அதிர்ந்தது நிலம் மட்டுமில்லை… - தேனி சுந்தர்

இந்த முறை சீக்கியர்களை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என முடிவெடுத்துத் தனது பெரும்படைகளை அனுப்பினார் பேரரசர் ஃபரூக்சி. அவர் நினைத்தபடி நடந்தது. சீக்கியப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அப்படைக்கு தலை மையேற்று மொகலாய அரசர்களுக்கு குடைச்சல் கொடுத்து வந்த பண்டா சிங் கைது செய்யப்பட்டார். “டெல்லியை நோக்கிப் புறப்பட்ட வெற்றி ஊர்வலத்தில் இருநூறு சீக்கியர் களின் தலைகளோடு விலங்கிடப்பட்டு இரும்புக் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பண்டா சிங்கும் இருந்தார். தலைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அரசர் கோபமடைவார் என்று எண்ணிய படைத் தலைவர்கள், திரும்பிச் செல்கிற வழியில் இருந்த அக்கம்பக்கத்து கிராமங் களில் வசித்த அப்பாவி சீக்கியர்களைக் கொன்று குவிக்குமாறு தனது படை களுக்கு உத்தரவிட்டனர். இப்படியாக சாதாரண குடிமக்களும் கொல்லப்பட்டு அவர்களது தலைகளும் ஊர்வலத்தில் சேர்க்கப்பட்டன. இந்த ஊர்வலம் டெல்லியை அடைந்தபோது தலைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தன. இந்தக் கொடூரம் நடந்தது 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்.


மன்னராட்சி காலத்திற்கு நிகரான அல்லது அதையும் விஞ்சி விடும் அளவிற்கு “என்னுடைய பகுதியில்தான் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அமைச்சரவையில் எனக்குத்தான் இடம் கொடுக்க வேண்டும்! எனக்குத்தான் முக்கிய இலாகா ஒதுக்கப்பட வேண் டும்…” என்ற கோரிக்கைகள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களால் வெளிப்படை யாக முன்வைக்கப்பட்ட அவலத்தை இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத் தில் இந்திய சமூகம் கேட்க நேர்ந்தது. மக்களாட்சி முறைக்கு இந்தியா மாறி விட்ட பிறகு, தேசத்திற்கென எழுதப்பட்ட ஒரு அரசியலமைப்பு சாசனம் உருவாக்கப்பட்டு கால் நூற்றாண்டு காலத்திற்கும் பிறகு நம் நாடு கண்ட அவலம் இது. ஆம், 1984, அக்.31ஆம் தேதி பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவ லர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் அரச ஆதரவோடு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை குறித்துத்தான் பேசிக்கொண்டி ருக்கிறோம்.

“டெல்லி குடிநீர் தொட்டிகளில் சீக்கியர் கள் விசத்தைக் கலந்து விட்டனர். பஞ்சாப் பில் இருந்து டெல்லி நோக்கி வரும் ரயில்கள் முழுவதும் இந்துக்களின் பிணங்கள் நிறைந்து கிடக்கின்றனர். நூற்றுக்கணக்கான சீக்கிய தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் டெல்லிக்குள் நுழைந் துள்ளனர்..” என காவல்துறை வாகனங்க ளின் மூலமாகவே வதந்திகள் பரப்பப் பட்டன. தொலைக் காட்சிகளில் அமைதி காக்க வேண்டும் என்று பேட்டியளித்த தலை வர்கள் தலைமையில்தான் கலவரங்கள், வன்புணர்வுகள், கொலை, கொள்ளை என அனைத்தும் அரங்கேறின. தூர்தர்ஷன் இதில் முக்கியப் பங்கு வகித்தது. சீக்கியர் வசிப்பிடங்களை அடையாளம் காட்டும் விதமாக வாக்காளர் பட்டியல் வழங்கப்பட் டது. எரித்துக் கொல்வதற்காக டயர்களும் கெரசினும் போதுமான அளவில் கொலை கார கும்பலுக்கு அளிக்கப்பட்டது. எங்கா வது மறைந்து கொண்டு தங்களை காப் பாற்ற வேண்டும் என்று சீக்கியர்களிட மிருந்து அழைப்பு வந்தால் அந்த தகவல் உடனடியாக கொலைகார கும்பலுக்கு தெரி விக்கப்பட்டது. தற்காப்புக்காக எதிர்த்துப் போராடிய சீக்கியர்கள் மீது இரண்டொரு தினங்களில் வழக்குகள் பதிவுசெய்யப் பட்டு கைது செய்யப்பட்டனர். எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேரைக் காண வில்லை ஒன்றும் தெரியவில்லை. மொத்த மொத்தமாக போட்டு சீக்கியர்கள் எரிக்கப்பட்ட தகவல்கள் எல்லாம் சில ஆண்டுகளுக்குப் பிறகும் கூட வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

நாடு முழுவதும் நாற்பதுக்கும் மேற் பட்ட நகரங்களில் பரவிய கலவரத்தினால் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் சென்னை, கோவையிலும் கூட சீக்கியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் காவல்துறையின் துணையோடு வன்முறை அரங்கேறியது. இராணுவம் கடைசி வரையிலும் களமிறக்கப்படவில்லை. உள்துறை அமைச்சரில் இருந்து குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் வரை புலம்பத்தான் முடிந்தது. கைகளைப் பிசையத்தான் முடிந்தது. “கோன் கா பத்லா கோன்” என்று பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முதல் அந்தக் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் வரை பலரும் முழங்கினர். ஆம், இரத்தத்துக்கு இரத்தம், பழிக்குப் பழி வாங்க துடித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இந்த பிரச்சினை அரசியல் ரீதியாகவே அணுகப்பட வேண்டும் என்று ராஜீவ் காந்தியிடம் தான் வலியுறுத்தியாகப் பதிவு செய்திருக்கிறார் தோழர் ஜோதி பாசு.. ஆனால் நடந்தது வேறு!

“கண்ணில் படும் சீக்கி யர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட பிணங்களின் தலைமயிர்கள் அறுத்து வீசப் பட்டன. சிலரது உடல்கள் கொத்துக் கறியாக சிதைக்கப்பட்டன. சீக்கியப் பெண்கள் தெருவுக்கு இழுத்து வரப்பட்டார்கள். அத்தனை பேரும் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு காட்சிப் பொருள்களாக்கி கற்பழிக்கப்பட்டார்கள். சிறுவர் சிறுமிக ளின் பாலியல் உறுப்புகள் சிதைக்கப் பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட் டன...” என்கிறார் இந்திரா காந்தி மரணம் குறித்த நூலை எழுதிய அர.திருவிடம். மைனா கெளர் மணப் பெண்ணுக்கே உரிய அலங்காரத்தோடு இருந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சங்க மித்த அவர்களது வீட்டின் கதவு ஆத்திரங் கொண்ட ஒரு கும்பலால் தட்டப்பட்டது. கதவு திறப்பதற்காக அவர்கள் காத்திருக்க வில்லை. கதவு உடைக்கப் பட்டது. வீட்டில் இருந்த ஆண்கள் அனைவரும் அடித்து நொறுக்கப்பட்டனர். எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் விடுவதாக இல்லை. ஒரு முடி வோடு தான் வந்திருந்தனர். நிறைவாக ஆண்கள் கொளுத்தப்பட்டனர்.. பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

அதில் மணப் பெண் மைனா கௌர் மட்டும் தப்பிக்க முடியுமா என்ன? அவளை கடத்தியும் சென்றது அந்த கும்பல். இரண்டொரு நாட்களில் ஓரிடத்தில் அவளை விட்டுச் சென்றனர். மீட்கப் பட்ட அவள் மனநிலை பிறழ்ந்த நிலையில் இருந்தாள். இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் அந்த கும்பலில் முன் பின் தெரியாதவர்கள் என்று யாருமில்லை என 1984 சீக்கியர் படுகொலை எனும் நூலில் பதிவு செய்கிறார் ஜெ.ராம்கி.. பேராசிரியர் மோகன் சிங் ஒரு ஆய்வுக்காக தன் மாணவர்களோடு வெளியில் செல்ல வேண்டிய சூழல். வீட்டில் அவரது மனைவி நெல்லி இருந்தார். உடன் அவர்களுடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். ஒரு விசேசத்திற்காக எடுக்கப் பட்ட ஆடைகளை போட்டு மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். கலவரக் கும்பல் புகுந்தது. நெல்லி ஒரு பெண் என்பதால் அதற்குண்டான விலையை அவள் கொடுக்க வேண்டியிருந்தது.. தன் தங்கையின் ஆடையை அணிந்திருந்த ஆண் குழந்தை தப்பியது. அண்ணனின் ஆடையை அணிந்து கொண்டு இருந்த அந்த பெண் குழந்தை யை கும்பல் இழுத்துச் சென்றது.. அங்கே டெல்லி ரயில் நிலையத்தில் தன் மாணவர்கள் சகிதம் இறங்கிய பேரா.மோகன் சிங் நிலைமையை அறிந்து பதற்றம் அடைகிறார். ஆனாலும் அவரது குழுவினர் அங்கிருந்த காவல் துறையினரைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.. ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகும்படி யாக காவல் துறையினர் கைகட்டி நிற்க, அவரது அடையாளம் அவரைத் தனித்துக் காட்ட கலவரக் கும்பல் மோகன் சிங்கை நோக்கி முன்னேறியது. கழுத்தில் டயரை மாட்டி தீயிட்டுக் கொளுத்தினர். - இது ஜஸ்பிரித் சிங் எழுதிய ஹீலியம் நாவலின் காட்சிகள்..

தில்லியில் மட்டும் வன்முறையில் 1000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். 18 வய துக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட சீக்கிய ஆண்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்கள் பல விதங்களில் கொல்லப்பட்டனர். அதுவும் அவர்களு டைய தாய் மற்றும் மனைவிக்கு முன்பாக உடல்கள் கொளுத்தப்பட்டன. ஒரு சம்பவத்தில் ஒரு சிறு குழந்தையை தந்தையுடன் சேர்த்து எரிக்கும் போது, “ஏ சாம்ப் கா பச்சா ஹை. இஸே பீ கதம் கரோ..” அதாவது இது ஒரு பாம்புக்குட்டி. இதையும் சேர்த்து தீர்த்துக் கட்டு என்று கோஷமிட்டனர் என்று தனது இந்திய வரலாறு : காந்திக்குப் பிறகு நூலில் எழுதியிருக்கிறார் ராமச்சந்திர குஹா. மேலும் வன்முறை மிகக் குறைவாக நடந்த மாநகரம் கல்கத்தா. அங்கு 50,000 சீக்கியர்கள் வசித்தனர். அவர்களில் பலர் டாக்சி டிரைவர்கள். ஒவ்வொருவரையும் அவர்களது தலைப்பாகை, தாடியை வைத்து எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஆயினும் மிகச் சிலரே தொல்லைக்கு உள்ளாயினர். ஒருவரும் இறக்க வில்லை. மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அமைதி காக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டார். அந்த அறிவுரை கள் மதிக்கப்பட்டன. நகரின் முக்கிய தொழிற்சங் கங்கள் திறமையாக கண்காணித்தன. நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் இன வன்முறைகளைத் தடுக்க முடியும் என்பதற்கு கல்கத்தா உதாரண மாக இருந்தது. துரதிர்ஷ்ட வசமாக அந்தப் பாடத்தை நாட்டின் பிற பகுதிகள் நடைமுறைப் படுத்தவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்ட தவறவில்லை.

இன்றும் இந்த கொடிய சம்பவத்தின் பாவச் சின்னமாக விளங்குகிறது டெல்லியின் திலக் விஹார் என்னும் குடியிருப்பு பகுதி. விதவைக் காலனி என்றே பெரும்பாலும் அறியப்படுகிறது. தங்கள் அன்பிற்குரிய தந்தையை, கணவனை, பிள்ளை களை குறிப்பாக ஆண் குழந்தைகளை, தங்கள் உழைப்பால் உருவாக்கிய சொத்துகளை இழந்து நிராதவராக நின்ற பெண்களின் குடியிருப்பு. இதிலும் ஏழைகள் அதிகம் வாழ்ந்த சுல்தான் புரி, திரிலோக் புரி அதிகம் பாதிக்கப்பட்டன. அதிகம் ஏழை எளிய மக்களே கொன்றொழிக்க எளிதாக வாய்த்தனர். பாதிக்கப்பட்டதும் அவர்களது குடும்பங்களே.. குழந்தைகளே.. விதவைக் காலனியில் உள்ள பெண்கள் பலரும் தாங்கள் காப்பாற்றிய ஆண் குழந்தை களுக்கு பெண் குழந்தைகளின் ஆடைகளை அணி வித்துக் காப்பாற்றியதாக கூறுகிறார்கள். அப்படி காப்பாற்றி வந்த குழந்தைகளும் போதைப் பொருள் விற்பவர்களாகவும், போதைக்கு அடிமையாகவும், மன ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களாகவும் மாறி இருப்பதை சமீப ஆண்டுகள் வரையிலுமான அவர்களது வலிமிக்க வாழ்க்கையை ஊடகப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கு காரணம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களின் நேரமும் காலமும் நீதிக்காக மக்கள் மன்றத்திலும் நீதி மன்றத்திலும் போராடுவதிலேயே போய்விட்ட தால் அவர்களால் குழந்தைகளைப் பேணிப் பராமரிக்க முடியவில்லை. பள்ளிக் கல்வியை நிறைவு செய்யாத குழந்தைகள் ஏராளம். காரணம், வீட்டில் வருவாய் ஈட்டும் ஆண்கள் இல்லாத காரணத்தினால் அதற்கும் பெண்களே போராட வேண்டியிருந்தது.

இன்னொரு புறம், பிந்தரன் வாலே பிரச்சி னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தியபோது பா.ஜ.க.வின் எல்.கே.அத்வானி போன்றவர்கள் இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். நடவடிக்கை மேற்கொண்ட பிறகு அதையே தங்கள் அரசியலுக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். சீக்கிய கலவரத்தால் பாதிக்கப் பட்ட நபர் களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் 90களில் நடந்த மும்பை கலவரம் குறித்தும், 2002 குஜராத் கலவரம் குறித்தும் பேசும் காங்கிரசார் வாயை அடைக்க பயன்படுத்திக் கொண்ட இந்துத்துவா முயற்சிகளையும் கூட தனது நாவலில் கொண்டு வந்திருக்கிறார் ஜஸ்பிரித் சிங். இந்தப் படுகொலைகள் குறித்து முதன் முதலாகப் பேசிய அப்போதைய புதிய பிரதமர் ராஜீவ் காந்தி குறைந்தபட்ச வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. மாறாக “ஒரு பெரிய மரம் விழும்போது நிலம் அதிரத்தான் செய்யும்,” என்றார். எத்தனையோ கமிட்டிகள், கமிசன்கள், விசார ணைகள், போராட்டங்கள் நடந்திருந்த போதும் காலங்கள் கடந்தனவே தவிர பாதிக்கப்பட்ட அந்த மக்களின் காயங்கள் ஆறவில்லை. நியாயங்கள் கிடைக்கவில்லை. நிலம் மட்டும் அதிரவில்லை என்பதை அனுபவத்தால் அறிந்த மக்களாகிய நாம்தான் எப்போதும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நாட்டின் இன்றைய நிலைமை கள் பற்றி அறிந்தோர், அரசியல் இயக்கங்களின் இன்றைய தேவைகள் குறித்தும் உணர்கிறார்கள். ஜனநாயகம், மதச்சார்பின்மை உள்ளிட்ட மாண்பு களுக்கு எதிரான சவால்களை வெல்வதற்கு வரலாற்றுப் படிப்பினைகளும் தேவை..!
தேனி சுந்தர்

Thanks : 

தீக்கதிர்

31.10.2021

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!