நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : நூல் குறித்து மதுரை அமுதா செல்வி

குழந்தைகளின் எதார்த்த உலகத்திற்குள் ஒரு சிறு பிள்ளையைப் போல் நுழைந்து அவர்களுடன் அமர்ந்து அவர்களின் செயல்பாடுகளை உற்று நோக்கி கலந்துரையாடல்களை கவனித்து அவற்றின் மீது எந்த விசாரணையும் செய்யாமல் மிக நேர்மையாக நிகழ்த்திய உரையாடல்கள் தோழர் தேனி சுந்தர் அவர்களை புது இலக்கிய வகைமையை உருவாக்கச் செய்திருக்கிறது. அந்த வகையில் தோழரின் அத்துணை படைப்புகளும் இலக்கிய வானில் நட்சத்திரங்களாய் மின்னுகின்றன. அவருடைய நூல்களை சுடச்சுட வாசிப்பதில் எனக்கு எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. 




அவருடைய படைப்புகளின் வழியே சந்திக்கும் குழந்தைகளில் எனக்கு மிக நெருக்கமானவள் மருமகள் புகழ்மதி. அவளை வாசிக்கும் போதெல்லாம் மனதிற்குள் மகிழ்ச்சி ஊற்றாய் பொங்கி எழும். புத்தகத்தை மூடி வைக்கும் போது "அச்சச்சோ அதுக்குள்ள போயிட்டாளே" என்ற வருத்தம் வரும். முதல் வேலையாக பேருந்து ஏறிச் சென்று புகழ்மதியை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழும்பும். அடுத்தடுத்த தொடர்ந்து வரக்கூடிய வேலைகளின் ஆக்கிரமிப்பு அந்த ஆசையை மட்டுப்படுத்திவிடும். ஆனால் அவளைப் பிரிந்த வருத்தம் கலைந்து போவதற்குள் புதிதாய் அடுத்த புத்தகத்தை நம் கைகளில் தவழச் செய்து விடுகிறார் தோழர் தேனி சுந்தர். அது வாசகர்கள் மீது அவர் கொண்ட அன்பின் வெளிப்பாடு என்றே நான் கருதுகிறேன். நேற்று இரவில் இருந்து நான் அவளோடு இருக்கிறேன். 




நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன.. என்ற இந்த நூலினை என் மடியில் கிடத்தியபடி. ஒரு நீண்ட இரவு சிறிய காலை பொழுதிற்குள் இரண்டு முறை வாசித்து விட்டேன்.

பாப்பாவ வண்டியிலேயே
உட்கார வச்சுட்டு

வேக வேகமாய்ப் போயி ஏடிஎம்ல பணம் எடுத்துட்டு வந்தேன்.... 
பாப்பா தனியா இருக்கிறதால வேக வேகமா எடுத்துட்டு ஓடி வந்தேன்

பாப்பா கேட்டாங்க..
எதுக்குப்பா உள்ள போன?

பணம் எடுத்துட்டு வந்தேன் பாப்பா....

உள்ள யாருமே இல்ல... 
களவாண்டுக்கு வந்துட்டியா?....

என்பதை வாசித்து முடிக்கும் போது சிரித்த சிரிப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனது.



நேத்து ராத்திரி 
அந்தப் பல்லி செத்துப் போனதும்...

எறும்பு மொச்சிக் கிடந்தது..
இன்னைக்கு காலையில
பாப்பா சொல்லித்தான் நமக்கு தெரியுது...

விசயத்தை சொல்லிட்டு
கடைசியா ஒரு கேள்வி வேற கேட்டாங்க புகழ்மதி.

"ஏம்ப்பா... அவங்க சொந்தக்காரப் பல்லி எல்லாம்
நைட்டே வந்து அழுதுட்டுப் போயிருக்குமா....! 

என்பதை வாசிக்கும் போது மனசு என்னமோ செய்தது.



அம்மாச்சி அப்பாவியாக கேட்டாங்க...

"ஏண்டா தங்கம் ...
உங்க சித்தப்பா மக்க.. அத்தை மக்க எல்லாம்
ஓங்கிட்ட நல்லா பேசுவாங்களா?"

"என்னாம்மாச்சி... 
அவங்க என்னா ஊமையா?? 
எல்லார்ட்டயும் நல்லாத் தான் பேசுவாங்க...!! 
ஏங்கிட்டயும் நல்லா தான் பேசுவாங்க...!!" 

என்பதை வாசித்து முடிக்கும் போது சிரிப்போடு சேர்ந்து அடி தூளு என்று கூறி நான் ரசித்ததை 'நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன' புத்தகத்தை வாசிக்கும் அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும். இந்நூலின் வாயிலாக என்னை புகழ்மதியின் கரம் பற்றி கொஞ்ச நேரம் மகிழ்ச்சியாய் அந்த வீட்டிற்குள் ஊருக்குள் சுற்றிவர வாய்ப்பு அளித்த தோழர் தேனி சுந்தர் அவர்களுக்கு மிகுந்த அன்பும் நன்றியும். அடுத்த நூலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கி. அமுதா செல்வி
நன்றி : புதிய ஆசிரியன், மார்ச், 2025

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!