உனக்குரிய இடம் எங்கே?

காமய கவுண்டன் பட்டியில் நாங்க பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். நான் கொஞ்சம் நல்லா படிப்பேன்.. நான் என்ன சொன்னாலும் பாராட்டுதான்.. அந்த அளவிற்கு ஆசிரியர்களுக்கு என்மேல் நம்பிக்கை.. ஆனால் சில நண்பர்கள் எந்த விதத்திலும் தன்னை ஆசிரியர் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவேயில்லை..

சில நேரங்களில் சரியான விடையையே சொல்லிவிட்டாலும் எங்க வாத்தியார் என்ன செய்யமாட்டார்.. பாராட்டவே மாட்டார். திட்டு மட்டுமே அவர்களுக்கு பரிசு. அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவன் தான் சரவணன்.. அவன் கெட்டிக்காரனுமில்லை.. அதே நேரத்தில் அவனால் வகுப்பறைக்கு ஒரு பிரச்சனையுமில்லை.. யாரோடும் அவ்வளவாக பேசுவதுகூட இல்லை.

அவன் எந்தவிதத்திலும் எங்களைப் பாதித்ததே இல்லை. ஒருநாள் தமிழாசிரியர் சங்கரலிங்கம் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எங்க பக்கத்தில் உட்கார்ந்து ஏதோ ஒரு பாட்டை தன் வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டிருந்தான்.. யாருக்கும் கேட்டு தன்னை கிண்டல் செய்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாய் இருந்தான்..

சில சேட்டைக்கார நண்பர்கள், ஐயா, சரவணன் பாட்டுப்பாட போறானாம் என கொளுத்திவிட, சரி பாடு என அவரும் அனுமதி கொடுக்க, சிக்கினாண்டா மாப்ள என நாங்க விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்க...

தங்கக் கலப்பை கொண்டு தரிசுழுகப் போனாராம்... சொக்கநாத சாமி.. என் சொக்க நாத சாமி.. கிராமத்துப் பாணியில், அதற்கேற்ற குரலில் ஒரு பாடலை எடுத்து விட்டான். ஒரே கைதட்டு.. நாங்க அதுவரை அவன் பாட பாத்ததுமில்லை, கேட்டதுமில்லை.. ஒரே ஆச்சரியம்.. பாராட்டு...

தேர்வு வந்தது. எழுதினோம்.. பிரிந்தோம்.. பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஏறக்குறைய எங்கள் நினைவுகளில் இருந்து சரவணன் என்ற கேரக்டர் மறைந்தே விட்டது. பத்து, இருபது நண்பர்கள் மட்டும் தொடர்பில் இருந்தோம்.. ஆளுக்கொரு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் ஒருநாள், பள்ளி முடித்துவிட்டு வழக்கம்போல இயக்கவேலை காரணமாக கம்பம் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.. பேருந்துக்காக யாரோ ஒரு நண்பர் தனியாக நின்று கொண்டிருப்பதைக் கண்டு அருகில் சென்று ஏறிக்கிங்க என்றேன்.. யாருன்னு பார்த்தா.. நம்ம சரவணன்.. வண்டியிலே போகும் போதே என்னடா எப்படி இருக்கன்னு கேட்டேன். என்ன சார் என்றான்.. பிறகு என்னை நினைவுபடுத்தினேன்..

அடுத்து விசாரிப்பு.. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. எம்.எ., பி.எட்., எம்.பில்., முடித்துவிட்டு இப்போ கிராமிய தாலாட்டுப் பாடல்கள் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு-பி.எச்.டி.-செய்து கொண்டிருக்கிறேன் என்றான்.. எங்க ஊருக்கும் வந்து நிறைய பாடல்களைச் சேகரித்ததாகவும் சொன்னான்.. ஒருபக்கம் அளவில்லா மகிழ்ச்சி.. வியப்பு.. அதே நேரத்தில் அவனது குடும்பம் மிக வறுமையில் வாடுவதாய்ச் சொன்னபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. 

இருவரும் டீ சாப்பிட்டு விட்டு, கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.. பல்கலைக் கழகத்தில் நமக்குத் தெரிந்த அறிவியல் இயக்க பேராசிரியர்கள் சிலரது அலைபேசி எண்களைக் கொடுத்து, வேலைவாய்ப்புக்கு நிச்சயம் உதவுவார்கள் என்ற உறுதிமொழியும் கொடுத்தேன். அறிவியல் இயக்க நிகழ்ச்சிகளில் வாய்ப்புக் கொடுத்தால் பாடுகிறேன் என்றான் சரவணன்.. மனம் நிறைந்த மகிழ்வோடு வீடு திரும்பினேன்.. மாடசாமி சார் சொன்னது போல இவனுக்கு எங்க வகுப்பறையில் ஒரு இஞ்ச் இடம் கூட யாரும் தரவில்லையே? என்கிற கேள்வி சரவணனுக்குப் பதிலாக என் வண்டியில் ஏறிக்கொண்டு என்கூடவே வந்தது.. இன்னும் இறங்கிய பாடில்லை.. 

(கட்டுரையாளர் அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர். அவரது தொடர்பு எண்: 9488011128)

ஆசிரியருக்குக் குறிப்பு: சரவணன் போட்டோவை நீங்கள் கேட்டதால் சில பல முயற்சிகள் செய்து ஒருவழியாக சரவணன் வீட்டிற்கு நான் சென்றபோது மணி 10.40க்கு மேல் இருக்கும்.. கரண்ட் இல்லை.. மண்ணெண்ணெய் விளக்கில் எனக்காகச் சில சொலவடைகளை எழுதிக் கொண்டிருந்தான்...

அப்போது முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டின் போது அவன் செய்த கிராமியத் தாலாட்டுப் பாடல்களில் சமூகப் பார்வை என்ற ஆய்வையும் எம்.பில்.க்காக செய்த தலித்திய நாட்டுப்புறக் கதைகள் என்ற ஆய்வையும் காண்பித்தான்.. அதைப் புத்தகமாக வெளிக்கொணர ஏதேனும் வழியுள்ளதா எனக் கேட்டான்..அதற்கும் சில நண்பர்களைத் தொடர்பு கொள்ள வழியுண்டு என நம்பிக்கை அளித்துத் திரும்பினேன்... எதேச்சையான சந்திப்பு பல நல்ல முயற்சிகளுக்கும் முடிவுகளுக்கும் வித்திட்டது மகிழ்ச்சியே...

(புதிய ஆசிரியன், மார்ச்,2012)

எதிர்வினை: 
உனக்குரிய இடம் எங்கே? என்ற தேனி சுந்தரின் கட்டுரை சமூகத்தில் தமக்குரிய இடம் கிடைக்காதவர்களைப் பற்றிய நல்ல பதிவு.
–கே.இன்பராஜ், மதுரை, ஏப்ரல் இதழ்,2012

சரம் சரமாய் சரவணன்களையும் சுந்தர்களையும் (மார்ச் இதழ்- உனக்குரிய இடம் எங்கே?) தேடிக் கண்டுபிடித்து வெளிக்கொணரும் புதிய ஆசிரியனுக்கு வாழ்த்துகள்!
-ஏ.கே.பத்மநாபன், அகில இந்தியத்தலைவர், சிஐடியு, டில்லி, மே இதழ்,2012

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்