உலகமயமாதல் கொள்கையை முழுமையாக நிராகரித்தால் தான் அனிதாக்களுக்கு கல்வியும் வேலையும் கிடைக்கும் – கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன்
அமலில் உள்ள கல்வி உரிமைச்சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?
அரசியல் உறுதியோடு கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. சரத்து 45, அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்தாண்டுகளுக்குள் பதிநான்கு வயதிற்கு உட்பட்டவர் அனைவருக்கும் இலவசக்கல்வி அளிக்க அரசு முயல வேண்டும் என்று கூறியது. அதன்படி 1960 ஜனவரி 26க்குள் அவ்விலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால் 1990 ஆகியும் எட்டவில்லை. எனவே உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதனை அடிப்படை உரிமையென அறிவித்தது. ஆனால் அதற்கான அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொணராது அரசு இருந்ததைக் கண்டு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் நாடு தழுவிய பல போராட்டங்களை நடத்தினார்கள். இனியும் தள்ளிப் போட முடியாதென்ற நிலையில் நகல் சட்டத் திருத்தம் அறிவிக்கப்பட்டது.
ஐந்து முறை மாற்றப்பட்டு இறுதியாக 86-ஆம் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசு சட்டங்கள் மூலம் அறிவிக்கும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அடிப்படை உரிமையாயிற்று. முழு உரிமையல்ல.. அரசின் விருப்பத்திற்கிணங்க என்ற கட்டுப்பாடுகளுக்குட்பட்ட உரிமை தான் வழங்கப்பட்டுள்ளது.
2002/86வது அரசியல் சட்டத் திருத்தத்திற்கேற்ப கல்வி உரிமைச் சட்டம் 2009ல் நிறைவேற்றப்பட்டது. அதற்கான விதிகள் இயற்றப்பட்டு 2010 ஏப்ரலில்தான் நடைமுறைக்கு வந்துள்ளது. காலதாமதம் சுட்டுவது அரசிற்கு அனைவருக்கும் அடிப்படைக் கல்வி அளிப்பதில் ஈடுபாடு கிடையாதென்பதே.
எந்த கல்வி உரிமைச் சட்டமும் இல்லாமலே தமிழ்நாடு 1964-ஆம் ஆண்டிலேயே பள்ளிக் கல்வி முழுமையும் இலவசமாக்கியது. கல்விக்கு 30-35% ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டாயம், இடைவிலகலை நிறுத்தல் ஆகிய பிரச்சினைகள் இருந்தன. அனைவருக்கும் கல்வி அளிக்க முதல் தேவை அரசியல் உறுதி. இரண்டாவது நிதி ஒதுக்கீடு. இரண்டும் இல்லாத பொழுது எளியவர்க்குக் கனவாகவே தொடரும்.
தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு தான் கல்வி உரிமைச் சட்டம் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதோ?
கல்வி உரிமைச் சட்டம் அனைவருக்கும் கல்வி அளிப்பதை அரசின் கடமையாக்கவில்லை. மாறாக தனியார் பள்ளிகளையும் இப்பணியில் இணைத்துள்ளது மட்டுமின்றி அப்பள்ளிகளுக்கு ஏற்படும் கட்டண இழப்பை அரசே ஈடு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. முழு நேரப்பணியாளர்களான அரசு அதிகாரிகளுக்குப் பொறுப்பு கொடுக்காது உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாணவர் சேர்க்கை, தரம் பேணல், உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கல் ஆகியவற்றை ஒப்படைத்துள்ளது. ஆனால் அப்பணிகளை ஆற்றிட எவ்வித நிதியாதாரத்திற்கும் வகை செய்யவில்லை.
தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு என்பது அப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் உயர்ந்தவை என்ற மறைமுக ஒப்புதலைக் கொடுத்துள்ளது. அருகமைப் பள்ளி முறையை அமுல் படுத்தியிருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் அருகமையை வரையறுத்து, எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டிய கடமையை அப்பள்ளிகளுக்கு அளிப்பதோடு, தம் அருகமையில் உள்ள பள்ளியில் சேரும் உரிமையைக் குழந்தைக்கும் கொடுத்திருக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் எளியவர் குழந்தைகளைச் சேர்க்க விரும்பவில்லை. சேரி மொழியும், பழக்க வழக்கங்களும் பிற குழந்தைகள் மீது தாக்கத்தை உண்டாக்கும் என்று பெற்றோர்க்குக் கடிதம் எழுதிய நிர்வாகங்களும் உண்டு. சேர்ந்த குழந்தைகளைப் பாகுபாடின்றி நடத்தவும், பள்ளியினின்று விலகாதவாறும் இருப்பதை உறுதி செய்ய சட்டத்தில் ஏதுமில்லை.
கட்டாயத் தேர்ச்சியைக் கைவிடல் குறித்து..?
தண்டனை ஒழிப்பு, தக்கவைத்தலுக்குத் தடை ஆகியவை குழந்தைகள் சார்பானவை. பெரும்பான்மையான பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவை மாணவரது கற்றலைப் பாதிக்கும் என்று குரலெழுப்பினார்கள். தண்டனை நின்றபாடில்லை. 5,8 வகுப்புகளில் தேர்வு கொண்டுவரப்பட்டதன் மூலம் தக்கவைத்தலுக்கான தடை நீக்கப்பட்டது மாபெரும் பின்னடைவு. தக்கவைப்பவர்கள் பள்ளியில் தொடர்வது குறைவே. இடைவிலகலுக்கு இடம் அளிக்கும் இம்மாற்றம் எளியவர்க்குக் கல்வி மறுப்பேயாகும். கற்றலில் ஈடுபாடு உண்டாக்க வேண்டியது ஆர்வமேயன்றி, அச்சமில்லை. ஆர்வத்தை உண்டாக்குவது பாடத்திட்டம், பாடநூல்கள், வகுப்பறைக் கற்பித்தல், குழந்தைசார் நடைமுறைகள். மீள வடிகட்டலைக் கொண்டு வந்திருப்பது ஒரு அடி முன்னே, இரண்டடி பின்னே என்பது போன்றதே. எதிர்ப்புக் குரல் ஒங்கி ஓலிக்காதது வியப்பே.
அங்கீகாரமில்லாது நடத்தப்பெறும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்க கல்வி உரிமைச் சட்டம் இடமளித்தபொழுதும் சட்டம் நடைமுறைக்கு வந்து எட்டாண்டுகளுக்கு மேலாகியும் நாடு முழுவதிலும் ஒருபைசா கூட தண்டம் பெறாதது ஆட்சியாளர்களின் சார்புநிலையை வெட்ட வெளிச்சமாக்குகின்றது. இச்சட்டம் திரும்பப்பெறப்பட்டு பொதுப்பள்ளி, அருகமைப் பள்ளி ஆகியவற்றை மையப்படுத்திய புதிய சட்டம் கொண்டு வருதல் வேண்டும். கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட்டு மாநிலங்கள் இப்பணியினை மேற்கொள்ள வெண்டும்.
தமிழகத்தில் சமச்சீர்க் கல்வி அமலாக்கம் பற்றி…?
சமச்சீர் கல்விக் குழுவில் நான்கு வாரியத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடமளிக்கப்பட்டது. தங்கள் நலனை நாடினார்களேயொழிய தமிழ்நாட்டு மாணவர் நலனைப் பார்க்க மறுத்தார்கள். மெட்ரிக் வாரியப் பிரதிநிதி அங்கீகாரம் மறுக்கப்பட்ட ஒரு பள்ளியின் நிர்வாகி. அவர் தன் பள்ளிக்கு அங்கீகாரம் பெறத்தக்க வகையில் விதி மாற்றங்களை மாற்றவே முயன்றார். அவரது எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. என்னுடைய கருத்து புறக்கணிக்கப்பட்டது.
ஒரே பாடத்திட்டம், ஒரே பாடநூல், ஒரே பொதுத் தேர்வு என்பதோடு நின்றுவிட்டது. தனியார் கல்விக்கூடங்களின் அரசின் மேலுள்ள ஆதிக்கம் குறைத்து மதிப்பிடப்பட்டது. குறைந்தது அனைத்துக் குழந்தைகளுக்கும் முன்பருவக் கல்வி அளிக்க முற்பட்டிருக்கலாம். மெட்ரிக் எம்.ஜி.ஆரின் குழந்தை. சமச்சீர் கல்வி கலைஞருடைய குழந்தை. எனவே புறக்கணிக்கப்படுகின்றது.
மெட்ரிக் பள்ளிகள் எம்.ஜி.ஆரின் குழந்தையா.. ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
எனது பல கட்டுரைகளிலும் மெட்ரிக் வாரியம் பிறந்த கதையைச் சொல்லியுள்ளேன். தமிழகக் கல்வியைச் சீரழித்தவர். இலவசக் கல்வி, தமிழ்வழிக் கல்விக்கு உலை வைத்தவர். கீழேயிருந்து அமைச்சர் வரை ஊழல் மிக்கதாகக் கல்வித் துறையை ஆக்கியவர். ஊராட்சிகளிடமிருந்து பள்ளிகளை அரசின் நேரடி நிர்வாகத்திற்கு மாற்றினார். மெட்ரிக் வாரியம் அமைத்ததுடன் புதிய தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகளாக எம்.ஜி.ஆர். தான் அனுமதி வழங்கினார்..
மேனிலைக் கல்வி வந்ததும் 10-ஆம் வகுப்புத் தேர்வு பல்கலைக் கழக நுழைவுத் தகுதியாகாதென்றும் 1978-க்குப் பின்னர் மெட்ரிக் தேர்வுகள் நடத்தப்படாதென்றும், மெட்ரிக் பள்ளிகள் மாநில வாரியத்தோடோ, சி.பி.எஸ்.ஈ.யோடோ வேறு கல்வி அமைப்போடோ இணைந்து கொள்ளலாமென்று மால்கம் ஆதிசேஷையா பள்ளிகளுக்குக் கடிதம் எழுதினார். அதன்படி இயங்காமல் தனி வாரியம் அமைத்தது மட்டுமின்றி அதன் விதிகளை ஆக்கும் பணியிணை அப்பள்ளி முதல்வர்களுக்கே அளித்தார். பல்கலைக்கழக விதிகள் நீர்க்கச் செய்யப்பட்டன. பாடத்திட்டம் வேறு, ஆங்கிலவழிக்கல்வி, கட்டணக் கல்வி, ஆசிரியர்கள் உரிமைப் பறிப்பு இவையே பலன். மேலும் புதிய பள்ளிகளுக்கு மாநில வாரியத்தில் இணைக்காது மெட்ரிக் பள்ளிகளாகவே அனுமதிக்கப்பட்டன. 34 பள்ளிகள் 150 மடங்கு அதிகரித்தது. ஒரு வட்டாரத்தின் கல்வித் தேவைக்கேற்பவே புதிய கல்விக்கூடங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்ற விதி காற்றில் விட்டு பல ஆண்டுகளாக தரமான கல்வி அளித்து வந்த அரசுப் பள்ளிகள் முடக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர். ஆசிரியர்களை அரசு ஊழியர்கள் ஆக்கியது தவறு என்கிறீர்களே... ஏன்?
ஆங்கிலேயர் காலந்தொட்டு பாமரர்க்குக் கல்வி அளிக்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கும்,, உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்குமே இருந்தது. அரசு ஆசிரியர் கல்விக்கூடங்களோடு இணைந்த மாதிரிப்பள்ளிகள், இஸ்லாமியப் பெண்களுக்கான பள்ளிகள், ஒன்று பட்ட சென்னை மாகாணத்தில் 20-க்கும் குறைந்த பள்ளிகளே கல்வித்துறையின் நிர்வாகத்தில் இருந்தன. உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வாகிக்கப்பட்ட பள்ளிகளை கல்வித்துறை ஆண்டாய்வு செய்தன. இப்பள்ளிகளுக்கான இடத்தை மக்களே அளித்தனர். அவை மக்கள் பள்ளிகளாக இயங்கின. அன்றைய கல்விச் செயலர் ஆர்.ஏ.கோபால்சாமி,ஐ.சி.எஸ் உள்ளாட்சிப் பள்ளிகளை அரசு ஏற்பதை எதிர்ப்பதற்குச் சொன்ன காரணம்: நிர்வாகியும், ஆய்வாளரும் ஒருவராகவே இருந்தால் குறைகள் சுட்டப்படாது. ஏனென்றால் குறைகளுக்குக் காரணமானவரும், தீர்க்க வேண்டியவரும் ஒருவரே. நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட பள்ளிகளை சென்னையிலிருந்தே நிர்வகிக்க இயலாது. அரசியல் சட்டம் 73,74ஆம் திருத்தங்கள்படி கல்வி உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்கள், விடுப்பு விதிகள், ஓய்வுகாலப் பயன்கள் அனைத்தும் உள்ளாட்சி ஆசிரியர்களுக்கு உண்டு. அவர்களுக்கு எவ்வித இழப்பும் கிடையாது.
ஆனால் உள்ளூர் மக்கள் VEC, SMC குழுக்கள் மூலம் தலையிடுவதையே கூட பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவதில்லையே தோழர்?
ராஜீவ் காந்தியோடு நடந்த உரையாடலின் பொழுது சமூகம் ஆசிரியர்களைக் கண்காணிக்க வேண்டுமென்ற கருத்தை நான் எதிர்த்தேன். ஏமாற்ற நினைக்கும் ஆசிரியர் எப்பொழுதும் ஏமாற்றுவார். பள்ளிக்குச் செல்லாத ஆசிரியர் உள்ளூர் அரசியல்வாதிக்கு சேவகம் செய்வார் என்றேன். நீங்கள் பீகாருக்குச் சென்று பாருங்கள். ஏதேனும் ஒரு பள்ளியில் ஆசிரியர் இருந்தால் எனக்குத் தந்தி அடியுங்கள், நான் வந்து அந்த ஆசிரியரை கௌரவிக்கின்றேன் என்றார். நான் சொன்னேன். தமிழகம் வாருங்கள். எந்தப் பள்ளிக்கும் செல்லுங்கள். ஆசிரியரில்லாது ஒரு பள்ளியும் இருக்காது. இது நடந்தது 1985-ஆம் ஆண்டில். அதற்குப் பின்னர் தான் உள்ளாட்சிப் பள்ளிகளை அரசு மேற்கொண்டது.
ஆசிரியர்கள் சுதந்திரம் அனுபவித்துவிட்டார்கள். கட்டுப்பாடுகளை விரும்பவில்லை. இருந்தபோதிலும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் கடமையுணர்வோடே செயல்படுகின்றனர். இயக்கங்கள் தான் தேவையற்ற அச்சத்தை உருவாக்கியுள்ளனர்.
பாடத்திட்டத்தில் தரம் என்பது என்ன? உலகத்தரம், உள்ளூர்த்தரம் என்கிறார்களே..?
உலகத்தரம் என்பது என்ன. அமெரிக்கத் தரமா, ஜெர்மன் தரமா, பிரிட்டிஷ் தரமா, ஜப்பானிய தரமா, சோவியத் தரமா. உலகத் தரம் என்பது பொருளற்ற பிதற்றல். அது போலத் தான் தேசியம் என்பதும். அரசியல் சட்டத்திற்கு மீறாது இருக்க வேண்டும். அரிசி நெல்லிலிருந்து பெறப்படுகின்றது என்று அறியாத சென்னை மாணவனுக்கும் அந்நெல்லை உற்பத்தி செய்யும் தஞ்சை மாணவனுக்கும் எவ்வாறு ஒரே பாடத்திட்டம் இருக்க முடியும். மண்சார்ந்த பாடத்திட்டங்களே நாட்டிற்கும், வாழும் மக்களுக்கும் பயன் தரும்.
குடந்தை வழக்கில் அனைவரும் விடுதலை என்றால் குற்றவாளிகள் யார்.?
குடந்தை தீ விபத்து ஏற்பட்டவுடன் ஃப்ரண்ட்லைனுக்கு நான் கொடுத்த பேட்டியில் இது அரசின் தவறான கொள்கைகளின் விளைவு என்று தெரிவித்தேன். தனி நபரின் கொள்ளைக்குத் துணை நின்றதன் விளைவு. அரசு தன் தவற்றை மறைக்க ஓலைகளின் மீது பழி சுமத்தியது. ஒரே நாளில் எல்லாப் பள்ளிகளினின்றும் ஓலைகள் நீக்கப்பட்டன. ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு வாரியங்களுக்கு உட்பட்ட மூன்று பள்ளிகள் அனுமதிக்கப்பட்ட விதி மீறலே தீ விபத்திற்குக் காரணம்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை முயற்சிகள்…?
மூன்றாண்டுகளாயினும் கொள்கை வெளியிடப்படவில்லையே. ஏன் என்று கேட்பாரும் யாருமில்லை. கேட்கப் போய் கேடு கெட்ட கொள்கையை அறிவித்துவிடுவார்களோ என்ற அச்சம் வேறு உள்ளது..
கோத்தாரிக் கல்விக்குழு : 50 ஆண்டுகள் ஓடி விட்டன..?
கோத்தாரிக் கல்விக் குழு மிகச் சிறந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது தான் அதன் சிறப்பு. வெளிநாட்டு கல்வியாளர்களின் பங்கேற்பு அவ்வறிக்கைக்கு பலமாகும். மக்கள் நலனை முன் வைத்தே அதன் பரிந்துரைகள் அமைந்தன. இன்றும் அதன் பரிந்துரைகள் அர்த்தமுள்ளவை. அருகமைப் பள்ளி, பொதுப் பள்ளிமுறையை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்றைய பல பிரச்சினைகளும் தவிர்க்கப்பட்டிருக்கும். உயர்கல்வியும் நாட்டின் தேவைகளை நிறைவு செய்யத்தக்கதாக வளர்ந்திருக்கும். கல்லூரிகளுக்கும், மக்களுக்கும் பெரும் இடைவெளி இருக்கின்றது. சில மணி நேரங்களே பயன்படுத்தப்படும் அறிவியற்கூடங்கள் விவசாயிகளுக்குத் திறந்துவிடப் படவில்லையே…
தகுதித்தேர்வு, நுழைவுத்தேர்வு – இவைகளின் பின்னணி தான் என்ன?
நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படை நோக்கமே வடிகட்டல் ஆகும். இருக்கின்ற குறைவான வாய்ப்புகளுக்கு பல்லாயிரக்கணக்கானோர் போட்டியிடுகின்றனர். அரசுப் பணியாளர் தேர்வும் நூற்றில் 99 பேரை விலக்கவே பயன்படுத்தப்படுகின்றது. மருத்துவக் கல்லூரியில் சேர பல்கலைக்கழகம் தகுதியை நிர்ணயித்துள்ளது. அந்த அடிப்படையில் மாணவர் சேர்க்கை காலங்காலமாக நடைபெற்று வந்தது. ஆகச் சிறந்த மருத்துவர்கள் உருவாகினர்.
கல்வி விதிகள் ஆசிரியர்களுக்கான பொதுத் தகுதி, தொழிற்தகுதி ஆகியவற்றைத் துல்லியமாக நிர்ணயித்துள்ளது. ஆசிரியர் கல்வி மாநில அரசு, பல்கலைக்கழகங்கள் பொறுப்பில் இருந்தன. நன்முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆசிரியர் கல்வியைச் சீரழித்தது தேசிய ஆசிரியர் கல்வி வாரியம். ஒரே ஆண்டில் எழுநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நல்ல பயிற்றுநர்களோ, உட்கட்டமைப்பு வசதிகளோ இல்லாத இந்நிறுவனங்கள் வணிக மையமாகவே நடைபெற்று வருகின்றன. அவற்றின் செயல்பாட்டினைக் கண்காணிக்கத் தேவையான மனித சக்தியே கிடையாது. நடுவணரசு அமைப்பின் ஊழலை மறைக்க தகுதித் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலங்களின் தேவைக்கேற்ப ஆசிரியர்களை உருவாக்க மாநில அரசும், பல்கலைக்கழகங்களும் பொறுப்பானால் வேலையில்லா ஆசிரியர்கள் உருவாகமாட்டார்கள். உடனடியாக தரமற்ற ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெறுவது அவசியம்.
நீட் தேர்வு ஏன் நியாயமற்றது?
கல்வி மாநிலப் பட்டியலிருந்து மாற்றப்பட்டது மாநில நலன்களுக்கு முரணானது. மாநிலப் பட்டியலில் இருந்த பொழுது தான் தமிழ்நாடு கல்வியில் சீரிய முன்னேற்றங்களைக் கண்டது. சமூக, பொருளாதார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் நாடு தழுவிய தேர்வு எளியவரை பாதிக்கும்.. ஒரு மூன்று மணித் தேர்வு ஒரு மாணவரின் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடாது. தனிப் பயிற்சி சமத்துவத்திற்கு முரண்பட்டது. நீட் தேர்வு நியாயமற்றது, தேவையற்றது என்பதைப் பரப்புவோம். உறைவிடப்பள்ளிகளில் சேர்க்கையைக் கட்டுப்படுத்த வலியுறுத்துவோம். ஒரு தேர்வின் அடிப்படையில் அல்லாது 10,11,12, ஆகிய மூன்றாண்டுகளின் சராசரியைக் கணக்கில் கொள்ளலாம். வினாத்தாள்களில் சரிபாதி பல்விடைப் பொறுக்கல், பொருத்துதல், நிரப்புதல் வினாக்கள் இடம் பெறலாம்.
ஒரே நாடு .. ஒரே பாடத்திட்டம்.. ஒரே தேர்வு.. சாத்தியமா ?
இந்திய அரசியல் சட்டம் இந்தியா மாநிலங்களின் கூட்டு (Union of States) என்று தான் சொல்கின்றது. ஒரே நாடாக இயங்கிக் கொண்டிருக்க மக்களின் ஒற்றுமையே காரணம். பல மதங்கள், சாதிகள், மொழிகள், பண்பாடுகள் இருந்த போதிலும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு இருக்கின்றது. அவ்வொற்றுமையைக் குலைக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆனாலும் நாம் விழிப்போடு இருத்தல் அவசியம். இந்த அடிப்படையில் தான் கல்வி மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டது. ஒத்திசைவுப் பட்டியலுக்குச் சென்ற பின்னும் மாநிலத் திட்டங்களில் நடுவணரசின் தலையீடு ஏறக்குறைய இல்லை. பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின்னரே தலையீடு அதிகம். மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றது. மாநிலங்களோடு விவாதிக்காமலும், அவற்றின் இசைவினைப் பெறாமலும் முடிவுகள் திணிக்கப்படுகின்றன. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றிடுவது அவசியமாகின்றது.
நம் காவல்துறையை விட சி.பி.ஐ. மேலானது, நமது பாடத்திட்டத்தை விட சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டம் உயர்ந்தது போன்ற எண்ணங்களிலிருந்து மீள வேண்டும். நீட் ஆதரவும் இம்மனப்போக்கால் தான்..
மருத்துவப் படிப்புகளுக்கு இதற்கு முந்தைய நடைமுறைகள் எப்படி இருந்தன..?
ஆங்கிலேயர் காலத்தில் தொழிற்படிப்புகளில் சேர ஆர்வம் குறைவு. இண்டர்மீடியட் (இன்றைய மேநிலைக்கல்வி) முடித்திருந்தால் போதும். கணிதம் படித்து மருத்துவக் கல்லூரியில் படிப்பை மேற்கொண்டவரும் உண்டு. கிண்டி பொறியியல் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரிகளில் மாணவரை ஈர்க்க படிப்புதவித் தொகையும் வழங்கப்பட்டதென்றால் இன்று வியப்பைத் தரும். விடுதலைக்குப் பின்னர் புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டதாலும் மனிதவளத் தேவை அதிகரித்ததாலும் தொழிற்படிப்புகளுக்குச் சேர்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த அளவிற்கு தொழிற்கல்லூரிகளில் இடமில்லாததால் மாணவர் சேர்க்கையைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பெற்றன. மேலும் கிராமப்புற மாணவர்க்கும் வாய்ப்புகள் அளிக்க ஒவ்வொரு மாவட்டத்தின் மக்கள்தொகைக்கேற்ப இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றோடு மதம், சாதி சார்ந்த ஒதுக்கீடும் பின்பற்றப்பட்டது. இதன்படி சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்க அரசியல் சட்டம் 1950 ஜனவரி26 அன்று நடைமுறைக்கு வந்தது.
ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த செண்பகலக்ஷ்மி என்பவர் அரசியல் சட்டம் வழங்கும் சமத்துவக் கோட்பாட்டிற்கு முரண்பட்டதென்று வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெறுகின்றார். இத்தீர்ப்பை எதிர்கொள்ள பெரியார் அவர்கள் ஆதரவுடன் நடைபெற்ற மக்கள் எதிர்ப்பால் நீதிமன்றத்தின் பார்வைக்கு அப்பால் ஒதுக்கீடு முறை முதல் அரசியல்சட்டத் திருத்தத்தின் மூலம் வைக்கப்பட்டது. மாவட்ட ஒதுக்கீடும், மத ஒதுக்கீடும் நீங்கியது. கல்வியில் முன்னிலையில் இருந்த சென்னை, தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டத்தினர் பயன் பெற்றது இன்றளவும் தொடர்கின்றது. மத,சாதி ஒதுக்கீட்டின் படி பார்ப்பனர்களுக்கு 14 இடங்களில் 3 ஓதுக்கப்பட்டிருந்தது. உள்ளதும் போச்சு லொள்ளைக் கண்ணா என்பது போல பார்ப்பனர் தனி ஒதுக்கீட்டை இழந்தது தான் வழக்கால் பெற்ற இலாபம்.
நேர்முகத் தேர்விற்கு மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டது. முழுக்க முழுக்க தேர்வுக்குழுவினரே மதிப்பெண் அளித்ததால் ஊழலிற்கு இடம வகுத்தது. அதே சமயம் பிற்பட்ட பகுதி மாணவர் இடம் பெறவும் உதவியது.
மேனிலைக் கல்வி வந்ததும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களது பரிந்துரையின்பேரில் பொதுநுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. தொழிற்கல்வி சேர்க்கைக்கு மேனிலைத்தேர்வில் சம்பந்தப்பட்ட பாடங்களின் மதிப்பெண்கள் 200 , நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் 100 ஆக மொத்தம் 300 மதிப்பெண்கள் எனக் கொண்டு சேர்க்கை நடைபெற்றது. ஐ.டி. நல்ல வேலை வாய்ப்புகளைக் கொண்டிருந்ததால் பொறியியல் படிப்பிற்கே அதிகப் போட்டியிருந்தது. மருத்துவம், பொறியியல் இரண்டு படிப்பிற்கும் தேர்வானவர்களில் பலரும் பொறியியலையே தேர்ந்தெடுத்தனர். நுழைவுத் தேர்வு முறை வந்ததும் தனிப்பயிற்சி மையங்களும் தோன்றின. ஒரு மாணவரது வாழ்க்கையை நிர்ணயிக்கும் படிப்பாக மேனிலைக் கல்வி மாறியது. அதனால் தேர்ச்சி பெற்றும் பல காரணங்களால் அதிக மதிப்பெண் பெற முடியாதவர் தேர்ச்சி பெற்ற பாடத்திலும் மறு தேர்வு எழுதி தகுதியை உயர்த்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. நுழைவுத் தேர்வுப் பயிற்சி மையங்கள் மறு தேர்வு பயிற்சி மையங்களாயின. இராசிபுரத்தில் தொடங்கி நாமக்கல் மாவட்டத்தில் பிற ஊர்களிலும் இத்தகைய பயிற்சி மையங்கள் முழு நேரக் கல்வி நிறுவனங்களாகச் செயல்படத் தொடங்கின. நுழைவுத் தேர்வுகள் நிறுத்தப்பட்டும் இப்பள்ளிகள் மருத்துவம், பொறியியல் படிப்புகளை முன்னிறுத்தி மனனமுறைக் கல்வியின் வளர்ப்பிடங்களாக உருவாகியது தமிழகத்தில் பள்ளிய நடைமுறைகளையே புரட்டிப் போட்டதன் விளைவை இன்று காண்கினறோம்.
நீட் இருந்தாலும் இல்லையென்றாலும் மருத்துவக் கல்விக்கான கதவு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அடைக்கப்பட்டே இருக்கிறது இல்லையா தோழர்?
என்றைக்குப் பொதுப்பள்ளி முறையினின்று விலகினோமோ அன்றே எளியவர்க்கான உயர்கல்வி மறுக்கப்படும் நிலை தோன்றியது. அரசின் தனியார்மயக்கொள்கை மறுதலிக்கப்பட இது தேர்தல் அரசியலில் இடம்பெற வேண்டும். மக்களுக்குக் கல்வி உரிமை பற்றிய புரிதல் இல்லை.
இன்றைய உலகமயமாக்கல் சூழலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவது மட்டுமே தீர்வாகாது தானே.?
ஆம். டி.எம்.ஏ.பை வழக்கில் தனியார்மயப்படுத்தலுக்கு உச்சநீதி மன்றம் கொடுத்த வாதமும் இதுவே. உலகமயமாதல் கொள்கையை முழுமையாக நிராகரித்தால் தான் அனிதாக்களுக்கு கல்வியும் வேலையும் கிடைக்கும். உலகமயமாதல் கொள்கையே ஆங்கிலவழிக் கல்விக்கு ஆதாரம். நம் நாட்டுத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு அன்னியர் (அமெரிக்கா) தேவைகளை நிறைவு செய்ய நமது கல்வி அமைப்பு செயல்படும். இன்று அமெரிக்காவிற்கு நம் மருத்துவர்களும், பொறியாளர்களும் தேவையில்லை. ஆனால் அமெரிக்காவை முன்னிறுத்தியே நமது கல்வி அமைப்புகள் செயல்பட்டு வந்தன. ஆகையினால் படித்த பட்டதாரிகள் தெருவில் அலைவர். உலகமயமாதலிலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது. அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதை தான். நமது தேவைகளுக்கேற்ப நமது கல்வி அமைப்பு செயல்பட வேண்டும்.
நவோதயா பள்ளிகள் மூலம் தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது எனும் போது ஏன் எதிர்க்கப் படுகிறது..?
இல்லை. அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதினின்று அரசு நழுவிட நவோதயா ஒரு உக்தி..
அரசுப் பள்ளி சந்திக்கும் நெருக்கடி குறித்து….
அரசின் கொள்கைகள் அடிப்படையில் தான் அமைப்புகள் உருவாவதும், இயங்குவதும் நடைபெறும். தனியார் மையம் அரசியல்வாதிகளுக்கும் வருவாய் தருவதால் அதனை வளர்ப்பதே அரசின் கொள்கையாக இருக்கும். தேவைக்கு அதிகமாகப் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்ததால் அவை இயங்க பிள்ளை பிடிக்க அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதற்கு பல ஆண்டுகளாகச் சீராக இயங்கி வரும் அரசுப் பள்ளிகளை முடக்க வேண்டும். ஆயிரக் கணக்கான அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பாட ஆசிரியர்களும் முழு அளவில் நியமிக்கப்படவில்லை.
பிரச்சினையின் உண்மை நிலை புரியாது அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பது தான் தீர்வு என்று திசை மாற்றும் போக்கிற்குப் பலரும் சப்பை வைப்பது வேடிக்கை. மாநிலக் கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை ஆகியவற்றை வெளியிடக் கேட்க வேண்டியது தானே. அரசின் கொள்கையே தனியார் சார்பாய் இருந்தால் எந்த சக்தியாலும் பொதுப் பள்ளிகளைக் காப்பாற்ற இயலாது.
நேர்காணல்: தேனி சுந்தர்
நன்றி: புதுவிழுது இருமாத கல்வி இதழ்
செப்-அக்.2017

Comments
Post a Comment