விடுங்க சார்... திட்டாதீங்க சார்...



கடந்த மே மாதம் கடைசி நாளில்.. ஆஹா நாளைலேருந்து பள்ளிக்கூடமேன்னு பசங்களப் போலவே தயாராவதற்கு நமக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.. அதில் கூடுதல் கஷ்டம் என்னன்னா? நாளை முதல் வேறொரு பள்ளிக்கு மாற்றுப் பணியில் செல்ல வேண்டும் என 31ஆம் தேதி இரவு 9 மணிக்குச் சொன்னார் எங்க தலைமை ஆசிரியர்.... அதுவும் இணை இயக்குநர் உத்தரவாம்...

மறுநாள் கொஞ்சம் குழப்பத்தோடும் மனவருத்தத்தோடும் தான் சென்றேன்.. அந்தப் பள்ளியில் மொத்தமே ஆறு குழந்தைகள் தான்.. கோகுல், அனிஸ், ஹரிணி, பவித்ரா மற்றும் இரு பெண் குழந்தைகள்.. கடந்த மாத இறுதியில் எனது பள்ளிக்கு திரும்பிவிட்டேன்.. போன இடத்தில் பல நல்ல அனுபவங்களைத் தந்து அனுப்பினர் அந்தக் குழந்தைகள்..

ஒரு நாள் மூன்றாம் வகுப்பு ஹரிணி மட்டும் வீட்டுப்பாடம் செய்து வரவில்லை.. சொன்ன எழுத்துப் பணிகள் பலவும் முடிக்காமலே இருந்தது... ஏம்ப்பா, சொல் பேச்சு கேட்க மாட்டியா? ஒரு தடவை சொன்னா புரியாதா?ன்னு ஆசிரியருக்கே உரிய கடும் முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன்..
மீதி ஐந்து மாணவர்களும் மொத்தமாக வந்தார்கள்.. கோகுல் முதலில் வந்தான்.. நான் என்ன என்று கேட்பதற்குள்ளாகவே.. திட்டாதீங்க சார் என்றார்கள் கோரசாக... சரி, அதென்னடா மொத்தமாக என்றேன்..
ஆமாம் சார்.. நாங்க இனிமேல் ஒற்றுமையாக இருக்கணும்னு முடிவு பண்ணிட்டோம் சார்.. யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது.. அடிவாங்க விடக்கூடாதுன்னு பேசியிருக்கோம் சார்..

எனக்கு உள்ளூர வியப்பாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.. இருந்த போதும் அதே கடுமூஞ்சியோடு அப்படின்னா வீட்டுப்பாடம் எழுதாமல் வந்தா கொஞ்சுவாங்களாடா என்றேன்.. சரி, விடுங்க சார்.. நாளைக்கிருந்து எழுதிட்டு வந்துடும்.. என்னா ஹரிணின்னான்..


இப்படியான மறுப்புக் குரல்கள் எழுவதற்கான சூழல் இயல்பாக இருந்தால் எத்தனை எத்தனை வகுப்பறைகளில் எத்தனை ஆயிரம் மாணவர்கள் எவ்வளவு கடுமையான தண்டனைகளில் இருந்து தப்பியிருக்க முடியும்.. இப்படி தங்கள் சக நண்பனைக் காக்கத் துணிந்த குழந்தைகள் தானே நாளை சக மக்களைக் காக்க குரல் கொடுப்பார்கள்..?

ஒரு ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு தமுஎகச நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்களுடன் நான் பேசியது நினைவுக்கு வந்தது.. ஆம் இந்தப் பள்ளிக்கூடங்கள் தானே நம்மைப் பழக்கப்படுத்துகின்றன..? இந்தப் பழக்கம் தானே தோட்டத்தில் ஒரு தொழிலாளியை முதலாளியோ கங்காணியோ திட்டித் தீர்க்கும் போதும் சில நேரங்களில் சித்தரவதைக்குள்ளாக்கும் போதும், ஒரு அலுவலகத்தில் பல பேர் முன்னிலையில் ஒரு அலுவலர் அவமானப்படுத்தப்படும் போதும் இன்னும் பல இடங்களில், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக தனி மனிதன் ஒருவன் தாக்கப்படும் போது, புறக்கணிக்கப்படும் போது சுற்றிநின்று அமைதியாக வேடிக்கை பார்ப்பதற்கு இந்தப் பள்ளிக்கூடங்களில் தானே பாலபாடம் கற்பிக்கப்படுகிறது.. பெரும்பாலான பெற்றோர்களும் கூட தங்கள் பிள்ளைகள் எதிலும் தலையிடாமல் பத்திரமாக வர வேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறார்கள்? சமீபத்தில் கூட செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் குடும்பத்தினர் பட்டப்பகலில் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் தாக்கப்பட்டதை டிவியில் காண்பித்தார்கள்.. கைபேசியில் வீடியோ எடுத்து வீட்டுக்கு வந்து மனைவி மக்களிடம் போட்டுக் காட்டி உச்சுக் கொட்டிப் புலம்பியிருப்பார்கள் சிலர்...  சம்பவ இடத்திலேயே எதிர்ப்புக் குரல் எழுப்ப அவர்களுக்குத் தைரியம் இல்லாமல் போய்விட்டதே?

வகுப்பறையில் நாம் செய்வதில் நியாயம் இல்லாத போது குழந்தைகளின் குரல்களை ஒடுக்கப்பார்க்கிறோம்.. இதையெல்லாம் பற்றி ஆசிரியர்கள் தமக்குள் விவாதிக்கத் தொடங்கினால் மாற்றங்களும் தன்னால் வரும்..
------- தேனி சுந்தர்
நன்றி:  புதிய ஆசிரியன் மாத இதழ் (பிப்.2017)

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!