நூலறிமுகம்: எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க.......?

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் மக்களின் பாடுபொருளாய் இருப்பவை குழந்தைகள், எடுத்த மதிப்பெண், அடுத்த பள்ளி, அது தொடர்பான விமர்சனங்கள், “என்னங்க, உங்க பையன் மார்க் எப்படி? பரவாயில்லையா? அய்யய்யோ, ஆயிரத்த்துக்கும் கீழே போனாலே கொஞ்சம் கஷ்டந்தான்..” என்பார்கள். அதிலும் தேர்வில் பெயிலானவர்கள் கதி, சொல்லவேண்டியதே இல்லை.. சொந்த பந்தங்கள் விசாரிப்பிலேயே வெட்கித் தலைகுனிந்து வெளியில் வரவே சங்கடப்பட வைத்து விடுவார்கள்..

மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஆசிரியர்களும், ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதில் அதிகாரிகளும், பாடத்திட்டம், கல்விக் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டுமென்பதில் அரசாங்கமும்.. ஆளுக்கொரு முன்முடிவுகளோடு செயல்பட்டு வருகின்றனர்..

இந்நிலையில் “ஆர்டர்..! ஆர்டர்..! ஆர்டர்...!” என்று ஆர்டர் போட்டு “ஆளாளுக்கு பேசுவதைக் குறைத்து நாங்கள் சொல்லுவதையும் கொஞ்சம் கேளுங்கள்” என்று மாணவர்கள் தலையெடுத்தால் என்ன நடக்கும்? எப்படி இருக்கும்? யோசிக்கவே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.. இல்லையா?

இத்தாலி நாட்டில் உள்ள பார்பியானா பள்ளியின் எட்டு மாணவர்கள் சேர்ந்து தங்களைப் பெயிலாக்கிய பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம் தான் “எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க..?” என்ற நூலாக வெளிவந்துள்ளது.. உலகம் முழுவதும் உள்ள ஏழைப் பள்ளிக்குழந்தைகளின் ஏக்க பெருமூச்சாகவும் ஏழைகளுக்கு எதிராக உள்ள கல்வி அமைப்பு குறித்த கோப விமர்சனமாகவும் இந்நூல் திகழ்கிறது...

“மிஸ்! யாருக்காக இப்படிச் செய்கிறீர்கள்? நீங்கள் ஆய்வாளருக்காகவும், ஆய்வாளர் மேலதிகரிக்காகவும், மேலதிகாரி கல்வி அமைச்சருக்காகவும் செய்கிறார்கள்.. இதுதான் உங்கள் பள்ளியின் மிக மோசமான தன்மை. மாணவர்கள் ஒவ்வொரு நாளும் மதிப்பெண்களுக்காக.. தேர்ச்சி அறிக்கைகளுக்காக... சான்றிதழ்களுக்காக மட்டுமே வேகவேகமாகப் படிக்கிறார்கள்.. அந்த வேகத்தில் கற்றலின் நுணுக்கமான விஷயங்களைத் தவறவிட்டுச் செல்கிறார்கள்..” என்னும் அந்த எட்டு மாணவர்களின் கருத்து ஆசிரியப் பெருமக்களின் காதுகளில் மட்டுமே நுழைந்து செல்லக்கூடியவை அல்ல..! நெஞ்சில் நுழைந்து நெருப்பாய் இருக்கக்கூடியவை..

அனைத்து ஆசிரியர்களும் கல்விக்கூடச் சிந்தனையாளர்களும் படித்து.. மீண்டும் மீண்டும் படித்து.... பாதுகாக்க வேண்டிய கடிதம்.. புத்தகம்.. இல்லையில்லை கையேடு இது..!

சுந்தர்
வீதி இதழ்- மே.2008

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!