சீமையில் இல்லாத புத்தகம் : இரா.செந்தில்குமார்

தேனி சுந்தர் அவர்களின் முந்தைய படைப்பான டுஜக் டுஜக் நூலின் பரந்துபட்ட வரவேற்பை தொடர்ந்து அதே வரிசையில் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது, சீமையில் இல்லாத புத்தகம். வாசிக்கும் ஒவ்வொருவரையும் தன் பக்கமாக வசீகரிக்கும் அருமையான நூல்.

குழந்தைகளின் பேச்சு மொழியை பதிவு செய்ய வேண்டும் என்ற சிந்தனைக்காகவே அவரை பாராட்டலாம். எல்லார் வீட்டிலும் குழந்தைகள் பேசுகிறார்கள் ஆனால் நாம் அவர்களின் பேச்சை கவனிக்கிறோமா என்பது கேள்விக்குறியே!




ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்தவுடன் உடனே கடக்க முடியவில்லை.. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும்…

ஒவ்வொரு பக்கமும் குழந்தைகளின் உலகத்தால் விரிகிறது…. அதில் அமைதியாக வேடிக்கை பார்க்கும் போதே பரவசமாகிறது….உடன் பயணித்தால் நம்மை வேறு மனிதர்களாக குழந்தைகள் மாற்றி விடுவார்கள் போலும்.

சீக்கிரமாக தீர கூடாது என மெதுவாக மெதுவாகவே வாசித்தேன்…. வாசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.. உடனே வாசித்து கடக்கவும் முடியவில்லை… ஒரு சுகமான அனுபவம்.!

கேள்விகளால் துளைத்தெடுக்கும் டார்வின்களுக்கு நாம் அளிக்கும் பதிலில் தான் அடங்கியுள்ளது குழந்தைகளின் வளர்ச்சி..

ஓரிடத்தில் டாடா ஸ்கை பற்றி டார்வின் ஒரு கேள்வி கேட்பார்…அந்த கேள்வி நம்மை திக்குமுக்காட வைக்கிறது.

நாம் கற்பித்து வைத்துள்ள பாலியல் பேதங்களின் மீது குழந்தைகள் கல் எறிவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் வியர்க்கும் போது அப்பா சட்டை கழட்டுவதும் அம்மாவால் சட்டையை கழட்ட முடியாததை குழந்தை கேள்வி கேட்பதும்…!

டார்வின் வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது. எதிர்காலத்தில் சிறந்த ஓவியராக மிளிரும் வாய்ப்பும் உண்டு அவருக்கு.
புகழ்மதியும் கீர்த்தியும் பேசும் மழலை பேச்சுக்கள் நம்மையும் குழந்தையாக மாற்றிவிடுகிறது…

ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும் போது சிரிக்காமலும் சிந்திக்காமலும் கடக்கவே முடியாது. ஓரிடத்தில் டார்வின் தனது நாய் குட்டிகாக ஏங்கும் காட்சிகள் மனதை கனமாக்குகிறது.

டார்வின் பற்றிய புத்தகத்தின் படத்தை பார்த்து டார்வினுக்கு ஏன் தமிழ் பெயர் வைத்துள்ளார்கள் என்ற கேள்வி இரசனையானது.

மழலைகள் உலகம் பள்ளிகூடத்தால் எப்படி நசுக்கப்படுகிறது என்று தூங்கிய குழந்தை புகழ்மதி எழுந்து உட்கார்ந்து எழுதுவதன் மூலமாக அறியலாம்.

குழந்தைகளின் உரையாடலோடு கடைசியாக விளக்கம் தரும்படி ஒரு வரி இருக்கும்.. முந்தைய வரிகளை வாசிக்கும் போதே நமக்கு அந்த புரிதல் வந்து விடுவதால், அந்த கடைசி வரிகள் தேவையில்லை என்று நினைக்கிறேன்..

இறுதியாக டார்வின், புகழ்மதியிடம் “இனி நாம பேசவே கூடாது.. நம்ம பேசுறது எல்லாம் எழுதி புத்தகமா போடுறாய்ங்க..!” என்பார் …. அதையும் பதிவு செய்து மேலும் புத்தகத்திற்கு அழகு சேர்த்துள்ளார் தோழர் சுந்தர்.

–இரா.செந்தில் குமார்
தொட்டியம்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்