உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் - நூல் குறித்து மதுரை அமுதா செல்வி, எழுத்தாளர்

தோழர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் என்ற கட்டுரை தொகுப்பு மொத்தம் 25 கல்விசார் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு கட்டுரையிலும் குழந்தைகளுக்காக பேசும் தேனி சுந்தர் அவர்களை வளர்ந்த குழந்தையாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் குழந்தையின் வலியை அவர்களின் தேவையை அவர்களைத் தவிர வேறு யாரும் கச்சிதமாக எடுத்துச் சொல்ல முடியாது என்ற கருத்தியலில் மிகுந்த நம்பிக்கை உடையவள் நான். 

இந்த ஒட்டுமொத்த கட்டுரை தொகுப்பில் அவர் குழந்தைகளுக்காக மிக வீரியத்துடனும் கூர்மையுடனும் கேள்விகளை முன் வைக்கிறார். மாணவர்களை தோல்வியுறச் செய்யும் ஆசிரிய மனோபாவத்தை மிக நேர்மையாக பதிவு செய்கிறார். இவனுக்கு எங்க வகுப்பறையில் ஒரு இன்ச் இடம் கூட யாரும் தரவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு வாசிப்போரையும் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். குழந்தைகளுக்கு எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை குறித்து அவர் பேசியது மிக சிறப்பு.




ஆசிரியர்கள் புரிந்து கொண்ட நிலையில் இருந்து குழந்தைகளுக்கு கற்பிக்காமல் குழந்தைகள் ஒரு கணக்கையோ கருத்தையோ எவ்வாறு புரிந்து கொள்கிறார்களோ அந்த புரிதல் நிலையிலிருந்து கற்பிக்க வேண்டும் என்ற அற்புதமான கருத்தை அசால்டாக சொல்லி கடந்து போகிறார். இப்படியான மாபெரும் வெடிப்புகளை போற போக்கில் சொல்லிப் போவது தான் தேனி சுந்தர் அவர்களுடைய எழுத்தின் சிறப்பு. பாட புத்தகம் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிந்தும் தெரியாமலும் பாடப்புத்தகம் முழுவதும் நிறைந்து கிடக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் மிக நியாயமாக விமர்சிப்பதை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். 

விடுங்க சார் திட்டாதீங்க சார் என்ற சக மாணவனுக்காக குரல் எழுப்பும் வகுப்பறையின் உன்னத குரல்களை ஆசிரிய மனோபாவம் தகர்த்து மாணவ ஆதரவு நிலையிலிருந்து பேசுவது எத்தனை அற்புதமாக இருக்கிறது. இப்படியான ஆதரவு குரல்கள் வகுப்பறையில் இருந்து தொடங்க வேண்டும். குழந்தைகள் பேசவும் விவாதிக்கவும் வாழ்வியல் சார்ந்த ஏராளமான விஷயங்கள் கொட்டி கிடக்கும் போது தொடர்பற்ற ஏதோ ஒன்றை வகுப்பறையில் கற்பித்து கொண்டிருக்கும் கடின சூழலை பதிவு செய்வது மிக அருமை. 

இவற்றையெல்லாம் கடந்து இந்த கட்டுரை தொகுப்பில் அதிகார வர்க்கத்தின் மீது அவர் எழுப்பும் கேள்வியும் முன் வைக்கும் விமர்சனமும் போற்றுதலுக்குரியது. கட்டுரைகளின் ஒவ்வொரு வரியிலும் கருத்து செரிவு மிக்க வீரியத்தை காண முடிகிறது. அதை வாசிக்கும் போது வாசிப்போரையும் அதே கொதி நிலைக்கு கொண்டு வந்திருப்பது தேனி சுந்தர் எழுத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

கி. அமுதா செல்வி
மதுரை

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!