வகுப்பறை என்பது பன்முகப் பண்பாட்டைக் கொண்டாடும் இடமாக மாற வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திர பாபு நேர்காணல்

2017ஆம் ஆண்டினை சாவித்ரிபா பூலே அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் துவங்கியிருக்கிறீர்களே..?

ஜோதிபா பூலே மற்றும் அவருடைய இணையரான சாவித்ரிபா பூலே இருவருமே சனாதானக் கொள்கைகளுக்கு எதிராக, பிராமணீய, வேத சமய கட்டுப்பாடுகளுக்கு எதிரான மிகப் பெரியபோராட்டங்களை நடத்தியவர்கள்.. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான், அவர்கள் இருவரும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்களை வீட்டிற்கு அழைத்து தங்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்கச்சொன்னது.. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான், ஒரு பிராமண விதவைப் பெண் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதற்காக வீட்டை விட்டே வெளியேற்றப் பட்டபோது அடைக்கலம் கொடுத்ததும் அப்பெண்ணிற்கு பிறந்த குழந்தையைத் தத்தெடுத்து தங்கள் குழந்தையாகவே வளர்த்தெடுத்ததும் கூட.. பெண்கள் படிக்கக் கூடாது என்று சொன்ன காலகட்டத்தில் பெண்களுக்காக பள்ளிக்கூடங்களைத்திறந்தார்கள்.. ஆதிசூத்திரர்களும் சூத்திரர்களும் ஒன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக முதன் முதலில் பொதுப் பள்ளிகளை நிறுவினார்கள்.. மனுவாதத்திற்கும் வணிகமயத்திற்கும் எதிராக எழுந்தபத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய போர்க்குரல்கள் தான் ஜோதிபா பூலேவும் சாவித்ரிபா பூலேவும்.. அந்த வகையில் மீண்டும் வகுப்புவாதம் வகுப்பறையில் புகக்கூடிய சூழல், கல்வியை முழுமையாகவணிகமயமாக்கக் கூடிய சூழல் உருவாகியிருப்பது தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள் ஆவணத்தின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.. இதை எதிர்கொள்வதற்குவணிகமயத்திற்கும் வகுப்புவாதத்திற்கும் எதிராக ஒரு மிகப்பெரிய போராட்டத்தின் தொடக்கமாகவே சாவித்ரிபா பூலே அவர்களது 186வது பிறந்த நாளான ஜன.3.2017 அன்று அந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது..இது போராட்டப் பயணத்தின் தொடக்கம் தான்.. ..


பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே அனைவருக்கும் கல்விக்காக ஜோதிராவ் பூலே- சாவித்ரிபா பூலே போராடியிருந்தாலும் கல்வி உரிமை பற்றி பேசுபவர்கள் கோபால கிருஷ்ண கோகலே-வில்இருந்து தானே துவங்குகிறார்கள்..?

ஒரு மேல் சாதி, வர்க்க மனோபாவம் ஆளும் வர்க்கத்திற்கு மிக அதிகமாகவே இருக்கிறது.. கோபால கிருஷ்ண கோகலே உள்ளிட்ட காங்கிரசார் பலவகைகளில் ஆளும் தரப்பினருடன் ஒத்துப் போனவர்கள்தான்.. கோகலே எங்கு வித்தியாசப்படுகிறார் என்றால் பம்பாய் மாகாண கவுன்சிலில் எல்லோருக்கும் கட்டணமில்லா கட்டாயத் தொடக்கக் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறார்.. ஆனால் அவருடைய தீர்மானம் நிராகரிக்கப்படுகிறது.. நிராகரித்தவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால் எல்லோரும் படிக்கப் போய்விட்டால் இந்தக் கூலி வேலைகளை எல்லாம் யார்செய்வது? என்பது தான்.. கோகலேவின் பங்களிப்பை நாம் மறுக்க முடியாது என்றாலும் சாவித்ரிபாய் பூலேவில் தொடங்கி, இன்னும் சொல்லப் போனால் புத்தரில் தொடங்கி கல்வி உரிமைக் குரல் இந்தியாவில்ஒலித்து வருகிறது.. புத்தர் தான் மக்களிடம் போய் கற்க வேண்டும் என்பதையும் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதையும் முதன் முதலில் வலியுறுத்தினார்.. ஆக, கல்வி உரிமை குறித்து பேசத் தொடங்கினால்புத்தரில் ஆரம்பித்து ஜோதிபா பூலே- சாவித்ரிபா பூலே, நம் தமிழகத்தில் அயோத்திதாச பண்டிதர், தந்தை பெரியார், கேரளாவில் அய்யன்காளி உள்ளிட்டவர்களையும் பேசியிருக்க வேண்டும்.. மத்திய அரசின்புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆவணங்களில் சமூகமாற்றத்திற்காகப் பாடுபட்ட எந்தக் கல்வியாளர்களையும் குறிப்பிடவில்லை..

பெரியார் விருது பெற்றிருக்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு- .. எப்படி உணர்கிறீர்கள்??

சமச்சீர் கல்விக்கான போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த போது ஆனந்த விகடன் இதழ் அந்த ஆண்டிற்கான டாப்-10 மனிதர்கள் வரிசையில் இடம்பெறச் செய்து அங்கீகாரம் கொடுத்தது.. அப்போது ஆனந்தவிகடன் சார்பில் “பல்வேறு கல்வியாளர்களையும் இணைத்துக் கொண்டு சமச்சீர் கல்விக்கான போராட்டத்தை முன்னெடுத்ததிற்காக” இந்த விருது வழங்கப்படுவதாகக் கூறினார்கள்.. அதனைத் தொடர்ந்துதிருவள்ளுவர் வாழ்வியல் மன்றம், நம்மாழ்வார் முதலாமாண்டு நினைவு நாளில் ஒரு விருது மற்றும் மதுரையில் உள்ள ஷோகோ அறக்கட்டளை சார்பிலும் கல்விப்பணிகளை அங்கீகரித்துவி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது உட்பட பல்வேறு மக்கள் அமைப்புகள் இப்போராட்டங்களை அங்கீகரித்து விருதுகள் கொடுத்தார்கள்.. அதன் தொடர்ச்சியாக தற்போது திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டுள்ளது.. பெரியாரியல் கருத்துகளையும் மத்திய அரசின் குலக்கல்வி முயற்சிக்கு எதிராகவும் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதற்காகவழங்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.. ஆனாலும் என்னைப் பொறுத்தவரை இந்த விருதுகளுக்கான தகுதிபடைத்தவனாக என்னைக் கருதவில்லை.. என்னை மேலும் தகுதிப்படுத்திக் கொள்வதற்கும் மேலும்வலுவாக போராட்டங்களை முன்னெடுப்பதற்குமான ஊக்கத்தை அளிக்கக் கூடிய ஒரு விசயமாகவே பார்க்கிறேன்..

சமச்சீர் கல்விக்கான போராட்டங்கள் எதிர்பார்த்த விளைவுகளை அளித்திருப்பதாக நினைக்கிறீர்களா..?

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு மிகப்பெரிய விவாதத்தை மக்கள் மத்தியில் நடத்தியிருக்கிறோம்.. அதன் விளைவாக, மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது..பெற்றோர்கள், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளை, விதிமீறல்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராட தெருவிற்கு வந்திருக்கிறார்கள்.. அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவதற்கான குரல்கள் எல்லாமட்டத்திலேயும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.. பல தனிநபர்கள், அதிலும் அரசு ஊழியர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பது சமூகக் கடமை என்பதை உணர்ந்துசேர்க்கத் துவங்கியுள்ளனர். இவற்றையெல்லாம் தொடர் இயக்கங்களின் வாயிலாக இந்தச் சமூகத்தில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் என்று கூறலாம்.. ஆனாலும் இன்றைய காலகட்டம் மிக மோசமாக,வணிகமயச் சூழலை, சமத்துவமற்ற ஒரு சமூகச் சூழலை நியாயப்படுத்தக் கூடிய போக்குகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.. எனவே கடந்த காலப் போராட்டங்களின் தன்மையும் வீச்சும் அதிகரிக்க வேண்டும்..அளவு மாற்றம், குணம் மாற்றம் இரண்டுமே தேவைப்படுகிறது.. கல்விக்கான மிகப்பெரும் எழுச்சியை நாம் உருவாக்க வேண்டியுள்ளது..

திமுக சமச்சீர் கல்வியை அக்கறையுடன் கொண்டுவந்தது.. அதிமுக தான் அதை ஒழித்துக் கட்டப் பார்த்தது என்ற கருத்து இருக்கிறதே.. இந்த விசயத்தில் இந்த இரு திராவிடக் கட்சிகளின்அணுகுமுறை எப்படி இருந்தது.. இருக்கிறது?

2009 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை ஒழுங்குபடுத்த வேண்டும்.. சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளைவலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மனுவை எடுத்துக் கொண்டு பேரணியாகச் சென்றார்கள்.. உண்மையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவருவது தான்நோக்கம் என்று சொன்னால் அவர்களது நோக்கத்திற்கு வலுச்சேர்க்கின்ற வகையில் கோரிக்கைகளை ஏந்திவந்த மாணவர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டும்.. மாணவர்களுடைய மண்டையைஉடைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.. போராட்டத்தை ஒடுக்கியிருக்க வேண்டியதில்லை.. ஈவு இரக்கமில்லாமல் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது.. அன்றைய தினம்இந்திய மாணவர் சங்கத்தினர் சிந்திய இரத்தத்தின் விளைவாகத்தான் அடுத்த நாளே அன்றைய முதல்வர் கலைஞர் சமச்சீர்க் கல்வி என்றால் என்ன என்ற விளக்கத்தையே சட்டமன்றத்தில் கொடுக்கிறார்..எனில் திமுக என்கிற ஒரு கட்சி சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்தது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?

அது மட்டுமல்லாமல் தேசிய கலைத்திட்டம் 2005 நடைமுறைக்கு வந்த பிறகு மாநிலங்கள் தங்கள் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்தப் பணியினைமேற்கொள்ள தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பத்து இலட்சம் ரூபாய் பணத்தினையும் ஒதுக்கியது. அப்படி இந்த நிறுவனத்தின் வழிகாட்டுதலோடு தான் புதிய பாடத்திட்டம் என்பதுஉருவாக்கப்பட்டது.. உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தினை ஒரு வாரியத்திற்கு மட்டும் கொடுப்பதா இல்லை அனைத்து வாரியங்களுக்கும் கொடுப்பதா என்பதே அரசின் முன்னிருந்த கேள்வி.. அந்தச்சிக்கலுக்கான தீர்வாக அமைந்தது தான் பொதுப்பாடத்திட்டம்.. எனவே சமச்சீர் கல்வி என்பது வெறும் பொதுப்பாடத்திட்டம் என்ற அளவில் நின்று போனதே தவிர அது ஏற்கனவே இருந்த மெட்ரிக் பள்ளிவாரியத்தை ஒழிக்கவில்லை.. ஆங்கிலோ இந்தியன் பள்ளி வாரியத்தை ஒழிக்கவில்லை.. நான்கு வகையான பள்ளி வாரியங்கள், நான்கு விதமான நிர்வாக ஏற்பாடுகள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன..நாம் அடைந்திருப்பது பொதுப்பாடத்திட்டமும் பொதுத் தேர்வுகளும் மட்டும் தான்..

அதையும் கூட ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் பல முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தார்கள்.. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.. அதிமுக அரசு பொதுப்பாடத்திட்டம் செல்லாது என்றுஅறிவித்ததன் பின்னணியிலும் கூட அவர்கள் தான் இருக்கிறார்கள்.. பின்னர் வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.. அந்த வழக்கில் சமச்சீர் கல்வி செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்குக் கூட காரணமாகஅமைந்தது இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் இயக்கங்களின் போராட்டம் தானே தவிர தனிப்பட்ட கட்சிகள் அல்ல..

பொதுப்பாடத்திட்டம் தான்.. பாடநூல்கள் கூட ஒன்றல்ல என்றளவிலேயே சமச்சீர் கல்விக்கான கோரிக்கையின் வீச்சு குறைந்து போனதோ..?

பாடத்திட்டம் மட்டுமல்ல பாடநூல்களும் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் அரசின் சார்பிலேயே வழங்கப்படும் என்று தான் முதலில் சட்டத்தில் கூறப்பட்டது.. என்ன நமக்குமனவருத்தம் தரக்கூடிய ஒரு விசயமென்றால் பொதுப்பாடத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றுக்கு மேற்பட்ட பாடநூல்கள் இருந்தால் நல்லது என்று தீர்ப்புக் கூறியது.. அந்தஒன்றுக்கு மேற்பட்ட பாடநூல்களை மாநில அரசே உருவாக்கித் தர வேண்டும் என்று கூறாமல் பாடத்திட்டத்தைப் பின்பற்றி தனியாரும் பாடநூல்களை உருவாக்கலாம் என்றும் எந்தப் பாடநூலை எடுத்துக்கொள்வது என்பதை அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.. தனியார் வெளியிடும் பாடநூல்களுக்கான ஏற்பினை மட்டும் மாநில அரசு வழங்க வேண்டும் என நீதிமன்றம்கூறியது. அந்தத் தீர்ப்பு ஆரோக்கியமான போக்கைப் பின்னுக்கு இழுப்பதாக அமைந்தது. அதன் விளைவுதான் இன்றைய இந்தப் போக்கு..

பொதுப்பாடத்திட்டத்தை தொடர்ந்து பொதுப்பள்ளிகள் என்ற இலட்சியத்தை நோக்கி நகர்வது தான் நமது பயணம்.. பொதுப்பாடத்திட்டத்தை வரவேற்ற போது கூட நாம் எச்சரிக்கையுடன்தான் வரவேற்றோம்.. இது தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தவில்லை.. பலவகை வாரியங்களை ஒழித்துக் கட்டவில்லை.. கற்றல் வாய்ப்புகள் சமமாக்கப்படவில்லை.. எனவே பொதுப்பள்ளியைநோக்கிய ஒரு பயணத்தின் முதல் படி மட்டுமே என்று கூறினோம். தொடர் இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.. அதன் விளைவாக ஓரளவிற்கு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும்நாம் உணர முடிகிறது.. அந்த விழிப்புணர்வை பொதுப்பள்ளி முறைமையை நோக்கிய பெரும் எழுச்சியாக நாம் மாற்ற வேண்டியுள்ளது.. இது நமது பொறுப்பு..

தமிழகத்தின் பாடத்திட்டம் உண்மையிலேயே மிகவும் தரம் குறைந்ததாகத் தான் உள்ளதா..

தரம் என்பதற்கான அர்த்தம் என்ன? என்ன அளவுகோல்கள் வைத்திருக்கிறார்கள்? முறையான, சரியான ஆய்வுகள் இல்லாமல் பொத்தாம் பொதுவாக வைக்கப்படுகின்றகுற்றச்சாட்டுகளை ஏற்பதற்கில்லை.. அதில் நியாயமுமில்லை.. நான்கு விதமான பாடத்திட்டங்கள் இருந்த போது எங்களுடைய பாடத்திட்டம் தான் சிறந்தது என்று கூறி அவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்குப் பயன்பட்டது. சந்தையில் அவர்களால் நிற்க முடிந்தது.. பட்டணத்தில் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளில் அமர்ந்து படிக்கும் குழந்தையும் திருநெல்வேலி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான பத்தமடையில் பரிதாபானு என்ற அரசுப் பள்ளிக் குழந்தையும் ஒரே மதிப்பெண் எடுப்பதை எப்படி அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியும்? ஒரே பாடத்திட்டம்.. ஒரே மதிப்பெண் என்றால் மக்கள்விழித்துக் கொள்வார்களே.. ஏன் நாம் பல இலட்சங்களை தனியார் பள்ளிகளில் கொட்டிச் செலவழிக்க வேண்டும் என அவர்கள் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்களே.. எனவே தான் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டம் தான்சிறந்தது என்கிறார்கள்.. சரி, அந்தப் பாடத்திட்டம் தான் சிறந்தது என்றால் 2005-2010 காலகட்டத்தில் இவர்கள் சி.பி.எஸ்.ஈ.-ஐ நோக்கி ஏன் படை எடுக்கவில்லை.. ஆக இந்தக் குற்றச்சாட்டுக்கு பின்னணியில்இருப்பது தனியார் பள்ளிகளின் வணிக நோக்கமே தவிர வேறொன்றுமில்லை.. சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டம் தான் சிறந்தது என்று தற்போது சொல்லும் இவர்கள் அதிலேயே சி.பி.எஸ்.ஈ. சி.பி.எஸ்.ஈ. (ஐ) என பாடத்திட்டங்கள் இருக்கின்றனவே.. எல்லோரும் சி.பி.எஸ்.ஈ. –ல் சேர்ந்த பிறகு சி.பி.எஸ்.ஈ. (ஐ) பாடத்திட்டம் தான் சிறந்தது என்று சொல்லப் போகிறார்களா?


சமச்சீர் கல்வி போராட்ட நிகழ்வுகளைக் குறிப்பிடும் போது அதில் மாணவர்களின் போராட்டங்கள் தான் மையமான இடத்தைப் பெறுகின்றன.. ஆசிரியர் இயக்கங்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்..?

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட ஒரு சில ஆசிரியர் அமைப்புகள் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக தங்கள்செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.. அமைச்சர்களையும் கூட சந்தித்திருக்கிறார்கள்.. ஆனால் மாணவர்கள் அளவுக்கு அவர்கள் தெருவுக்கு வந்துபோராடவில்லை..

இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு தனித்துவமான பங்களிப்பைச் செய்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த பொழுதுதனியார் பள்ளிகள் வைக்கின்ற வாதங்களை முறியடிப்பதற்கு ஒரு ஒப்பாய்வு வேண்டும்.. சமச்சீர் பாடத்திட்டத்தை வல்லுநர்கள் குழுவின் மூலம் ஒரு ஆய்வு செய்தால் நல்லது என்ற சூழலில் தமிழ்நாடுஅறிவியல் இயக்கத்தைத் தொடர்பு கொண்டபோது பேரா.ராமானுஜம், பேரா.கருணானந்தம், பேரா.முருகன், பேரா.முருகானந்தம் மற்றும் உதயன் உள்ளிட்டோர் உடனடியாக ஒரு அறிக்கையைத் தயாரித்துநமக்கு அளித்தனர். அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு நல்ல ஆவணமாகப் பயன்பட்டது. சென்னையில் வழக்கு நடந்த போதும் கூட அறிவியல் இயக்கம் அளித்தஇந்த ஆய்வறிக்கை பிரமாண பத்திரமாகவே தாக்கல் செய்யப்பட்டது. அது பாடத்திட்டத்தைப் புரிந்துகொள்வதற்கு நீதிபதிகளுக்கு பெரிய அளவில் உதவியது. ஆக சமச்சீர் கல்விக்கான போராட்டத்தில்மாணவர், பெற்றோர், ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் முக்கியமான பங்கிருக்கிறது.

கல்வி உரிமைச் சட்டம்- ஏழு ஆண்டுகள்.. எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கம் உள்ளது என்பார்கள்.. ஒவ்வொரு செயலுக்கும் பின்னும் ஒரு தத்துவப் பின்னணி உள்ளது.. 86வது அரசியலமைப்புச் சட்டதிருத்தத்தைக்கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு. அந்தத் திருத்தத்தில் அவர்கள் செய்த முக்கியமான வேலை என்னவென்றால் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசு கல்வியைக் கொடுக்க முன்வரவேண்டும் என்றுகூறியிருந்ததை நீக்கினார்கள்.. வழிகாட்டு நெறிமுறைகளில் 51.ஏ-ல் கே என்ற பிரிவைச் சேர்த்தார்கள்.. அது என்ன பிரிவென்றால் கல்வி கொடுப்பது பெற்றோர், பாதுகாவலர் கடமை என்கிற வரியைச்சேர்த்தார்கள்.. மேலும், அரசு தான் இயற்றும் சட்டத்தின் அடிப்படையில் 6-14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் என்றும் சேர்த்தார்கள்.. அரசியலமைப்புச் சட்டம் 21 ஏ-ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தான் பின்னாளில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. (1) ஆட்சிக் காலத்தில் கல்வி உரிமைச் சட்டம் என்பது இயற்றப்பட்டது.. அந்தச் சட்டத்தில் 1 கி.மீ.க்கு ஒரு பள்ளி என்றுசொன்னார்களே தவிர அது அரசுப்பள்ளியாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.. 30 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர், 60க்கு இரண்டு, 90 வரையிலும் 3 ஆசிரியர்கள் என்று சொன்னதே தவிர பாடத்திற்குஒரு ஆசிரியர், வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்று சட்டம் சொல்லவில்லை.. தனியார் பள்ளிகளில் உரிய கல்வியியல் பயிற்சி பெற்றோ பெறாமலோ வகுப்பிற்கு ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர்இருக்கிறார்கள்.. அரசுப்பள்ளிகளில் பள்ளிக்கே ஒரு ஆசிரியர் இருக்கக்கூடிய சூழல் இருக்கிறதே.. இதெப்படி சமமான வாய்ப்பாக இருக்க முடியும்?

இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் போதே இந்தக் குறைபாடுகளுடன் வரக் கூடிய ஒரு சட்டம் கல்வி மறுப்புச் சட்டமாக மட்டுமே இருக்கமுடியும் என்றோம்.. ஆதரித்தவர்கள் கூடஇச்சட்டத்தை வரவேற்கிறோம்.. ஆனால் அதிலுள்ள குறைகளைக் களைய தொடர்ந்து போராடுவோம் என்று தான் சொன்னார்கள்.. அரசு கல்வி கொடுக்கும்.. பெற்றோர், பாதுகாவலர் பள்ளிக்கு வரக்கூடியகுழந்தைகளை ஒருபோதும் தடுக்கக் கூடாது என்று சொன்ன உலகிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி அரசான இ.எம்.எஸ்.அவர்களின் கேரளக் கல்வி மசோதா தான் இந்தியாவின் உண்மையான முதல் கல்வி உரிமைச் சட்டம்.. மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த கல்வி உரிமைச் சட்டமானது வணிகமயத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரமளித்து 25% இட ஒதுக்கீட்டின் மூலம்அரசுப் பள்ளிக்கு வர வேண்டிய குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு அரசுப்பள்ளிகளை இழுத்துப் பூட்ட உதவுகின்ற ஒரு சட்டமாகும்.. எனவே உண்மையான ஒரு கல்வி உரிமைச் சட்டம் என்பதுகொண்டுவரப் படவேண்டும்.. அதற்கான போராட்டம் என்பது பொதுப்பள்ளிக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே அமையும்.. அருகமைத் தன்மையுடன் கூடிய அரசின் பொறுப்பிலும் செலவிலும் பொதுப்பள்ளிகள் மூலமாக மட்டுமே மெய்யான கல்வி உரிமை என்பது சாத்தியம்.. அதைத்தான் கோத்தாரிக் கல்விக்குழுவும் சொல்லியிருக்கிறது..

அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைப்பவர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை என்கிற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆசிரியர்கள் எங்கிருந்தும் குதிக்கவில்லை.. அவர்கள் இந்தச் சமூகத்தின் ஓர் அங்கம். அரசுப் பள்ளிக்காக குரல் கொடுக்கும் ஒரு ஆசிரியருக்கு தன் மீதும், அவரது பள்ளி மீதும் அவருக்கு நம்பிக்கை இருக்கலாம்.. ஆனால் அவர்களது குடும்பங்களுக்கு..? எனவே எத்தனை ஆசிரியர்களால் தங்களது குடும்பத்தையே பகைத்துக் கொண்டு முன்வர முடியும்?

அரசு, தன் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்று மாவட்ட அளவுகளில் சிறந்த, முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்களை தனது செலவிலேயே கொண்டுபோய் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம் அரசே தனது பள்ளிகளுக்கு எதிரான அதாவது அரசுப்பள்ளிகளுக்கு எதிரான ஒரு பொதுப்புத்தியை மக்கள் மத்தியில் விதைக்கிறது. ஆக, திட்டமிட்டு இந்த அரசு சூழ்ச்சி செய்கிறது. வகுப்புக்கு ஒரு ஆசிரியரைக் கொடுக்காமல் அரசுத் தொடக்கப் பள்ளிகளை முடக்குகிறது. இப்படியான சூழல் தான் அவர்களைத் துணிந்து முடிவெடுக்க முடியாமல் தடுக்கிறது. ஆனாலும் சமீப காலங்களில் ஆரோக்கியமான செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப்பள்ளிகளில் சேர்த்த ஆசிரியர்கள் பட்டியலை என்னால் மாவட்ட வாரியாகக் கொடுக்க முடியும். அவர்களில் பெரும்பகுதியினர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் என்பது பெருமைக்குரியது. மேலும் அண்மையில் நான் கலந்துகொண்ட சில திருமண நிகழ்வுகளில் மணமேடையில், மணமக்கள் இருவரும் இணைந்து தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை நிச்சயம் அரசுப்பள்ளியில் தான் சேர்ப்போம் என்ற உறுதியேற்றிருக்கிறார்கள்.. அவர்களில் சிலர் ஆசிரியர், சிலர் ஆசிரியரல்லாத பிற பணிகளில் இருக்கக் கூடிய நண்பர்கள்.. ஆக இவையெல்லாம் ஆசிரியர்களிடையே ஏற்பட்டிருக்கக் கூடிய ஆரோக்கியமான மனமாற்றத்தை நமக்குக் காட்டுகின்றன. இந்த முயற்சிகளைப் பாராட்டி அங்கீகரிப்பது சமூகத்தின் கடமை.. அதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது என்பது என் கருத்து..

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உருவாக்க முயற்சிகள் ஏராளமான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறதே?

இந்தியாவில் முதன்முதலில் கல்விக்கொள்கை என்பது 1968ஆம் ஆண்டு கோத்தாரி கல்விக்குழுவின் பரிந்துரையின் பேரில் உருவாக்கப்பட்டது.. கோத்தாரி கல்விக் குழு ஒரு கல்வியாளரைத் தலைவராகக் கொண்டு கல்வியாளர்களையும் உள்ளடக்கிய குழுவாக இருந்தது மட்டுமல்லாமல் பிறநாட்டுக் கல்வியாளர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கூட பெற்று தனது பரிந்துரைகளை முன்வைத்தது. சுமார் 2 ஆண்டுகாலம் இந்தியா முழுவதும் இந்த கல்விக்குழு விவாதங்களை நடத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான் பீகாரில் இடதுசாரி ஆசிரியர் இயக்கங்கள் “கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து..” என்கிற கோரிக்கையினை மையப்படுத்தி மிகப் பெரிய போராட்டங்களை நடத்தினார்கள்.. அதன் விளைவுதான் அம்மாநிலத்தில் பெரும் எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டன.. ஒரு கல்விக்குழு சரியான வழிமுறைகளைப் பின்பற்றி விவாதங்களை நடத்தினால் எத்தகைய மாற்றங்களை சமூகத்தில் நிகழ்த்தும் என்பதற்கு மிகப்பெரிய முன்னுதாரணம் தான் கோத்தாரி கல்விக்குழு..

அதற்கடுத்து, உலகவங்கியிடம், சர்வதேச நிதியம் என்றழைக்கப்படுகின்ற ஐ.எம்.எப்.-இடம் இந்தியா கடன் வாங்கத் தொடங்கிய பிறகு 1986ல் இரண்டாவதாக ஒரு கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது. அதன் விளைவுதான், 1968ல் சொல்லப்பட்ட எல்லோருக்கும் கல்வி, பொதுப்பள்ளி முறைமை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6%, இந்திய மொழிகளின் வளர்ச்சி அம்சங்கள் எதுவுமே இக்கொள்கையில் இடம்பெறவில்லை.. மாற்றாக தொழிற்கல்வி வழங்குவது, திறந்தவெளிப் பல்கலைக் கழகங்கள் மூலமாக தொலைதூரக் கல்வி வழங்குவது என்று முறையான பள்ளி, கல்லூரிக்கு வராமல் கல்வி பெறக்கூடிய எல்லா வாய்ப்புகளுக்கும் வித்திட்டது. 1986லும் கூட கல்வியாளர்களைக் கொண்ட குழுவை உருவாக்குவதற்குப் பதிலாக மாநில அரசுகளின் கல்விச் செயலாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.. 1991-92ல் இந்தக் கல்விக் கொள்கை மறுசீரமைக்கப்பட்டாலும் சிக்கல்கள் தொடரத்தான் செய்தன. அப்போதைய காங்கிரசு அரசு தாங்கள் மக்களிடம் கருத்துக் கேட்டுத் தான் இந்தக் கல்விக் கொள்கைகளை உருவாக்கினோம் என்று சொல்லவில்லை.. இந்தக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் மூட்டா போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் கூட அப்போது தனித்தனியாக பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.. போராட்டங்களும் நடைபெற்றன..

ஆனால் 2015 முதலாக கிராமம், ஒன்றியம், மாவட்டம், மாநிலம், மண்டல என பல கட்டங்களாக நாங்கள் சுமார் 2.75 இலட்சம் கருத்தாய்வு கூட்டங்களில் மக்களிடம் விவாதித்து தான் உருவாக்கினோம் என்று கூறி மத்திய பா.ஜ.க.அரசால் புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஒரு ஆவணம் வெளியிடப்படுகிறது.. 2016 புதிய கல்விக் கொள்கை வரைவுக்கான சில உள்ளீடுகள் என்ற அந்த ஆவணத்தில் கூறப்பட்ட முன்மொழிவுகளில் பல அம்சங்கள் மக்களுக்கு கல்வியை மறுப்பதாகவே உள்ளன. மக்களுக்கு எதிரான கருத்துகளை எப்படி மக்களே கூறியிருப்பார்கள் என்று பரவலாக நாம் விசாரித்ததில் அப்படியான கருத்துக் கேட்பு எங்குமே நடந்ததாகத் தெரியவில்லை.. சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல நமது மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் கூட அவருடைய சட்டமன்றத் தொகுதியில் எங்கும் அப்படியான கருத்துக் கேட்புகள் நடந்ததாகத் தகவல்கள் இல்லை.. ஆக யாருக்குமே தெரியாமல் யாரிடம் போய் கருத்துக் கேட்டார்கள் என்பது தான் நமது கேள்வி.. கருத்தே கேட்காமல், உண்மைக்குப் புறம்பாக, கருத்துக் கேட்டதாகச் சொல்வது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. எனவே இந்த வரைவில் சொல்லப்பட்ட பல அம்சங்கள் நடைமுறைக்கு வருமேயானால் இந்தியாவை இரண்டு நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்கக்கூடியதாகத்தான் இருக்கும்..

உதாரணத்திற்கு, 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கு முறையான, சரியான கல்வி கொடுப்பதற்குப் பதிலாக குழந்தைத் தொழிலாளர்களுக்கு திறந்த வெளிப்பள்ளிகள் வசதி செய்து தரப்படும் என்று சொல்லப்படுகின்ற ஒரு விசயம் போதும் நாட்டை இது எந்த அளவிற்கு பின்னுக்கு இழுத்துச் செல்லும் என்பதற்கு.

எனவே தான் சொல்கிறோம் புதிய கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான நடைமுறைகளே தவறு.. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முதலில் ஒரு குழுவை உருவாக்குங்கள்.. அந்தக் குழு உலக வர்த்தக அமைப்பின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான பரிந்துரைகளைக் கொடுக்காமல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார சமத்துவத்திற்கான பரிந்துரைகளைக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 21 மற்றும் 41 ஆகிய பிரிவுகளை நடைமுறைப் படுத்துவதற்கான பரிந்துரைகளாக அவை இருக்க வேண்டும் என்பதைத் தான் நாம் பல்வேறு இயக்கங்களின் மூலமாக வலியுறுத்தி வருகிறோம்..

புதிய கல்விக் கொள்கையை ஒட்டி சிறுபான்மை மக்களின் போராட்டங்கள் கடுமையாக இருக்கின்றதே..?

வேதத்தைப் படித்ததால் சம்புகன் தலை வெட்டப்பட்டது. சத்திரியர்களுக்குப் பாடம் நடத்த மாட்டேன் என்று பரசுராமர் சபதமெடுத்திருந்தார்.. பிராமணனாக நடித்துப் பாடம் கற்றதனால் நீ கற்ற பாடங்கள் மறந்து போகட்டும் என்று கர்ணனுக்குச் சாபமிட்டார்.. சுயமாகக் கற்ற ஏகலைவனின் விரல் துண்டிக்கப்பட்டது.. துரோணாச்சாரிகளும் பரசுராமர்களும் மட்டுமின்றி அவர்களது வாரிசுகளும் எல்லோருக்கும் கல்வியை மறுத்த காலகட்டத்தில் எல்லோரும் கல்வி பெறலாம் என்று சொன்னவர்கள் தான் சிறுபான்மையின மக்கள்.. 

இந்தியாவில் எல்லோரும் கல்வி பயில வேண்டும்.. கேள்வி எழுப்ப வேண்டும் என்ற கருத்தாக்கத்தை பௌத்தர்களும் சமணர்களும் தான் தொடங்கி வைத்தார்கள்.. அதே போல இஸ்லாமியர்களின் மதரசாக்களில் ஆண், பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 18, 19ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் எல்லோரும் முறையான கல்வி பெறக்கூடிய நிறுவனங்களை உருவாக்கினார்கள்..

இப்போது, புதிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகளில் சாமாணிய மக்களுக்கு உயர் கல்வி என்பது எட்டாக்கனி.. இனி நீங்கள் படிக்கவேண்டிய அவசியமில்லை என்ற வகையிலான பல அம்சங்களைக் கண்டு முதலில் பதற்றப்பட்டு வீதிக்கு வந்து போராடியவர்கள் சிறுபான்மையின மக்கள்.. உண்மையில் அவர்கள் பெரும்பான்மையினருக்காக போராடினார்கள் என்று சொல்வதுதான் சரி..

புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்னரே பல அம்சங்கள் அமலாக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து..

பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசு தற்போது நேர்மைத்தன்மைக்கு மாறாக நடந்துகொள்கிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய தமிழகத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் உட்பட பல மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் கலந்துகொண்ட, அக்.25, 2016 அன்று மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் 64வது கூட்டத்தில் “இன்னும் கல்விக் கொள்கையே உருவாக்கப்படவில்லை.. வரைவு கூட வெளியிடப்படவில்லை.. நீங்கள் தெரிவித்துள்ள ஆலோசனைகள், கருத்துகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு அதனடிப்படையில் ஒரு புதிய கல்விக் குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும். எனவே நீங்கள் அச்சப்படத் தேவையில்லை” என்று கூறினார் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்..

அதே போல சென்னையில் நடைபெற்ற ஒரு சிறுபான்மையினர் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போதும் கூட பிரகாஷ் ஜவடேகர் அதே கருத்தைக் கூறினார்.. நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள்.. அதனால் தான் தமிழகம், கேரளாவில் இவ்வளவு எதிர்ப்புகள் கிளம்புகின்றன என்றும் கூறினார்.. இவ்வாறெல்லாம் பேசியவர்கள் தான் சி.பி.எஸ்.ஈ.-ன் நிர்வாகக் குழுவின் (Governing Council) மூலமாக எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பதை ஐந்தாம் வகுப்பு வரை என மாற்றுதல், தலைமை ஆசிரியர் பணி உயர்வுக்குத் தனியாக ஒரு தகுதித் தேர்வு நடத்துவது உள்ளிட்ட எந்தெந்த அம்சங்களையெல்லாம் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்த்தார்களோ அந்த அம்சங்களையெல்லாம் கொள்ளைப்புறம் வழியாக, கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்னரே நடைமுறைப்படுத்துகிறார்கள்.. நுழைவுத் தேர்வுகள் நடத்துவதெற்கென தனி ஆணையம், கல்லூரிகளின் தரத்தை தீர்மானிப்பதற்காக ஒரு அமைப்பு, பல்கலைக் கழக மானியக் குழுவை மறுசீரமைப்பு செய்தல் போன்ற பல அம்சங்களை சமீபத்திய நிதியறிக்கையில் கூட குறிப்பிட்டிருக்கிறார்கள்.. இவையெல்லாம் மக்களால், மாநிலங்களால் எதிர்க்கப்பட்ட முன்மொழிவுகள்.. இல்லை, இன்னும் கல்விக் கொள்கை உருவாக்கப்படவில்லை என்று சொல்லிக்கொண்டே பல முன்மொழிவுகளை முன்கூட்டியே அமல்படுத்துகின்ற மத்திய அரசின் இந்த அணுகுமுறைதான் அவர்கள் மீதான நம்பகத்தன்மையை அற்றுப் போகச் செய்கிறது.. நீட் தேர்வு கூட இதன் தொடர்ச்சி தான்..

இந்தியாவில் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரையிலும் மிக மோசமான தரத்தில் இருக்கிறது.. இதையெல்லாம் நாங்கள் புதிய கல்விக் கொள்கை 2016ன் மூலமாக மாற்றி அமைக்கப்போகிறோம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.. கல்வியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளாக நிதியறிக்கையில் ஏதேனும் அம்சங்கள் இருக்கின்றனவா?

சேவையில் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தத்தின் (காட்ஸ்) சரத்துகளை நிறைவேற்றுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை வழிவகுக்கிறது என்பதை மக்கள் இயக்கங்கள் நன்கு அறியும்.. இது இந்தியாவின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு அல்ல.. திரு.நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசு பதவியேற்ற பிறகு இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், அரசுப் பல்கலைக் கழகங்களில் ஆய்வு என்பது நின்றே போய்விட்டது.. ஸ்தம்பித்து விட்டது.. காரணம், பல்கலைக் கழகங்களின் ஒவ்வொரு துறைகளின் சார்பாகவும் கருத்தரங்குகள், கல்வியியல் மாநாடுகள் நடத்துவதற்கு பல்கலைக் கழக மானியக் குழு மானியங்களை வழங்கிக் கொண்டிருந்தது.. கடந்த இரண்டாண்டு காலமாக அந்த மானியங்கள் வரவில்லை.. எனவே துறைசார் ஆய்வுகள் உருவாகவே இல்லை.. நான் சொல்வது உண்மைதானா என்பதை உங்களுக்குத் தெரிந்த எந்தப் பல்கலைக்கழகத்திலும் கேட்டு சரிபார்த்துக் கொள்ளலாம்.. ஆக உயர்கல்வி ஆய்வுகளை இந்த பா.ஜ.க. அரசு ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது..

பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை.. கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை.. பாடம் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லை.. புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான இயக்கத்தின் போது ஒரு அதிர்ச்சித் தகவலை அறிய நேர்ந்தது.. பு.க.கொ. தொடர்பான ஒரு கருத்தரங்கம் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடந்தது. அது ஒரு உதவிபெறும் கல்லூரி.. கருத்தரங்கில் பேசும் போது அந்தக் கல்லூரியின் செயலாளர் சொல்கிறார், எங்கள் கல்லூரியில் 40 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. எங்கள் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு நாங்கள் எப்படி தரமான கல்வியை வழங்க முடியும்? என்று கேட்டார். அந்தக் காலிப் பணிப்பணியிடங்களை நிர்வாகமே தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பியுள்ளது. ஒரே கல்லூரியில் மட்டும் 40 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றால் மாநிலம் முழுவதும்.. இந்தியா முழுவதும் எத்தனை பணியிடங்கள் காலியாக இருக்கும்? ஆக, இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கு, இதுபோன்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை மேம்படுத்தும் அளவிற்கான நிதியை இவர்கள் ஒதுக்கவில்லை..

மாற்றாக, இருக்கக் கூடிய பல்கலைக் கழகங்கள் கூட தங்களுக்கான நிதியை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பதன் வாயிலாக ஏழை எளிய மக்களின் உயர்கல்விக் கனவிற்கு எதிராக அபாயச் சங்கை ஊதியிருக்கிறார்கள். இந்தியக் கல்வி நிலையைச் சீரழிக்கின்ற பட்ஜெட்டாகவே என்னால் பார்க்க முடிகிறது..

நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி..

நீட் என்பது மருத்துவப் படிப்பிற்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு.. நீட் எப்படி ஒரு மாணவனைத் தகுதிப்படுத்தும் என்கிற தர்க்க ரீதியான கேள்விக்கு இதுவரை யாரும் சரியான பதிலைக் கூறவில்லை. இத்தேர்வினை ஆதரித்துப் பேசும் மேனாள் நீதியரசர்கள் உட்பட சரியான பதிலைக் கூறவில்லை. மாணவர்கள் ஒரு பாடத்திட்டத்தைப் படிக்கிறார்கள்.. அதற்கென தனியாக ஒரு மதிப்பீடு நடக்கிறது. மாணவனது கற்றல் அடைவுகள் சோதிக்கப்படுகிறது. தேர்ச்சி அடைகிறார்கள்.. பின் எதற்காக அதே பாடத்திட்டத்தில் மீண்டும் ஒரு தேர்வு? மீண்டும் மீண்டும் எழுதினால் மட்டும் தகுதி பெற்று விடுவார்களா? எனவே நீட் தேர்வு என்பது தகுதிப்படுத்துவதற்கான தேர்வு அல்ல.. பெண்கள், மாற்றுத் திறனாளிகள், கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் என விளிம்புநிலை மக்களின் குழந்தைகளை வடிகட்டுவதற்கான ஒரு ஏற்பாடாகத் தான் பார்க்கமுடியும். பெரும்பகுதி மக்களின் குழந்தைகளை மருத்துவ உயர்கல்வியிலிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடு தான் நீட்..

இது உலக வர்த்தக அமைப்பிற்கு தேவை.. இந்திய மக்களுக்கு அல்ல.. WTO என்ன சொல்கிறதென்றால், நாங்கள் நிதி மூலதனத்தை ஒரு நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அந்த நாட்டின் எந்தவொரு சட்டமும் தடையாக இருக்கக் கூடாது.. இந்தியா போன்ற கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்பற்றக் கூடிய நாடுகளில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பாடத்திட்டம், ஒவ்வொரு தேர்ச்சிமுறை என்று வைத்திருப்பது எங்களுக்கு சரிப்பட்டு வராது.. பொதுவான வரையறைகளைக் கொண்டு வந்தால் மட்டுமே எங்களது வேட்டைக்கு உதவியாக இருக்கும் என்கின்றனர்.. அவர்களுக்கு ஏதுவாக, உலக வர்த்தகச் சந்தையின் கீழ் இந்தியக்கல்வியை மாற்றிக் கொடுக்கும் ஏற்பாடுகளில் ஒன்று தான் இந்த நீட்.. இதேபோல தான் எக்ஸிட் தேர்வும்.. இவை இந்திய மக்களுக்கும் மக்களாட்சி மாண்பிற்கும் எதிரானவை..

அதனால் தான் தமிழகம் கொதித்து எழுகிறது.. இந்தியாவில் தமிழகச் சட்டமன்றத்தில் மட்டும் தான் நீட் தேர்வுக்கு எதிரான இப்படியொரு சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றால் தமிழகம் தான் சமூகநீதியின் போர்க்களம்.. மெரினாவில் கூடிய மாணவர்கள், இளைஞர்களின் கோபம் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரானது மட்டுமல்ல என்பதை அவர்கள் எழுப்பிய முழக்கங்களையும் தாங்கி நின்ற பதாகைகளையும் பார்த்தவர்களுக்குப் புரியும்..



ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு குறித்து..

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் கல்வியியல் ஆணையமாக (Academic Authority) அறிவிக்கப்பட்ட NCTE ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (TET) நடத்த வேண்டும் என்ற உடன், கல்வியியலில்பட்டயமோ, பட்டமோ பெற்ற ஒருவர் தன் கல்வியியல் படிப்பின் ஒரு பகுதியாக ஆசிரியர் பயிற்சியும் மேற் கொள்கிறார். அதற்கும் சேர்த்துத்தான் அவர் மதிப்பிடப் படுகிறார். அவ்வாறு ஆசிரியராகப் பணி புரியதகுதிபெற்ற ஒருவருக்கு மீண்டும் ஒரு ஆசிரியர் பயிற்சித் தேவையா என்ற கேள்வி எழுப்பினோம். NCTE-யின் தவறான புரிதல் இதை மாநில அரசு கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.மக்கள் குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. ஆசிரியர் சங்கங்களும் இது குறித்து கடுமையான விமர்சனம் ஏதும் வைக்காதது ஆசிரியர்களை வர்க்கப்படுத்த தவறியுள்ளோம் என்பதற்கான சிறந்தஎடுத்துக்காட்டு. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு உரிய மதிப்பெண் தளர்வை ஆசிரியர் தகுதித்தேர்வில் வழங்கிட வேண்டும் என்ற போராட்டத்தில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தனித்துவமாகப்பங்காற்றியுள்ளது. தமிழ்நாடு தீண்டமை ஒழிப்பு முன்னனியோடு இணைந்து களம் கண்டதுடன், ஆதிதிராவிடர் தேசிய ஆணையத்திற்கு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அளித்த புகாரின் அடிப்படையில்ஆதிதிராவிடர் தேசிய ஆணையம் தமிழ்நாடு அரசிற்கு அனுப்பிய கடிதம் மிகப்பெரிய அரசியல் விவாதமாகி, இறுதியில், முதல் அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5%மதிப்பெண் தளர்வு வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்.

தகுதித் தேர்விற்குப் பின் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போது கடைப்பிடிக்கப்படும் கூடுதல் மதிப்பு (Weightage) முறை குறிப்பிட்ட சமூகத்தினர் என்றுமேஆசிரியராகப் பணிக்கு வர வாய்ப்பளிக்காத வகையில் உள்ளது. இந்த நடைமுறை சமூக நீதிக்கு எதிராக உள்ளது என தொடர்போராட்டம் நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்குபொறுப்பு வகித்த அமைச்சர் ஒருவர் கூட இது குறித்து போராடி வருபவர்களுடனோ அல்லது ஆசிரியர் சங்கங்களுடனோ விவாதித்தது கிடையாது. ஐந்தாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பள்ளிக் கல்விச் செயலர்பொறுப்பு வகிப்பவர் இச்சிக்கலின் ஆழம் புரியாமல் தன்னுடைய சொந்த கௌரவ பிரச்சனை போல் இதைப் பார்ப்பது வேதனை தரக்குடியது. ஒருவாதத்திற்காக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றஒருவர்தான் ஆசிரியர் பணியாற்ற தகுதிப் பெற்றவர் என ஏற்றுக் கொள்வதானால், ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர், தனது பனிரெண்டாம் (+2) வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தமதிப்பெண் எடுத்தார் என்பதற்காக அவருக்கு ஆசிரியர் பணி மறுத்து அவரைவிட ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு ஆசிரியர் பணியிடம் வழங்குவது எந்த வகையில்தகுதிப்படைத்த ஆசிரியரை தேர்வு செய்ய உதவும்?

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் அன்றைய உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யை சார்ந்த தோழர் கே. பாலபாரதி இத்தகைய 'வெயிட்டேஜ்' முறையை தமிழ் நாடுஅரசு கைவிட வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்திப் பேசினார். இந்த விவகாரத்தில் இதுவரை வேறு எந்த கட்சியும் அக்கரை காட்டவில்லை, சட்டமன்றத்திலும் இதைப்பற்றி பேசவில்லை என்பதைநாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தகுதி படைத்தவர்களையெல்லாம் வடிகட்டி வெளியேற்றி மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறும் திறன் படைத்தவர்களை மட்டுமே ஆசிரியராக்கும் சூழ்ச்சியில்வர்ணாஸ்ரம கோட்பாடு வெளிப்படவில்லையா? இதன் தொடர்ச்சி தான் மத்திய அரசின் தலைமை ஆசிரியருக்கான அகில இந்திய தகுதித்தேர்வு. இப்பொழுதாவது ஆசிரியர் சங்கங்கள் விழித்துக்கொண்டவர்க்கமாக களம் கண்டால் பெற்ற உரிமைகளைக் காக்கலாம். 'அரசுப் பள்ளி மக்கள் பள்ளி' என்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முழக்கத்தோடு பொதுப்பள்ளி முறைமைக்கான மக்கள் இயக்கத்தைவலுவாக முன்னெடுக்க வேண்டும்.

ஒரு ஆசிரியரின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்.. ?

ஆசிரியர் ஒரு அரசியல் செயல்பாட்டாளர் என்கிறார் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாவ்லோ பிரைரே.. ஆனால் அதை இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே செய்து காட்டியவர் நமது புத்தர்.. அதையே தான் நமது அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றவர்கள் இன்னும் அழுத்தமாகச் சொன்னார்கள்.. குழந்தைகளைக் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் என்றனர்..

கற்றல் செயல்பாடு என்பது கேள்விகள் எழுப்புவதன் மூலமாகத் தான் நடக்கிறது என்பதை முதலில் ஒரு ஆசிரியர் புரிந்துகொள்ள வேண்டும்.. மழலையர் வகுப்பாக இருந்தாலும் சரி, முதுகலை, ஆய்வுப் படிப்புகளாக இருந்தாலும் சரி, குழந்தைகள், மாணவர்கள் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை என்றால் அங்கு கற்றல் நடைபெறவில்லை என்றே பொருள்.. குழந்தைகளின் கேள்விகளுக்கு ஆசிரியரால் பதில் சொல்ல இயலாமல் போகலாம். அப்படியொரு சூழல் ஆசிரியருக்கு ஏற்பட்டால் அது கல்வியியல் செயல்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.. அதனால் ஆசிரியர் அவமானப்பட வேண்டிய அவசியமே கிடையாது.. குழந்தைகளோடு சேர்ந்து அந்தக் கேள்விக்கான விடையை ஆசிரியர் தேடலாம்.. அப்படி எந்த ஆசிரியர் அவமானப்பட்டு கேள்விக்கான விடையைத் தேடுகிறாரோ அவரே உலகின் மிகச்சிறந்த ஆசிரியர். பாவ்லோ பிரைரே அதைத் தான் செய்தார்.. மக்களிடம் சென்றார்.. மக்களின் கேள்விகளுக்கான பதில்களை மக்களிடமிருந்தே கற்றார். அந்த அனுபவத்திலிருந்து தான் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான கல்விமுறையை அவரால் சொல்லமுடிந்தது.

ஆகவே, இன்றைக்கு ஆசிரியர்கள் மத்தியில் ஒரு இறுக்கமான சூழல் நிலவுகிறது.. அரசுப் பள்ளிகளில் உரிய பணியிடங்களை அரசு நிரப்பாமல் ஆயா வேலை முதல் துப்புரவுப் பணி, காவலர் பணி, அலுவலக ஊழியர்கள் பணி அத்தனையும் செய்து கொண்டு தான் கற்றல் கற்பித்தலிலும் ஈடுபட வேண்டியுள்ளது.. இருந்த போதும் கூட குழந்தை நேய வகுப்பறைகளை உருவாக்க வேண்டியது தான் ஒவ்வொரு ஆசிரியரின் கடமையும் ஆகும்.. ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து செயல்படக்கூடிய வகுப்பறைகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த இந்த அரசு செய்யத் தவறுவதையெல்லாம் குழந்தைகளுக்கு ஆசிரியர் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வது அரசுக்கு எதிரானதாகப் பொருள்கொள்ள முடியாது.. ஏனெனில் அரசின் கொள்கைகளை விமர்சிப்பதென்பது ஆசிரியர்களின் கல்வியியல் சுதந்திரம்.. அதை ஆசிரியர் தான் செய்ய முடியும்.

யாருக்குத் தகவல்களைப் பெறக்கூடிய உரிமை, வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்குத் தான் செயலாற்ற வேண்டிய கடமையும் இருக்கிறது என்பார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். மக்காத்திசத்தை (McCarthyism) எதிர்த்து ஆசிரியர்களும் மாணவர்களும் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர் தான் ஐன்ஸ்டீன். மக்காத்திசம் என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அரசை எதிர்த்துக் கேள்வி எழுப்பக் கூடாது.. அரசு பிறநாடுகளின் மீது போர்தொடுத்தால் அதை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது. அத்தகைய சூழலில் கூட அரசை எதிர்த்துக் கேள்வி கேளுங்கள் என்று கூறியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பதென்பது அரசை நல்வழிப்படுத்துவதற்காகத்தான்.. அரசைக் கவிழ்ப்பதற்காக என்று புரிந்துகொள்ளக்கூடாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கக் கூடிய உரிமை அது. சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டுமானால் வகுப்பறைகளில் சமத்துவத்தைப் பற்றிப் பேசித்தானே ஆக வேண்டும். அறிவியலையும் சமூக அறிவியலையும் இணைத்து ஒரு சாதியற்ற சமூகத்திற்கு வித்திடுவது ஆசிரியர்களின் கடமையல்லவா? சாதி, மத, சமயங்கள் கடந்த ஒரு மனித நேயத்தை வளர்க்கின்ற இடமாக, பன்முகப் பண்பாட்டைக் கொண்டாடுகின்ற இடமாக வகுப்பறைகள் மாற வேண்டும். சமத்துவ சமூகத்திற்கான, சமூக மாற்றத்திற்கான போராட்டங்களும் கல்வியியல் செயல்பாட்டின் ஒரு அங்கம் தான் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே அவர்கள் பாவ்லோ பிரைரே குறிப்பிட்ட அரசியல் செயல்பாட்டாளராக, பண்பாட்டுச் செயல்பாட்டாளராக மதிக்கப்படுவார்கள்.. எனவே ஆசிரியர்கள் பொதுப்பள்ளிக்கான கோரிக்கையை, அரசு தான் கல்வி கொடுக்க வேண்டும்.. அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான கோரிக்கையை மக்களோடு, மாணவர்களோடு, பெற்றோர்களோடு இணைந்து முன்னெடுக்க வேண்டும்.

விழுது ஜன-பிப்.2017 இதழுக்காக.......
கேள்விகள்: தேனி சுந்தர்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!