அன்றொரு நாள்

நானும் எனது நான்காம் வகுப்பு மாணவர்களும் சமூக அறிவியலில் தேசியச் சின்னங்கள் குறித்துக் கலந்துரையாடினோம்..

நமது கொடி மூவர்ணக் கொடி என்று அழைக்கப்படுகிறது. அது பற்றி பாடப்புத்தகத்தில் உள்ள விளக்கத்தைக் கூறிவிட்டு வேறொரு கருத்தையும் முன்வைத்தேன். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாதி, மதம் பிடித்திருக்கிறது இல்லையா என்றேன்..

யானைக்கெல்லாம் மதம் பிடிக்கிறது மாதிரி இல்லையா சார் என்றாள் கிருத்திகா.. (எங்கள் வகுப்பின் அதிரடி பேட்ஸ் உமன் இவள். விட்டு விளாசுவதில் கில்லாடி).

மதம்னா என்னாங்க சார் என்று குறுக்கே புகுந்தாள் மதுமிதா.

இந்தியாவில் உள்ள மதங்களைப் பற்றி எடுத்துக்கூறி. இந்தப் பிரிவினைகள் எல்லாம் இருக்கின்றன என்பதைப் பறைசாற்றும் விதமாகத்தான் இந்துக்களின் காவியும், கிறித்தவர்களின் வெண்மையும், இஸ்லாமியர்களின் பச்சையும் புத்தமதத்தின் அசோகச் சக்கரமும் தேசியக்கொடியில் இடம்பெற்றுள்ளதாகவும் எடுத்துக் கொள்ளலாம்... என விளக்கமளித்தேன்..

தேசியக் கொடியை ஏற்றும் போது பூக்களை வைப்பது ஏன் என்று தெரியுமா? வெள்ளையர்களுக்கெதிரான விடுதலைப் போராட்டத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்டும் தூக்கிலிடப்பட்டும் பலர் உயிரைக் கொடுத்துள்ளனர். அவர்களின் மனைவிமார்கள் விதவைகளாகி பொட்டையும் பூவையும் இழந்தார்கள் இல்லையா? கொடியேற்றும் போது விழும் பூக்களைப் பார்க்கும்போது அவர்களின் தியாகங்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.. என்றேன்.

சார், பொறுங்க சார் என்று குறுக்கிட்ட சன்மதி கேட்ட கேள்வி இது : புருசமார் இறந்து போய்ட்டாங்கனா பொம்பளைங்க பூ வைக்கமாட்டேங்கறாங்க, பொட்டு வைக்கமாட்டேங்கறாங்க.. மூக்குத்தி ஓலை போடமாட்டேங்கிறாங்க சார்.. இது மாதிரி பெண்டாட்டி இறந்தபிறகு ஆம்பிளைங்க எது எதையெல்லாம் போடமாட்டாங்க சார்?

என்னிடம் பதில் இல்லை! 

(புதிய ஆசிரியன், ஜனவரி, 2014)



எதிர்வினை: 
அழகேசன் சார், ஜெயலட்சுமி டீச்சர் ஆகிய 2 ரோல்மாடல்கள், அன்றொரு நாள் தேனி சுந்தர் ஆகியோர் முனைவர் மாடசாமி சிலபஸ் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள நல்லாசிரியருக்கான இலக்கணத்திற்கேற்ப வாழ்ந்து காட்டியுள்ளனர். அருமையான அறிமுகங்கள்
- ரத்தினமாலா, மதுரை
பிப்ரவரி இதழ், 2014



பதில் கூற இயலாத சன்மதியின் கேள்வி: 

புதிய ஆசிரியன் ஜனவரி மாத இதழில், தேனி சுந்தர் எழுதிய கட்டுரையில் அவருடைய மாணவி சன்மதி கேட்ட கேள்வியைக் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தவுடன் என் மனம் 50 வருடங்கள் பின்னோக்கிச் சென்றது.

நான் முதல் வகுப்பு முடித்து இரண்டாம் வகுப்பு போவதற்கு தயாரான காலம். வழக்கம்போல் கோடை விடுமுறைக்கு மதுரை சென்றிருந்தோம். ஒருநாள் மாலை நாங்கள் ஐந்தாறு குழந்தைகள் கோயிலுக்குச் சென்றுவிட்டு கைகளில் விபூதி, குங்குமத்துடன் வீட்டினுள் நுழைந்தோம்.. வரிசையாக அம்மா, பெரியம்மா, சித்தி, தாத்தா, பெரியப்பா, சித்தப்பா, இதர சகோதர சகோதரிகளிடம் விபூதி, குங்குமத்தை அளிக்க ஆரம்பித்தோம். குங்குமத்தைக் கண்ட மூத்த பெரியம்மாவின் கண்களில் கண்ணீர். உடனே ஒரு சகோதரி, ”ஏய்! பெரியம்மாவிடம் எதற்குக் குங்குமத்தைக் கொடுக்கிறாய்? பெரியப்பாதான் போனமாதம் இறந்துவிட்டாரே” என்றாள்.

தாத்தாவின் மனைவியும் (பாட்டி) இறந்து விட்டதால் நான் தாத்தாவிடம் சென்று குங்குமத்தை மட்டும் அளித்தேன். உடனே அதற்கும் “தாத்தாவிற்கு ஏன் விபூதி கொடுக்கவில்லை?” என்ற கோபமான வினா. அதற்கு நான் பெரியப்பா இல்லை என்று பெரியம்மா குங்குமம் வைத்துக்கொள்ளக் கூடாது என்றால் பாட்டி இல்லாததனால் தாத்தாவும்தானே குங்குமம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டேன்.. அதற்குப் பரிசு, அதிகப்பிரசங்கி என்ற பட்டமும் சில அடிகளும்.

இவ்வாறு அறியாத 5 வயதில் சரியாகச் சிந்தித்த என்னை, இந்த ஆணாதிக்க சமூகத்தின் சிந்தனைகள் மூளைச்சலவை செய்ய ஆரம்பித்ததின் விளைவு: எங்கள் வீட்டில் நடந்த ஒரு சுமங்கலி பூஜைக்குப் புடவைகள் வாங்கச் சென்றிருந்தோம்.. அங்கு எங்கள் அப்பா அவருடைய கணவனை இழந்த சகோதரிக்கு முதலில் புடவை வாங்கினார். இதற்காக, அவர் அனைத்து உறவினர்களாலும் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். என்னுடைய கண்களுக்கும் அவர் ஒரு மிகப்பெரிய குற்றவாளியாகவே காட்சியளித்தார்.

பசி, தாகம், தூக்கம், வலி, வேதனை போன்ற எல்லா உணர்வுகளும் ஆண், பெண் இருவருக்கும் ஒன்றுதான். அதேபோல், பல்லாண்டு காலம் கூடிவாழ்ந்த சகதுணையின் இழப்பு என்பதும் இருவருக்கும் ஒன்றுதான். ஆனால் கணவனை இழந்த மனைவியை சுபநிகழ்ச்சிகளில் ஒதுக்கிவைப்பதும் மனைவியை இழந்த கணவனை உடனடியாக புதுமாப்பிள்ளை ஆக்கது துடிப்பதும் இந்த ஆணாதிக்க சமுதாயத்தின் அராஜகமான செயல்பாடு அல்லவா? ஆங்கில அகராதியில் widow வார்த்தைக்குக் கீழேயே widower என்ற வார்த்தையும் உண்டு. ஆனால் தமிழில் விதவை என்ற வார்த்தைக்கு இணையாக மனைவியை இழந்தவர் என்ற பொருளில் விதவன் என்ற வார்த்தை இல்லை..

சில ஆண்டுகளுக்கு முன் சென்ற ஒரு திருமண நிகழ்ச்சி. தந்தை, சம்பாதித்ததை எல்லாம் குடித்துக் குடித்து அழித்துவிட்டுத் தானும் அழிந்துவிடுகிறார். 8 வயதிலேயே தந்தையை இழந்த மகளைத் தாய்தான் மிகவும் கஷ்டப்பட்டு , மிகவும் சீராட்டி வளர்த்துத் திருமண வயது வந்தவுடன் திருமண ஏற்பாடுகளும் செய்துள்ளார். ஆனால், சரியாகத் தாலிகட்டும் நேரம்வந்தவுடன் அந்தத் தாய் மணவறையின் அருகிலேயே நில்லாமல், கொஞ்சதூரம் தள்ளிச்சென்று நின்றுவிட்டார். நான்கைந்து பேரிடம் ஆசிபெற்ற பின்னரே மணமகள் தாயிடம் ஆசி பெற்றனர். என்ன அநியாயம்? இதுபோன்று எத்தனையோ நிகழ்ச்சிகள்.. பொட்டும் பூவும் ஒரு பெண் பிறந்தது முதற்கொண்டே அணிபவை. ஆனால் இடையில் வந்த கணவன் இறந்ததற்குத் தண்டனையாக அவற்றை அணியக்கூடாது என்று பெண்ணை நிர்பந்திப்பது ஏன்?

அன்புக் குழந்தை சன்மதியின் மீது நம் சமுதாயத்தின் சாரத்தை ஏற்றாமல் அவள் சரியான திசையில் சிந்தித்துச் செயல்பட வாழ்த்துவோம்! வழிகாட்டுவோம்!!

-என்.வத்சலா, புதுச்சேரி, 9443481818
புதிய ஆசிரியன், மார்ச், 2014

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!