ABL : சுகமா? சோதனையா?

காலங்காலமாக இருந்து வந்த கற்பித்தல் முறையினில் ஓர் அற்புத மாற்றம்.. தேர்வுகளில், பணியிடைப் பயிற்சிகளில் எந்த கற்பித்தல், கற்றல் முறை சிறந்தது என்று ஆசிரியர்கள் வாதிட்டார்களோ, தேர்ச்சி பெற்றார்களோ அதுவே இன்றைய செயல்வழிக்கற்றல் முறையாக நடைமுறைக்கு வந்துள்ளது..

கவனி.. கவனி.. என்று மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பாடத்தை முடித்த காலம் மலையேறிவிட்டது. சொல்லிக் கொடுங்க சார்.. இந்த அட்டையைப் படிக்க வேண்டுமா எழுத வேண்டுமா? என்று மாணவர்கள் ஆசிரியர்களை நச்சரிக்கும் காலமிது..

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இருந்த எல்லைக்கோடு நீக்கப்பட்டு, இடைவெளி குறைக்கப்பட்டு ஒன்றாக அமர்ந்து கற்பிக்கும், கற்கும் முறை.. ஏழை எளிய மாணவர்களின் வியர்வை வாசம், அழுக்குச் சட்டைகளின் நெடி, கிடங்கு விழுந்த கண்கள், அந்தக் கண்களில் தெரிகின்ற ஏக்கம், கனவு ஆகியவற்றை அவர்களோடு அருகிலமர்ந்து உணர்த்திடக் கிடைத்த பெரும்பாக்கியம் இந்த ABL...

எதுவுமே இல்லாத போது ஏதாவது ஒன்று கிடைத்தால் ஆறுதல் தான். அதுபோல ஒன்றுமே தெரியாமல் கடந்து செல்லும் கடைநிலை மாணவர்களை ஏதாவது படிக்க வைப்பதற்கான வாய்ப்பு! மீத்திறமிக்க மாணவர்களுக்கு புதிய செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டிய வேலைச்சுமை குறைப்பு! டெங்கு, சிக்குன்குன்யா போன்று மாணவர்களை முடமாக்கிய தேர்வு நோய் ஓரளவு தவிர்ப்பு! சிறுவயது முதலே சிந்தனைக்கு விருந்தாய் அறிவியல் செயல்பாடுகளின் அணிவகுப்பு! இத்தனையும் மொத்தம் சேர்த்துக் கூட்டினால் அதன் பெயர் ABL.... செயல்வழிக்கற்றல்..!

நூற்றாண்டு காலமாக செக்குமாடுகள் போலே சுற்றிவந்த பழைய கல்வி முறையை விட்டு விலகுவதிலே ஏனோ தெரியவில்லை, ஆசிரியர்களுக்குத் தயக்கம். போதைப்பொருட்களுக்கு அடிமையானவன் திடீரென்று நிறுத்தமுடியாமல் திணறுவதைப் போல பலருக்கு கைகால்கள் நடுங்குகின்றன..

ஏற்கனவே உருவாகி எஃகு போல் இறுகிக் கிடக்கும் ஆசிரியர்களின் மனநிலையை மாற்றுவதற்கு முயலாமல் கூட்டணி வேறுபாடின்றி மொத்தமாய் முழங்குகின்றனர். பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றனர். வருத்தத்திற்குரிய செயலாகவே படுகிறது..

ஆசிரிய நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள்.. பழைய முறை தான் சிறந்தது என்றால், இதுவும் பழையமுறைதான்.. ஒன்றும் வேறுபாடில்லை.. புத்தகம் தனித்தாள்களாக, அட்டைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குழுப்பிரித்தல், அடைவுத்திறன் பட்டியல், குறியீடுகள், படிநிலைகள் என எல்லாவற்றிலுமே ஆசிரியர்களின் விருப்பங்கள், திருத்தங்கள் நிறைவேற்றப்படுகின்றன.. தேவையான நிதியும் ஒதுக்கப்படுகின்றது. கட்டிட வசதிகளும் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளது..

கல்வி என்பது மாணவர்களிடமிருந்து துவங்க வேண்டும். மாறாக, ஆசிரியர்களிடமிருந்து அல்ல! செயல்வழிக்கற்றலை மாணவர் மகிழ்வோடு வரவேற்கின்றனர். அதே நேரத்தில் செயல்வழிக்கற்றல் நடைமுறையை கல்வியில் ஏற்பட்ட மாபெரும் புரட்சியென்றோ, ABL மாசு மருவற்ற மகத்தான கல்வியென்றோ அதன் உள்ளடக்கத்தை வைத்துக் கூற முடியாது. இருந்த போதிலும் முந்தைய நிலையோடு ஒப்பிடும்போது மகத்தானதே..

மாணவர் சேர்க்கை குறைகிறது என்கிறார்கள்.. மக்கள் ஆங்கில மோகத்தில் தான் மெட்ரிக் பள்ளிகளுக்குச் செல்கிறார்களே தவிர அட்டை வந்ததற்காக அல்ல.. அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் மிகச்சிறப்பாக ஆங்கிலம் பேசுகின்றனர்.. அதே செயல் (அட்டை) வழிக்கற்றல் நடைமுறைக்கு வந்தபிறகு.. ஆக அட்டைக்கும் அட்மிஷனுக்கும் சம்பந்தமில்லை என்பதை உணர வேண்டும்..

அடுத்துள்ள அடிப்படைப் பிரச்சனை ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம், அரசாங்கமும் மௌனம் காக்கும் விஷயம் இதுதான். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோரின் பெரும்பான்மையான பேச்சும் இதுதான். ஆக செயல்வழிக் கற்றலை நடைமுறைப்படுத்துவதற்கு இடைஞ்சலாக இருக்கும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தை மாற்றுவதற்கான போராட்டத்தை முழுவீச்சாக முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டுமே தவிர ABL ஐ நீக்கச் சொல்லியிருக்கக் கூடாது..

கடந்த ஓராண்டாக ABLஐ ஆரம்பிக்கவே இல்லை என்று கூறும் ஆசிரியர்களை என்ன செய்வது? மாணவர்களின் கதி என்ன? இது தகுமா?

நண்பர்களே...... எச்செயலாயினும் மன ஈடுபாட்டுடன் செய்தால் தான் விளைவு நன்றாயிருக்கும்.. குறைகளைக் களைந்து மாணவர்மையக் கற்பித்தலை, கற்றலை தொடர்ந்து செயல்படுத்துவோம்!

புதிய அட்டைகளுடன் குறைகள் களையப்பட்டு ABL தொடர்ந்து நடைமுறைப் படுத்தப்படும் என்று மாநில திட்ட இயக்குநர் (ABL) தெரிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி....

புத்தகச் சுமையைக் குறைப்பதற்கென்றே யஷ்பால் குழு அமைக்கப்பட்டது. இன்று சாத்தியமாகியுள்ளது. எப்படித்தான் சிறகுகள் முளைக்கின்றனவோ, குழந்தைகளுக்கு பள்ளி முடிந்தவுடன்! என்னும் வரிகளை அசைபோட்டுக் கொண்டே அட்டையை எடுப்போமாக!

தே.சுந்தர், செயலாளர், TNSF, கம்பம்
விஞ்ஞானச்சிறகு
ஆகஸ்ட், 2008 

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!