மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : சுபஹானியா

மதுரை ஆயி அம்மா கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு கொடுத்து விட்டு சத்தமில்லாமல் இருந்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களது பதிவிற்கு பிறகு மிகவும் கவனம் பெற்றார். அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அதுபோல தாங்கள் படித்த காரியாபட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைவதற்காக 20 ஆண்டுகளுக்கு முன்னரே 5 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்திருக்கிறார் எங்கள் ஐயா சுபஹானியா அவர்கள்..

நான் காளையார் கோவில் டயட்ல சேரும் போது தேனிக்காரன் என்றதும் சிறு புன்னகை தவழ்ந்தது அவர் முகத்தில்.. ஆர்வமாக விசாரித்தார். நமக்கு ஆச்சரியமாக இருந்தது. “அய்.. நம்மூர் பத்திலாம் தெரிஞ்சு வச்சிருக்காங்க..!”

ஐயா தான் அங்கு துணை முதல்வர். அடிக்கடி வகுப்பு வந்ததில்லை. இதர பணிகள் காரணமாக. ஆனால் வருகின்ற நாட்களில் ஐயா மிரட்டி எடுத்து விடுவார்.. பிரமிக்க வைத்து விடுவார் என்ற பொருளில் சொல்கிறேன். நிறைய குட்டி குட்டி செயல்பாடுகள் இடையிடையே சொல்லிக் கொண்டே போவார். “எட்டு எட்டு இருக்கும். அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கூட்டினால் ஆயிரம் வரணும்” என்பார். மிக ஆர்வமாக விடை கண்டுபிடிக்க கிளம்பி விடுவோம். பசி தெரியாத அளவுக்கு சிரிப்பும் குதூகலமுமாக அந்த வகுப்புகள் இருக்கும்..

என்னுடைய விடுதி அறைத் தோழன் ரஜினிகாந்த். எங்களை விட மூத்தவன். குசும்புக்காரன். ஆனால் பெரும்பாலும் நான் மட்டும் தான் அறையில் இருப்பேன்.. அவனுடைய டேப் ரெக்கார்டர் இருக்கும். நான்கைந்து கேசட்டுகள் இருக்கும். அறையில் இருக்கும் நேரங்களில் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் விடுதியில் இருக்கும் மெரிட் மாணவர்கள் பலருக்கும் படிக்க வேண்டும் என்றால் சுற்றுப் புறம் சத்தமில்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். நமக்கு அப்படியல்ல. தேர்வு நேரங்களிலும் அதே தான். ஐயாகிட்ட கம்ப்ளைன்ட்டு போயிருக்கு..




இரவு சாப்பிட்டு விட்டு தூங்கும் முன்பு, கதவுக்கு எதிர்ப்புறம் திரும்பி படுத்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்.. திடீரென உள்ளே வந்த நண்பன் முருகேசன் பாட்டை நிறுத்தி விட்டு வேகமாக வெளியேறினான். (இப்போது அவன் வட்டார வளர்ச்சி அலுவலர், எனக்கு எப்போதும் நண்பன் தானே..!) நான் கோபமாக, வேகமாக திரும்பி அவனை சத்தம் போட்ட, அந்த “கேப்ல” சன்னல் வழியே பாத்தா ஒரு பெருங்கூட்டம் தெரியுது. ஐயாவும் நின்றிருக்கிறார். அப்படியே சத்தமில்லாமல் தூங்குவது போல படுத்து விட்டவன் காலையில் தான் எழுந்தேன்.. காலையில் விசாரணைக்கு அழைப்பார்கள் என்று இருந்தேன். ஆனால் ஐயா அவர்கள் மன்னித்து அருள் புரிந்தார்..!


அவருக்கும் எனது நூலை அனுப்பி இருந்தேன்.. முழுமையாக, உணர்ந்து வாசித்து விட்டு, தன் கருத்தை பக்கம் பக்கமாக எழுதி அனுப்பி இருக்கிறார். வாசியுங்கள்..


👇👇👇👇👇👇👇
மாணவர் மனசு படித்தேன் சுந்தர்.

குழந்தையோடு குழந்தையாய் மாறினால் தான் அவர்களிடம் பொதிந்திருக்கும் அனைத்து திறன்களையும் வெளி கொண்டுவர முடியும் என களத்தில் இறங்கி செயல்படுத்தி வருவது நமது சுந்தரா என நானும் சென்னை சிவாவும் பேசிக் கொள்வோம்.. “எப்படிப்பா இப்படி..?” என மகிழ்ந்து பெருமை கொள்வோம். காளையார் கோயில் தந்த முத்தல்லவா எனக்கு பிடித்த தேனி சுந்தர்.


16ம் பெற்றெடுத்து சிறப்பாக வந்துள்ளது மாணவர் மனசு தொகுப்பு, ஆம், 16 கட்டுரைகள்.. கழிவறையின் ஜன்னலை உடைத்த விஷயத்தை உப்புச் சப்பாக்கி ஆசிரியர்களை சிரிப்பு போலீஸ் ஆக்கியது மாணவர்களின் கெட்டிக்காரத்தனம் தான். ஒளிந்து நின்று சாரைப் பயமுறுத்தி, சார் பயந்துட்டார் என வகுப்பே சிரித்து, பின் அதுவே விளையாட்டாக மாறிவிட்டது. குழந்தையோடு குழந்தையாய் மாறியது சுந்தரின் பொறுமையைக் காட்டுகிறது. அப்பயே துப்பு கொடுத்து உதவுகிற உங்க உளவுத்துறையும் அருமை…


டும் டும் டும் கட்டுரையை வாசிக்கும் போது, காளையார் கோயில் டயட் விடுதியில், மாலை நேரங்களில் மாணவர்கள் அனைவரையும் வட்டமாக உட்கார வைத்து பல நிகழ்வுகள் மற்றும் பாடல்கள் பாட வைத்து ஐயா தனுஷ்கோடி மற்றும் நானும் மகிழ்ந்த காலம் கண்களில் எதிரொலிக்கிறது. காலம் கடந்து குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்களிடம் புத்தகம் தருவது நமது அலுவலக நடைமுறை என்பதை சிறப்பாக பதிவிட்டு விட்டீர்கள், அருமை. மாலையில் எங்களை பார்க்காமல் சென்றீர்கள் என குற்றம் கூறி , பொழைச்சு போங்கள் சார் என சொல்லி தங்களை சிரிக்க வைக்கும் பொன்மனச் செம்மல் நம் குழந்தைகள் தான்.


“சார், உங்க வீட்டை கண்டுபிடித்து விட்டோம்” என்று குழந்தைகள் பேசியது சிறப்பு.. சார் வீடு எப்படி இருக்கும் என்பது பெரிதல்ல. ஆனால் சார் கொடுக்கும் விருந்து மாணவர்களின் மனதில் வாழ்நாள் முழுவதும் நிரம்பி இருக்கும். சார்ட்ட சொல்லாம கொள்ளாம ஊருக்கு போறீங்களே என்ன ஆசிரியர் கேட்க சார் சொன்னா நீங்களும் எங்க கூட ஊருக்கு வருவீங்களா என்பது ஆசிரியர் மீதான பிரியத்தை காட்டுகிறது. காமராஜர் தாத்தா எங்கள் வீட்டில் தான் பாயாசம் குடித்தார் என்று பில்டப் பண்ணி பரிசு பெற்ற பால்வாடி அம்மு அருமை.


குமரேசனின் குடிகார தந்தையை ஆசிரியர் திட்டித் தீர்த்ததும், தந்தை தனது பிழைப்பு சம்பந்தமாக சொல்லி அதனால் தான் குடிக்கிறேன். ஆனால் இந்த பொழப்பு என் பிள்ளைக்கு வேணாம் சாமி.. அவனை நல்லா படிக்க வைங்க.. கடவுளா உங்கள தான் நம்புகிறேன் சாமி என்றதும் வளர்ந்து நிற்கின்ற பன்னீர் மரங்களின் உச்சியை கூர்ந்து பார்த்த தங்களின் விழிகளில் நிரம்பிய நீர் விழாமல் இருந்தது, படிப்பவர்களை கண் கலங்க வைக்கும். அந்த மனம் வருமா.. வரணும், குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு.


நல்லா படிக்கிற ரோசனை வெளியில் நிற்க வைத்த அதிகாரியிடம் அவனுக்காக முறையிட, அதிகாரி திரும்பி நம்மை முறைக்கிப்பவர்களும் நம்மள மாதிரி ஆசிரியராக இருந்து வந்தவர்கள் தான். அதை மறந்து விட்டனர். அமுதனின் நிலையும் அதுவே தான். பெரிய லெவல் அதிகாரியையே சார் அவர் நமக்கு ஹெச் எம்மா வர வேணாம் என்றது அதிகாரி மீதான மாணவர்களின் கோபத்துடன் கூடிய வெறுப்பு மனநிலை அருமை.



மாணவர்களிடம் ஆசிரியர்கள் முகம் கடுக்க, கோபப்பட வைப்பது கணக்கும் ஆங்கிலமும் தான். அவை இரண்டுமே குழந்தைகளுக்கு ஜென்ம விரோதி. பிணக்கான கணக்கையும் ஆசிரியர் நினைத்தால் கற்கண்டு கணிதம் ஆக்கலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் பயிற்சி கொடுக்கலாம். நான் கணித பயிற்சிக்காக (1993) செக்கானூரணி மையம் ஆரம்பித்து கம்பம் வரை நடத்தினேன். கருமாத்தூர், உசிலை, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தேனி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் பகுதி ஆசிரியர்களுக்கெல்லாம் பயிற்சி அளித்தேன். எனக்கு சீனியர் எல்லாம் இருப்பார்கள். ஆனாலும் பாய் சாருக்கு (சுபஹானியா) கொடுத்தால் சிறப்பாக நடத்துவார் என என்னை அனுப்ப வைப்பார்கள். நான் நடத்தும் பயிற்சிகளில் மிக ஆவலுடன் தேனி பகுதி ஆசிரியர்கள் கலந்துகொள்வர். இதனால் தான் (2001- 2003)இல் எனக்கு சுந்தர் மீது பிரியம்..

பால்வாடி குரூப் மாணவர்களான சித்திக், வித்யா, ரக்சிகாவால் பெற்ற குதுகுதுப்பு காய்ச்சலால் வைகைப் புயல் வடிவேல் சொன்ன மாதிரி, “நான் அழுது விடுவேன்” என சொல்லி கம்பம் டாக்டர் சையது சுல்தானிடம் ஊசி போட்டது யாராலும் மறக்க முடியாது.

மாணவர்களின் நலனுக்காக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யும் உங்க அப்ரோச்சே சரியான அப்ரோச்.. மாணவர்களிடம் எப்படி நடக்கணும் என்று தெரியாத அதிகாரிகளுக்கு அது தான் சரி.

குழந்தையோடு குழந்தையாய் விளையாட்டு, வேடிக்கைகள், நடிப்பு நகைச்சுவை, வருத்தம், கொண்டாட்டம் எல்லாம் கலந்து கற்றல் கற்பித்தல் நிகழ்த்துவது சிறப்பு சுந்தர்.. தங்கள் பணிக்காலம் முழுவதும் இப்படியே தொடரட்டும்..

தொகுப்பு சற்று கூடுதலாகி விட்டது.. வாழ்த்துகள். அனைத்தும் அருமை. அனைவரும் வாழ்த்துவர். நன்றி சுந்தர்..

சுபஹானியா

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்