கைரதி 377 : நூல் குறித்து

சாதாரணமாக சொல்லிடுறோம்.. பொண்டுகப் பய..!

நாம் ஓரளவு கல்வி, விழிப்புணர்வு பெற்ற ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற மனநிலை பெரும்பாலும் இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை. இன்னும் பல கேவலங்கள் இந்த சமூகத்தில் களையப் பட வேண்டி இருக்கிறது என்பதை உணர்த்தும் கதைகள் கொண்ட தொகுப்பு : கைரதி 377. கோவை மு. ஆனந்தன் அவர்கள் எழுதி இருக்கிறார்..

அலி, ஹிஜரா, யுனக், மாற்றுப் பாலினம், மூன்றாம் பாலினம், சிறப்பு பாலினம், இடைப் பாலினம், அரவாணி, திருநங்கை, திருநம்பி, இருநர், திரினர், பாலிலர், ஒம்போது, பொட்டை, பேடி எனப் பல பெயரிட்டு அழைக்கிறது இந்த சமூகம். எங்கள் பகுதி மக்கள், கிராமங்களில் இது போல இருக்கும் நண்பர்களை “பொண்டுகப் பய..” என்று சொல்லி அழைப்பதுண்டு.. ஆக பெயர்களுக்கு பஞ்சமில்லை. அதே போல அவர்கள் அடையும் அவமானங்களும் கொஞ்ச நஞ்சமில்லை என்பதை மிகுந்த வலியுடன் பதிவு செய்யும் கதைகளின் தொகுப்பு : கைரதி..



சில ஆண்டுகளுக்கு முன்பு லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய ஒரு தொகுப்பு வெளிவந்தது. “மெல்ல விலகும் பனித்திரை” என்பது நூலின் பெயர். திருநங்கையர் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு அது. அதில் ஒரே ஒரு கதை மட்டும் ஒரு திருநங்கை எழுதியது. மற்றவை இதரர்களால் எழுதப் பட்டவை.. அதுவும் மிகப் பெரிய கால இடைவெளிகளில் எழுதப் பட்டவை.. 1960கள்.. 90 களில்.. அடுத்து 2000க்குப் பிறகானவை.. ஆனால் இந்தப் பிரிவில், இப்படியான தொகுப்பு வெளிவருவது முதல் முறை என குறிப்பிடப் பட்டுள்ளது.. அதில் தோழர் ஆயிசா நடராசன் அவர்கள் எழுதிய “மதி என்னும் மனிதனின் கதை” மிகவும் உருக்கமானது. நம் மனதை உலுக்கக் கூடியது. நீண்ட நாள் கடந்தும் கூட என் மனதில் அந்த நூல் வாசிப்பின் அலைகள் ஓயவே இல்லை..

மெல்ல விலகும் பனித் திரை – நூலின் முன்னுரை சொல்லும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன. தமிழ் மொழியின் அடையாளமாக விளங்கும் சங்க இலக்கிய நூல்களை ஆய்ந்தால் அதில் “பெரிதாக ஒன்றும் இல்லை” என்கிற அளவுக்கு தான் இந்த பாலின சிறுபான்மையினர் குறித்த பதிவுகள் உள்ளன. அதிலும் தொல்காப்பிய உரையாசிரியர் கூறும் விளக்கம் அவர்களை அஃறிணை போன்றே குறிப்பிட்டால் போதுமானது என்கிறதாம்.. அதுவும் நாலடியார் விளக்கம் மிகவும் அபத்தமானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் புரிதல் என்றால் இன்றளவும் கூட நாம் எந்த அளவுக்கு புரிதலில் மேம்பட்டு இருக்கிறோம் என்பதும் பெரிய கேள்விக்கு உரியதாக இருக்கிறது.. இது போன்ற நூல்கள் தான் இந்தப் புரிதல் கோளாறுகளை உடைக்கும் சுத்தியலாக விளங்க முடியும்..

தோழர் தமிழ்ச் செல்வன் ஒரு கட்டுரை எழுதி இருப்பார். அன்றாட வாழ்வில் அறிவியல் என்கிற தொகுப்பு என்று நினைக்கிறேன்.. திருநங்கை, திருநம்பியரின் உளவியல், உடலியல் சிக்கல்களை நாம் புரிந்து கொள்ள அது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..

இன்று தான், கைரதி 377 – கோவை மு.ஆனந்தன் அவர்கள் எழுதிய நூலை வாசித்தேன்.. முழுக்க முழுக்க மாற்றுப் பாலினத்தவர் குறித்து ஒருவரே எழுதிய கதைகளின் தொகுப்பாக, முதல் தொகுப்பாக வந்திருக்கும் நூல்..

பொதுவாக மனிதர்களுக்கு இந்த உலகில் வாழ்வில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். வாழ்வதே பிரச்சினை என்றால் என்ன செய்வது.. அப்படித் தான் இருக்கிறது கைரதிகளின் கதைகள்..

இன்னொரு நபருடன், இன்னொரு குடும்பத்துடன், இன்னொரு கருத்து உடையவருடன் நமக்கு முரண்பாடுகள் இருக்கும். நமக்கு நம்முடனே கூட சில நேரங்களில் முரண்பாடுகள் இருக்கும்.. அவை நாம் நினைத்தால் எளிதாக சரி செய்ய முடியும்.. நம் உடலுக்கும் நம் மனதுக்கும் இடையேயான போராட்டம் , குழப்பம், ஓயாத யுத்தம் எழுந்தால் என்ன தான் செய்ய முடியும்..?

சாதாரண தலை வலி என்றாலே பதறிப் போகிற குடும்பம்.. மூளைக்குள் நடக்கும் இந்த தீராத யுத்தத்தின் போது புரிந்து கொள்ள முயலாமல் புறக்கணிக்கிறது.. அவ்வளவு எளிதாக நாம் புரிந்து கொள்ள முடியாது என்றாலும் புரிந்து கொள்ள முயற்சியே செய்யவில்லை என்றால் அது குற்றம் இல்லையா..? சாம்பாரில் சுவை குறைந்திருந்தால் அதில் என்ன கூடி இருக்கிறது.. எது குறைந்திருக்கிறது என்பது போன்ற மிக எளிய சிக்கல்களுக்கு திண்டாடிப் போகிற அளவுக்கு தான் நம் சாமர்த்தியங்கள் எல்லாம்..!

ஆண் உடலில் இருக்கும் பெண் மனம் பாடில் தனக்கு வராத மாதவிடாய்க்கு உதட்டுச் சாயத்தை உள்ளாடையில் பூசி நாப்கின் வைத்து கொண்டு தனக்குத் தானே பேசி மகிழ்ந்து கொண்டிருக்கும் கைரதியை நாம் எங்கு புரிந்து கொள்ளப் போகிறோம்..?? (கூடுதலாய் ஒரு நாப்கின் கதை..)

பெண் உடலில் இருக்கும் ஆண் மனதுடன் போராடும் நஸ்ரியா, தனக்கு ஏன் இந்த மாதவிடாய் வந்து தொலைக்கிறது என அறுவறுத்து பார்க்கிற உணர்வை நாம் எப்படி புரிந்து கொள்ள போகிறோம்..?? (நஸ்ரியா என்கிற வேசக்காரி..)

இலா கதை மிகவும் சுவாரஸ்யமானது. கதையின் முன் பகுதியின் புதன் மனைவி கதையும் பின் பகுதியில் வருகிற கைரதன் வாழ்வின் முடிச்சுகளை அவிழ்க்கும் இடம் ஆச்சரியம் கலந்த உணர்வை ஏற்படுத்தக் கூடியது.. புருவங்கள் உயர்கின்றன..!

மிக அதிர்ச்சியான தகவல், குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கைரதிகள் கைது செய்யப் படுவது. கிட்டத்தட்ட 100 சாதிகளை சேர்ந்த மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் கொடுமைப் படுத்தப் பட்டனர் என்பதை அறிவேன்.. அப்படிப் பட்ட கொடுமைக்கு ஆளான ஒரு சாதியில் தான் நானும் பிறந்துள்ளேன்.. எனவே அந்த சட்டம் குறித்து அடிக்கடி பேசுவது உண்டு. ஆனால் அதே சட்டத்தின் கீழே கைரதிகளும் தண்டிக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகி இருக்கின்றனர் என்பதை இந்த நூலின் கதைகள் தான் சொல்லுகின்றன..

நூலின் பெயரிலேயே இருக்கும் 377 சட்டப் பிரிவின் கீழ் – இயற்கைக்கு மாறான உடலுறவு என்று இவர்களை பிடித்து சிறையில் அடைப்பதும் தண்டிப்பதும் கொடுமையிலும் கொடுமை.. குடும்பமும் சரி சமூகமும் சரி கைரதிகளை தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு ஆணுறைகளைப் போல தூக்கி எறிந்து விடுகின்றன என்பதை உணர்த்தும் கதைகளில் அழகன் என்கிற போர்க் குதிரை கதையில் வருகிற மாரிமுத்து, மாத்தாராணி கிளினிக் கதையில் வருகிற ஆய்வாளர் விமலா, இலா கதையில் கைரதனை ஏற்றுக் கொள்ளும் வேலாயுதம் போன்றவர்கள் தான் வாசிப்பின் நிறைவில் ஆறுதல் அளிப்பவர்களாக இருக்கின்றனர்..

அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள், உறவுகள், சட்டம், பொது சமூகம், நீதி மன்றம் என எங்கும் நிறைந்திருக்கும் நிராகரிப்பின் வலியை ஒவ்வொருவரும் உணர்ந்து கொஞ்சம் பொறுப்போடு, கொஞ்சம் அறிவோடு நடந்து கொள்ள நம்மை வழி நடத்துகின்றன கைரதி கதைகள்..

இதுபோன்ற மனச் சுமைகளை நம்மால் எத்தனை நிமிடங்கள் தாங்க முடியும் என்பது இந்நூல் வாசிப்பின் மூலம் நாம் நமக்கே விடுத்துக் கொள்ள வேண்டிய சவாலாக இருக்கிறது.. புரிந்து கொள்வோம்.. புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.. அவர்களது கௌரவமான வாழ்க்கைக்கு ஆன அனைத்தையும் செய்வோம்.. குரல் கொடுப்போம்.. ஆதரவாய் நிற்போம்..

தேனி சுந்தர்
நன்றி : புக்டே.இன்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்