்களை வண்டியில் ஏற்றுவதுபோல தோழர்களை அள்ளி வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர் போலீசார்..!) மான்சாண்டோ கம்பெனி எதிர்ப்புப் போராட்டம்- இவையெல்லாம் சிறுவயதில் என்காதில் விழுந்தவை... அல்லது என் நினைவுக்கு எட்டியவை..
தன் தந்தைக்குச் சோறு கொண்டுபோகும் வழியில் ஒன்றிரண்டு பழங்களைப் பிடுங்கித் தின்றுவிட்டான் என்பதற்காக ஒரு சிறுவன் திராட்சைத் தோட்ட முதலாளி ஒருவரால் சித்ரவதை செய்தே கொன்று புதைக்கப்பட்டான்... அந்தக் கொலை இயல்பான மரணமாக அறிவிக்கப்பட்டு, சிறுவனின் பெற்றோருக்கு சன்மானமாய் ரூ.12000 அளிக்கப்பட்டது. அந்த ஏழையின் சார்பாகவும் அந்த முதலாளிக்கு எதிராகவும் பேச யாரும் தயாராயில்லை... எங்க அப்பா நீதி கேட்டார்... நீண்ட போராட்டத்திற்கு பிறகே போஸ்ட்மார்ட்டம் வரை சென்றது.. ஆனால் பணபலம்தான் வென்றது... பெரு விவசாயி, சிறு விவசாயிகளுக்கிடையிலான பல்வேறு பிரச்சினைகளில் சிறுவிவசாயிக்கு ஆதரவான போராட்டங்கள்.... சில வெற்றிகள்.. பல தோல்விகள்.
பலமுறை கொலைமிரட்டல்கள்... சிலமுறை தாக்குதல்கள்.... வாரவட்டிக்கு எதிரான போராட்டம்தான் இதில் ஹைலைட்.... வட்டிக்கு வாங்கியவர் கொடுத்தவரின் மிரட்டல்களுக்குப் பயந்து வந்து நியாயம் கேட்கிறார்... அசலுக்கு மேலயும் கொடுத்தாச்சு... நான் என்ன பண்ணன்னு இயக்கத்திடம் முறையிட.... போராட்டம் எழுந்தது... இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பேரணியாக கிராமத்துக்குள் வருகிறார்கள். கொடுத்தவர், வாங்கியவர் இருவருமே நமக்குப் பக்கத்து தெருதான். அவர்களின் வீட்டருகே பேரணி வந்ததும்தான் தாமதம்... அதிரடித் தாக்குதலில் இறங்கியது வாரவட்டிக் கும்பல்... என் கண் முன்னால் என் அப்பா யாரோ ஒருவருக்காக வாரவட்டி வசூலிக்கும் பெண் ஒருவரால் விளக்குமாறைக் கொண்டு தாக்கப்படுவதைக் கண்டேன்..... (இதை நான் டைப் பண்ணும்போதும் கூட விம்மிவரும் அழுகையை என்னால் அடக்கக் கூடமுடியவில்லை).
அதனைத் தொடர்ந்து ஊரின் முக்கியப்புள்ளிகளின் அறிவிப்பின் பேரில் கிராமக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவு இதுதான். “தேவராஜ் சம்பந்தப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களை யாரும் வேலைக்குக் கூப்பிடக்கூடாது. கடையில் பொருள் விற்கக்கூடாது..” அந்த முடிவின்படி நடந்தது. இயக்கத்தில் எங்க அப்பாவைத் தவிர மற்ற எல்லோரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.. நாட்கள் நகர நகர அடக்குமுறைக்குச் சிலர் அடங்கிப் போயினர்... உற்றார் உறவினரும்கூட பணபலம், அதிகார பலம் உள்ளவர்களின் உத்தரவுக்கு அடிபணிந்தனர். அந்த நாட்களில் நான் பள்ளி மாணவன். மிகுந்த மன உளைச்சலுக்கும் கோபத்திற்கும் உள்ளானேன்... எவனாவது எதையாவது சொல்லி கிண்டல் செய்தால் சொருகிட வேண்டியதுதான் என நினைத்து எங்க வீட்டில் இருந்த பேனாக்கத்தி ஒன்றை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு நானும் நடந்து திரிந்த நாட்கள் நினைத்தால் கொடுமையானதுதான்.
ஒரு வழியாக 2000 ஜூலை 30 அன்று உத்தமபாளையத்தில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் சில முக்கியப் புள்ளிகள், அமைப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பட்டது.

“ஜனநாயக நாட்டில் கட்சிகள், இயக்கங்கள் இருப்பது போல இவர்களது அமைப்பும் கிராமத்தில் இருப்பது குறித்து எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கக்கூடாது. இது அடிப்படை உரிமையாகும். உணவு விடுதி, பலசரக்குக் கடை, பெட்டிக்கடை போன்ற வியாபார ஸ்தலங்களில் நுகர்வோர் யார் வந்து பொருள்கள் கேட்டாலும் விலை கொடுக்கும்போது அவருக்குப் பொருள் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க நேரிடும். அதேபோல தோட்ட வேலைகளுக்கும் யாரையும் அழைக்கலாம். குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக ஒதுக்கக்கூடாது” உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டு இருதரப்பினரும் கையெழுத்துப்போட்டனர். நீதிக்கான போராட்டம் இப்படி வென்றது.
இன்னொரு நிகழ்ச்சி: ஒருமுறை ராயப்பன்பட்டி அருகில் உள்ள கிராமத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்தது. எங்க அப்பாவுக்குத்தான் வில்லன்கள் அதிகம் ஆச்சே. இதாண்டா சமயமுன்னு அப்பாவை மாட்டிவிடப் பாத்தாங்க. இச்சம்பவம் வேறெங்கோ நடைபெற்றபோது எங்க அப்பாவும் மாமாவும் எங்க வீட்டில்தான் இருந்தனர். அப்பாவுக்கு எதிரானவர்கள் எல்லாம் சேர்ந்து கத்திக்குத்து சம்பவத்தில் அப்பாவையும் மாமாவையும் சேர்க்க வழக்கை ஜோடித்தனர். ஆனால் விசாரிக்க வந்தவர்களில் ஒருவர் கியூபிராஞ்ச் போலீஸ். அடிக்கடி பல போராட்டங்களின் காரணமாக எங்கப்பாவுக்கு நன்கு பரிச்சயமானவர்.. இதில் ஏதோ சிக்கல் இருக்கு. இவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. எப்.ஐ.ஆர். போடவேண்டாம் என விட்டுவிட்டார்.
நீங்க பலமுறை பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறீர்கள். ஆனால் மக்கள் உங்களோடு இல்லையே. ஆதிக்கவாதிகளின் பக்கமல்லவா நிற்கிறார்கள் என்றேன் அண்மையில் அப்பாவிடம்.
மக்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களை நாம்தான் அரசியல்படுத்த வேண்டும். போராட்டங்கள் வெற்றி பெற வேண்டுமெனில் மக்கள் சக்தி அதிகரிக்க வேண்டும். மக்கள் அணிதிரளவேண்டும். மக்கள் அணிதிரள அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இந்த நிலைமை மாற்றமுடியாத ஒன்றல்ல. ஆதிக்கவாதி எதிர்க்கமுடியாத நபரல்ல. அளவு மாறும்போது குணம் மாறும் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தும் முயற்சிதான் நமது போராட்டங்கள் .
”யாரடா? பண்ணை யாரடா? எங்கள் கூலியைக் கொஞ்சம் உயர்த்திக் கூறடா?” என்று பண்ணையார் வீட்டு முன்னால் முழக்கமிட முதலில் சிலராவது தயாராக வேண்டும். நாங்கள் தயாரானோம். இழப்பையும் எதிர்ப்பையும் சந்திக்கத் துணிய வேண்டும். நாங்கள் துணிந்தோம். இழக்கத் துணிந்தவனே எதையும் அடையமுடியும் என்றார்.
இப்ப சொல்லுங்க எங்கப்பா கதாநாயகன் தானே?
ஆனால், அவர் சொல்கிறார்.. “ மக்கள் திரைப்படங்களில் வருகின்ற கதாநாயகர்களாக நம்மைப் பார்ப்பதுதான் அடிப்படைப் பிரச்சனையே. அதனால்தான் பிரச்சினையைச் சொல்லிவிட்டு ரிசல்ட்டை மட்டும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.. ஆனால் நாம் நடத்தும் போராட்டங்களில் மக்கள்தான் கதாநாயகர்கள். அதை அவர்கள் உணரவேண்டும். நாம் உணர்த்த வேண்டும். அவர்களது மனவெளிப்பாட்டின் பங்களிப்பின்றி எதுவும் நடக்காது!”
புதிய ஆசிரியன், ஆகஸ்ட், 2014
தேனி சுந்தரின் தந்தை உண்மையான போராளி. இன்றைய தலைமுறைக்கு ஒரு நல்ல முன்மாதிரி.
ச.சீ.இராஜகோபாலன், சென்னை-93
புதிய ஆசிரியன், செப். 2014

Comments
Post a Comment