மௌனத்தின் அர்த்தமென்ன?


கடந்த சில வாரங்களுக்கு முன் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களை ஒரு வார இதழின் சார்பில் நேர்காணல் செய்திருந்தார்கள்.. அதில் ஒரு கேள்வி தமிழனின் தனிச்சிறப்பு, குணம் என்ன என்பது.. அதற்கு அவர் ஒரு நீண்ட யோசனைக்குப் பிற்கு அவர் தெரிவித்த பதில் இதுதான்.... கோழைத்தனம்..

உண்மைதானா?

சமீபத்தில் மஞ்சப்பை என்ற திரைப்படம் வெளிவந்தது.. தாத்தா-பேரன் கதை என்றார்கள்.. எனக்கும் எங்க தாத்தாவை ரொம்ப பிடிக்கும்.. கண்டிப்பாக பார்க்கணும் என்று நினைத்திருந்தேன்.. ஒரு நாள் வாய்த்தது... கம்பம் திரையரங்கு ஒன்றில் இரவுக்காட்சிக்குச் சென்றேன்... மொத்தமே ஒரு ஐம்பது, அறுபது பேருக்குள்ளதான் இருக்கும்.. அதில் ஒரு ஐந்தாறு பேர் தங்கள் மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தனர்.. படம் ஆரம்பிக்கும் போதே சில இளைஞர்கள் சிகரெட்டைப் பற்றவைக்க.. உடனே ஓடிவந்த திரையரங்கக் காவலாளி இளைஞர்களை எச்சரித்துவிட்டு சென்றார்...

படம் ஓடிக்கொண்டிருக்க, சிலர் பிராந்தி பாட்டிலை உடைத்து ஊற்றும் சத்தமும் கேட்க ஆரம்பித்தது.. இருட்டு அவர்களுக்கு வசதியாக இருந்தது... யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.... கதாநாயகி வருகின்ற பல காட்சிகளின் போது அவரின் உடல் உறுப்புகளைச் சொல்லி மிகச் சத்தமாக ஆபாசக்கூச்சல் ஒரு மூலையிலிருந்து... முன்பு சிகரெட்டைப் பற்றவைத்தார்களே அதே திசையிலிருந்து... விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியிருந்தது... இருட்டு இவர்களுக்கும் வசதியாகத்தான் அமைந்தது.. ஆனால் திரையரங்கக் காவலாளியோ, உடன் பெண்களை அழைத்துவந்த கணவன்மார்களோ எவ்வித எதிர்வினையுமின்றி மௌனித்தே இருந்தனர்... இவர்களோடு நானும் கூட... 

காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தாலும் என் கவனம் அதிலில்லை... மாறாக கூச்சலிடும் இந்தக் கூட்டத்தைச் சுற்றியே என் சிந்தனையெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது.. அங்கு கணவன் மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்களின் மனநிலை என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டே இருந்தேன்... நான் ஒருவேளை என் மனைவி குழந்தைகளுடன் வரும்போது இப்படி நடந்தால் நம்மால் என்னசெய்யமுடியும்? ஒரு கட்டத்தில் எழுந்து கத்திவிடலாம் போலிருந்தது... அங்கு வந்திருந்த பெண்களையே திரட்டி அவர்களைச் செருப்பால் அடித்து விரட்ட வேண்டும் என்ற நினைப்பு நினைப்பாகவே நின்றுபோனது... படம் முடிந்ததும் அரங்கில் வெளிச்சம் பாய்ந்தது... இங்கு வழக்கத்திற்கு மாறாய் எதுவும் நடந்துவிடவில்லை என்றவிதத்தில் அனைவரும் கலைந்தனர்.. முகம்தெரியப் பாயும் வெளிச்சத்தில் எல்லோரும் ”நல்லவர்களாய்” பேசிச் சிர்த்துக் கொண்டு சென்றனர்..

ஒருநாள் மதுரையில் கூட்டம்... காலை 6 மணிக்கெல்லாம் பேருந்தில் ஏறிவிட்டேன்.. அது ஒரு தனியார் பேருந்து... பாடல் கேட்டுக்கொண்டே பயணம்... சின்னமனூர் போகும்போது பேருந்தில் ஒலித்த பாடல் இதுதான் “கட்டிப்புடி கட்டிப் புடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா” ... யாரும் எதுவும் பேசவில்லை... எதுவும் தப்பாக நடந்துவிடவில்லை என்பதாய் அவரவர் பேச்சுகளில் கவனமாயிருந்தனர்.. இந்தப் பாடல் இவர்களுக்கு எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லையா? அவர்கள் அதை விரும்பி ரசிக்கிறார்களா? இந்தப் பூனைக்கு யாராவது ஒரு கதாநாயகன் எங்கிருந்தாவது குரல் கொடுக்கமாட்டானா என்ற எதிர்பார்ப்பா? தெரியவில்லை...

தொலைக்காட்சி விளம்பரங் -களில் புதிய பைக்கைப் பார்த்ததும் பெண் மயங்கிவிடுகிறாள்.. சென்ட் போட்டு வரும் ஆண்களிடம் இருக்கின்ற அத்தனை பெண்களும் காம இச்சை கொள்கின்றனர்.. உள்ளாடை முதற்கொண்டு அனைத்து விளம்பரங்களிலும் பெண்மை அசிங்கப்படுத்தப்படுகிறது.. மெகாத் தொடர்களில் பெரும்பாலும் சாத்தான்களைப் போல சதாசர்வ நேரமும் சதித்திட்டம் தீட்டுபவர்களாகவே காட்டப்படுகிறார்கள்.. பெண்களுக்கு காம இச்சையைத் தவிர கவலைப்படுவதற்கு வேறு ஒன்றுமில்லாததைப் போல இரவும் பகலும் ஒளிபரப்பப்படும் ஆண்மை விருத்திக்கான, நீண்ட நேர உடலுறவிற்கான விளம்பரங்கள்... இவை அனைத்தையும் நாம் அமைதியாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்..

பெண்களாகிய நீங்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்... இந்த மௌனத்தின் அர்த்தமென்ன? அலுவலகம், வீடு, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், தெரிந்தவர், தெரியாதவர், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், இளைஞர், முதியவர், கிராமம், நகரம், பெருநகரம் என எவ்விதப் பாகுபாடுகளுமின்றி நாளும் நாளும் அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு, கொலை என நீளும் இன்றைய போக்குகள் எங்கிருந்து துவங்குகின்றன? தன்வீட்டுச் சிறுமி பாதிக்கப்படும்வரை பார்த்துக் கொண்டுதான் இருக்கப் போகிறோமா? விவாதிக்கலாமே..!

ஆசிரியர் குறிப்பு: நண்பர் சுந்தர் அருமையான –தொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். எனக்கும் இப்படி சில அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வாக்குவாதம் முற்றி அடிதடியில்கூட முடிய வாய்ப்பு உண்டு என்பதால் பல நேரங்களில் நாம் மௌனமாக இப்படிப்பட்ட அராஜகங்களைப் பொறுத்துக் கொள்கிறோம்..

என்னுடைய ஒரு அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். பாரதி படம் வந்த புதிதில் மதுரை திரையரங்கு ஒன்றில் அந்தப் படம் பார்க்கச் சென்றிருந்தேன். பக்கத்தில் எனக்கு அறிமுகமான மாணவர் சங்கத் தோழர் அமர்ந்திருந்தார். சில கல்லூரி மாணவர்கள் எங்களுக்கு சில வரிசைகள் முன்பாக அமர்ந்திருந்தனர். அவர்கள் படம்பார்க்க வந்த மாதிரித் தெரியவில்லை. ஒவ்வொரு காட்சிக்கும் ஏகமாக சத்தம்போட்டு ரகளை செய்துகொண்டிருந்தனர். சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்த பிறகு மாணவர் சங்கத் தோழரிடம் சவுண்ட் விடுவமா என்று கேட்டேன்.. அவர் சம்மதித்ததும் இருவரும் எழுந்து நின்று “ நாங்க படம் பார்க்க வந்திருக்கோம். உங்களுக்குப் பிடிக்கலைன்னா எந்திருச்சு வெளியே போங்க.. எங்களைப் படம்பார்க்க விடுங்க” என சத்தம் போட்டோம். அதற்குப் பலன் இருந்தது. மாணவர்கள் மௌனமாகி விட்டனர்.

எல்லா நேரங்களிலும் இப்படிப்பட்ட பலன் இருக்கும் என்று சொல்லமுடியாது.

புதிய ஆசிரியன், செப்.2014 

எதிர்வினை:
பிடிஎப் நகலை எஸ்விவி அனுப்பியிருந்தார். படித்ததும் ஏற்பட்ட ஈர்ப்பில்தான், இனி நாம் படிக்கவேண்டிய இதழ் புதிய ஆசிரியன் என்பதைப் புரிந்துகொண்டேன். சந்தாவுக்கும் பணம் அனுப்பும் முடிவினை எடுத்தேன். முதல் பக்கத்திலிருந்து 44ஆம் பக்கம் வரை எல்லாமே விறுவிறுப்பாக இருந்தது. தேனி சுந்தர் எழுதியுள்ள கட்டுரை மிகவும் சிறப்பு. நம்மை வெட்ட வந்தாலேயன்றி, அடுத்தவரை நம் கண்ணெதிரில் வெட்டிக்கூறு போட்டால் கூட, நமக்கென்ன என்று பஸ்சைப் பிடிக்க ஓடிவிடுவோம். ஆனால் எனக்குக் கொஞ்சம் வித்தியாசமான அனுபவங்கள் உண்டு. எழுத்து வடிவம் கொடுக்க முயல்கிறேன்.

வி.சாரதா, மதுரை 

மௌனத்தின் அர்த்தம் என்ன? தேனி சுந்தரின் ஆதங்கம் நன்கு வெளிப்பட்டிருக்கிறது. பலரின் உள்மனத்திடை ஆதங்கமும் அதுவே. ஆசிரியர் சொல்வது போல், அதுமாதிரி சமயங்களில் வீண் தகராறைத் தவிர்க்கலாம் என்பதால் பலர் மௌனமாக இருந்துவிடுகின்றனர். பலருக்குத் தெரிந்த புத்தர் கதை ஒன்று: புத்தர் ஒரு சீடருடன் நடந்து சென்று கொண்டிருக்கையில், ஒருவன் புத்தரைத் திட்டிக் கொண்டிருந்தான். புத்தர் அமைதியாக எதையும் கவனிக்காத வகையில் நடந்து சென்று கொண்டிருந்தார். சீடருக்கு கட்டுக்கடங்காத கோபம். புத்தரிடம் இத்தனை வசவுகளைக் கேட்டும் நீங்கள் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள் என்று கேட்டார்.

புத்தர் அமைதியுடன் சிரித்தவாறே சொன்னார்: எந்த பொருளும் நாம் பிறரிடமிருந்து ஏற்றுக்கொண்டால் தான் அது நமக்குச் சொந்தம். நாம் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அப்பொருள் யாரிடம் இருக்கிறதோ அவருடையதே. அதே போல், அந்த வசவுச் சொற்களின் எஜமானன் அவற்றைச் சொல்பவனே. அவற்றை நாம் ஏற்றுக்கொண்டால் தானே அவை நம்மைச் சேரும்? அதை ஏற்றுக் கொள்ளாத வரையில் அவை அனைத்தும் அவனுடையதே என்ற மனப்பக்குவம் வந்தால் நமக்கு ஏது பாதிப்பு என்றார். இது தத்துவ ரீதியிலான பதில் என்றாலும் புத்தரின் மனநிலை இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அவசியமே. வன்முறை/ துன்புறுத்தல்கள் குறைய இளவயதிலிருந்தே தியானம், மூச்சுப் பயிற்சி, பாஸிடிவ் எண்ணங்கள் பழக்குதல், self-hypnosis போன்ற உளவியல் கலைகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்..

எஸ்.தேவநாதன் (தேவா), 
சென்னை-14
புதிய ஆசிரியன், அக்.2014

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!