அதிகரிக்க வேண்டும் ஆசிரியத் தற்கொலைகள்.....

நான் ஆசிரியராகப் பணியேற்கும் போது மிகவும் சின்ன வயசு. 19 கூட முடியவில்லை.. மருத்துவச் சான்றிதழ் கேட்டுப் போகும்போது கூட கம்பம் செல்வம் டாக்டர் நம்பவில்லை. தம்பி, நீ எல்லா வகுப்புகளும் படிச்சுட்டுதான் வந்தியான்னு கேட்டார்.. 

2004 பிப்ரவரியில் பணியேற்கச் செல்கிறேன். எட்டாம் வகுப்பைக் கடந்துதான் தலைமை ஆசிரியர் அறையெனத் தகவல். போகும்போதே எட்டிப் பார்த்தேன்.. வாட்டசாட்டமா நல்ல மொரட்டு மொரட்டுப் பயலுக எட்டாம் வகுப்பிற்குள்.. பார்த்தவுடன் வியர்த்துப் போனது எனக்கு..! 


எந்த வாத்தியாருக்காவது பணிஸ்மெண்ட்-ன்னா கே.ஜி.பட்டி பள்ளிக்கூடத்துக்குத் தான் மாத்துவாங்கலாம்.!? தலைமை ஆசிரியர் என்ன டைப்போ? மத்த வாத்தியார்கள் எல்லாம் டிப்டாப்பா இருக்கிறார்களே, நம்மோடு சகஜமாகப் பழகுவார்களா? இந்தப் பயலுக நம்ம சொல்றத கேட்பாய்ங்களா? மதிப்பாய்ங்களா? –இப்படி பல கேள்விகள் மனதிற்குள் இடமின்றி முட்டி மோதும் குழப்பமான மனநிலையில் தான் நான் முதல் நாள் பணியேற்றேன்...

ஒரே நாளில் ஏழெட்டு பேர் அந்தப் பள்ளியில் சேர்ந்தோம்.. எல்லாருமே புதுசு. கொஞ்ச நாளில் சகஜ நிலைக்கு வந்தாச்சு. அப்புறம் பாத்திங்கன்னா, தினம் தினம் அதிரடி, சரவெடி.. வெளுத்து வாங்குவோம்! கையில் விரல் இல்லாமக் கூட இருந்திடலாம்.. பிரம்பு இல்லாமல் இருக்கமுடியாது எனும் அளவிற்கு பிரம்புதாசர்களாய் இருந்தோம்.. நான்கு ஆண் ஆசிரியர்களில் மூவரின் வயது 30க்கும் கீழே... எனக்கோ 20க்கும் கீழே! 

ஆண் ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்றாகக் கலந்து பழகினாலும் உள்ளூர ஒரு பனிப்போர்! மாணவர்கள் யாரைக்கண்டு அதிகம் பயப்படுகிறார்கள் என்பதில் ஒரு கேவலமான போட்டி..! அதன் எதிர்விளைவுதான் இந்த அதிரடி.. சரவெடியெல்லாம்! 

அடிக்குப் பயந்து மாணவர்கள் மருந்தக்குடிச்ச கதையெல்லாம் இருக்கு.. பக்கத்து ஊரு பள்ளிக்கூடத்தைக் காப்பாற்றிய பெருமையெல்லாம்கூட உண்டு... எப்படின்னா? மின்நிலையம் பள்ளிக்கூடத்துல குழந்தைகளே இல்லை.. இங்கிருந்து என் அடிக்குப் பயந்து ஓடின விக்னேஷ்வரன், மருதுபாண்டி அவர்களின் தம்பிகள்... இவர்கள்தான் அந்தப் பள்ளிக்கு மாணவர்கள்... நான்கு கிலோமீட்டர் பேருந்தில் பயணித்து பள்ளிக்குப் போய்வந்தனர் இந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள்!



சுந்தருக்குப் பயந்தே பசங்க பள்ளிக்கூடத்த விட்டுட்டு ஓடுறானுங்கங்கப்பா...ன்னு என் காதுபட பிறர் பேசும்போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பரவி சிலிர்ப்பூட்டும் ஓர் உணர்வு! எப்படி ஒரு கேவலமான பிறவின்னு பார்த்தீங்களா?

ஒருநாள் மாலை வீட்டுக்குச் செல்வதற்காக காத்திருக்கிறேன் பேருந்து நிறுத்தத்தில்.. அடிவாங்கிய ஒரு மாணவனின் தகப்பனார் அவனது சட்டையைக் கழற்றிவிட்டு பாருங்கண்ணே.. பாருங்கக்கான்னு சொல்லிக்கிட்டே ஒரு நான்கைந்து பேரோட என்னை நோக்கிக் கோபமாகச் சத்தம்போட்டுக் கொண்டே வந்தார். மாணவனின் உடலில் அடி விழுந்த இடங்களிலெல்லாம் பிரம்பின் தடம் பதிந்திருக்கிறது.. உடம்பே சிவந்துகிடக்கிறது. எனக்கு ஒரே பயம்! என்னடா செய்வது? எப்படிச் சமாளிப்பதுன்னு.. கண்ணிமைக்கும் நேரத்தில் எனக்கு ஆதரவாய் ஒரு கூட்டம் திரண்டது..


”வாத்தியாருன்னா அடிக்காம உன் பிள்ளைய மடியிலவச்சுக் கொஞ்சுவாங்களா? அடியாத மாடு படியாது.. நீ போட்டு அடிக்கிறத விடவா? பெரிய சீமையிலில்லாத பிள்ளப் பெத்தவன் போடா”ன்னு “நியாயம்” சொல்லி அனுப்பிவச்சாங்க.. 

கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர் இயக்க அறிமுகம்.. பின் தமுஎசவிலும் சந்தக் கவிஞர் சுந்தர் என நண்பர்கள் பட்டம்சூட்டும் அளவிற்கு அப்பப்போ கவிதைகள்... அதற்கும் பிறகு ஒரு மூன்றாண்டுகள் கழித்துதான் என்னை அறிவியல் இயக்கத்தில் பணியாற்ற நிர்பந்தித்தார்கள் நண்பர்கள்.. இந்த அறிவியலுக்கும் கணக்குக்கும் பயந்துதான் சார் நான் பதினொன்றாம் வகுப்பில் ஆர்ட்ஸ் குரூப்பே எடுத்தேன் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தேன்.. விடவில்லை ஜெ.முருகன். மோகன் இருவரும்.. இன்று அவர்களுக்கு நன்றி சொல்பவனாக இருக்கிறேன்.. 

அறிவியல் இயக்கத்துக்கு அறிமுகமான வெகு சில மாதங்களிலேயே அறிவியல் இயக்க முன்னோடிகளில் ஒருவரான ராமானுஜம் அவர்களின் உரைகளைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. குழந்தைகளுக்காக குழந்தைகளின் குரலில் குழந்தைமை கொஞ்ச அவர் பேசும் வார்த்தைகளில் புதிய கோணத்தில் வகுப்பறைகளையும் குழந்தைகளையும் அணுகும் பார்வை எனக்கு முதலில் வியப்பாக இருந்தது.. 



பேரா. மாடசாமி எழுதிய ”எனக்குரிய இடம் எங்கே?” புத்தகம் அறிமுகமானது.. வாசித்த கணம் முதலாகவே காலங்காலமாய் வகுப்பறைகளில் ஒடுக்கப்பட்ட, குரல்களை இழந்த குழந்தைகளின் வழக்கறிஞராக மாறி விக்ரமாதித்தன் தோளில் வேதாளம் போல என்மீது ஏறிக்கொண்டு வாதாடிக்கொண்டே இருக்கிறார். அவர் ஒருபோதும் அரசாணைகளை நம்பவில்லை.. அதிகாரங்களை நம்பவில்லை.. இதயங்களை வென்றுவிடவே தவிக்கிறார். எளிய வார்த்தைகளில் அவர் எடுத்துவைக்கும் வாதங்களை எதிர்கொள்ளத் திராணியற்று அதன் நியாயங்களை ஏற்று எவ்வித வெட்கமும் கூச்சமும் இன்றி அவரின் எழுத்துகளுக்கு முன் மண்டியிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் மரித்தே போனான் எனக்குள் இருந்த காட்டுமிராண்டி..! இப்படியான ஆசிரியத் தற்கொலைகள் அதிகரிக்க வேண்டும்.. இது வகுப்பறைக்கு மட்டுமல்ல.. நாட்டிற்கே நல்லது! 

மிரட்டிப் பணியவைக்கும் ஒரு மோசமான மனநோய்க்கு ஆட்பட்டிருந்த நான் எந்த அளவிற்கு மாற நேர்ந்தது என்றால்... தற்போது பணிபுரியும் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் ரோஷினி என்ற நான்காம் வகுப்பு குழந்தையை சக ஆசிரியர் அடித்துவிட்டார்.. அவள் தேம்பித்தேம்பி அழுவதைக் கண்டு கலங்கி சக ஆசிரியரின் மீது ஒரு புகார்க் கடிதம் எழுதினேன்.. அந்தக் கடிதம் இயக்குநருக்கு.. நகல் மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், குழந்தை உரிமை ஆர்வலர்கள் மற்றும் இன்னும் பலர்... எழுதி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தேன்.. இன்னொரு முறை அவர் எந்தக் குழந்தையின் மீதாவது கைவைத்தார் என்றால் இதே கடிதத்தை இதில் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கு அனுப்பிவைப்பேன் என எச்சரித்தேன்.. 

இருந்த இடத்திலிருந்து இவ்வளவு தூரம் விலகி நிற்கக் காரணம் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் ஜாம் என்று அன்போடு அழைக்கப்படும் விஞ்ஞானி.ராமானுஜம், பேரா.மாடசாமி, புதுவை ஜெ.கே போன்ற கல்வியாளர்களின் உரைகளும் எழுத்துகளுமே.. 

இன்றைய வகுப்பறை நெருக்கடிகளுக்கான மருந்து அரசு ஆணை, விதிமுறைத் தொகுப்பு நூல்களில் நிச்சயம் இல்லை.. உங்களது சமஸ்தானத்தை ஆளுகின்ற அதிகாரிகளிடமும் இல்லை.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வியாளர்களிடம் தான் இருக்கிறது.. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் வாசிப்பு முகாம்களில் அவர்களைச் சந்திக்கலாம்.. அவர்களது எழுத்துகளின் மூலம் நித்தமும் சந்திக்கலாம்.. 

வாசிப்பு முகாம்களுக்கு வந்து பாருங்கள்.. நிச்சயம் உங்களது பார்வை மாறும்... உங்கள் முன் புதிய பள்ளி... புதிய வகுப்பறை மலரும்... எல்லாவற்றிற்கும் மேலாக உங்களது பழைய ”நான்” தொலைந்து புதிய ”நான்” கிடைப்பான்.. அவன் குழந்தைநேய வகுப்பறையை.. குழந்தைநேயக் கல்வியை.. குழந்தைநேய உலகைப் படைத்திட உங்களை உந்திக்கொண்டே இருப்பான்! உறங்க விடமாட்டான்!!
-தேனி சுந்தர்
நன்றி: புதிய ஆசிரியன் மாத இதழ், நவம்பர்.2014

Comments

  1. வாழ்த்துக்கள் நண்பரே.
    மாற்றத்திற்கு வித்திட்டவர்களுக்கும்
    மாற்றத்தை உணர்ந்து உங்களுக்கும்.

    ReplyDelete
  2. வாழ்க பல்லாண்டு. உங்கள் மொழி நடையும், மொழி கூர்மையும் ,கோர்வையும் மூச்சு விடாமல் கிரைம் நாவல் போல அடுத்தது என்ன என ஆவலாய் வாசிக்கவும் ,சிந்திக்கவும் வைத்தது. நன்றி தோழர் சிந்தனையில் மாற்றத்தை தந்ததற்கு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!