இல்லந்தோறும்.. உள்ளந்தோறும்.. நாள்தோறும் அம்பேத்கர்..! – தேனி சுந்தர்
தேசமே கார்பரேட் மயமாகும் இன்றைய சூழலில் அனைத்து தரப்பினரும் அவரவர் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க போராடியாக வேண்டியிருக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பெரும் நிறுவன ஊழியர்கள் தங்கள் தீராத பிரச்சனைகளுக்காக வேறு வழியின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அத்தகைய வேலை நிறுத்தங்களை தடைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட தொழிற்தகராறு சட்ட மசோதாவை எதிர்த்துப் போராடி உரிமையை பிரிட்டிஷ் இந்தியா காலத்திலேயே நிலைநிறுத்தியவர் டாக்டர் அம்பேத்கர்..
எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம், அகவிலைப்படி வழங்கிடும் சட்டம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, தொழிலாளர் வைப்பு நிதிச் சட்டம், ஊதியத்துடன் கூடிய விடுப்புச் சட்டம், தொழிலாளர் விபத்து நஷ்ட ஈடு, வேலைவாய்ப்பு அலுவலக உருவாக்கம், சம வேலைக்குச் சம ஊதியம், தொழிலாளர் நலத்துறை என ஒடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காக அவர் வாதாடாத, போராடாத அம்சங்கள் எதுவுமில்லை..
குறிப்பாக பெண்களின் உரிமைக்காக அவரது போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. பெண்களை இழிவாகவும், கேவலமாகவும் பேசுகிற மனுதர்மம் போற்றப்படும் நாட்டில் இந்த அடிமைத் தளைகளைக் கட்டவிழ்த்து பெண்ணினம் விடுதலை பெற அயராது போராடி இருக்கிறார். நமது போற்றுதலுக்குரிய தலைவர்களான நேரு போன்றவர்களும் அவரைக் கைவிட்ட நிலையில் இராஜேந்திர பிரசாத், வல்லபாய் படேல் போன்ற தலைவர்கள் இன்றைய இந்துத்துவ கும்பலின் முன்னோடிகளில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களுடன் இணைந்து பெண் விடுதலைக்கு தடையாக நின்று அம்பேத்கரைத் தோற்கடிக்கின்றனர்.. இல்லை, கோடிக்கணக்கான இந்தியப் பெண்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். பெண்களின் விடுதலைக்கான நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அந்த நீண்ட போராட்டத்தில் தன்னால் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தன்னுடைய சட்ட அமைச்சர் பதவியையும் துச்சமெனத் துறக்கிறார் டாக்டர் அம்பேத்கர்.
இன்னும் கூட நிலங்களைத் தேச உடைமை ஆக்குதல், கூட்டுப் பண்ணை விவசாயம், அரச சோசலிச அமைப்பு முறை என நிறைய எழுதியிருக்கிறார். புத்தரும் மார்க்சும் குறித்து ஆராய்ந்திருக்கிறார். இரண்டு சிந்தனைகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளை பேசியிருக்கிறார்.
ஒரு சமூகம் தனது வடிவத்திலும் அமைப்பிலும் சனநாயக முறையில் இல்லையென்றால் அந்த சமூகத்துக்காக செயல்படும் அரசு சனநாயக அரசாக இருக்க முடியாது. சமூக, பொருளாதார சனநாயகம் இல்லாமல் அரசியல் சனநாயகம் மட்டும் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. அதாவது இந்தியாவில் அரசியல் ரீதியாக மட்டும் நாம் அனைவரும் சமம். அனைவருக்கும் ஒரே வாக்குரிமை. சம வாக்குரிமை. ஆனால் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக நாம் சமமற்றவர்கள். பிந்தைய நிலை நீடிக்கும் போது முந்தைய நிலை அர்த்தமற்றதாகி விடும்.
கம்யூனிசத்தின் மீது அவர் கொண்ட நம்பிக்கை, மக்களின் சமத்துவ வாழ்வுக்காக ஆட்சி அதிகாரத்திற்கு லட்சியம் கொண்ட தொழிற்சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் இந்து மகா சபை அல்லது அது போன்ற வகுப்புவாத அல்லது முதலாளித்துவ கட்சிகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என அவர் விடுக்கும் எச்சரிக்கை என அம்பேத்கர் பற்றி அறிவதற்கு ஏராளம் உள்ளது..
எனவே, சுதந்திர தினத்திலும் குடியரசு தினத்திலும் அல்லது அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மட்டும் நினைக்கப்பட வேண்டியவர் அல்ல டாக்டர் அம்பேத்கர். 100, 125, 150ஆவது ஆண்டு என சிறப்புமிக்க அந்த ஆண்டுகளில் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர் அல்ல டாக்டர் அம்பேத்கர். நாள்தோறும் பேசப்பட வேண்டியவர்..
எந்தெந்த வீடுகளிலெல்லாம் பெண்கள் இருக்கிறார்களோ எந்த வீடுகளில் உழைக்கும் மக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம், சட்டப் பாதுகாப்பு உரிமைகளைப் பெற்று தேசமெங்கும் பணியாற்றக்கூடிய அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர், பெரு நிறுவன ஊழியர்கள் இல்லங்களின் வரவேற்பறையை, வாசிப்பறையை அலங்கரிக்க வேண்டிய ஒப்பற்ற பெருந்தலைவர் டாக்டர் அம்பேத்கர் என்பதை அழுத்தமாக உணர வைக்கிறது பேரா. முனைவர். க.கணேசன் அவர்கள் எழுதிய எல்லோருக்குமானவரே – என்கிற நூல்.
அகில இந்திய விவசாய சங்கத் தலைவர் முனைவர் அசோக் தாவ்லே எழுதிய டாக்டர் அம்பேத்கர் : ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதிக்கான போராளி என்கிற கட்டுரையின் தமிழாக்கம், அந்தக் கட்டுரை மொழியாக்கத்தின் போது நூலாசிரியருக்கு எழுந்த சிந்தனைகள், இந்துச் சட்ட திருத்த மசோதாவுக்காக அம்பேத்கரின் போராட்ட படிப்பினைகள் குறித்த தோழர் பிருந்தா காரத் எழுதிய கட்டுரை, அதை மையப்படுத்தியும் விரிவாக்கியும் எழுதப்பட்ட எல்லாருக்குமானவரே என்கிற கட்டுரை மற்றும் ஒரு பாடல் ஆகியவை இச்சிறு நூலில் இடம் பெற்றுள்ளன.
இச்சிறு நூல் அம்பேத்கர் குறித்த பெருங்கடல் அளவிலான அறிவைத் தேடிப் பெறுவதற்கும் ஆராய்வதற்குமான பெருந்திறப்பின் நுழைவாயிலாக அமைந்துள்ளது. இச்சிறு நூல் அம்பேத்கர் குறித்து நமது நீண்ட ஒரு வாசிப்பைத் திட்டமிடக் கோருகிறது. வழிகாட்டுகிறது.
உங்கள் வாசிப்பறையில் அம்பேத்கர் வரிசையில் பேரா. முனைவர். க.கணேசன் அவர்கள் எழுதிய “எல்லோருக்குமானவரே” – என்கிற இந்த நூலும் அவசியம் இடம்பெற வேண்டும். (பக்கம்: 72, விலை ரூ.20/-)
வெளியீடு : பொதுப்பள்ளிக்கான மாநில மேடை எண்..14.ஏ, சோலையப்பன் தெரு, தியாகராய நகர். சென்னை -17 அலைபேசி : 94868 64990
Comments
Post a Comment