ஆயிசா இரா.நடராசன் சிறுகதைகள் : நூல் குறித்து
“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. நீயெல்லாம் மனுசன் தானா..? என்னைப் பார்.. எடு.. புரட்டு.. வாசி..! நான் உன் கண்ணுக்குத் தெரிகிறேன் தானே..!”
அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களில் நாம் இன்னும் வாசிக்காதவை நம்மை நோக்கி எழுப்பும் குரல்களாகப் பல நேரங்களில் உணர்வது உண்டு. உள்ளே நுழைந்தால் அப்படி ஏராளம் குரல்கள் எழுகின்றன. நம் இயலாமையை என்ன செய்ய..!
அப்படி ஒரு குரல் எழுப்பிய நூல் தான் “இரா.நடராசன் சிறுகதைகள்..” அதுவும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் வரிசையிலிருந்த நூல்.. கடந்த சில நாட்களாக அந்நூலுக்கு என்னை அர்ப்பணித்தேன்..
பெயரில்லாதவன் கதையில் தொடங்கி நூலில் இருக்கும் அத்தனை கதைகளும் சிறப்பு. ஆனாலும் இளவரசி பட்டம், மணி மகுடம் எல்லாம் ஆயிஷா கதைக்குத் தான்..!
ஒவ்வொரு கதையும் வித்தியாசமான படைப்பு. நாம் எதிர்பாராத பாத்திரங்கள். சம்பவங்கள். திருப்பு முனைகள் நிறைந்தவை. அதை தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் அணிந்துரையும் அழகாகச் சொல்கிறது..
கதை நாயகர்கள் அனைவருமே மிக மிக சாமானியர்கள்.. கழிவறை சுத்தம் செய்பவர், செருப்பு தைப்பவர், பன்றி வளர்ப்பவர், பாலியல் தொழில் செய்பவர், வெட்டியான், பிணவறை காப்பாளர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், நரிக் குறவர்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், பெண்கள் என நாம் அன்றாடம் கடந்து போகிற நபர்கள் தோழர் ஆயிஷா நடராசன் சிறுகதைகள் முன்வைக்கும் பாத்திரங்கள்..
நாம் வாழுகின்ற சமூகம் எந்த அளவுக்கு மிகவும் கொடுமையானது என்பதை உணர்த்துகிற கதைகள்.. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது சொந்த குடும்பத்தினராலேயே எவ்வாறு நடத்தப்படுகின்றனர்.. அவர்களுடைய மனநிலையே அவர்களை எவ்வளவு சித்ரவதைக்கு ஆளாக்குகின்றது என்பதை உணர்த்துகிற கதைகள் இரண்டு இருக்கின்றன. மதி என்னும் மனிதனின் இறப்பு குறித்து என்கிற கதையை ஏற்கனவே வேறொரு தொகுப்பில் வாசித்திருக்கிறேன்.. மீண்டும் வாசிக்கையில் மதியின் மரணம் மனதை உலுக்கியது.
வகுப்பறைத் தண்டனைகளால் விரட்டி அடிக்கப்படுகிற முருகேசு, விஞ்ஞானக் கிறுக்கன் போன்ற கதைகள் விவாதக் களங்களாக விரிகின்றன..
கடைசி நடராசன் உள்ளிட்ட சில கதைகள் புதிது புதிதாக அவர் எழுதிப் பார்த்தவை என்று தோன்றுகிறது.. தோழர் கடலூரில் வசித்தாலும் கதைக் களங்கள் விரிந்து கிடக்கும் தன்மையில் இருக்கின்றன. அவர் எடுத்துக் கொண்ட கதாபாத்திரங்கள் அனைத்தும் மிக எளிதாக அனைவராலும் எழுதி விட முடியாதவை. அவர்களின் வாழ்விடமும் வாழ்க்கை முறையும் புழக்க மொழியும் நமக்கு வித்தியாசமானவை. ஆனால் அதை தன் கதைகள் மூலம் மிகவும் சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.. நரிக் குறவர்கள் பற்றிய அந்த கதை இந்த விசயத்தில் மிக மிக சிறந்த ஒன்று என்று நினைக்கிறேன். அந்த கதையை முடித்த விதமும் சிறப்பு. சமீபத்தில் வந்த பாபநாசம் திரைக்கதையை ஒத்த திரில் கிளைமாக்ஸ்..!
தெருவில், சமூகத்தில் இருக்கும் சாமானிய மக்கள் படும் துயரங்களை உணர்த்துகிற கதைகள் நிறைய.. ஆனால் நம் சொந்த வீட்டில்..? நம் பெண்கள் படுகிற துயரங்களைச் சொல்கிறது “சுசீ முதல் சுசீ வரை..!”
களங்கள் பொதுவானவை. காட்சிகள், அனுபவங்கள் பொதுவானவை. ஆனால் அதை நாம் பார்க்கும் கோணம் தான் நம்மை யாரென்று அடையாளப் படுத்துகின்றன.. அந்த வகையில் தோழர் ஆயிஷா நடராசன் சிறுகதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்கள், அதிகாரமற்ற சாமானியர்கள் பக்கம் இருந்து பேசுகின்றன.. அதிகாரம் அற்றவர்கள் அதிகாரம் பெறுவதை நோக்கிப் பேசவில்லை. அதிகாரம் செலுத்தவும் அடக்கி ஒடுக்கப்படவும் தேவையே இல்லாத ஒரு சமதர்ம சமுதாயத்தைப் படைப்பதே அவற்றின் அடிநாதமாக இருக்கின்றன..
அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது..
பாரதி புத்தகாலயம்
தேனி சுந்தர்
நன்றி : புக்டே.இன்
Comments
Post a Comment