அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை சாத்தியமா?
சமீபத்தில் தேனீ கலை இலக்கிய மையம் மற்றும் திண்ணை மனித வள மேம்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆனந்த விகடன் இதழின் பொறுப்பாசிரியர் பாரதி தம்பி அவர்களின் நூலான கற்க கசடற: விற்க அதற்குத் தக என்ற நூலின் அறிமுக விழா நடைபெற்றது. அந்நூல் குறித்து கருத்துரையாற்றும் வாய்ப்பினை எனக்கு வழங்கினர் நண்பர்கள்.
நடைபெற்ற இடம் பயிற்சி மையம் என்பதால் பங்கேற்பாளர்களில் அநேகம் பேர் தகுதித் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள்.. அவர்களிடம் இந்த நூலிற்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என வினவியபோது கனத்த மௌனமே நிலவியது. தொடர்பில்லை என ஆங்காங்கே சில தலைகள் ஆடியதையும் பார்க்க முடிந்தது.
பயிற்சி மையம் பிடித்திருக்கிறதா? பயிற்சியாளர்கள் மீது மதிப்பு மரியாதை இருக்கிறதா? என்று நான் கேட்டேன்.... உடனே பலரும் ஆமாம் ஆமாம் என்றனர். சரி, அடுத்த ஆண்டும் இதே பயிற்சி மையத்திற்கு வர விரும்புபவர்கள் எத்தனை பேர் என்றேன்.. அதெப்படி சார் வருவோம்.. நாங்க வேலைக்குப் போக வேண்டாமா? என்றனர். தமிழக அரசு நாளைய தினமே ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்த அனைவருக்கும் அரசுப்பள்ளிகளில் எவ்வித தேர்வுகளுமின்றி பணிநியமன ஆணை வழங்கப்படும் என்று அறிவித்தாலும் மொத்த எண்ணிக்கையில் 10 சதமானோருக்குக் கூட பணி கிடைக்காது.. ஏன் கிடைக்காது.. அதில் என்ன சிக்கல்.. எது தடையாக இருக்கிறது என்பது குறித்த புரிதலை ஏற்படுத்தும் ஒரு சிறந்த நூல் தான் பாரதி தம்பியின் கற்க கசடற என்றேன்.. இப்போது சொல்லுங்கள் உங்களுக்கும் இந்தப் புத்தகத்திற்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்று கேட்டு சில தகவல்களையும் அவர்களோடு பகிர்ந்துகொண்டேன்..
நாடு விடுதலை அடைந்து ஏறத்தாழ 65 ஆண்டுகள் கழித்து கொண்டு வந்த சட்டம் கல்வி உரிமைச் சட்டம்-2009.. 2010, ஏப்ரல்.1 முட்டாள்கள் தினத்திலிருந்து அமுலாகி ’நடைமுறை’யில் உள்ளது. சட்டத்தில் பல அம்சங்கள் இருக்கின்றன.. மிகவும் பரவலாகப் பேசப்படுவது தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு.. இந்த ஒதுக்கீட்டின் கீழ் 2013-14, 2014-15, 2015-16 ஆகிய கல்வியாண்டுகளில் முறையே 49864, 86729, 80450 (1.7.2015 வரை) இது அரசின் மிகப்பெரிய சாதனை.. இந்த ஆண்டு நவம்பர் வரையிலும் சேர்க்கையை நீட்டிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பெருமிதம் கொள்கிறது அரசின் கொள்கை விளக்கக்குறிப்பு 2015-16.. ஏறத்தாழ இரண்டரை லட்சம் குழந்தைகளை சட்டப்பூர்வ அங்கீகாரத்துடன் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி இருக்கிறது.. சும்மா அனுப்பவில்லை.. கட்டணம் என்ற பெயரில் சில நூறு கோடிகளை தனியார் பள்ளிகளுக்கு வாரி வழங்கவும் செய்திருக்கிறது .. சரி, இத்தனை கோடிகளில் எத்தனை அரசுப் பள்ளிகளைக் கட்டலாம், இந்த இரண்டரை இலட்சம் குழந்தைகளுக்கு கல்வி உரிமைச் சட்டப்படியே 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற அடிப்படையில் எத்தனை ஆசிரியர்களுக்கு அரசுப்பள்ளியில் பணி வழங்கலாம் என நண்பர்கள் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்..
அரசு பெருமையாகப் பகிர்ந்துகொள்ளும் இன்னொரு தகவலையும் பாருங்கள்.. 2011-12ல் 3769 ஆக இருந்த மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகள் 2014-15ல் 4046 ஆக உயர்ந்துள்ளன.. அப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2011-12ல் 25,55,625 ஆக இருந்தது 2014-15ல் 36,56,317 ஆக உயர்ந்துள்ளது.. 300 பள்ளிகள் அதிகரித்துள்ளன.. அப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 11 இலட்சம் உயர்ந்துள்ளது...
இந்தச் செய்திகளை மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்ளும் அரசு தனது சொந்தக் குழந்தைகளான அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எந்த அளவிற்கு இருக்கிறது, எத்தனை பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.. அதன் விளைவாக எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் உபரிப்பணியிடங்களாக மாறியிருக்கின்றன, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் கூட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உபரியாக உள்ளனரே, அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்துவது போல உபரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் எனும் கோரிக்கை வைத்து போராடுகின்ற அளவிற்கு நிலைமை கவலைக்கிடமான சூழல் நிலவுகிறதே.. பள்ளி மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை குறித்த தகவல்களைக் கண்ணாடி போல காட்டும் REPORT ON PUBLIC INSTRUCTION என்னும் அறிக்கை கடந்த 2002-03க்குப் பிறகு பள்ளிக்கல்வித்துறை வெளியிடவே இல்லையே ஏன்?
அரசுப்பள்ளிகளில் தங்கள் பணியிடங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கும் ஆசிரியர்கள்.. எப்படியும் தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் முட்டிமோதிப் படித்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான ஆசிரியர் கல்வி பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்த நண்பர்கள்.. குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையினால் ஆயிரக்கணக்கில் தங்கள் பணியிடங்களை, எதிர்கால வாழ்வைப் பறிகொடுக்க இருக்கும் சத்துணவுப் பணியாளர்கள்.. அரசுப்பள்ளிகளே இல்லையென்ற சூழலில் தனியார் பள்ளிகள் வைத்ததுதான் சட்டம் என்றாகிப் போகும்.. தங்கள் வாழ்நாள் உழைப்பின் பெரும்பகுதியினை குழந்தைகளின் கல்விக்காக பணமுதலைகளிடம் பறிகொடுக்க இருக்கும் பெற்றோர், சுதந்திரமாக, மகிழ்ச்சியாகப் பயிலவும் பன்முகச் சிந்தனைகளைப் வளர்த்துக் கொள்ள வேண்டிய தங்களது குழந்தைப்பருவத்தை தனியார் பள்ளிகளுகள் என்னும் கொட்டடிக்களுக்குள், அடிமைச் சிறைகளுக்குள் அடகு வைக்க இருக்கின்ற பரிதாபத்திற்குரிய
மாணவர்கள் அனைவருமே அரசின் சூழ்ச்சி + அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சி = தனியார் பள்ளிகளின் எழுச்சி என்பதை உணர்ந்து களம் காண வேண்டிய நேரம் இதுவல்லவா?
கட்சி மாற்றமோ ஆட்சி மாற்றமோ ஆள் மாற்றமோ அணி மாற்றமோ நம் அனைவருக்கும் கல்வி, கற்ற அனைவருக்கும் வேலை என்பதை உத்தரவாதம் செய்யமுடியாது... தேவை கொள்கை மாற்றம்..! நமது நலனில் மக்கள் நலனில் அக்கறையுள்ள மாற்றை நோக்கிச் சிந்திப்போம்.. செயல்படுவோம்..
- தேனி சுந்தர்,
மாநிலச் செயலாளர், த.அ.இ
(நன்றி: புதிய ஆசிரியன் -ஏப்ரல்,2016)
(நன்றி: புதிய ஆசிரியன் -ஏப்ரல்,2016)
அற்புதமான கட்டுரை. அற்புதமான தகவல்கள். உண்மையில் எப்படி கல்வி உரிமைச்சட்டம் தனியாருக்கு பயன் அளிக்கிறது என்பதை என்பதை தெளிவாக்குகிறது. வாழ்த்துக்கள் சுந்தர்.
ReplyDeleteமிகவும் நன்றி தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு..
Deletevery nice article sundar
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே
Delete