கனிமங்கள் நிறைந்து ததும்பும் சுரங்கம்! : தேனி சீருடையான்
சொல் அடர்த்தி இருப்பதால் இதைக் கவிதை என்று சொல்லலாம்; சந்தத்துடன் கூடிய இசைக் கோலம் இல்லாததால் கவிதை இல்லை என்றும் சொல்லலாம்.
உரையாடலுடன் கூடிய கேள்வியும் பதிலுமாய் நூறு பக்கத்துக்கும் மேல் நீள்வதால் இதைப் புதினம் என்று சொல்லலாமா? அப்படியும் சொல்ல முடியும்.
ஒவ்வொரு குழந்தையும் நோக்கமின்றி உரையாடுகின்றன. அறிவியல், உளவியல், அரசியல் என உள்ளடக்கக் கூறுகள் கலந்தும் கலைந்தும் கிடப்பதால் இது புதினம் இல்லை என்று சிலர் வாதிடுவர்.
ஆக, இது “சீமையில இல்லாத புத்தகம்” என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது. உலகின் வேறு எந்த மொழியிலும் இம்மாதிரியான புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. இப்படி ஒரு புத்தகத்தை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்ததே ஒரு புரட்சிச் சிந்தனைதான்.
இந்த நூலின் முக்கியக் கதாபாத்திரங்கள் மூன்று; டார்வின், புகழ்மதி, கீர்த்தி. அப்பா துணைப் பாத்திரமாய் வந்து போவார்.
அண்ணல் காந்தியடிகள் தனது சுய சரிதையில் குழந்தைக் கல்விபற்றி இப்படிக் கூறுவார். “குழந்தைகளுக்கு முதலில் கோடு போடவும் புள்ளி வைக்கவும் கற்றுக் கொடுங்கள். அது ஓவியமாய் மாறி மனசில் படியும்; அதுதான் முதல் கல்வி.”
“அறுபது பக்க
புஸ்தகத்த
அஞ்சே நிமிசத்துல
படிக்க முடியுமா?
புகழ்மதி படிச்சுட்டாங்க;
ஒவ்வொரு பக்கமா
புரட்டுவாங்க;
படம் இருக்கும்;
அத மட்டும் பாப்பாங்க.”
இவை சாதாரண வரிகள்தான்; ஆனால் காந்தியடிகள் அறிவுறுத்திய குழந்தைக் கல்வி என்ற இலக்கணத்துக்கு இலக்கியம் சமைக்கின்றன.
குழந்தைகள் புறத்திருந்தும் கல்வியைச் சுயமாய்ச் சேகரிக்கின்றன. வண்டியை ஓட்டுகிறார் அப்பா. பையப் போகச் சொல்கிறாள் மகள். அந்த நேரம் புறவெளியில் கோக்கு, காகம், நீர்ப்படுகை எல்லாம் தென்படுகின்றன. அவள் சொல்கிறாள்
“கொஞ்சமாப் போப்பா;
காத்து என்னய அடிச்சுக்கிட்டே இருக்கு.
ஏ ஆத்து, ஆத்து ஆத்து.
ஏ தண்ணி தண்ணி தண்ணி.
ஏ கொக்கு கொக்கு கொக்கு;
ஏ மாடு மாடு மாடு;
ஏ காக்கா காக்கா காக்கா.”
எல்லா உயிர்ஜீவிகளும் உள்ளுக்குள் புகுந்து பாட்டுப் பாட வைக்கின்றன. இது குழந்தைப் பருவ வளர்ச்சியின் ஒரு குறியீடு என்று சொல்லலாம்.
குழந்தைகளுக்குப் படைப்பாற்றல் என்பது கல்விக் கூடத்திலும் கல்விக்கூட அனுபவங்களில் இருந்தும் கிடைக்கிறது. இன்றைய மூத்த மனிதர்களுக்கு வகுப்பறையில் ஓர் அனுபவம் கிடைத்திருக்கும். மயிலிறகைப் பாடப்புத்தகத்தில் செருகி வைத்தால் அது குட்டிபோடும். அது உண்மையில்லை என்பதை அந்தக் குழந்தைகள் சீக்கிரமே புரிந்துகொள்வார்கள். அந்தப் புரிதல் டார்வினுக்கும் வந்துவிட்டது.
“இன்னைக்கு டார்வின்
ரெண்டுமூணு
மயிலிறகு வச்சிருந்தான்.
இத புக்ல வச்சா
நல்லாப் படிப்பு
வருமாக்கும்ப்பா?”
குட்டி போடாது என்ற உண்மை புரிந்து அப்படியானால் வேறு என்ன செய்யும் என்ற கேள்வி முன்னுக்கு வர, படிப்பு வரும் என்ற முடிவுக்கு வருகிறான். ஏற்கனவே உள்ள அனுபவத்தில் இருந்து புதிய அனுபவம் கிடைக்கும் என்பதுதான் வரலாற்றியல் பொருள்முதல்வாதம். இந்த மாபெரும் உண்மையை மிக எளிதாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்.
சில வேளைகளில் குழந்தைகள் கேட்கும் கேள்விக்குப் பெரியவர்கள் பதில் சொல்லத் திணறுவார்கள்.
“புழு பூச்சிக
வாத்தோட உணவு;
வாத்து மனுசனுக்கு உணவு;
மனுசன் செத்துப் போனா
புழுப் பூச்சிக்கு உணவு.”
புழுப்பூச்சிகள் வாத்துக்கு உணவாகிப் போன பிறகு எப்படி வந்து மனுசனைத் தின்னும்? இந்தக் கேள்வி குதர்க்கமானது அல்ல; உயிரியல் சுழற்சியைக் கேட்டு வாங்கும் உத்தி. இந்தக் கேள்விக்கு அப்பாவால் பதில் சொல்ல முடியவில்லை. “செத்துப்போன பூச்சிகளோட சொந்தக்காரவங்க இருப்பாங்க” என்று பதில் சொல்கிறார் என்றாலும் அடுத்த கேள்வி இன்னும் கூர்மையாய் வந்து விழுமோ என எண்ணி “பசிக்கிது; பேசாம வாடா” என்று முடங்குவார்.
இதே போன்றதொரு திணறல் இன்னோர் அத்தியாயத்திலும் வருகிறது. மகள் தந்தையிடம் கதையொன்று கேட்பாள். “ஒரு ஊர்ல நெறையப் புறா இருந்துச்சாம்” என்று ஆரம்பிப்பார். “அந்தப் புறாவெல்லாம் இரை தின்னப்போகுமாம்” என்று தொடர்வார். “நம்ம வடக்கடப் பக்கத்துல இருக்குமே அந்தப் புறாவா?” என்பாள் புகழ்மதி. ”இல்ல பாப்பா; இது வேற ஊர்ப் புறா” என்பார். “அப்ப நீ எப்படிப்பா பாத்த?” என்று கேட்பாள் குழந்தை. வேறு ஊரில் இருக்கும் புறாவை இங்கிருந்து எப்படி பார்க்க முடியும் என்ற லாஜிக்கான கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் “பசிக்கிது; சாப்பிடப் போறேன்” என்று கதையை முடித்து விடுவார். (கதை என்றால் உலகில் உள்ள எல்லாப் புறாக்களும் வரும் என்று சொல்லியிருக்க முடியும்; ஆனால் இந்தப் படைப்பைப் பொருத்தமட்டும் அது மிகை யதார்த்தம் என்பதால் விட்டுவிட்டார் போலும்.)
கேள்விகள்தான் கல்வியின் அஸ்திவாரம். “மரத்தில் தொங்கும் ஆப்பிள் வானம் நோக்கி மேலேறாமல் தரைநோக்கி விழுகிறதே; எப்படி?” என்ற கேள்வி எழாமல் இருந்திருந்தால் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்திருக்க முடியுமா? கேள்வி கேட்கத் தெரிந்ததால்தான் விலங்கிடமிருந்து விலகி மனிதனாய் உயர்வடைந்திருக்கிறோம். கேட்கத் தெரியாத விலங்குகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. இந்தக் கருத்தியல்தான் இந்தப்படைப்பின் மையம்.
ஒருசொல் பல பொருள்; பலசொல் ஒரு பொருள் என்று வகுப்பறையில் இலக்கணம் படித்திருக்கிறோம். அது மழலையர் வாழ்க்கைமூலம் எப்படி உருவாகிறது என்பதைக் காட்டுகிறார் ஆசிரியர். தான் மேஜிக் செய்யப்போவதாகச் சொல்லி அப்பாவின் கண்ணை மூடச் சொல்கிறான். அவர் ஏதாவது ஒருவிதத்தில் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். மகள் சொல்கிறாள்.
“கண்ண இறுக்கமா மூடுப்பா!
ரெண்டாவது தடவை
கண்ணை நல்லா மூடுப்பா!
மூணாவது முறை
கண்ணக் கெட்டியா மூடுப்பா!
ஒரு பொருள் தரும் பல சொற்கள்.”
”இறுக்கமா மூடு. நல்லா மூடு. கெட்டியா மூடு. மூன்றும் ஒரே பொருள் உடையவைதான். குழந்தைகள் தங்களுக்குத் தெரியாமலே இலக்கணக் கூறுகளை வெளிப் படுத்துகிறார்கள் என்றால் அது ஒரு முக்கியமான கல்வியியல் கண்டுபிடிப்பு.
கேள்வி கேட்பதுமட்டுமல்ல; பதிலுரைக்கத் தெரிவதும் மழலைத் தேடலின் முக்கியமான அம்சம்.
“எங்க பாப்பா
இன்னக்கி
நெலாவக் காணம்?
தேடிப் பாத்துட்டுப்
புகழ்மதி சொல்றாங்க;
அந்தா ஒளிஞ்சிருக்குப்பா நெலா.
அட ஆமா;
எதுக்கு பாப்பா
இப்படி ஒளிஞ்சிருக்கு?
நேத்து
நானும் கீர்த்தியும்
நெலாவப் பாத்துப் பாத்து
சிரிச்சம்ல
அதுக்குத்தான்
வெக்கப்பட்டு ஒளிஞ்சிருக்கு.”
நேர்த்தியான நேர்மையான யதார்த்தம் சிதையாத இப்படியான பதில்கள் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும். கேள்வியும் பதிலும் சேர்ந்தே மழலையரின் அறிவாற்றலை வளர்க்கின்றன.
”நாம் கண்ணை மூடிக்கொண்டால் நமக்கு முன் இருப்பவை எல்லாம் நிஜமற்றவை; அவை அங்கு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண் திறந்து பார்க்கும்போதுதான் தெரிகிறது; ஆகவே, உன் இருப்பு தவிர மற்றெல்லாம் மாயமானவை” என்கிறது கருத்து முதல்வாதம்.
“நீ விழித்திருந்தாலும் உறங்கிக் கொண்டிருந்தாலும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளும் அதனதன் இடத்தில் நின்று இயங்கிக் கொண்டிருக்கிறது” என்பது பொருள்முதல்வாதம். இந்த மகத்தான தத்துவத்தை ஓர் எளிமயான உதாரணத்தின் மூலம் கேள்விக்கான பதிலுரையாய் விளக்குகிறார் ஆசிரியர். மழை வரும்போது நட்சத்திரம் வருவதில்லையே ஏன் என்கிறான் டார்வின். அப்பா தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து மேனியை மறைத்துக்கொண்டு “இப்ப நான் தெரியிறனா?” என்பார். ”இல்ல என்பான் மகன்.
“அப்ப இங்க
இருக்கனா இல்லியா?
இருக்க;
அதுதான் விஷயம்.
வானத்தை மறைக்கும் துண்டு மழைமேகம் எனப் புரிந்துகொள்கிறான். எது மறைத்தாலும் நட்சத்திரம் இல்லையென்றாகி விடாது. இதுதான் பொருள்முதல்வாதம்.
நேர்மையான கேள்வியும் ஆழமான பதிலும் குழந்தைகளின் தேடலை மேம்படுத்தும்.
ஒவ்வோர் அத்தியாயமும் அற்புதமான கனிமங்களை உள்ளடக்கி வைத்திருக்கிற தனித்தனிச் சுரங்கங்கள். வாசித்து அனுபவிக்க வேண்டும்; உள்வாங்கிக் கனிமங்களைச் சேகரித்துக் குழந்தைகளுக்கு வழங்கினால் அதை வாங்கி மேலும் பட்டைதீட்டி உலகை ஒளிரச் செய்வார்கள்.
நமது குழந்தைகள் புழங்கும் மொழியைக் கொண்டே கல்விமுறை நியாயங்களையும் மகத்தான தத்துவங்களையும் விளக்குகிற “சீமையில் இல்லாத புத்தக”த்தைத் தமிழ்க் கல்விப் புலத்துக்கு வழங்கிய தேனிசுந்தர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நூலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தேனிசீருடையான்
நன்றி : https://bookday.in/
👌👌
ReplyDeleteமிக்க நன்றி
Delete