மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : மருத்துவர் ஜான்சி

28.12.2024 அன்று தேனி சுந்தர் சார் மாணவர் மனசு ,ஓங்கூட்டு டூணா என்ற இரண்டு புத்தகங்களை எனக்கு புத்தாண்டு அன்பளிப்பாக கொடுத்தார். ஏற்கனவே நான் சாரின் டுஜக் டுஜக் நூலை படித்து அவரின் ரசிகையாகிவிட்டேன்.

தற்போது "மாணவர் மனசு" புத்தகத்தை இன்றுதான் படித்தேன். மாணவர் மனசு புத்தகத்தை படித்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

முதல் பக்கத்தில் "Great things are done When men and mountains meet" என்ற பிளேக்கின் வரிகளோடு இரா.எட்வின் சார் எழுதிய அணிந்துரை ஆரம்பமே அசத்தல். நானும் கள்ளர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி.கிராமத்து மாணவர்களின் மனநிலையும் அவர்களின் பெற்றோர் மனநிலையையும் சூழ்நிலையையும் மாணவர்கள் சேட்டையும் அவர் பார்த்ததையும் சந்தித்ததையும் அப்படியே எழுத்துக்களாக கொட்டி இருக்கிறார். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். மிகுந்த நன்றி சார்..

அதேபோல பேரா.மாடசாமி சார் அவர்கள் சொன்னதைப்போல ஒவ்வொரு கட்டுரையும் குழந்தைகளோடு குழந்தையாக மாறி வாழ்ந்து இருக்கிறீர்கள்.

சிரிப்பு போலீஸ் படித்ததும் ஆசிரியர்கள் இப்படி ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளில் நம் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை யார் சேதப்படுத்தினார்கள் என்று விசாரித்திருந்தால் அண்ணா பல்கலைக் கழகத்தில் இப்படி நடந்து இருக்காது என்று நினைக்கிறேன். சிரிப்பு போலீஸைப் படித்ததும் எனக்கு இதுதான் ஞாபகம் வந்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மனதில் இப்படி வலியும் பின்னணியும் இருப்பது ஆச்சரியமாக இருந்தது.




சாரும் பயந்துட்டார் கட்டுரையில் பிள்ளைகள் ஆசிரியரின் மீது எவ்வளவு அன்பு, பாசம்,உரிமை சுதந்திரம்.. கிராமத்து மாணவ மாணவியர்களுக்கு சார் வீடு எங்கே இருக்கு? என்று மாணவர்கள் ஆச்சரியமாக நினைப்பதும் அல்லது தேடிக் கண்டு பிடிப்பதும் சார் வீடு இப்படி இருக்குமா? அப்படி இருக்குமா ?என்று கற்பனை பண்ணுவதும் உண்மையே.ஏனென்றால் கிராமத்து மாணவ மாணவியர்களுக்கு ஆசிரியர்கள்தான் கதாநாயகர்கள் கதாநாயகிகள்.சார் வீட்டை மாணவன் ரக்சித் ரசித்து சொன்ன விதம் அருமை.

அதைவிட ஹாசினியிடம் ஏன் லீவு சொல்லாமல் லீவு எடுத்தே என்று கேட்டதும், மெதுவாக வந்து,சொன்னா நீங்களும் எங்ககூட ஊருக்கு வருவீங்களா ? என்று கேட்டதைப் படித்ததும் சத்தமாக சிரித்து விட்டேன். செம.. 

பால்வாடி அம்மு காமராசர் பொங்கல் சாப்பிட்ட கதை,அம்மாடியோ குட்டிப் பிள்ளைகள் எப்படியெல்லாம் கதை விடுறாங்க அய்ய்ய்யோ.

குடிகார அப்பா பள்ளிக்கு வந்தால் அவர் மீது வரும் கோபத்தால் நீங்க திட்டிவிட்டீர்கள் என்று நினைத்தால் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டேன் என்று படிக்கும்போது உண்மைதானே என்று தோணியது.அந்த குழந்தையின் மனசு எவ்வளவு கஷ்ட்டமாக இருந்திருக்கும்.

அதே "அப்பா எப்டியாவது அவனை நல்லா படிக்க வச்சுப் புடுங்க சாரே! அதுபோதும்...உங்க புள்ளை குட்டிங்க நல்லா இருந்துட்டு போகும்..என்று கை எடுத்து கும்பிட்டு கண்ணீர் விட்டதும் தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டதும் மகன் குமரேசன் அப்பா அருகில் நின்றதும் "உங்களத்தான் சாரே! கடவுளா நம்புறேன் ...! என்று குடிகார அப்பா பேசியதை படித்ததும் கண்ணீரே வந்துவிட்டது. இப்போது கூட இதை எழுதும்போது மனம் கனக்கிறது.

எனக்கு புரியாத ஒண்ணு கக்கூசை கழுவும்போது குடித்தால்தான் அந்த வேலையை செய்ய முடியுது என்று சொல்றாங்களே அவர்களுக்கு எப்படி நினைவு இருக்கும்.

அதெல்லாம் நமக்கு ஒத்துவராது சார்...! கட்டுரையைப் படித்ததும் பள்ளியின் கல்வித் துறை அதிகாரிகளுக்கு கிராமத்துப் பசங்க மனநிலை கொஞ்சம் கூட தெரிவதில்லை. நீங்கள் சொன்னதைக் போல கிராமத்துப் பசங்களுக்கு கணக்கும் ஆங்கிலமும் ஜென்ம விரோதிகளாகத்தான் தெரியும். இதில் மாற்றுக் கருத்துக்களே இல்லை.அவர்களிடம் வேகம் வேகமாக சொன்னால் நல்லா படிக்கிற மாணவர்களுக்கே புரியாது. இது நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது சந்தித்து இருக்கிறேன்.vacant என்ற வார்த்தையை சூப்பர்வைசர் போர்டில் எழுதச் சொன்னார். எனக்கு' t' சரியாக கேட்கவில்லை waken என்று எழுதினேன்.இதில் நீங்க சொன்னதைப் போல நான் நல்லா படிக்கிற மாணவி என்று ஆசிரியர்களால் பாராட்டுப் பெறுபவள்.

பொறுப்பாசிரியராக சென்ற இடத்தில் பாத்ரூம் கழுவியது கஷ்ட்டமாகத்தான் இருந்தது. இப்படி ஒரு அனுபவம் எங்க வீட்டு ஆசிரியருக்கும் நடந்து இருக்கிறது.

இயல்பிழக்காமல் இரு..! கட்டுரையைப் படித்ததும் மனசு பாரமாக கனத்தது.எட்டு பேர்கள் மட்டுமே படிக்கும் ஒரு பள்ளிக்கூடம்.ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஹரிணி பாப்பாவிடம் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று நீங்கள் கோபமாகப் பேசியதும் மற்ற ஏழு மாணவர்களும் ஒன்றாக வந்து விடுங்க சார், திட்டாதீங்க. நாளைக்கு எழுதிட்டு வந்திடும் .என்னா ஹரிணி என்று குழுவின் சார்பில் ராகுல் பேசினான் என்று படித்ததும் "இது ஏன் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்குத் தோணவில்லை என்று எனக்கு தோணியது.இந்த விவகாரத்தை நினைத்தால் இப்பவும் மனசு கஷ்ட்டமாக இருக்கிறது.உங்கள் இருபது ஆண்டுகள் அனுபவத்தில் இப்படி தான் பார்த்ததே இல்லை என்று உண்மையை சொல்லி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதேபோல ஆசிரியர்கள் கூட்டத்திலும் நடக்கிறது என்று சொல்லி இருக்கீங்க....

பால்வாடிக் குழந்தைகளோடு பேசுவது செம.குழந்தைகள் பேசியதைப் படிக்கும் போதும் தூங்குவதைப் பற்றி படிக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக சிரிப்பாக இருந்தது. 
அதிகாரிகளிடம் நீங்கள் பேசுவது சபாஷ்.


மனிதமும் அன்பும் இருந்தாலே அப்ரோச் சரியாகத்தான் இருக்கும். "மாணவர் மனசு" புத்தகத்தைப் படித்ததும் உங்களிடம் படிக்கும் மாணவ மாணவியர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

"நீங்கள்,உங்கள் தொழிலை உணர்ந்து ரசிக்கிறீங்க. ஏழைக் குழந்தைகளும் ஜெயிக்கனும் .அவர்களும் சுயமரியாதையோடு வாழனும் என்று மனதார நினைக்கிறீங்க. குழந்தைகளை ரசிக்கிறீங்க. இல்லை எனில் இப்படி ரசித்து இயல்பாக எழுத முடியாது. நீங்கள் சொன்னதையே சொல்கிறேன். இப்படியே இயல்பிழக்காமல் இருங்கள்.

மீண்டும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.நன்றி சார்.


இந்த புத்தகத்தை முதலில் அனைத்து ஆசிரியர்களும் படிக்க வேண்டும் என்பது என் பணிவான கருத்து. பல ஆசிரியர்களைப் பற்றி நானும் அறிவேன்.

ஆசிரியர்கள்தான் இந்த சமுதாயத்திற்கு ஆணி வேர். பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்று பலர் பேசுகிறார்கள்.கேள்வி கேட்கிறார்கள். மாணவர்கள் பெரும்பாலான நேரத்தை முதன்மை நேரத்தை பள்ளியில்தான் செலவிடுறாங்க. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
-
மருத்துவர் ஜான்சி, பழனி


Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

கணக்கும் இனிக்கும்