ஒரு புதிய ஆசிரியனின் எழுத்து: "உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்..." நூல் குறித்து எழுத்தாளர் சக.முத்துக்கண்ணன்
சுந்தரின் பத்தாவது நூலை வாசிக்கிறேன். வழக்கம் போல தலைப்பிலேயே ஜொலிக்கிறார் சுந்தர். "உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்..." பேச்சு வாக்கில் இருக்கிறது தலைப்பு. சின்னப் பையன் ரேப்பரில் சிலேட்டோடு நிற்கிறான். அவன் முழியே அர்த்தம் சேர்க்கிறது.
அவன் கேள்வி கேட்கும் பையன்; பகடி செய்யும் பையன். வாத்தியாரை, பள்ளிக் கூடத்தை, அதிகாரத்தை, சமூகத்தை, அரசை என யாரையும் விட்டுவைக்கவில்லை.
அப்படியொரு பையனாகவும் ஆசிரியராகவும் அமைப்பாளராகவும் இருந்து வந்த சுந்தர் எழுதிய நூல் இது.
இதுவரையிலான சுந்தரின் புத்தகங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வீடு- மகன், மகளோடு ஒரு அப்பாவாக சுந்தர் உரையாடியவை. இரண்டாவது பள்ளிக்கூடம் - மாணவர்களோடு ஒரு ஆசிரியராக சுந்தரின் அனுபவங்கள். இந்த நூலும் இரண்டாம் வகைதான். ஆனால் வகுப்பறையோடு நிற்கவில்லை. அதற்கு வெளியிலும் இயங்குகிறது. ஒரு கலவையான அனுபவத்தைத் தருகிறது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறும் இடத்தை களமாகக் கொண்டு சில கட்டுரைகள் இருக்கின்றன. இதுவரை நான் எழுத்தில் வாசிக்காத பகுதியிது. பிரச்சனைக்குத் தீர்வு வேண்டி வந்து நிற்கும் ஓர் ஆசிரியரை போய் சாகச் சொல்கிறார் ஒரு அதிகாரி. உயர் பதவி என்பது தரப்பட்டிருக்கும் பொறுப்பு தானே தவிர அதிகாரம் செய்ய வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பில்லை என்று உரைக்கப் பேசியிருக்கிறார் சுந்தர். ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் அதிகாரங்களைக் கேள்வி கேட்ட வகையில் அவை துணிச்சலான மற்றும் அவசியமான எழுத்து.
அதே கட்டுரையின் பின்பகுதியில் வகுப்பறையில் மாணவரிடம் ஆசிரியர் செலுத்தும் அதிகாரத்திற்கு ஓர் உதாரணத்தையும் தந்திருப்பது கண்ணாடியை நம் முன்னேயும் திருப்புகிறது. பலே.
நண்பர் வீட்டுக்குப் போனாலும் தனியார் பள்ளிக்குப் பேசப் போனாலும், அதிகாரியிடம் பேசினாலும், ஆண்டு விழா நடத்தினாலும் சுந்தர் நிகழ்த்துபவை அறிவியல் இயக்க அஜண்டாவைத்தான். அறிவியல் இயக்கத்தால் தனக்கு நேர்ந்த புரிதலையும் கல்வி சார் செயல்பாட்டில் நிகழும் அசைவுகளையும் அக் கட்டுரைகள் காட்டுகின்றன.
சாகித்யன் எனும் மாற்றுத்திறனாளி மாணவரைப் பற்றிய கட்டுரையில் தற்பரிசோதனை செய்து பார்க்கிறார் ஆசிரியர். மிக முக்கியமான பார்வை அது. பிரம்பு விசயத்தில் சுந்தருக்குள் நிகழ்ந்திருக்கும் மனமாற்றத்தை 'ஆசிரியத் தற்கொலைகள்' கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். ஏற்கனவே நாலு வருசத்திற்கு முன்பு புதிய ஆசிரியனில் வாசித்த கட்டுரை தான். இன்று வாசிக்கும் போதும் பழைய சுந்தரை பார்த்து பதறுகிறது. புதிய ஆசிரியனாய் சுந்தர் மாறிய இடம் ஒரு பாடம் போல ஆகி வெளிப்படையான பேச்சுக்கு நல்லுதாரணம் ஆகிவிடுகிறது.
தொடர் வாசிப்பும், அறிவியல் இயக்க அனுபவங்களும், ராமானுஜம், மாடசாமி தோழமைகளுடனான தொடர்பும் சுந்தர் என்கிற ஆசிரியருக்கு ஏற்படுத்தியிருக்கும் புரிதல் கட்டுரை தோறும் காணக் கிடைக்கின்றன.
டைரியில் எழுதுவதைப் போல சுந்தர் சரசரவென எழுதி வைத்துள்ளார். எதுவும் திருத்தாமல் அப்படியே வருவதில் ஒரு சிக்கலும் ஒரு நன்மையும் உண்டு. சிக்கல் - கச்சிதமின்மை. நன்மை - அவை அனைத்தும் உண்மை. பூச்சற்ற சுந்தரின் எழுத்தை விஜயகுமார் தோழர் நேர்மையான எழுத்தென அணிந்துரையில் சுட்டுகிறார். சின்ன பள்ளிக் கூடத்தைப் பற்றிய மைதானம் அளவு பேச்சு' என பதிப்பாளர் ரத்ன விஜயன் சொல்லுகிறார்.
ஒரு புதிய ஆசிரியன் உருவான கதையும் உருவாகியதில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் கதைகளும் சுந்தரின் நண்பர் சரவணனைப் போல சுந்தர் பைக்கில், பின்னால் உட்கார்ந்து கொண்டு சர்ரென பயணிக்கின்றன. உள்ளே சொல்லப்பட்டவை யாவும் நண்பர் பைக்கில் சுந்தர் உட்கார்ந்து கொண்டு மேட்டில் பயணிப்பது போல திணறி திணறி மேடேறுகின்றன. ஒரு நாள் ஏறிவிடும். அதுவரை ஆசிரியர்கள் ஆகிய நாம் வாசிக்கவும், உண்மைகளை எழுதவும், தொடந்து இயங்கவும் வேணும்.
புதிய ஆசிரியனில் எழுதியவை நூலாகி, அந்நூலை புதிய ஆசிரியனிலேயே 'நூல் அறிமுகம்' செய்வதில் அத்தனை மகிழ்ச்சி எனக்கு.
சக.முத்துக்கண்ணன்.

Comments
Post a Comment