மாணவர் மனசு நூல் குறித்து : கௌசல்யா, ஆசிரியர்

ஹைக்கூ கவிதை போல காட்சிகளை கண்முன் நிறுத்தும் குட்டிக் குட்டி கட்டுரைகளின் தொகுப்பை தந்த தேனி சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..

நாம் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஏதோ ஒரு புத்தகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் என்பார்கள் . பல பள்ளிகளின் பிரச்சனை சிரிப்பு போலீஸ் காட்சி பகுதியில் ஒளிந்து உள்ளது. மாணவர் மனசு மட்டுமல்ல ஆசிரியர் மனசையும் பிரதிபலிக்கிறது இந்த புத்தகம்.

புத்தகம் வாசிக்க பெரிதும் விரும்பாத ஆசிரியர்களுக்கு கூட ஆர்வத்தை தூண்டும் நூல் இது. எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படுத்தாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகள் அருமையான தலைப்பின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டு
உள்ளன .ஓவியங்களும் மிக அருமையாக உள்ளது. அதிலும் காமராஜர் பாயாசம் குடிச்சாரு கட்டுரையின் ஓவியம் மிகவும் சிறப்பாக உள்ளது.

கட்டுரை ஆசிரியர் தன் மனதில் இருக்கும் பல ஆயிரம் காட்சிகளுள் நமக்கு இந்த தொகுப்பு மூலம் 16 காட்சிகளை மட்டும் தொகுத்து வைத்துள்ளார்.

துறை ரீதியாக தினம் தினம் நாம் பார்ப்பதை கவனிப்பதை கேட்பதை அப்படியே துல்லியமாக வார்த்தைகளால் வடித்ததால் என்னவோ புத்தகத்தை படித்து முடிக்காமல் மூடி வைக்க மனமில்லை. ஒவ்வொரு இடத்திலும் மாணக்கர்களின் பெயரையும் அவர்களுடன் நடந்த உரையாடலையும் பதிவு செய்யும்போது மிகவும் மரியாதையான வார்த்தைகளால் மாணவர்களிடம் பேசுவது மிகவும் வரவேற்கத்தக்கது.




சிரிப்பு போலீஸ் நடக்காத பள்ளியே இருக்காது எனலாம். சாரு பயந்துட்டாரு கட்டுரை பகுதியில் வகுப்பறையில் எதார்த்தமாக நடைபெறும் பலவற்றில் ஒன்று அந்த விளையாட்டு என்றாலும் இது நமது வகுப்பறையில் காணாத விளையாட்டு. மாணவர்களுக்கு ஆசிரியர் பயப்படுவது மிகவும் பிடித்திருப்பதால், அவர்கள் கத்த போகிறார்கள் என்று தெரிந்தாலும் கூட ஆசிரியர் பயப்படுவது போல நடிக்கும் மனப்பான்மை நன்றாக உள்ளது .

ஒரு கதையோ பாடலோ சொற்களோ வாக்கியமோ மிக சாதாரணமாக தோன்றும் .ஆனால் அது குழந்தைகளின் மனதை கவர்ந்தால் அதை விட்டு அடுத்த பாட வேளைக்கு நகர மாட்டார்கள் என்பதை எதார்த்தமாக டும் டும் டும் இல் கூறியுள்ளார். சிரிங்க சார் காட்சிப்பகுதியில் பள்ளி நேரம் இல்லாமல் மற்ற நேரங்களில் ஆசிரியரை பார்க்கும் குழந்தைகளின் பரவசம் அனைத்தும் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டு
உள்ளது .

மாணவர் மனசு பெட்டியில் இதுவரை எங்கள் பள்ளியில் எந்த மனசும் எழுத்தால் எழுதப்படவில்லை என்பது எனக்கு கொஞ்சம் வருத்தம். போதிய விழிப்புணர்வு கொடுத்தால் மனசு பெட்டியும் மாணவர்களின் காகித பூக்களால் நிறையும். சார் வீடு எங்கே இருக்கு? கட்டுரைத் தொகுப்பில் நாம் பள்ளி மாணவர்களாக இருந்தபோது எத்தனை ஆசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளோம் என்பதை மன கணக்கிட்டு சந்தோஷமடைய செய்கிறது . நமது மனது 25 வருடங்கள் பின்னாலே இழுத்துச் செல்கிறது. ஒவ்வொருவரும் தான் படித்த ஆசிரியர் வீட்டை நினைவு படுத்தாமல் இந்த தொகுப்பு நம்மை நகர விடாது.

நீங்களும் எங்க கூடவருவீங்களா ? பகுதியில் ஆசிரியரின் கேள்விக்கு மாணவர்களின் புரிதல் வியப்பை ஏற்படுத்துகிறது. இந்த பதிலை கூறிய மாணவியின் கேள்வி ஆசிரியருக்கும் கண்டிப்பாக வியப்பை ஏற்படுத்தி இருக்கும். இந்த மாதிரி நாம் கேட்ட கேள்வியின் உள்நோக்கம் வேறு என்றாலும் அவர்கள் தரும் பதில் அவர்கள் உலகத்திற்கு நம்மை எளிதாக இழுத்துச் செல்கிறது.

குழந்தை எதார்த்தமாக பேசும் சில கருத்துக்கள் சாதாரணமாக தோன்றினாலும் ஆழ்ந்து யோசித்தால் புதிதாகவே தோன்றுகிறது .நமக்கு மனதில் தோன்றுவதை பளிச்சென்று சொல்லும்போது குழந்தைகளைப் போல சற்று யோசிக்காமல் எதார்த்தமாக பேசும்போது எதிர் உள்ளவரின் கண்ணோட்டமே மாறிவிடும் என்பதை உணர முடிகிறது. இப்பொழுது உள்ள தலைமுறை மாணவர்கள் சுதந்தரமாக தங்களை ஆசிரியரிடம் இணைத்துக் கொள்கின்றனர் .

விடுப்பு எடுத்தல் அதற்கான காரணத்தை கூறுதல் என்று எதார்த்தமாக உள்ளனர். ஆசிரியர் உண்மையை கூறினால் தண்டிப்பார் என்று குழந்தைகள் பயப்படாமல் பதிலளிப்பது அருமை. இந்த புத்தகத்தில் உள்ள தலைப்புகள் அனைத்திலும் காமராசர் பாயாசம் குடிச்சாரு என்ற தலைப்பு இன்னும் அருமை. உள்ளிருக்கும் காட்சியை படிக்கத் தூண்டும் தலைப்பு.

கடவுளா நம்புறேன் சாரே என்ற தொகுப்பில்ஆசிரியர் மாணவர் பெற்றோர் முக்கோணப் பிணைப்பு மற்றும் ஆசிரியருக்கும் பெற்றோருக்குமான ஒரு வித இணைப்பு நெகிழச் செய்கிறது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்த ஆசிரியர்தான் பெற்றோர் ஒழுங்கற்ற செயலில் ஈடுபட்டால் தன்னிலை மறந்து கோபப்படுவார் .

நமக்கென்ன நம்மிடம் வந்த மாணவர்கள்
படித்தால் போதும் நமக்கு ஏன் அவர்களின் குடும்ப விவகாரம் என நினைக்காமல் ஒவ்வொரு ஆசிரியரும் செயல்பட வேண்டும். அதுவே நல்ல சமுதாயத்தை உருவாக்கும். இந்த கதையில் வரும் அப்பாவின் செயல் நியாயப்படுத்தலாம் என்றாலும் சில பொறுப்பற்ற பெற்றோர்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு தடைகள் தான் .

அதெல்லாம் நமக்கு ஒத்து வராது சார் கட்டுரைத் தொகுப்பில் சில அதிகாரிகள் அவர்கள் அதிகாரத்தை காட்டுவதற்கு பதிலாக பள்ளியில் ஆய்வை சரியாக செய்தால் எப்போதும் நல்லது. மது போதையில் வரும் பெற்றோரை விட அதிகார போதையில் வரும் அதிகாரிகளே அதிகமாக அச்சுறுத்துகின்றனர். கலைக்கட்டும் பாடவேளை என்றாலே கணக்குபாடவேளை
தான் .

தமிழ் ஆங்கிலம் பாடங்களில் ஆர்வம் குறைந்து காணப்படும் மாணவர்கள் கூட கணிதத்தில் திறமையை காட்டும் போது அம்மாணவரின் நுண்ணறிவை ஆசிரியர் நன்றாக புரிந்து கொள்ள முடியும். கணித வகுப்பில் மாணவர்களின் ஈடுபாடு எந்த ஒரு ஆசிரியருக்கும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணிதம் கற்றல் மட்டும் கற்கண்டு அல்ல .கற்று தருவதும் கற்கண்டு தான்.கணித வகுப்புகளின் கலகலப்புகள் எண்ணில் அடங்காதவை.

சங்கடப்படல: கலெக்டர் ஆபீஸில் சுத்தம் செய்பவர் தவிர வேறு யாரும் விளக்கமாறு பிடிக்க மாட்டாங்க. ஆனால் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முதல் பள்ளியில் பணி புரியும் அனைத்து நிலை ஆசிரியர்கள் வரை விளக்கமாறு கையில் பிடிக்காமல் சர்வீஸ் முடிக்க முடியாது. இதுக்கு எந்த அரசு அதிகாரிகளும் எப்பவுமே சங்கடப்படல. இயல்பிலக்காமல் இரு ஒரு அருமையான கருத்து. குழந்தைகள் அவர்களின் கருத்தை கூறும்போது எந்த ஒரு ஆசிரியரும் என்னையவே எதிர்த்து பேசுகிறாயா என்று எடுக்காமல் மாணவர்கள் எவ்வாறு எதிர்த்து பேசுகிறார்கள் என்று கவனிப்பதே ஒரு முற்போக்கு சிந்தனை. மாணவர்களை கருத்து தெரிவிக்கும் போது அதனை எதிர்த்து பேசும் சூழலாக கொண்டு வராமல் நாமும் மாணவர்களிடம் சில சிக்கல்களுக்கு தீர்வு காணலாம்.

வருஷம் எல்லாம் நாம் விருந்து சாப்பிட காரணமாக இருக்கிற மாணவரச் செல்வங்களுக்கு பதில் விருந்து வைத்தால் தான் வாழ்க்கை சுவைக்கும் என்பதை ஆசிரியர் அழகாக பதித்திருக்கிறார். சாரே அயிட்டு போது தலைப்பு பார்த்தவுடன் புரியவில்லை. ஆனால் தலைப்புக்குள்ளே மேலும் பல மழலைத் தொடர்களுக்கு விளக்கம் கொடுப்பது அருமை .குழந்தை மொழிகளை உணர்ந்து புரிந்து எழுத்துகளால் கொடுத்திருப்பது மிக அருமை.

உங்க அப்பரோச் வேற பகுதியில் குழந்தைகளின் அன்புத்தொல்லை கூட சில சமயங்களில் தீர்வு காண முடியாத பிரச்சனையாக தான் உள்ளது. ஒரு குழந்தையை பாராட்டும் பொழுது கவனிக்கும் பொழுது இன்னொரு குழந்தை கோபித்துக் கொள்வது ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தான். நம்மைப் பொறுத்தவரை அனைவரும் குழந்தைகள்தான். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை நான் நன்றாக படிக்கிறேன். அவன் சரியாக படிக்கவில்லை என்ற கருத்தோடு நம்மை அணுகுவார்கள். அதை எந்த ஒரு ஆசிரியரும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது .அது குழந்தையின் மனதிற்கும் புரியாது. இவ்வளவு அழகான தலைப்புகளுடன் அழகான காட்சிப்படுத்துதல் உடன் கட்டுரை தொகுப்பை வழங்கிய தேனி சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


ரா.கௌசல்யா,
இடைநிலை ஆசிரியை,
அம்பேத்கர் நகர், தேனி மாவட்டம்
நன்றி : https://bookday.in/

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்